பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் அவர்கள் நினைவினை போற்றுவோம்!

பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம்
பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம்
Published on

பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் அவர்கள் தனது 94 வது வயதில் (வயது முதிர்வின் காரணமாக) இன்று சென்னை கே.கே. நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லிசை பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே தேச பக்தியினை வளர்த்து வந்தவர். கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை பல்வேறு மேடைகளில் நடத்தி வந்தவர்.

1992 ஆம் ஆண்டு நமது கல்கி இதழுக்காக பிரபல பரத நாட்டிய கலைஞர் பவித்ரா பிரசாத் இவரை சந்தித்து உரையாடியிருந்தார். அப்போது அவர் தனது இசை அனுபவங்களையும் , கச்சேரி அனுபவங்களையும் நம்மிடையே பகிர்ந்திருந்தார். அதிலிருந்து பற்பல சிறப்பு துளிகள் ...அஞ்சலியாக

வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்
வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்

பவித்ரா: நீங்கள் ஆரம்பத்திலிருந்தே  வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள்தான் நடத்திக் கொண்டு வருகிறீர்களா?

சுப்பு: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த என்னை, வில்லுப்பாட்டுக்காகத்தான் கலைவாணர் என்.எஸ்.கே. சென்னைக்கு அழைத்து வந்தார். ஆயினும் கூடவே சினிமா கதை வசனமும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ‘உலகம் இவ்வளவுதான்’, ‘அன்னை அபிராமி’ எல்லாவற்றுக்கும் நகைச்சுவைப் பகுதியை நான் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். 64-ல் காஞ்சிபுரத்தில் பெரியவர் நடத்திய ஆகம சில்ப சதஸ்ஸில், திருநாவுக்கரசர் கதையை வில்லுப்பாட்டில் சொன்னேன். பெரியவர் “இதையே நீ ஏன் தொடர்ந்து செய்துவரக் கூடாது?” என்று கேட்டார்கள். பிறகுதான் சினிமாத் துறையை முழுமையாகக விட்டுவிட்டு, இதிலேயே முழுமூச்சாக இறங்கிவிட்டேன்!

பவித்ரா: சினிமா ஒரு சக்திவாய்ந்த சாதனம் அல்லவா? அதிலுள்ள புகழும், பணமும், பப்ளிசிடியும் அலாதி அல்லவா?

சுப்பு: உண்மைதான். ஆனால் இதில் கிடைக்கிற மரியாதை, மனத்திருப்தி அதில் கிடைக்கவில்லையே!

கலைஞர் சுப்பு ஆறுமுகம்
கலைஞர் சுப்பு ஆறுமுகம்

பவித்ரா: எதை வைத்து அப்படிச் சொல்லுகிறீர்கள்?

சுப்பு: லட்சம் பேர் சினிமா பார்க்கிறார்கள். அதில் சொல்லப்படும் நல்ல விஷயங்களைக் கேட்டு நூறு பேராவது திருந்துகிறார்களா? இல்லையே? ஆனால், வில்லுப்பாட்டில் ஆயிரம் பேர் ஒரு சமயத்தில் கதை கேட்டால்கூட, இரண்டு பேராவது மனம் திருந்தியிருக்கிறார்கள். அதில்தான் திருப்தி.

பவித்ரா: அப்படி ஏதாவது ஒரு நிகழ்ச்சி சொல்லுங்களேன்?

சுப்பு:  திருத்தணி பக்கத்தில் வளர்புறம் என்றொரு இடத்தில் தாய் பக்தி பற்றி நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தேன். 22 – 23 வயதுள்ள ஓர் இளைஞன், நான் கதை சொல்லச் சொல்ல, குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டே இருந்தான். பட்டினத்தார், ஆதிசங்கரர் போன்ற துறவிகளுக்குக்கூட விட்டுப் போகாத பந்தம் தாய்ப்பாசம் என்றேன். கதை முடிகிறபோது விடிகாலை மூணு மணி. நான் வண்டியில் ஏறிப் புறப்பட்டபோது, அந்த இருட்டில் ஓடிவந்து ஒரு கடிதம் தந்தான். ‘இதை ஊர் எல்லை தாண்டின பிறகுதான் பிரித்துப் பார்க்கணும்’ என்றான். அவ்வாறே பார்த்தபோது, “ஐயா தயவு செய்து தாயைப் பற்றி இன்று சொன்னதை எல்லாம் தமிழ்நாடெங்கும் சொல்லுங்கள்’ என்று அதில் எழுதியிருந்தது. அந்த இளைஞன் ஓர் ஆசிரியர் என்றும், தாயை வெறுத்து ஒதுக்கியவன் என்றும் பிறகு தெரிந்துகொண்டேன்... சினிமாவில் நல்லதை எடுத்துச் சொல்வதானால்கூட எத்தனை டயலாக், எத்தனை லட்சம் செலவு... மலையைக் குடைந்து எலியைப் பிடிப்பது மாதிரி அல்லவா அது? வில்லுப்பாட்டில் குறைந்த செலவுதானே? இத்தனை குறைச்சலான செலவில், நிறையப் பேருக்குச் சொல்லித் திருத்த முடிகிறதே!

