"மங்மின்ம்காம்" வன்முறைக் களத்தில் பூத்த நம்பிக்கை நட்சத்திரம்!

"மங்மின்ம்காம்" வன்முறைக் களத்தில் பூத்த நம்பிக்கை நட்சத்திரம்!
Published on

மணிப்பூரில் கடந்த சில நாட்களாக பழங்குடியினர் அல்லாத மெய்தி மக்களுக்கும், கிறிஸ்தவ பழங்குடியினரான குக்கிகள், மற்றும் நாகாக்களுக்கும் இடையிலான மோதல் நடைபெற்றுவருகிறது. இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு இந்திய ராணுவத்தை அனுப்பியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் மணிப்பூர் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்ட 13,000 மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் மெய்தி சமூகத்திற்கு பட்டியல் பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) "பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு" நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தது. அவர்களது அழைப்பை ஏற்று பொது மக்களில் பலர் சுராசந்த்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் இந்த வன்முறைகள் தொடங்கின. மணிப்பூர் அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம் நடத்திய அந்தப் பொது பேரணியானது வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் இந்திய ராணுவம் இரண்டையும் மாநிலத்தில் சட்டம் ,ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு அங்கேயே நிறுத்தி இருந்தது. அவர்களது அமைதி நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலத்தில் இணைய சேவைகள் 5 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 144இன் கீழ் மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவதும் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்திய துருப்புக்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு வழங்கப்பட்டது.

ராணுவன் நடவடிக்கைகளின் பின் மே 6 ஆம் தேதி முதல் மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

மொத்த மாநிலமும் இப்படிக் கலவரத்தில் ஆழ்ந்திருக்க, சிறுவன் ஒருவன், இந்தக் கலவரத்தைப் பற்றி அறிந்து தனிமையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த பகுதிகளில் தன்னந்தனியே ஓடிக் கடந்து சொந்த வீட்டை அடைந்த செயலானது மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகப் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

குக்கி மற்றும் மெய்தி தம்பதிக்கு பிறந்த மங்மின்ம்காமுக்கு தற்போது 12 வயதாகிறது. வளரும் குத்துச்சண்டை வீரர் உள்ள மங்மின்ம்காம் இம்பாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கியிருந்து பயிற்சி மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில், மணிப்பூரில் கலவரம் நிகழ்ந்த குறித்து விடுதியில் தங்கியருந்த சிறுவன் மங்மின்ம்காமுக்கு எதுவும் தெரியவில்லை. சுராசந்த்பூரில் தொடங்கிய கலவரம் பின்னர் இம்பாலுக்கும் வேகமாகப் பரவின.

இதனால் விளையாட்டு விடுதியில் தங்கியிருந்த வீரர்கள் சிறு சிறு குழுவாக தங்களுக்கு சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், 12 வயதுச் சிறுவனான மங்மின்ம்காம் விடுதியில் தனித்து விடப்பட்டார். நான்கு நாட்கள் கவலையுடன் தனது விடுதியில் சிக்கித் தவித்த மங்மின்ம்கம் ஒரு கட்டத்தில் விரக்தி அதிகமாகி வீட்டிற்கு ஓட முடிவு செய்தார் . அது நிச்சயமாக ஒரு ஆபத்தான பயணமே!. ஆனால், அதைத்தவிர வேறு வழியில்லை.

மணிப்பூரின் அடர்ந்த காடுகள், கொஞ்சம் சறுக்கினாலும் அதலபாதாளத்தில் வழுக்கி விழச் செய்யும் வய்ப்புகள் கொண்ட கரடுமுரடான சுழல்படிகள் போன்ற மலைத்தொடர்கள் சிறிது அசந்தாலும் மரணத்தை மட்டுமே பரிசாகத் தரவல்ல அபாயகரமான பசுமைப் பள்ளத்தாக்குகள் இப்படி பல ஆபத்தான பகுதிகளைத் தாண்டி கையில் அணிந்திருந்த பாக்ஸிங் உறைகளை மட்டுமே துணையாகக் கொண்டு அவற்றை ஏந்திய வண்ணம் இம்பால் மேற்கு மாவட்டத்தின் மந்திரிபுக்ரியில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் முகாமுக்கு மே 8 ஆம் தேதி சென்றடைந்தான் சிறுவன்.

