காவல் நிலையத்தில் பரிசுப்பெட்டி கொடுத்த மர்ம நபரால் பரபரப்பு!

காவல் நிலையத்தில் பரிசுப்பெட்டி கொடுத்த மர்ம நபரால் பரபரப்பு!

Published on

திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்  கலைச்செல்விக்கு பரிசு பொருள் கொடுத்துவிட்டு சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தெரிவித்ததாவது:

திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்  கலைச்செல்விக்கு பரிசுப் பொருள் கொடுப்பதற்காக நேற்றிரவு சுமார் 50 வயது ஆசாமி ஒருவர் வந்தார். அச்சமயம் கலைச்செல்வி அங்கு இல்லாததால், அச்சமயம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாரிடம்  கொடுத்துவிட்டு சென்றார். பின்பு குற்றப்பிரிவு ஆய்வாளர் கலைச்செல்வி காவல் நிலையம் வந்த போது   பரிசுப்பொருள் சம்பந்தமாக காவலர்கள் தகவல் தெரிவித்தனர்.

 சந்தேகமடைந்த கலைச்செல்வி உடனடியாக திருவல்லிக்கேணி உதவி ஆணையாளரிடம் தகவலை தெரிவித்தார். அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க, அநத பரிசு பெட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி அருகே உள்ள மைதானத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. பின்னர் வெடி குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில், மோப்ப நாயுடன் அந்த பெட்டி பரிசோதிக்கப்பட்டு திறந்து பார்த்தபோது உள்ளே முந்திரிப்பருப்பு மற்றும் சாக்லேட் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், அந்த பரிசு பெட்டியை கொண்டு வந்த நபர் யார் என சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

இவ்வாறு கவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com