PS2 அமோக வெற்றி அடையும் என்பது என் எதிர்பார்ப்பு!

PS2 அமோக வெற்றி அடையும் என்பது என் எதிர்பார்ப்பு!
சியாமளா ரங்கனாதன்
சியாமளா ரங்கனாதன்

பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது...

ழுத்துலகில், சரித்திர நாவல்களின் சிகரமாக, உலக இலக்கியங்களில் முதன்மை இடம் பெற்ற மிகச் சில நாவல்களில் ஒன்றாக, தமிழ் மொழிக்குக் கிடைத்தப் பெரும் பேறாக இன்று வரை இருக்கும் சரித்திரத் தொடர் கல்கி அவர்கள் எழுதிய 'பொன்னியின் செல்வன்.'

பொன்னியின் செல்வன் திரைப்படமாகி, அதன் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது.

எத்தனை முறை படித்தாலும் புதுப் புதுக் கோணங்களில் ரசிக்க வைக்கும் காலத்தை வென்ற சரித்திரப் புதினம் இது. படிக்கப் படிக்க சுவை குன்றாத வர்ணனைகள், ஆழமான கதாபாத்திரங்கள், உரையாடல்கள், சரித்திரம் சம்பந்தப் பட்ட இடங்கள், மிகையில்லாத சரளமான நடை, காட்சியைக் கண்ணெதிரே கொண்டு வரும் அபார எழுத்துத் திறன் இவை எல்லாவற்றிலும் கல்கியும், அவரது பொன்னியின் செல்வனும், இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகள் நிலைத்து நிற்பார்கள்.

தானே ஒரு வரலாறாகிப் போன அந்தப் புதினத்தை, திரைப் படமாக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் பலர் பல காலமாக முயன்று வந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படும் திரு.மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் புதினத்தை அருமையான திரைப் படமாக்கித் தந்திருக்கிறார். புதினத்தைப் படிக்காதவர்களும் பார்த்து வியந்து ரசித்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

குறிப்பாக தமிழ் படிக்கத் தெரியாத இளைய தலைமுறை, இந்தப் படம் பார்த்த பின், நாவலைத் தேடி வாங்கிப் படித்திருக்கிறார்கள் என்னும் போது தமிழுக்கு கல்கியும் திரை உலகுக்கு மணிரத்னமும் ஆற்றிய சிறந்த தொண்டு இது என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற வருடம் முதல் பாகம் வெளியாகி, அனேகமாக உலகெங்கும் வாழும் தமிழர்களில் அந்தப் படத்தைப் பார்க்காதவர்களே இல்லை என்றே சொல்லும் அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்றது.

திரைக்கதை, நடிகர்கள் தேர்வு, பாடல்கள், இசை, செட்டிங்குகள், வெளிப்புறக் காட்சிகள், எடிட்டிங், ஒளிப்பதிவு, குறிப்பாக, போர் மற்றும் கடலில் புயல் வீசும் காட்சிகள் என்று ஒவ்வொன்றும் நுணுக்கமான அருமையான பதிவு.

நாவலைப் படித்தவர்களுக்கு இன்னும் சில காட்சிகள் அதிகமாக விளக்கம் தரும் வகையில் இருக்கலாமே என்று தோன்றியிருக்கலாம்.

மணிமேகலையை காட்டவில்லையே, குந்தவை – வந்தியத்தேவன் காதல் ஆழமாக சித்தரிக்கப் படவில்லையே என்றெல்லாம் வருத்தங்கள் தோன்றின. வித விதமான பாராட்டுகள், குறைபாடுகள், விமர்சனங்கள் இருந்தன. மிக சுவாரஸ்யமான கட்டத்தில் சரியான இடத்தில் PS1 முடித்திருந்தார் மணி சார். இதுவே PS2 விற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது.

பொன்னியின் செல்வன் என்ன ஆனார், ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதற்கான சித்தரிப்பு, குந்தவை, வந்தியத்தேவன் கதைப் போக்கில் எப்படி செல்கிறார்கள், மதுராந்தகன் முடிவு என்ன, நந்தினியின் தாயார்  யார், என்பதையெல்லாம் பார்க்க நாம் தயாராகி வருகிறோம்.

ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

பாடல்கள், காட்சி அமைப்பு, விறுவிறுப்பான கதைப் போக்கு உணர்ச்சி பூர்வமான உரையாடல்கள் என்று ரசிகர்கள் அனைவருமே ஆவலோடு காத்திருக்கிறார்கள்

நேற்று வெளியான அதன் டீசர் லட்சக்கணக்கான பேரைப் பார்க்க வைத்துள்ளது.

நிரம்பி வழிகின்றன கமென்ட் பாக்ஸ்கள்.

இரண்டாம் பாகமும் அமோக வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

முதல் பாகம் பார்த்து லயித்து ரசித்து அதன் தாக்கத்திலிருந்து இன்னும் வெளிவராத நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் PS2 பார்க்க. மற்றொரு மாபெரும் வெற்றிப்படமாக இது அமையும் என்கிற என் எதிர்பார்ப்பு நிச்சயம் ஏமாற்றத்தை அளிக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com