ப்ராசீன பஜனை சம்பிரதாயம் எனப்படும் பழமையான பஜனை வழிமுறையை முன்னெடுத்து வழிநடத்திக் கொண்டிருக்கும் திரு. உடையாளூர் கல்யாண்ராமன், தனது கம்பீரக் காந்தக் குரலால், கேட்போரை பக்திக் கடலில் ஆழ்த்துகிறார்.
"வனமாலி ராதா ரமணா", "ராதே ராதே ராதே கோவிந்தா" என மனமுருகி பாடும் இவரது பாடல்களுக்கு மெய்சிலிர்க்காமல் இருக்க இயலாது. காஞ்சி மகாபெரியவரை குருவாகக் கொண்டு தனது ஒவ்வொரு கச்சேரியிலும் குருவுக்கென்று தனி இடம் கொடுத்து, தனது பேரும் புகழும் குருவுக்கே சமர்ப்பணம் எனக் கூறும் குரு பக்தியாளர்.
உடையாளூர் என்னும் தன்னுடைய பிறப்பிடத்தை தனது பெயரோடு இணைத்துக் கொண்டு உலகமெங்கும் நாம சங்கீர்த்தனம் மற்றும் ராதா கல்யாண வைபோகத்தை சிறப்பாக நடத்திக் கொண்டு வரும் திரு.உடையாளூர் கல்யாணராமன் சமீபத்தில் தன் குழுவினரோடு லண்டன் வந்திருந்தார்.
லண்டன் மாநகரத்தில் 3-வது முறையாக கடந்த வாரம் நடைபெற்ற ராதா கல்யாண உற்சவத்திற்கு, பாபு ராஜசேகரன் (மிருதங்கம்), ஷங்கர் ராமன் (ஹார்மோனியம்), ப்ருகா பாலு மற்றும் பலராமன் (வாய்ப்பாட்டு) என தன்னுடைய குழுவோடு வந்திருந்த அவரை கல்கி ஆன்லைனுக்காக நாம் நேரில் சந்தித்தோம்.
புன்முறுவலுடன் நம்மை வரவேற்று, நலம் விசாரித்து பொறுமையாகவும், விளக்கமாகவும் நமது அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தார். இந்த நேர்காணல் பல உன்னதமான இந்து சம்பிரதாயங்களையும், பக்தி மார்க்கத்தையும் நமக்கு எளிதில் விளக்கும் விதமாக அமைந்தது என்றே கூறலாம்.
நாம் இப்பொழுது கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். த்ரேதா, துவாபர யுகங்களில் இறைவனை சென்றடைவது சுலபமல்ல. யாகம், தவம் செய்ய வேண்டும். விரதம் இருக்க வேண்டும். ஆனால் நாம் வாழும் கலியுகத்தில்,இறைவனின் நாமத்தை(பெயர்) கூறுவதன் மூலம் இறைவனை சுலபமாக சென்றடையலாம்.
இந்தியாவில் பல மாநிலங்களிலும் பல மகான்கள் பல்வேறு மொழிகளில் தோன்றி, தங்களது கீர்த்தனைகள் மூலம் பக்தி மார்க்கத்தை தழைக்கச் செய்துள்ளனர். பக்தி, நாமசங்கீர்த்தனம் மட்டுமல்லாது நமது புராதனமான பாரத கலாச்சாரத்தையும் போற்றி பாதுகாத்துள்ளனர்.
பகவானின் கிருபையை அடைவதற்கு பக்தியில் பல வழிகள் உள்ளன. நவவித பக்தியில் ஸ்ரவணம் மற்றும் கீர்த்தனம் மிகவும் முக்கியமானவை. ஸ்ரவணம் என்பது கேட்பது, இதில் ப்ராசீன பஜனை சம்பிரதாயம் என்பது பகவானின் நாமத்தை பாடுவதோடு குறிப்பாக ஒரு வழிமுறை வகுத்து, syllabus என ஆங்கிலத்தில் கூறுவது போன்று இதற்குப் பின் இந்த பாடல் என வழிமுறை வகுத்து கீர்த்தனைகள் பாடுவது. இது ஒரு மிகப்பெரிய கடல் - தோடாய மங்கலத்தில் ஆரம்பித்து இதில் இருக்கக்கூடிய கீர்த்தனைகள் பல பல. பஜனை சம்பிரதாயத்தில் இடம்பெறாத பாடல்களே இல்லை என்று சொல்லலாம்.
ப்ராசீன பஜனை சம்பிரதாயத்தின் முன்னோடிகளாக விளங்குபவர்கள் பற்றி ?
