பூவுலகின் இன்னிசை தேவதை எம்.எஸ் அம்மா!

செய்தி வாசிப்பாளர் ரத்னா அவர்களின் நேர்காணல்
பூவுலகின் இன்னிசை தேவதை எம்.எஸ் அம்மா!

பேட்டி: ஜிக்கன்னு.

‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா’  என்று  வேங்கடவனையே தினமும் துயிலெழுப்பும் அந்த தேன் குரலுக்கு சொந்தக்காரரான  எம்.எஸ். அம்மாவின் பிறந்த தினம் இன்று!

‘எம்.எஸ் ப்ளு’ என்று அவர் பெயரில் ஒரு கலரே உருவாகிவிட்டது..ப்ளு கலர் புடவை.. நெற்றியில் பளீர் குங்குமம் என்று சாந்தமே உருவாக காட்சியளிக்கும் எம்.எஸ்.பிறந்த நாளில் அவரது நினைவுகளை விவரிக்க பொருத்தமானவர் யார் என்று தேடிய போது பளிச்சிட்டவர் சன் டிவி செய்தி வாசிப்பாளர் ரத்னா.

கடந்த ஆண்டு நவராத்திரி கொலுவின் போது எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக ஓலியும்..ஓளியுமாக காட்சிப்படுத்தி இருந்தார்.. எம்.எஸ் குறித்த அரிய தகவல்களை தேடி பிடித்து ஆவணப்படுத்தி இருந்தார் ரத்னா. அவரை இரவு 11 மணி தொடர்பு கொண்டபோது..எம்.எஸ்..அம்மா பற்றிய தனது நெகிழ்வான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மீரா படம் ரிலீஸ்.

சென்ற வருடம் உங்கள் கொலு தீமுக்கு எம்.எஸ் அம்மாவை எப்படி தேர்வு செய்தீர்கள்?

எதிலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதுடன் அரிய தகவல்களை பகிர வேண்டும் என நினைப்பவள் நான். இதன் காரணமாகவே ஒவ்வொரு முறை கொலு வைக்கும்போதும் புராண கதைகளில் மக்கள் அறியாத தகவல்களை சேகரித்து விவரித்து வருவேன்.

அந்த வகையில் திருவண்ணாமலை.. பாற்கடல்.. ஐயப்பன்.. கிரிவலம்.. சித்தர்கள்.. அறுபடை வீடு என பலவகை தீம்களை வடிவமைத்து பல வருட கொலுக்களில் புதிய புதிய தகவல்கள் பகிர்ந்தேன் வந்தவர்கள் மிகவும் ரசித்தார்கள். அப்போதுதான் புராணக்கதைகளுக்கு பதில் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் வண்ணமயமான வாழ்க்கையை பதிவு செய்ய நினைத்தேன்.

உடனே கண் முன் நிழலாடியவர் எம்.எஸ். அம்மா. நவராத்திரி என்றால் பாடல் இல்லாமலா? இறைவன் பூவுலகுக்கு அனுப்பி வைத்த இன்னிசை தேவதை அல்லவா எம்.எஸ் அம்மா?! (ரத்னாவின் முகம் பிரகாசமாகிறது.. அவர் தொடர்ந்தார்,)

எம்.எஸ். அம்மா என்று முடிவு செய்தவுடனேயே..அவர் பிறந்த மதுரையில் இருந்து.. கோலோச்சிய ஐ.நா.சபை..வரை..அத்தனை தகவல்களையும்..விடாமல் சேகரித்தேன்.  சதாசிவம் மீதான பக்தி..காதல்.. கும்பகோணத்தில் அரங்கேறிய முதல் கச்சேரி.. திருநீர்மலையில் நடைபெற்ற கல்யாணம்.. லண்டனில் ராயல் ஆல்பர்ட் ஹால்.கச்சேரி என்று அனைத்தையும் விடாமல் பதிவு செய்து காட்சிப்படுத்தினேன். 9 வயதில் எம்.எஸ்.அம்மாவின் முதல் ரெகார்டிங்..’பெற்ற தாய் தனை மக மறந்தாலும்..’ என்ற பாடல் அப்போது மாஸ் ஹிட்.

கல்கி கார்டன்ஸ் ..

எம்.எஸ். அம்மாவின் பக்திப் பாடல்களில் உங்கள் ஃபேவரைட்?

அவர் பாடிய அன்னமாச்சார்யா கீர்த்தனை.. தியாகய்யர் கீர்த்தனை.. தீட்சிதர்..ஷியாமா சாஸ்திரி..இந்துஸ்தானி..கஜல்..என்று எல்லாமே பிடிக்கும்.. மனம் லயித்து அவர் பாடுவதை கேட்கும் போது.. அந்த உயரிய சங்கீதத்தை..பக்தி மூலம் இறைவனிடம் சரணாகதி அடைவது.. இப்போதைய டிரெண்டில் சொன்னால் வேற லெவல்!

எம்.எஸ் மதுரை வீடு .

அவரது ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ கேட்டாலே  நம் மனது பஞ்சு மாதிரி லேசாகி விடும்.

அதிலும் எம்.எஸ். அம்மாவின் சாதனைகளுக்கு பக்கபலமாக இருந்தவர் சதாசிவம் அவர்களையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த ஆதர்ச தம்பதிதான்  உலகின் முதல் 'Made for each other couple' என்று நினைக்கிறேன்.

திருநீர்மலையில் திருமணம்.

அரண்மனை வாழ்க்கை வாழ்ந்த எம்.எஸ். தன் கணவர் மீதான பதி பக்திக்காக ஒரு கட்டத்தில் எளிமையான வீட்டில் வாழ்ந்துள்ளார். அந்த அளவுக்கு கணவர் மீது காதல்..மரியாதை.. அன்பு என்று கூட சொல்லலாம்.

தேசத் தலைவர்களுடன் ..

எம்.எஸ்.. அம்மாவை பார்த்தது உண்டா?

ஒரே ஒரு முறை மியூசிக் அகாடமியில். அந்த .’எம்.எஸ். ப்ளூ’ கலர் புடவையில் லஷ்மி கரமாகப் பார்த்தது இன்னும் மறக்க முடியாது. (என்ற ரத்னா தொடர்ந்தார்..) சென்ற வருடம் கொலு தீம்க்காக 60 நாட்கள்.. தினமும் 10மணி நேரம் அவருடைய கீர்த்தனைகளை கேட்டேன்.. அது ஒரு தெய்வீக அனுபவம்..அனுபவிக்கும்போதுதான் அதன் சுகம்..இனிமை,ஏகாந்தம் தெரியும்.. உணர முடியும்

கும்பகோணத்தில் முதல் கச்சேரி

-எம்.எஸ்-சின் நினைவுகளில் மூழ்கியவரை தொந்தரவு செய்ய விரும்பாமல் விடை பெற்றோம்!

ரத்னா மேடத்தை செய்தி வாசிப்பாளராகத்தான் எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் அவருக்கு சங்கீதமும் தெரியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இதோ அந்த காற்றினிலே வரும் கீதம்…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com