சுப்பு ஆறுமுகம்
சுப்பு ஆறுமுகம்

பவித்ரா: சின்ன வயதிலேயே வில்லுப்பாட்டு கற்றுக்கொண்டீர்களா?

சுப்பு: எங்கள் ஊர் திருநெல்வேலி. எப்படி கர்நாடக இசை தஞ்சாவூரில் காதில் விழுந்துகொண்டே இருக்குமோ, அப்படி திருநெல்வேலியில் வில்லுப்பாட்டுக் கேட்காமல் வளர முடியாது! அதிலும் சத்திரபுதுக்குளம் என்கிற எங்கள் ஊரில் இந்தக் கலை பிரபலம்... ‘கொடை விழா’ என்ற பெயரில் எங்கள் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் கலை இது.

பவித்ரா: எங்களுக்குப் பரதநாட்டியத்தில் தஞ்சைநால்வர், பாபநாசம் சிவன், சுவாதித் திருநாள், மதுரை கிருஷ்ணன் போன்றவர்களது சாகித்யங்கள் உதவுகின்றன. அதுபோல உங்களுக்கு ஏற்கனவே யாரோ எழுதி வைத்தபாடல்கள் ஏதானும் உண்டா? அதைத்தான் பாடுவீர்களா?

சுப்பு: இல்லை. என்னைப் பொறுத்தவரை நானே பாடல்கள் எழுதிவிடுவேன். நான் சொல்லும் கதைகளுக்கு வேறு ஒருவர் எழுதி வைக்க முடியாது. ராமாயணக் கதையை வில்லுப்பாட்டில் சொன்னால்கூட, கம்பன் – வால்மீகி – ஆனந்த ராமாயணம் இவற்றோடு என் கற்பனையையும் சேர்த்து, அப்போது என்ன தோன்றுகிறதோ அதைப் பாடுவேன். எனக்குள்ளே இருக்கிற ராமன் அப்படி வெளிப்படுவான்!

பவித்ரா: அப்படியானால் முன்பு வில்லுப்பாட்டுப் பாடல்களே இல்லையா?

சுப்பு: நான் சிறு வயதாக இருந்தபோது அம்மனைப் பற்றியும், முருகனைப் பற்றியுமான வில்லுப்பாடல்களை மட்டும்தான் கேட்டிருக்கிறேன். பிறகுதான் தோவாளை சுந்தரம் பிள்ளை, சாத்தூர் பச்சைக்குட்டி, கலைவாணர், கொத்தமங்கலம் சுப்பு போன்றோரால் புராணக் கதைகளை விட்டு வெளியில் வந்து வ.உ.சி. பற்றியும், காந்தி மகான் பற்றியும் வில்லுப்பாட்டில் சொல்லப்பட்டது.

வில்லிசை  சுப்பு ஆறுமுகம்
வில்லிசை சுப்பு ஆறுமுகம்

பவித்ரா: ரொம்பப் பண்டிதத் தமிழாக இல்லாமல், ரொம்ப சிம்பிளாக இருக்கிறது. நீங்கள் பாடுவதும், கதை சொல்லுவதும்...

