'தில்லானா மோகனாம்பாள்' தந்த கொத்தமங்கலம் சுப்பு நினைவுகள்...!

'தில்லானா மோகனாம்பாள்' தந்த கொத்தமங்கலம் சுப்பு நினைவுகள்...!

கொத்தமங்கலம் சுப்பு, இவரையும் மறக்க முடியாது, இவரது கைவண்ணத்தில் உருவான தில்லானா மோகனாம்பாளையும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத காவியங்களில் ஒன்று தில்லானா மோகனாம்பாள் திரைப்படம்.

மாஸ்டர் பீஸ்…

சிவாஜி, பத்மினி நாயகன், நாயகியாக நடிக்க டி.எஸ்.பாலையா, நாகேஷ், ஏ வி எம் ராஜன், மனோரமா, எம் என் நம்பியார் எனப் பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இதில் வரும் ஜில் ஜில் ரமாமணி , வைத்தி கதாபாத்திர படைப்புகள் இன்று வரை பலராலும் சிலாகிக்கப்படுகின்றன. சிக்கல் சண்முக சுந்தரம் பிள்ளை எனும் நாயகனின் கதாபாத்திரத்தை அன்றைய நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என் ராஜ ரத்தினம் பிள்ளையை அடிப்படையாகக் கொண்டு என்றொரு பேச்சு உண்டு.

கொத்த மங்கலம் சுப்புவின் பிற அடையாளங்கள்…

பொதுவான கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நாம் ‘தில்லானா மோகனாம்பாளைச் சொல்லி விடுகிறோமே தவிர அது மட்டுமே அவரது அடையாளம் அல்ல. அது அவரது மாஸ்டர் பீஸ் என்று எடுத்துக் கொள்வோம். தவிரவும், அவருக்கு கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் எனப் பல அடையாளங்களுண்டு. இவை மட்டுமல்ல இன்னுமிருக்கிறது லிஸ்ட்…. பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர் என்று பன்முகத் திறாமை கொண்டவர் கொத்தமங்கலம் சுப்பு.

ஜெமினி ஸ்டுடியோவின் நம்பர் 2…

ஆனந்த விகடன் பத்திரிகையைத் ஸ்தாபித்தவரும் அன்றைய ஜெமினி ஸ்டுடியோ அதிபருமான எஸ் எஸ் வாசனின் ’வலது கை’ என இவரைக் குறிப்பிடுவார்கள். காரணம் கலைகளில் இவருக்கிருந்த அபாரத் திறமை மட்டுமல்ல, இவர் மிகச்சிறந்த விசுவாசியாகவும் இருந்து வந்தார். எஸ் எஸ் வாசனுக்கு அவர் குழப்பத்தில் இருக்கும் பல நேரங்களில் தீர்வு சொல்லக்கூடிய நபராகவும் சுப்பு இருந்திருக்கிறார் என்கிறார்கள் திரைத்துறை சார்ந்த பழைய ஆட்கள்.

எழுத்தாளர் அசோகமித்திரன் கூட இது குறித்துப் பதிவு செய்திருக்கிறார். அன்றைக்கெல்லாம் ஜெமினி ஸ்டுடியோவில் நம்பர் 2 என்றால் அது சுப்பு தான். காரணம் சுப்பு விசுவாசி மட்டுமல்ல கடும் உழைப்பாளியும் கூட. ஆனந்த விகடன் பத்திரிகையில் கலைமணி என்ற பெயரில் அவர் எழுதிய தொடரான தில்லானா மோகனாம்பாள் அதற்கொரு உதாரணம். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளி இருந்தார் சுப்பு. அதற்குப் பொருத்தமாக கோபுலுவின் ஓவியங்கள்

அலங்கரிக்க அப்போது இந்தத் தொடர் எப்போதடா வெளியாகும் என்று காத்திருந்து அள்ளிச் சென்று வாசித்து மகிழ்ந்தனர் வெகுஜன வாசகர்கள்.

கொத்தமங்கலம் சுப்புவின் படைப்புகள்…

ஒரு எழுத்தாளராக;

தில்லானா மோகனாம்பாள் (நாவல்), பந்தநல்லூர் பாமா (நாவல்), பொன்னி வனத்துப் பூங்குயில் (வரலாற்றுப் புதினம்), ராவ் பஹதூர் சிங்காரம் (புதினம்), மஞ்சி விரட்டு (கவிதைத் தொகுப்பு) இவை தவிர;

150 சிறுகதைகள், 100க்கு மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.

ஒரு திரைப்பட இயக்குநராக;

மிஸ் மாலினி, கண்ணம்மா என் காதலி, அவ்வையார் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஒரு நடிகராக…

பட்டினத்தார், நவீன சாரங்கதாரா, சந்திரமோகனா, மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிருஷ்டம், திருநீலகண்டர், சாந்தா சக்குபாய், பக்த சேதா, சூர்யபுத்ரி, அடங்காப்பிடாரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், தாசி அபரஞ்சி, மிஸ் மாலினி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனது அபார நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு சிறந்த வில்லுப் பாட்டிசைக் கலைஞராக காந்தி மகான் கதையை 3500 பாடல்களில் சிறந்த நாட்டுப்புறக் கதை வடிவத்தில் எழுதி இயக்கியிருக்கிறார்.

வாழ்க்கை…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே உள்ள கண்ணரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கனபாடிகளான மகாலிங்கம் ஐயருக்கும், நவம்பர் 10, 1910 ல் மகனாகப் பிறந்த சுப்பு என்கிற சுப்ரமண்யம் சிறு வயதிலேயே தன் தாயை இழந்த பின் சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். பின்னர் இயக்குநர் கே.சுப்ரமண்யத்தின் தொடர்பால் இவர் நடிகர் ஆனார். கொத்தமங்கலம் என்பது இவரது பிறந்த ஊர் அல்ல. வாழ்க்கைப்பாட்டுக்காக ஒரு கணக்கராகப் பணிபுரிய வேண்டி இடம்பெயர்ந்த ஊரின் பெயரே கொத்தமங்கலம். சில காலம் கணக்கராகப் பணிபுரிந்தாலும் கூட கலைகளின் மேல் இவருக்கிருந்த ஆர்வம் இவரை சென்னைக்கு இழுத்தது. முதலில் சொந்தத்தில் மீனாட்சி என்கிற பெண்ணை திருமணம் செய்திருந்தாலும் பின்னர் திரைப்படத்துறைக்கு வந்து சாதிக்கும் போது நடிகை சுந்தரி பாயை (சாந்தி நிலையம் திரைப்படத்தில் விஜயலலிதாவின் அம்மாவாக வருவாரே அவர் தான்) திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்தே திரைப்படங்களில் பங்கேற்றனர். 1974, ஃபிப்ரவரி 15 ல் தன்னுடைய 63 வயதில் சுப்பு மறைந்தார்.

கிடைத்த விருதுகள்…

இவருக்கு கலைத்துறையில் இவரது பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ விருதும், கலாசிகாமணி விருதும் வழங்கி மத்திய, மாநில அரசுகள் கெளரவித்திருந்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com