தமிழ் நாட்டில் 400 வருடங்களுக்கு முன்பு கோவிந்தாபுரத்தை சார்ந்த போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னும் பெரிய மகான் ராம நாமம் கூறுவதை வலியுறுத்தி வந்தார். அவருடைய சமகாலத்தை சேர்ந்த ஸ்ரீதர ஐயாவாள் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவிசைநல்லூரில் பிறந்தவர். இவர் சிவ சிவ என சிவனின் நாமத்தை கூற வலியுறுத்தினார். இவர்கள் இருவருமே சாதி பேதமற்று இறைவனின் நாமம் கூறுவதன் முக்கித்துவதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து நூறு வருடம் கழித்து திருவிசைநல்லூரில் பிறந்த மருதாநல்லூரை ஶ்ரீ சத்குரு ஸ்வாமிகள், இவரது இயற்பெயர் வெங்கட்ராமன், இவர் போதேந்திர ஸ்வாமிகளைத் தனது குருவாக மனதில் நினைத்து செயல்பட்டவர். எந்த நாமத்தை கூறினாலும், அதோடு இசையும் கலந்து பாடலாகப்
பாடும் பொழுது பலதரப்பட்ட மக்களை இது சென்றடையும் எனக் கூறி கீர்த்தனையின் முக்கியத்துவத்தை நமக்கு முதலில் உணர்த்தியவர். கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் போன்று இவர்கள் மூவரையும் பஜனை சம்பிரதாயத்தின் மும்மூர்த்திகள் என்றே கூறலாம்.
தங்களின் குரு பற்றி ..?
கோவிந்தாபுரத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூரை சார்ந்த ப்ரஹ்மஸ்ரீ திரு.வெங்கட்ராம பாகவதர் ஒரு பெரிய மகான். அவருக்கு இரு கண்களும் தெரியாது, அவர் எடுத்து சொன்ன பஜனை சம்பிரதாயமே அதிகாரப்பூர்வமாக கருதப்படுகிறது. இவர் போதேந்திர ஸ்வாமிகள் மடம் மற்றும் ஸத்குரு ஸ்வாமிகள் மடத்திற்கு ஆஸ்தான பாகவதராக இருந்து இதற்குப் பின் இந்த கீர்த்தனை வர வேண்டும் என வழி வகுத்து சொன்னவர். அவரின் கிருபையால் கிட்டத்தட்ட 15 முதல் 20 வருடங்கள் வரை அவரிடம் பயிற்சி பெற்றேன். என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள உடையாளூர். உடையாளூரின் சிறப்பம்சம் என்னவென்றால் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் சமாதி அங்கு உள்ளது. அங்கு பள்ளிப் பருவத்திலிருந்து எனது குருநாதர் செல்லும் கச்சேரிகளுக்கு சென்று பஜனைப் பாடல்களைக் கற்கும் பாக்கியம் பெற்றேன். இன்றும் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது. எனது குருநாதர் "கோபால விலாசினி" என அஷ்டபதி துவங்கினால் அவரது சக்தி வாய்ந்த குரல், அந்த அதிர்வு பகவானை நேரில் காண்பது போன்று இருக்கும். அவர் சதா சர்வ காலமும் பஜனை மற்றும் இறைவனின் சிந்தனையோடு வாழ்ந்து வந்த மகான்.
ராதா கல்யாணம் என்பது பஜனை சம்பிரதாயத்தில் அமைந்த ஒன்றா?
ராதா கல்யாணம் என்பது பஜனை சம்பிரதாயத்தின் நீட்டிப்பு என்று சொல்லலாம். திருப்பதியில் நடக்கும் கல்யாண உற்சவம் போன்று ஸ்வாமிக்கு பஜனை, கீர்த்தனைகளை அடிப்டையாகக் கொண்டு திருமண வைபவம் நடத்துவது. ராதா கல்யாணத்தின் நோக்கம் பரமாத்மாவாகிய இறைவனை சென்றடைவது. நாம் ஒவ்வொருவரும் ராதையின் அம்சமான ஜீவாத்மாக்கள். ராதை என்கிற பாத்திரம் பாகவதில் இல்லை. பிரம்ம வைவர்த்த புராணத்தில் பிரம்மாவால் உருவாக்கப்பட்ட ஒன்று.இவ்வுலகில் வாழும் அனைவருமே ராதா தான். நாம் பரமாத்மாவை சென்றடைய யாரை பற்றிக் கொண்டால் அது எளிதாகும் என்று பார்த்தால் - மாதா, பிதாவிற்கு அடுத்தபடியான குருவை பற்றினால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்த தத்துவத்தை விளக்குவது ராதா கல்யாணம்.
சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் ஜீவ பிரம்ம ஐக்கியம் என்று சொல்லலாம். சாதி மற்றும் மொழிக்கு அப்பாற்பட்ட இந்த வைபவம் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்வதற்கு ஏதுவாக தியாகராஜர், புரந்தரதாசர் முதல் கபீர், துக்காராம் என அனைத்து மொழிக் கீர்த்தனைகள், அபங்கம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும் பொழுது தான் "நித்தியானந்தம்"- நிரந்தரமான ஆனந்தம் கிட்டுகிறது.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு இதை எடுத்துச் செல்வது எப்படி?
