கர்நாடகாவின் கிங்: யார் இந்த சித்தராமையா?

கர்நாடகாவின் கிங்: யார் இந்த சித்தராமையா?

கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களை வென்று தனிப்பெருபான்மையுடன் வரும் 18ம் தேதி ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர்கள் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும், கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர்.

இந்நிலையில், கர்நாடகாவின் முதலமைச்சரை தேர்வுச் செய்யும் பொறுப்பு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கைகளில் உள்ளது. கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு அம்மாநில மக்களிடத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களைச் சந்திக்க முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சென்றுள்ளார். ஒருவேளை அவர் முதலமைச்சராக தேர்வுச் செய்யப்பட்டால் டி.கே. சிவகுமார் துணை முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

யார் இந்த சித்தராமையா..?

சித்தராமையா கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ள நபராகப் பேசப்படுகிறார். கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018 வரை கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக அம்மாநில முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டவர் சித்தராமையா.தேவராஜ் ஆர்சுக்கு பிறகு கர்நாடக முதலமைச்சராக முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவுச் முதல்வர் என்ற சாதனைப்படைத்தவர்.

மைசூர் மாவட்டத்தின் வருணா ஹோப்பியில் உள்ள சித்தராமனாஹுண்டி என்ற கிராமத்தில் 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி, விவசாய குடும்பத்தை சேர்ந்த சித்தராம கவுடா, போரம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் சித்தராமையா.தன்னுடைய 10 வயதில் பள்ளிப் படிப்பை தொடங்கிய சித்தராமையா அதன்பின் மைசூர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி மற்றும் சட்டப்படிப்பில் இளங்கலை முடித்தார்.

சித்தராமையா
சித்தராமையா

மாணவ பருவத்தில் சிறந்த பேச்சாளராக திகழ்ந்த சித்தராமையா, டாக்டர் ராம் மனோகர் லோஹியாவாலின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு சோசலிச கொள்கையிலான கவரப்பட்டார்.சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு சமூக நீதியை பெற்று தருவதற்கான வழியை ஆராயத் தொடங்கிய சித்தராமையா, அதற்கான பதில் அரசியல் களத்தில்தான் கிடைக்கும் என்பதை உணர்ந்து அரசியலில் நுழைந்தார்.

1968ம் ஆண்டு மைசூரின் சீனியர் வழக்கறிஞரான நஞ்சுண்டசாமியிடம் ஜூனியராக சேர்ந்த சீத்தராமையா பின்னர், சட்டக் கல்லூரியில் சட்டப் பேராசிரியராக சில காலம் பணியாற்றினார்.வழக்கறிஞர் நஞ்சுண்டசாமிதான் சித்தராமையாவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினார். அதன்படி பாரதிய லோக் தள் கட்சியில் இணைந்தார்.

முத்திரை பதித்த முதல் தேர்தல்

1983ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு தன்னுடைய முதல் தேர்தல் வெற்றியைச் சுவைத்தார் சித்தராமையா.அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி கன்னட மொழியை அலுவல் மொழியாகச் செயல்படுத்த அமைக்கப்பட்ட சித்தராமையா “கன்னட காவலு சமிதி” குழுவின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே 1985ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது ஆட்சியிலிருந்த ஜனதா தள கூட்டணி ஆட்சியில், கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.பின்னர் 1989ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராஜசேகர மூர்த்தியிடம் தோல்வியைத் தழுவிய சித்தராமையா, 1992ல் ஜனதா தள கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டர்.

1994ல் ஜனதா தள ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றிய தேவ கௌவுடா ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக முதல் முறையாகத் தேர்வு செய்யப்பட்டார் சித்தராமையா. கர்நாடகாவில் 13 முறை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தே ஒரு நபர் சித்தராமையா தான் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர், 1996ல் ஜே.எச். படேல் தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக முதல் முறையாகத் தேர்வானார் சித்தராமையா. இதனையடுத்து நடந்த இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவிய அவர், 2004ம் ஆண்டு கர்நாடகாவின் துணை முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், 2005ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து நீக்கப்பட்ட சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனையடுத்து 2006 நடந்த சாமுண்டேஸ்வரி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் சிவபசப்பாவை 257 வாக்குகளில் வீழ்த்தி தன்னுடைய சொந்த தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டினார் சித்தராமையா. இக்காலகட்டத்தில் கர்நாடக அரசியலில் தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், 2008ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் வருணா தொகுதியில் வெற்றிபெற்றார்.

“பெல்லாரி சலோ” போராட்டம்

சித்தாராமையாவின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான போராட்டமாகப் பார்க்கப்படுவது “பெல்லாரி சலோ” போராட்டம்தான். ரெட்டி சகோதரர்களை எதிர்த்து பெங்களூருவிலிருந்து பெல்லாரி வரை 320 கிலோ மீட்டர் வரை சித்தராமையா தலைமையில் நடந்த பேரணி அவரின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.பெல்லாரி சலோ போராட்டம் பாஜக அரசின் சட்ட விரோத சுரங்கங்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டமாகும் என்றார் சித்தராமையா.

2005ம் ஆண்டும் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்த சித்தராமையாவுக்கு ஜாக்பாட் அடித்த ஆண்டு என்றால் அது 2013ம் ஆண்டுதான். அப்போது நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வென்றதன் மூலம் அம்மாநிலத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகத்தை பசியில்லாத மாநிலமாக மாற்றுவதை இலக்காக கொண்டு செயல்பட்ட சித்தராமையா இந்திரா கேன்டீன் திட்டம், ரேஷன் கடைகள் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஏழு கிலோ அரிசி வழங்கிய அன்ன பாக்ய யோஜனா, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு 150 கிராம் பால் ஆகிய மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெகுவாக பாராட்டப்பெற்றது. 2018ம் ஆண்டு 13வது முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, கர்நாடகாவில் அதிகமுறை நிதிநிலை தாக்கல் செய்தவர் என்ற சாதனைப்படைத்தார். இந்நிலையில், 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏவானார். கடந்த பாஜக ஆட்சியில் எதிர்கட்சி தலைவராக செயல்பட்டுவந்தார்.

இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வருணா தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா மொத்தம் 1,19,816 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சோமன்னாவிட 73,653 பெற்றிருந்தார். இதனையடுத்து அவர் மீண்டும் கர்நாடகாவின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவரா எனத் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் டெல்லி சென்றுள்ளார் சீத்தராமையா. இதனையடுத்து வெற்றிபெற்றுள்ள 136 சட்டமன்ற உறுப்பினர்களில் 80 பேர் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் சித்தராமையா குறித்த “லீடர் ராமையா” திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரின் அடுத்த பாய்ச்சல் சீத்தராமையா 2.0 வாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com