புதியதோர் உலகம் செய்வோம்!

பாரதிதாசன்பிறந்த நாள் இன்று – ஏப்ரல் 29.
புதியதோர் உலகம் செய்வோம்!

ஷ்யா, உக்ரைன் போர் ஆரம்பித்து பதிநான்கு மாதங்கள் பறந்து விட்டன. எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியாது. இன்னிலையில் சூடானில் உள் நாட்டுப் போர். எதற்காக இந்தப் போர்கள்.  நம்மில் யார் பெரியவர் என்பதை உறுதி செய்யவா?

“புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.”

என்று பாடினார் புரட்சிக் கவிஞர் என்று அன்போடு அழைக்கப்படும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். அன்னாரின் பிறந்த நாள் இன்று – ஏப்ரல் 29ஆம் தேதி.

இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த கவிஞர்களில் பாரதியாருக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுபவர் பாரதிதாசன் (1891-1964). அவரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். அரசியல் காரணங்களுக்காக பாரதியார் பாண்டிச்சேரியில் வசித்து வந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிட்டியது பாரதிதாசன் அவர்களுக்கு. பாரதியாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டவர், தன்னுடைய பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

“தாசன்” என்பது வடமொழிச் சொல். அதனுடைய பொருள் அடிமை. பாரதிதாசன் என்றால் பாரதிக்கு அடிமை. “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று கவி பாடியவர், வேற்று மொழிச் சொல்லை மனமுவந்து தன்னுடைய பெயரில் ஒரு பகுதியாக வைத்துக் கொண்டார். பாரதிதாசனுக்குப் பிற்காலத்தில் கவி உலகில் வலம் வந்த கவிஞர் சுரதா (1921-2006), பாரதிதாசன் பாடல்களில் மனம் பறி கொடுத்து அவருடைய இயற்பெயரான இராசகோபாலன் என்ற பெயரை சுப்புரத்தினதாசன் (சுரதா) என்று மாற்றிக் கொண்டார்.  அக்காலக் கவிஞர்களுக்கு மொழிப் பற்று இருந்தது. மொழி வெறி இருக்கவில்லை.

பாரதிதாசன் தனது பாடல்களில் மக்களுக்குப் பழக்கமான எளிய சொற்களை அதிகம் பயன்படுத்தினார். பன்முகத் தன்மையானவரான அவர் இதழ் ஆசிரியராக இருந்தார். சிறு காவியங்கள் எழுதி உள்ளார். திரைப் படத்துறையில் கால் பதித்து கதை, வசனம், திரைப்பாடல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய பிசிராந்தையார் என்ற நாடகத்திற்கு 1969 ஆம் வருடம் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

முற்போக்குச் சிந்தனையாளர். சுயமரியாதை கொள்கை, பொது உடைமை கொள்கை, சாதி மறுப்பு, ஆகியவற்றில் நாட்டமுள்ளவர். இந்தக் கொள்கைகளைத் தன்னுடைய கவிதைகளில் வலியுறுத்த அவர் தவறவில்லை.

சாதி வேற்றுமையை கடுமையாகச் சாடிய பாரதிதாசன் தாலாட்டுப் பாடலில் இவ்வாறு பதிவிட்டார்.

“வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்

தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி”

அழகிய சோலை, தாமரைப் பூக்கள் மலர்ந்திருக்கும் தடாகம் ஆகியவற்றைப் பார்த்தால் கவிஞர்களுக்கு இயற்கையின் மீது அல்லது காதல் கவிதை கற்பனையில் உதிக்கும். ஆனால் பாரதிதாசன் அந்த அழகிய சோலைகளையும், தடாகத்தையும் பார்த்துக் கேட்கிறார். “உங்களை இவ்வாறு வடிவமைத்தது யார்? உழைத்துப் பாடுபட்டு இரத்தம் சிந்திய தொழிலாளர்கள் தானே?”

சித்திரச் சோலைகளே உமை நன்கு திருத்தப் இப்பாரினிலே

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே”

ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமையின்றி உயர்வு தாழ்வற்ற சமுதாயம் அவரது கனவு.

“ஓடப்பர் ஆகியிருக்கும் ஏழையப்பர் உயரப்பர் ஆகிவிட்டால்,

ஒடப்பர், உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆயிடுவார் உணரப்பா நீ”

பாண்டியன் பரிசு என்ற ஒரு சிறு காப்பியத்தை எழுதினார் கவிஞர்.  கதையின் நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே வெற்றி தோல்வி அறிய முடியாமல் வெகு நேரமாக நடந்த வாள் போரை ஒரே வரியில் வெகு அழகாக விளக்கியுள்ளார்.

“வெற்றி மகள் நூறு முறை ஏமாந்தாள் ஆளைத் தேடி”

அவருடைய திரைப் பாடல்களில் என்னைக் கவர்ந்த சில வரிகள் :

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” – படம் ஓர் இரவு.

“ஒரே ஒரு பைசா, தருவது பெரிசா, போடுங்கள் சும்மா, புண்ணியம் அம்மா” – படம் பெற்ற மனம். எளிமையான கருத்தாழம் மிகுந்த வரிகள்.

பாரதிதாசன் பாடல்கள் காலத்தையும் கடந்து நிற்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com