நடன மாதுவின் பெயரில் கோயில் கோபுரம்!

வெள்ளை கோபுரம்
வெள்ளை கோபுரம்

றைவன் திருப்பணிக்காக தனது உயிரையே அர்ப்பணித்த பெண் வெள்ளையம்மாள். இவள் வேறு யாருமல்ல; கோயிலில் நடனமாடும் திருப்பணியைச் செய்து வந்தவள். முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அந்நியப் படையெடுப்புகளால் ஸ்ரீரங்கம் கோயில் பலமுறை சூறையாடப்பட்டு பொன், பொருள் எல்லாம் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அந்த வரலாற்றுடன் தொடர்புடையதுதான் ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்தின் வரலாறும். அது 15ம் நூற்றாண்டு காலகட்டம். அப்போது மதுரையை ஆண்ட சுல்தான் படைகள் ஸ்ரீரங்கம் கோயிலை கொள்ளையடிப்பதற்காக வந்தன.

பெருமளவில் பொன், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னரும் அந்தப் படைத் தளபதிக்கு ஸ்ரீரங்கத்தை விட்டுச் செல்ல மனமில்லை. அதற்குக் காரணம், அவன் மனதில் ‘இக்கோயிலில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அவற்றையும் கவர்ந்த பின்னரே அங்கிருந்து செல்ல வேண்டும்’ எனத் திட்டமிட்டான். ஆனால், அவன் நினைத்த பொக்கிஷம் அவன் கண்களில் எளிதாக சிக்கவில்லை. அந்நியப் படைகளின் ஆதிக்கத்தால் கோயிலின் தினசரி பூஜைகளும் வழிபாடுகளும் தடைபட்டன.

தைக் கண்டு மனம் பொறுக்காத வெள்ளையம்மாள் வெகுண்டெழுந்தாள். அரங்கன் மேல் உள்ள அளவற்ற பற்றின் காரணமாக பேராசை கொண்ட தளபதிக்கு சரியான பாடம் புகட்டத் திட்டமிட்டாள். பெண்ணாசை பிடித்த அந்தத் தளபதி வெள்ளையம்மாளிடம் நெருங்கிப் பழகினான். அந்த நெருக்கத்தைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வெள்ளையம்மாள், ஒரு நாள் தளபதியிடம் ரகசியமாகப் பேசினாள். “நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொக்கிஷம் எங்கே இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். நான் உங்களுக்கு அதைக் காட்டுகிறேன்” என்று கூறி அவனை கையோடு அழைத்துச் சென்றாள் கோயில் கோபுரத்தின் உச்சிக்கு.

விலை மதிப்பற்ற பொக்கிஷம் இன்னும் சற்று நேரத்தில் தனக்குக் கிடைக்கப்போகிறது என்ற பேராசையில் அவனும் அவளைப் பின் தொடர்ந்து கோபுரப் படிகளில் மேலே ஏறினான். கோபுரத்தின் உச்சியை அடைந்ததும் வெள்ளையம்மாள் அந்தத் தளபதியை மேலிருந்து கீழே தள்ளிவிட்டாள். இதில் மண்டை உடைந்து தளபதி மாண்டான். ‘இதையறிந்தால் அவனது படை வீரர்கள் நம்மை சும்மா விடமாட்டார்கள்’ என்று கருதிய வெள்ளையம்மாள் அந்த கோபுரத்தின் மேலிருந்தே குதித்து தனது உயிரையும் மாய்த்துக்கொண்டாள்.

அரங்கனின் பொக்கிஷத்தைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரை ஈந்த அந்த மங்கையின் நினைவாக அந்த கோபுரம் இன்றுவரை, ‘வெள்ளை கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது. வெள்ளையம்மாளின் தியாகத்தை உணர்த்துவதற்காக இந்த கோபுரத்துக்கு வெள்ளை வர்ணம் மட்டுமே பூசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com