
“Smoking is injurious to Health” இது அனைத்து சிகரெட் பாக்கெட்டுகளிலும் காணப்படும் வாசகம். ஆனால் புகைப்பவர்கள் இதை மேலோட்டமாக பார்க்கிறார்களா அல்லது சிகரெட்டின் மோசமான விளைவுகளை அறிந்த பின்னும் தன்னைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கவலைப்படாமல் புகைக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அதிலும் தற்போது பதின்வயதினர் ஆண்,பெண் பேதமின்றி சிகரெட் பிடிப்பது அதிகரித்து வருவது கவலைக்குரியது.
என் வீட்டின் எதிரில் உள்ள கடையில் இளைஞர்கள் வண்டியில் ஸ்டைலாக சாய்ந்தபடி நண்பர்களுடன் சிகரெட் ஊதுவார்கள். நான் எங்கள் வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள சிறிய மேடையில் அமர்ந்து தினமும் காலை பிராணாயாமம் செய்வது வழக்கம். சிகரெட்டிலிருந்து வெளியாகும் குப்பென்ற புகையால் என் யோகாவைத் தொடர முடியாமல் போகும். பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. புரிந்து கொள்ளாமல் அவர்கள் விதண்டாவாதம் செய்வார்கள். கடைக்காரருக்கு அவர் வியாபாரம் தான் முக்கியம்.
புகைப்பிடித்தல் தற்காலிக உற்சாகத்தை தந்தாலும் புகையிலை உலகளாவிய கொலையாளி என்பதை பதின்பருவத்தினர் உணர வேண்டும். ஒவ்வொரு புகை பிடிப்பவரும் புகை பிடித்தல் தங்களுக்கு மட்டுமின்றி சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள நிகோடின், நுரையீரல் மட்டுமின்றி கண் முதல் குடல்வரை அனைத்து உறுப்புக்களையும் பாதிக்கிறது. புகைபிடிக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பிரச்னைகள் வரலாம்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி ஒவ்வொரு ஆண்டும் புகையிலையால் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறக்கிறார்களாம். மேலும் அந்த இறப்புகளில் சுமார் ஒரு மில்லியன் இறப்புகள் இரண்டாம் நிலை புகைப்பழக்கத்தால் நேர்ந்தவைகளாம்.
ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று, உலக புகையிலை எதிர்ப்பு தினம் உலகளவில் புகைபிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.
புகைப்பிடிப்பவர்களால் சிகரெட்பழக்கத்தை விடுவது கடினம்தான். சிகரெட்டில் உள்ள நிக்கோடின், உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அடிமைபடுத்துவது மட்டுமின்றி மன அழுத்த நிவாரணத்தை தற்காலிகமாக தான் அளிக்கிறது என்பது உளவியல் நிபுணர்கள் கருத்து.
புகையிலைப் பழக்கத்தை விட்ட சில காலத்திலேயே மனிதன் தன் அனைத்து பிணிகளிலிருந்தும் குணமடையத் தொடங்குகிறான் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதய நோய்க்கான ஆபத்து படிப்படியாகக் குறைந்து பின் சில வருடங்களில் முழுமையாக நீங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது.
புகைபிடித்தல் எனும் கொடிய பழக்கத்தை ஒழிக்க வலுவான கொள்கைகளை அமல்படுத்துதல் அவசியம். குறிப்பாக இளைஞர்களிடையே புகையிலை பயன்பாட்டைத் தடுக்க கடுமையான விளம்பரத் தடைகள், எளிய பேக்கேஜிங் மற்றும் அதிக வரிகளை அமல்படுத்தலாம். புகையிலையால் மனித ஆரோக்கிய பாதிப்பு மற்றும் பல்வேறு வகையான நோய்களைப் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்குகளை பள்ளி / கல்லூரிகளில் நடத்தலாம்.