“எவ்வளவு தூரம் ஓடினேன் என்று தெரியவில்லை. அது பகல் நேரமென்பதால், பாதுகாப்பை தேடி ஓடி வந்தேன்,” என கூறியுள்ளார் மங்மின்ம்காம். இதன்பின்னர் கடந்த மே 9ம் தேதி, தனது பெற்றோருடன் இணைந்திருக்கிறார்.

விவசாயியான சிறுவனின் தந்தை மெய்தி மற்றும் தாய் ஹட்னுவுக்கு, தங்களுடைய மகன் எதிர்பாராத வகையில் பாதுகாப்புப் படையினருடன் வீட்டிற்கு அழைத்து வந்ததை பார்த்தபோது மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். நகர் பகுதிகளில் கலவரம் கடுமையாக நடந்துக்கொண்டிருந்த நேரத்தில் தங்களுடைய 12 வயது மகன் பத்திரமாக ஊர் திரும்பியதை அவர்களால் சிறிது நேரத்திற்கு நம்ப முடியவில்லை. அமைதியான மாநிலம் என கூறப்பட்ட மணிப்பூர் பற்றி எரியத் தொடங்கியபோது, இந்த அழிவின் சுவடுகள் அங்கு அதிகம். ஆகவே அந்த மோதல்களின் இடிபாடுகளில் இருந்து எழுந்து வந்த நம்பிக்கையின் சின்னமாகவே தற்போது சிறுவன் மங்மின்ம்காமைப் பார்க்கிறார்கள் அந்த கிராமவாசிகள்

மங்மின்ம்காம் இப்போது கிராமவாசிகள், ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியோரின் கொண்டாட்டத்திற்குரிய நபர் மட்டுமல்ல, அம்மாநிலத்தின் வன்முறைக் களத்தில் பூத்த நம்பிக்கை நட்சத்திரமாகவும கருதப்படுகிறார்.

“குகி தாய் மற்றும் மெய்தி தந்தையின் பெருமைமிக்க மகன் - #மணிப்பூரில் அனைத்து சமூகத்தினரும் அமைதியான சகவாழ்வு வாழ்வதற்கான சாட்சியாக எங்கள் முகாம்களில் ஒன்றிற்கு தனியாக தைரியமாக 15 கிமீ ஓடி வந்திருக்கிறார். நேற்று அவரது தாயுடன் அவர் மீண்டும் இணைந்தார், ”என்று திமாபூரை தளமாகக் கொண்ட இராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ் ஒருவர் டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமல்ல, அஸ்ஸாம் ரைபிள்ஸ் முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த இளம் குத்துச்சண்டை வீரரின் சிறிய பயிற்சி வீடியோ ஒன்றையும் கூட ராணுவம் ட்வீட் செய்துள்ளது. "இந்திய இராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் அவரது துணிச்சல் மற்றும் உறுதிப்பாட்டிற்கு வணக்கம் செலுத்துகின்றன, மேலும் அவரது குத்துச்சண்டை முயற்சிகளுக்கு அனைத்துவிதமான மகிழ்ச்சியான அதிர்ஷ்டங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்..." என்று அந்த ட்வீட் கூறியது.

அஸ்ஸாம் ரைபிள்ஸ் தனது முகநூல் பக்கத்தில் சிறுவன் மங்மின்ம்காமின் வீர சாதனையை “பயம், விரக்தி மற்றும் எதிர்மறை - நாக் அவுட்” என்று பதிவிட்டுள்ளது. மந்திரிபுக்ரி முகாமில் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு போக்கிடமின்றி அடைக்கலமான 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இருப்பதாகவும், அவர்கள் இத்தனை அபாயகரமான நேரத்திலும் கூட "தனது குத்துச்சண்டைத் திறமையை வெளிப்படுத்திய சிறுவனின் நெஞ்சுரம் கண்டு அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும்" அது கூறியது.

கலவர பூமியில் அந்தச் சிறுவனுக்கு எது வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அந்த அச்சத்தை மட்டுமே எண்ணிக் குழம்பிக் கொண்டிருக்காமல் அவன் தானே ஒரு முடிவெடுத்து வெறும் பாக்ஸிங் கையுறைகளை மட்டுமே தனது பலமாகவும், நம்பிக்கையாகவும் கொண்டு அவ்வளவு தூரம் ஓடி தனது இலக்கை அடைந்து பெற்றோரிடமும் சேர்ந்து விட்டான் எனும் செய்தி பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையை விதைத்திருக்கிறது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com