
மனித உடலின் ஆரோக்கியத்திற்கு பல உறுப்புகள் உதவினாலும் அமைதியாக தன் பணியைச் செய்யும் பீன்ஸ் வடிவ சிறுநீரகங்களின் பங்கு முக்கியமானதாகிறது. உடல் உள் செல்லும் கழிவுகளை வடிகட்டுவது, திரவங்களை சமநிலைப்படுத்துவது முதல் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவது வரை இந்த உறுப்புகள் அயராது செயல்படுகின்றன.
ஆனால் பெரும்பாலும் நாம் சிறுநீரகங்களை சாதாரணமாகவே கருதுகிறோம். ஏதேனும் பாதிப்பு என்றால் மட்டுமே அதைக் கவனிக்கிறோம். உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுநீரகம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவது முன்பை விட அதிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆகவேதான் உலக சிறுநீரக தினம், சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகளாவிய நினைவூட்டலாக செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வை ஒட்டிய கருப்பொருள் அடிப்படையில் விழிப்புணர்வு நடைபெறும்.
அதன் படி இந்த ஆண்டுக்கான கருப்பொருள், 'ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான ஆரம்பகால கண்டறிதலுக்கு முன்னுரிமை அளித்தல்', என்பதே. இதன் நோக்கம் சிறுநீரக பிரச்சினைகள் மிகவும் கடுமையான பிரச்சினைகளாக மாறுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறியும் சக்தியை வலியுறுத்துவதாகும்.
முதுகெலும்பின் இருபுறமும், விலா எலும்புக் கூண்டுக்குக் கீழே அமைந்துள்ள ஒவ்வொரு சிறுநீரகமும் சிறியவை என்றாலும் சக்திவாய்ந்த உறுப்புகள், அவை உடலின் சமநிலையையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிறுநீரகங்கள் தினமும் சுமார் 50 கேலன் இரத்தத்தை வடிகட்டி, நச்சுக்கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை அகற்றி சிறுநீரை உருவாக்குகின்றன. அவை திரவ அளவை சமநிலைப்படுத்தி, இரத்த நாள சுருக்கத்தை ஒழுங்குபடுத்தும் ரெனின் என்ற ஹார்மோனை வெளியிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் சமநிலையை பராமரிக்கின்றன, அவை எரித்ரோபொய்டின் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றன. இது எலும்பு மஜ்ஜை, சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் சிறுநீரகங்கள் பங்கு வகிக்கின்றன.
ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இந்த செயல்பாடுகளை அமைதியாகச் செய்கின்றன, ஆனால் அவை சேதமடைந்தாலோ அல்லது சரியாக வேலை செய்யாதாலோ, உடலில் கழிவுகள் மற்றும் திரவம் குவிந்து நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய பாதிப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சிறுநீரக நோய்கள் பெரும்பாலும் 'அமைதியான கொலையாளிகள்' என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படும் அறிகுறிகளைக் காட்டாது. ஆகவேதான் கடுமையான சிக்கல்களைத் தடுப்பதிலும் சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாப்பதிலும் ஆரம்பகால கண்டறிதல் மிக முக்கியமானதாக ஆக்குகிறது.
சிறுநீரகப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை எடுப்பது நாள்பட்ட சிறுநீரக நோயின் (CKD) வளர்ச்சியைக் குறைக்கிறது அல்லது நிறுத்துகிறது. ஆரம்ப கட்ட சிறுநீரக நோய் உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை மற்றும் எலும்பு கோளாறுகள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதால் இந்த அபாயங்களைக் குறைக்கிறது.
மேலும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், சிறுநீரக நோய்கள் பெரும்பாலும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகளால் குணப்படுத்தலாம். டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை குறைகிறது.
தொடர்ச்சியான சோர்வு, கை, கால்களில் வீக்கம், சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள் அல்லது கீழ் முதுகு வலி போன்ற சிறுநீரக பிரச்சனைகளைக் குறிக்கும் அறிகுறிகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் ஆரம்ப கால நடவடிக்கை எடுத்து பெரும் சிக்கல்களைத் தடுக்கலாம்.
சிறு பீன்ஸ் வடிவில் அமைதியாக இருந்தாலும் பலவிதங்களில் நமக்கு நன்மை தரும் நமது சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் அதிக விழிப்புணர்வு தந்து நலமுடன் வாழ்வோம்.