– ராஜி ரகுநாதன்
உன்ட்ராள்ள ததிய, அட்ல ததிய என்ற இரண்டும் திருமணமான பெண்கள் சௌபாக்கியத்திற்காகவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவருக்காகவும் செய்யும் நோன்பு. திருதியை என்பதை தெலுங்கில்
'ததிய'என்பர். நாம் கொழுக்கட்டை என்பதை தெலுங்கில் உன்ட்ராள்ளு என்பர். அட்லு என்றால் தோசை அல்லது அடை. ஆந்திர மாநிலத்தின் பிரபலமான இந்த 'உன்ட்ராள்ள ததிய' நோன்பு இன்று (12.9.2022) கடைபிடிக்கப்படுகிறது.
திருமணமான பெண்கள் மேற்கொள்வது உன்ட்ராள்ள ததிய. திருமணமான முதலாண்டு 'தொலி உன்ட்ராள்ள ததிய (தத்தி)' கடைப்பிடிப்பார்கள். வரிசையாக ஐந்தாண்டுகள் அவரவர் குடும்ப வழக்கப்படி இந்த நோன்பை கடைப்பிடிப்பார்கள்.
பாத்ரபத மாதம் பௌர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ண பட்சத்தின் மூன்றாவது நாள் திருதியை நாளில் கௌரி தேவியை வழிபடுவதை 'உன்ட்ராள்ள ததிய'என்றழைப்பார்கள். மஞ்சள் பிள்ளையார் பிடிக்கும்போதே, மஞ்சள் பொடியால் கௌரி தேவியையும் பிடித்து வைக்கிறார்கள். அதனை கௌரம்மா என்று அன்போடு அழைப்பர்.
அரிசி ரவையை நீரில் வேக வைத்து உருண்டைகளாகப் பிடித்து, மீண்டும் ஆவியில் வேக வைப்பது ஒரு வகை உன்ட்ராள்ளு. இது விநாயகருக்கு மிகவும் பிடித்தது. கௌரி தேவிக்கு பிரீதியாக பூரணம் செய்து உருண்டையாக பிடித்து இரண்டையும் அன்று நைவேத்தியம் செய்வர்.
முதல் நாள், பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வர். அரைத்த மருதாணியை அண்டை அயல் பெண்கள் ஐவர் வீட்டிற்கு சென்று கொடுத்து, மறுநாள் தம் வீட்டிற்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ள வருமாறு குங்குமம் கொடுத்து அழைத்து வருவர். அன்று தோட்டத்தில் மரங்களில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஊஞ்சலாடுவர். கௌரி பூஜை செய்த பின் ஐந்து இழை சரடு வலது கையில் கட்டி கொள்வர். வீட்டுக்கு வந்து சுமங்கலிகளுக்கு ஐந்தைந்து கொழுக்கட்டைகள், ரவிக்கை துணி, தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்து அவர்களுக்கும் நோன்பு சரடை கையில் கட்டி விடுவர். அவர்கள் கையில் அட்சதையைக் கொடுத்து நமஸ்காரம் செய்து ஆசி பெறுவர். இவ்விதமாக உன்ட்ராள்ள தத்தி என்ற சிறப்பான நோன்பை கடைப்பிடிப்பர்.
'அட்ல ததிய' நோன்பு அக்டோபர் 12 அன்று கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த நோன்பை 'ஆஸ்வியுஜ மாதம்'கிருஷ்ண பட்ச திருதியை அன்று கடைப்பிடிப்பர். 'அட்ல தத்தி (ததிய)' என்பது திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் கிடைப்பதற்காகச் செய்யும் நோன்பு. இன்று சிறுமிகள் மருதாணி இட்டு, புத்தாடை உடுத்தி மகிழ்வர். விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து குளித்துவிட்டு முதல் நாள் சமைத்த சாதத்தில் கோங்கூரா துவையல், எள்ளுப் பொடி சாதம், தயிர் சாதம் போன்றவற்றை சிறுமிகள் உண்பர். அதன் பின் அன்று முழுவதும் எதுவும் உண்ணக்கூடாது.
அன்று மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடுவர். பாண்டியாடுவது ஊஞ்சலாடுவது போன்ற பெண்களுக்கான அனைத்து விளையாட்டுகளையும் சிறுமிகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பர். அன்று காலையில் வீட்டில் அன்னையர் அரிசியும் உளுந்தும் ஊறவைத்து தோசைக்கு அரைத்து வைப்பர். அன்று தம் வீட்டிற்கு 'அட்ல தத்தி' தாம்பூலம் வாங்கிக் கொள்வதற்காக 11 சுமங்கலிப் பெண்களை அழைத்துவிட்டு வருவர்.
அன்று முழுவதும் உபவாசம் இருந்து மீண்டும் மாலையில் விளக்கேற்றியதும் 'அட்லதத்தி' கதை படித்து ஒவ்வொருவருக்கும் 11 தோசை வீதம் சமைப்பர். விநாயகர் பூஜையும் கௌரி பூஜையும் செய்து வழிபட்டு அட்லு எனப்படும் தோசை வார்த்து கௌரி தேவிக்கு நெய்வேத்தியம் சமர்ப்பித்து அதன் பின் வீட்டிற்கு அழைத்த சுமங்கலிகளுக்கும் அளித்து தாமும் உண்பர். வந்திருக்கும் சுமங்கலிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கருகமணி மாலை, ஐந்து அல்லது 11 தோசைகளை தாம்பூலத்தில் வைத்து புடவையோ ரவிக்கையோ வைத்து கொடுத்து அவர்களிடம் அட்சதை கொடுத்து நமஸ்காரம் செய்து கன்னிப்பெண்கள் ஆசி பெறுவர். இந்த இரண்டு விரதங்களுக்குமே அந்த நோன்புகளின் சிறப்பை விளக்கும் கதைகள் உண்டு. அவற்றைப் படித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.
'அட்ல ததிய' நோன்பை தாயார், தன் சிறு பெண்களை விட்டு செய்யச் செய்வார். இதுபோல் சிறுமிகள் பத்து ஆண்டுகள் கடைப்பிடித்தால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை. பத்து ஆண்டுகள் கடைபிடித்த பின் அதற்கு உத்தியாபனம் எனப்படும் பூர்த்தி செய்யும் பண்டிகையும் கொண்டாடுவர். இதுபோன்ற விரதங்களை இன்னமும் கடைப்பிடிப்பவர் ஆந்திர மாநிலத்தில் உள்ளனர்.