மே தினம்...

மே தினம்...
Published on

மீபத்தில் ஒரு அறிவிப்பானது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. விருப்பப்படும் தொழிலாளர்கள் தினசரி பனிரெண்டு மணி நேர வேலைக்கு ஒப்புதல் தந்து உழைக்கலாம் என்பது தான் அந்தச் சட்ட முன்வடிவு. கடும் எதிர்ப்புகளின் அடிப்படையில், அந்த அறிவிப்பினை திரும்பப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அதனை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. மே தினம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு வாரத்துக்கு முன்பாக வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பானது, நம் அனைவரையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே போராடி வந்துள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் அடுத்தடுத்த வரலாற்று நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று விட்டது.

உலக அளவில் பலப்பல நாடுகளிலும் அல்லும் பகலுமாக வேலை செய்து கொண்டிருந்த மனிதர்கள், தினசரி பதினாறு மணி நேரம், தினசரி பதினெட்டு மணி நேரம் என்று உழைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா நாடுகளிலும் தொழிலாளிகளின் தினசரி உழைக்கும் நேரத்தினை ஒழுங்கு படுத்திட வேண்டி, அவரவர் நாடுகளில் ஆங்காங்கு போராடிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் உலகிலேயே முதன் முதலாக ஸ்பெயின் நாட்டில் தான் அதன் மன்னர் 1594ல், ஒரு தொழிலாளிக் கான எட்டு மணி நேர வேலை என்கிற அரசு அறிவிப்பினை வெளியிடுகிறார். ஸ்பெயினில் அதனை நடைமுறைக்கும் கொண்டு வந்தார். எனினும் அதன் பின்னரும் உலக அளவில் வேறு எந்த நாடுகளிலும், இந்த தினசரி எட்டு மணி நேர வேலைச் சட்டம் கொண்டு வரப்படவே இல்லை.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற பல நாடுகளிலும் தொழிலாளர்கள், தங்களின் தினசரி வேலை நேர ஒழுங்குக்கு எனப் பலப்பல வகைகளிலும் போராடிக் கொண்டே இருந்தார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அதனைச் சார்ந்த போராட்டங்கள் மிகுந்த வீரியத்துடன் புதிய எழுச்சிப் போராட்டங்களாக அவைகள் திகழ்ந்தன. அவைகளில் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்த போராட்டங்களும், அப்போது நடந்த கடும் அடக்குமுறைகளுமே உலக அளவில் பின்னாளில் “மே தினம்” உருவாகக் காரணமாக அமைந்து விட்டது.

சிக்காகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கம். அங்கு 1886ல் இருந்து தொழிலாளர்கள் அவ்வப்போதேல்லாம் ஒன்று கூடிப் போராடுகிறார்கள். போராட்டங்கள் நீடிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் பல தொழிலாளர்கள் இறந்து விடுகிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கு முன்னிலை வகித்தவர்கள் என்று சிலரைக் கைது செய்கிறது அரசு. தொழிற்சங்கத் தலைவனாகவும் பத்திரிகையாளராகவும் இயங்கி வந்த ஆல்பெர்ட் பார்சன்ஸ் உட்பட ஆறு நபர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அதில் ஒருவர் இறந்து விடுகிறார். மீதம் உள்ள ஐந்து நபர்களையும் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நவம்பர் 13,   1887ல் தூக்கில் இடுகிறது அமெரிக்க அரசு. அவர்களது இறுதி ஊர்வல நிகழ்வின் போது மட்டும் அமெரிக்காவில் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தியதாக வரலாற்றுப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

சிக்காகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் அப்போது நிறுவப்பட்ட நினைவுத் தூண், இப்போதும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் நிகழ்ந்த இது போன்ற சம்பவங்களுக்குப் பின்னரே உலகளவில் கவனம் பெறத் தொடங்கியது, உழைக்கும் மக்களுக்கான எட்டு மணி நேர வேலைத் திட்டமும், மே தினச் சிறப்புக் கோரிக்கைகளும்.

அதே நேரத்தில் ரஷ்யாவின் காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் “எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர பொழுது போக்கு, எட்டு மணி நேர உறக்கம்.” என்கிற குரல் முழக்கத்தினை ஓங்கி ஒலிக்கத் தொடங்கினார்கள். பரவலாக உலகம் முழுவதுமாக அந்த உரிமைக் குரல் எட்டுத் திசைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கின. படிப்படியாக ஒவ்வொரு நாடுகளிலும் உழைக்கும் தொழிலாளர்களின் தினசரி எட்டு மணி நேர வேலை என்பது முறைப்படி உறுதி செய்யப்பட்டது.  

தமிழ்நாட்டில் இந்த மே தின முழக்கத்துக்கு ஒரு நூற்றாண்டு வயது ஆகிறது. ஆம். 1923ல் சென்னை மெரீனா கடற்கரையிலும், திருவான்மியூரிலும் பொதுவுடமைச் சிந்தனையாளர் ம. சிங்காரவேலனார் அவர்கள் செங்கொடி ஏற்றி, “உழைக்கும் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். மே தினத்தினை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுங்கள்.” என்று முழக்கமிட்டார்.

தமிழ்நாட்டில் திமுகழக ஆட்சியில் மே 1ஆம் தேதியினை மே தினமாக அறிவித்தார் அறிஞர் அண்ணா. அதனைப் பின்னர் அரசு விடுமுறை தினமாகவும், தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினமாகவும் அரசின் சட்ட முன்வடிவு கொண்டு வந்து, அதனை அமுலுக்கும் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.

ரஷ்ய பிரதமராக இருந்த குருசேவ் இந்தியாவுக்கு வருகிறார். இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹாலைக் கண்டு களிக்க குருசேவ் அவர்களை அழைத்துப் போகிறார். நேருவுடன் சென்று தாஜ்மஹால் முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கிறார் குருசேவ். தாஜ்மஹாலுக்கு எதிரே நின்றபடி, குருசேவ்விடம் நேரு சொல்கிறார், “பார்த்தீர்களா? தாஜ்மஹால் எவ்வளவு அழகாக இருக்கிறது.” என்று. “தாஜ்மஹாலின் அழகு மட்டுமல்ல மிஸ்டர் நேரு, இதனை உருவாக்கிட எத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் உழைத்திருப்பார்கள்? அவர்களின் உடல் உழைப்பும், அவர்கள் சிந்திய வியர்வையும் தான் என் மனதுக்குள் விரிகிறது.” என்று பதில் அளித்தாராம் ரஷ்ய பிரதமர் குருசேவ்.

அவரவர் கோணம். அவரவர் பார்வை.

அனைவர்க்கும் மே தின வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com