மதுரை சண்முக வடிவு அம்மையாருக்கும், வழக்கறிஞர் சுப்பிரமணிய ஐயருக்கும் 1916ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி மகளாய் பிறந்தார் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா. இவரது தாயாரே இவருக்கு முதலில் இசை உலகில் குருவானார். இசையுடன் சேர்த்து வீணை வாசிப்பதிலும் இவர் கை தேர்ந்தவர். இசைப் பின்னணியைக் கொண்ட குடும்பமாததால் சிறு வயதிலிருந்தே இவருக்கு இசையில் நாட்டம் இருந்தது. தாயாருடன் பல கச்சேரிகளிலும் பங்கு கொண்டார்.
திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா கர்நாடக இசைத் துறையில் 1930 முதல் 1997 வரை கோலோச்சியவர். இன்றும் இவரது பாடல்கள் சாகா வரம் பெற்று நம்மிடையே உலவி வருகின்றன. ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்னும் பாடல் உலகத் தமிழர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாகும். மகாத்மா காந்திக்கும் மிகவும் பிடித்த பாடல். ‘தன்னை இழந்து பாடுகிறார்’ என்று எம்.எஸ். அம்மாவை மனம் திறந்து பாராட்டினார் காந்தியடிகள். இந்திய வானொலியில் மகாத்மா காந்திஜியின் அஞ்சலிக்கு இன்றைக்கும் இந்த பாடல்தான் ஒளிபரப்பாகிறது.
திருப்பதி திருமலையில் தினமும் கோயில் நடை திறக்கும் சமயம் பாடப்படும் ‘வெங்கடேச சுப்ரபாதம்’ எம்.எஸ். அம்மா பாடிய பாடலே. இன்றும் வெண்கலச் சிலையாக திருமலையின் பூரண கும்பம் பகுதியில் அமர்ந்து கோவிந்தனை நோக்கியவாறு தவத்தில் ஆழ்ந்திருக்கும் எம்.எஸ். அம்மாவின் வேங்கடேச சுப்ரபாதம் இசைத்தட்டு 1963ம் ஆண்டு வெளியானது. 1975ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார் எம்.எஸ். அம்மா.
‘கர்நாடக சங்கீத மேதை’ எம்.எஸ். அம்மாவை சரோஜினி நாயுடு ஒரு சமயம், ‘இந்தியா இந்த தலைமுறையில் ஒரு மாபெரும் சிறந்த கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்’ எனக் கூறினார்.
1945ல் எம்.எஸ். அம்மா நடித்து ‘பக்த மீரா’ திரைப்படம் வெளிவந்தது. அதனை இந்தியில் தயாரித்து வடநாட்டவர்க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியில் வெளிவந்த ‘மீரா’ திரைப்படத்தை பார்த்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, "இந்த இசையரசிக்கு முன்னால் நான் யார்? வெறும் பிரதமர்" என எம்.எஸ். அம்மாவை பாராட்டிப் புகழ்ந்தார்.
அந்தப் படத்தில் இவர் பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ எனும் பாடல் இன்று வரை மிகவும் பிரபலமான பாடலாக உள்ளது. இவர் உலகின் பல நாடுகளுக்கு பண்பாட்டுத் தூதுவராக சென்று பல நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான கச்சேரிகளின் மூலம் அவருக்குக் கிடைத்த செல்வத்தை எல்லாம் நற்பணிகளுக்கும், சமூக சேவைகளுக்கும் தானமாக கொடுத்த இசைக்கலைஞர் இவர். இதற்காகவே இவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் மாக்சேசே விருது (1974) வழங்கப்பட்டது.
இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு 1998ம் ஆண்டு வழங்கப்பட்டது. 1954ல் பத்மபூஷண் விருதும், 1956ல் சங்கீத நாடக அகாடமி விருதும், 1968ல் சங்கீத கலாநிதி விருதும், 1975ல் பத்ம விபூஷன், சங்கீத கலாசிகாமணி விருது என ஏகப்பட்ட விருதுகள் பெற்று விருதுகளுக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது எம்.எஸ். அம்மாவின் கர்நாடக இசையின் பங்களிப்பு.
எம்.எஸ். அம்மா தனது தெய்வீக குரலில் பக்தி ரசம் சொட்ட, துல்லியமான உச்சரிப்போடு பாடிய பாடல்கள் இசை உலகுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்று கூறினால் அது மிகையாகாது.