சேலம் மாவட்டம் ஏற்காட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்லை மூடியுடன் திருப்பித் தந்தால், ரூ. 10 வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த திட்டம் கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஏற்காட்டில் 3 டாஸ்மாக் கடைகளில் கடந்த 14 நாட்களில் 47 ஆயிரம் மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்ததாவது;
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. சுமார் 20% கடைகள் மலைப்பகுதிகளில் உள்ளன. இங்கு மது அருந்திவிட்டு, பாட்டிலை அப்படியே வீசி விட்டுச் செல்வதால், வனப் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்காடு டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்கும்போது, கூடுதலாக ரூ. 10 சேர்த்து வசூலிக்கப் படுகிறது.
பின்னர் அந்த பாட்டிலை மூடியுடன் திருப்பி தந்தால் ரூ. 10 திருப்பியளிக்கும் திட்டத்தை கடந்த 15-ம் தேதி முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது. அப்படி பாட்டிலை திருப்பித் தராதவர்களிடம் வசூலிக்கப்பட்ட 10 ரூபாயானது, டாஸ்மாக் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஏற்காட்டில் 3 கடைகளில் கடந்த 14 நாட்களில் மட்டும் 46,920 பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
-இவ்வாறு டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், "மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை வாங்கும் குடிமகன்களிடம் ₹10 சேர்த்து வசூலிக்கப்பட்டு, காலியான மதுபாட்டிலை திருப்பித் தரும் போது ₹10 திரும்ப கொடுக்கப்படும். ஏற்காட்டில் கோட்டுக்காடு, முண்டகப்பாடி, செம்மநத்தம் ஆகிய 3 இடங்களில் செயல்படும் கடைகளில், இந்த திட்டம் கடந்த 15ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த 3 கடைகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை (28ம் தேதி) 61 ஆயிரத்து 100 பாட்டில்கள் விற்பனையானது. இதில் 46 ஆயிரத்து 920 பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஆரம்பித்த போது, 60 சதவீதம் பேர் பாட்டில்கள் ஒப்படைத்தனர். தற்போது, 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் 100 சதவீதம் அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்றனர்.