இன்றைய இளம் தலைமுறையினர் நிச்சயமாக இதை விளங்கிக் கொண்டுள்ளார்கள். கடவுளின் கருணையால் கடந்த நாற்பது வருடங்களாக நாங்கள் பல குழந்தைகளை பயிற்றுவித்திருக்கின்றோம். உலகெங்கும் பல நாடுகளுக்கு செல்லும் பொழுதும் பல வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அபுதாபி, ஷார்ஜா, துபாய், உகாண்டா, டான்சானியா,நைரோபி,லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாடுகள் என எங்கு சென்றாலும் பல மக்கள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது கடைபிடிப்பது எளிதும் கூட. பஜனை கச்சேரிகளில் கை தட்டி பாடும் மக்களே இதற்கு சான்று.
இதுவே நமது கலாச்சாரத்தை பாதுகாக்கவும் உறுதுணையாக இருக்கிறது. நமது கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாக நான் கருதுகிறேன். எனவே நாம சங்கீர்த்தனம் என்பது சமூக ஒன்றுகூடல் என்று கூறுவதை விட ஆன்மீகக் கூடல் என்று கூறுவதே பொருத்தமானதாகும். இதில் கலந்து கொள்வதன் அனுபவம் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று.
இரு வருடங்கள் கழித்து லண்டனில் மீண்டும் ராதா கல்யாணம் - உங்கள் மனநிலை என்ன?
மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் . என்னதான் நேரலை மூலம் பல பஜனை கச்சேரிகள் நடத்தியிருந்தாலும் , மக்கள் முன் பாடுவதன் அனுபவமே தனி. அதற்கு ஈடு இணை இல்லை. நாம் பாடுவதை மக்கள் ரசித்து நம்மோடு சேர்ந்து பாடும் பொழுதும் சரி , நம்முடைய பாடலைப் பாராட்டி கை தட்டி ஆரவாரிப்பதும் சரி - அதற்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது.
பாகவத சேவா டிரஸ்ட் என்பது என்ன?
பஜனை பாடுபவர்களை பாகவதர் என்று அழைக்கின்றோம். அந்த காலத்தில் கோவில்களில் மட்டுமே பஜனை கச்சேரிகள் நடைபெறும். இப்பொழுதெல்லாம் பல சபாக்களில் பஜனை கச்சேரி நிகழ்த்துகிறார்கள். எனவே 75 வயதுக்கு மேற்பட்ட பாகவதர்களுக்கு வருமானம் என்பது குறைவு, பல கிராமங்களில் வசித்து வருகின்றனர். நான் இதே துறையில் இருப்பதால் இது என்னுடைய பொறுப்பும் கூட என நினைத்து பகவானின் கிருபையால் "பாகவத சேவா டிரஸ்ட்" என்னும் இந்த அமைப்பு என்னை தலைவராகக் கொண்டு, காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் விஜயேந்திர ஸ்வாமிகள் அவர்களால் 2002-ல், என்னுடைய பஜனை CD விற்பனையில் கிடைத்த ஒரு லட்சம் கொண்டு தொடங்கப்பட்டது.
இன்று 2022-ல், இந்த டிரஸ்ட் மூலம் 110 பாகவதர்களுக்கு மாதாந்திர வருமானம் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாது பாகவத குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி, அவர்கள் குடும்பங்களில் ஏற்படும் திடீர் மருத்துவ சிகிச்சைக்கு உதவி என பல்வேறு விதங்களில் துணையாக நிற்கின்றோம். இதோடு கூட , வருடந்தோறும் நவம்பரில் கிருஷ்ண கான சபாவில், ஸ்ரீ ராம் சிட் பண்ட்ஸ் , சிட்டி யூனியன் பேங்க் துணையோடு "நாம சங்கீர்த்தன விழா" நடத்தி அதில் மூத்த பாகவதர் அவர்களுக்கு "சங்கீர்த்தன கலாநிதி" என்னும் பட்டம் வழங்கி கவுரவிக்கின்றோம், இதில் பக்க வாதியாக்காரர்களும் பாராட்டப்படுகிறார்கள். பாகவத குடும்பங்களை சேர்ந்த மகளிரும் இதில் பெருமை படுத்தப்படுகிறார்கள். இது கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-மென்மையாகச் சொல்லி விடைகொடுத்தார் திரு. உடையாளூர் கல்யாணராமன்.
அவர் பல அரிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இந்த நேர்காணல் மனதிற்கு நிறைவான ஒன்றாக அமைந்தது. மேலும் திரு. உடையாளூர் அவர்கள் நமக்காக பாடி பதிவு செய்யப்பட்ட காணொளியும் அற்புதம். ராதா கல்யாண வைபவத்திற்கு வாழ்த்துச் சொல்லி அங்கிருந்து நாம் விடை பெற்றோம்.