சுப்பு: அதில் நான் கவனமாக இருப்பேன். என் கதையைப் பாமரனும் கேட்டு ரசிக்கிறான் என்றால் அதுவம் ஒரு காரணம். பரதன், ராமனிடத்தில், ‘பாதுகையைத் தாருங்கள்; பாதரட்சையைத் தாருங்கள்; அதை வைத்து நீங்கள் வரும்வரை நாடாளுகிறேன்’ என்று சொல்வதோடு நிறுத்தமாட்டேன். பாதுகை, பாதரட்சை என்பதெல்லாம் சாதாரண பாமரனுக்குப் புரியாமல் போகலாம். எனவே, மூன்றாவதாக ‘உங்கள் செருப்பைத் தாருங்கள் அண்ணா’ என்று பரதன் கேட்டான் என்றும் சொல்லுவேன். ஒருசிலர்  ராமனின் பாதுகைகளைப் போய் செருப்பு என்று சொல்வது ஏதோ அதன் புனிதத்துக்குப் பங்கம் ஏற்படுவது போல் நினைத்தாலும், கலை, கலைக்காக அல்ல; கலை என்பது மக்களுக்காக என்பதால் ரொம்பவும் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது என்று கருதுபவன்நான்.

பவித்ரா: எங்களுக்கு ஒரு நடன நிகழ்ச்சி என்றால் நட்டுவாங்கத்துக்கு ஒருவர், வயலினுக்கு ஒருவர், மிருதங்கத்துக்கு ஒருவர் என்று வேண்டியிருக்கிறது. உங்கள் நிகழ்ச்சி எப்படி?

சுப்பு: இந்த வில்லு முக்கியம். அப்புறம் உடுக்கையும் ஹார்மோனியமும், தபலா இருந்தால் வைத்துக் கொள்ளுவேன். இல்லை என்றாலும் பரவாயில்லை.

பவித்ரா: இந்த ஜெனரேஷனைச் சேர்ந்தவர்களுக்கு எல்லாம் சயன்டிஃபிக் ஆக இருக்கணும். இந்தப் பின்னணயில், உங்கள் கலை எதிர்காலத்திலம்  செழித்து விளங்க யாராவது இளைஞர்கள், இளைய தலைமுறையினர் உங்களிடம் வில்லுப்பாட்டு கற்றுக் கொள்ள வருகிறார்களா?

சுப்பு: இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இந்தக் கலையைப் பாடத்திட்டத்தில் சேர்க்க திரு. ஆறு அழகப்பன் முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறார். அப்படி முறையாகச் சொல்லிக்கொடுக்கும் வகை ஏற்படும்போது, இந்தக் கலையின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். கவலையே இல்லை. என் மகள் பாரதி, நான் வில்லுப்பாட்டு பற்றி எழுதிய நூலை, தனது எம்ஃபில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு, தீஸிஸ் எழுதி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்ஃபில் பட்டம் பெற்றதை நான் பெருமையுடன் சொல்லுவேன்.

பவித்ரா: உங்கள் காலண்டரில் பாதிக்கு மேல் நிகழ்ச்சிகள் தேதி நிரம்பிவிட்டதே? இந்தத் தொழிலில் உங்களுக்கு இதே செக்யூரிடி இருக்கும் என்று நம்புகிறீர்களா?

சுப்பு: நானாக நிகழ்ச்சிகள் கேட்பதே இல்லை. அதுபாட்டுக்கு வரும். கல்யாணங்களில்கூட இப்போது சிலர், இசைக் கச்சேரிகளுக்குப் பதில் எனது வில்லுப்பாட்டுக் கச்சேரியை வைக்கிறார்கள். தியாகராஜ உற்சவத்திற்குக்கூட எனக்கு அழைப்பு வந்திருப்பது. இந்தக் கலைக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். இதெல்லாம் அன்னை காமாட்சியின் அருள்... ஆனால், செல்வம் மட்டுமே இதில் முக்கியமில்லை. ஒருமுறை நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது, சுண்ணாம்பு அரைக்கிற ஓர் அம்மாள், மூணு மணி நேரக்கதை கேட்டுவிட்டு, தன் சுருக்குப் பையிலிருந்த இரண்டு ரூபாயைக் கொடுத்துவிட்டு, ‘இதைக் கோயில் உண்டியலில் போடாதீர்கள். நீங்கள் மூணு பேரும் பால் வாங்கிச் சாப்பிடுங்கள். ரொம்ப அன்பாக் கதை சொன்னீர்கள்’ என்று நெகிழ்ந்து போய்ச் சொன்னார்... அந்த அன்பு முக்கியமில்லையா?  என நெகிழ்ந்து சொன்னார்.

வில்லிசைக் கலை வாழ்க!

சுப்பு ஆறுமுகம் புகழ் ஓங்குக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com