தேசிய நுகர்வோர் தினம் - டிசம்பர்-24

தேசிய நுகர்வோர் தினம் - டிசம்பர்-24
Published on

நுகர்வோர் உரிமையும், பாதுகாப்பும் !

உடல் நலனுக்காகவும், அதிக ஆயுள் உயிர் வாழ்வதற்காகவும் தேவையான தரமான பொருட்களை நேர்மையான, நியாயமான விற்பனையாளரகள்; சரியான விலைக்கு விற்கின்றனர். ஆனால் பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட சில வணிகர், உற்பத்தியாளர், அதிக வருமானத்திற்காகவும், வஞ்சக குணம் கொண்ட வியாபாரிகள் சுயநலமே குறிக்கோளாகக் கொண்டு பெர்து மக்களாகிய நம் தேவையின் அளவையும், சூழ்நிலைமையும் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மோசடியில் இறங்குகின்றனர். 

“நீரின்றி அமையாது உலகு” என்பது போல் நுகர்வின்றி எந்த மனிதனுடைய வாழ்வும் அமையாது. நுகர்வைச் சந்திக்கும் எல்லா மனிதர்களும் நுகர்வோர் ஆகிறார். கி.பி.1800-ஆம் ஆண்டுகளிலேயே அமெரிக்காவில் நுகர்வோரில் பாதிக்கப்பட்டு விழிப்படைந்த சிலர் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்களை அமைத்து பல போராட்டங்களையும், அதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் கொடுத்தனர். நுகர்வோரை காப்பாற்ற பல தீர்மானங்களை தயாரித்து, அதை அரசாங்கத்திடம் கோரிக்கையாக வைத்தார்கள். கி.பி1899-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அமெரிக்காவில் தேசிய நுகர்வோர் இயக்கம் ஒன்றையும் உருவாக்கினார்கள்.; 

கி.பி.1936-ஆம் ஆண்டு டாக்டர் கால்ரூடன் வார்டன் நுகர்வோர் ஒருங்கமைப்பு ஒன்றினை நிறுவினார். அதன் பிறகு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு காலக்கட்டங்களில் பரிணாம வளர்ச்சியினைப் பெற்று மேம்பாடு அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ரால்ப் நடார் என்பவர் நவீன நுகர்வோர் இயக்கத்தை தொடங்கினார் இவரே நவீன நுகர்வியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். கி.பி.1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி உருவாக்கப்பட்ட உணவு மற்றும் வேளாண் அமைப்பும், கி.பி. 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று உருவாக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பு ஆகிய இரண்டும் நுகர்வோர் இயக்கத்தை மேம்படுத்தின. 

1977-ஆம் ஆண்டில் நுகர்வோர் வாரியம் குறித்து பல நாடுகளில் எற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாரை கேட்டுக்கொண்டது. அதன்படி ஐக்கிய நாடுகள் சபையானது பல நாடுகளின் அரசாங்களையும், பல்வேறு சர்வதேச அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து நுகர்வோர் பாதுகாப்பிற்கான வரைவு காட்டும் நெறிகளை தயாரித்தது. 1983-ஆம் ஆண்டு மேமாதம் 17-ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் புட்ரோஸ்காலி என்பவர் நுகர்வோர் பாதுகாப்பு ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்கான சர்வதேச கூட்டுறவு மற்றும் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பின் கீழ் தயாரித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு மற்றும் பொருளாதாரம் சமூகக்குழுவின் முன் சமர்பித்தார். 

அந்த அறிக்கை பற்றி அனைத்து உறுப்பு நாடுகளும் 1983-ஆம் ஆண்டிலிருந்து 1985-ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் ஆழமாகவும், தீவிரமாகவும் பாதுகாப்பு பற்றி விவாதித்து ஒன்றுக்கொன்று பேச்சுவார்த்தை நடத்தின. பின்னர் 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு 8 உரிமைகளை அங்கீகரித்து அதன் உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டும் நெறிகளாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக ஜீலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்கான சர்வதேச கூட்டுறவு மற்றும் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பிலான நுகர்வோர் குறித்த வழிகாட்டும் நெறிகளை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது. 

நுகர்வோர் என்பவர் ஒரு நபர் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அவர் தனக்காகவும், தன்னுடைய குடும்பத்தினர்ருக்காகவும் ஒரு பொருளைப் பயன்படுத்துகிறார். உறுப்பு நாடுகள் தங்களுடைய சமூக நிலைமைகளுக்கு ஏற்ப இந்த விளக்கத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ல் இயற்றப்பட்டு 15-4-1987 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் நுகர்வோர் குறைதீர்ப்பு முறைகள் மூன்றடுக்காக செயல்படுத்தப்பட்டன. இதன்படி நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்புகள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் செயல்பட்டன. மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்பில் மாவட்ட நீதிபதி அந்தஸ்த்தில் உள்ள சட்ட அலுவலர் தலைவராக இருப்பார். மாநில அளவில் ஒய்வுப் பெற்ற உயர் மன்ற நீதிபதியும், தேசிய அளவில் ஒய்வுப் பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும் தலைவராக இருப்பார்;. இந்த நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்புகள் தங்களிடம் அளிக்கப்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

2015-ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும், 2016ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியத் தர நிர்ணய வாரியச்சட்டம் இந்த இரண்டும் நுகர்வோர் மேலும் அதிகம் பயன்பெற முன்னேற்றத்திற்கான திட்டங்களாகும். இதில் நுகர்வோர் பாதுகாப்பு மன்றங்கள் ஏற்றுக் கொள்ளும் வழக்குகளின் பணமதிப்பு உச்சவரம்பை உயர்த்துவது, இந்த மன்றங்களின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்துவது, வழக்குகளை விரைவில் முடிப்பது, மாவட்ட, மாநில அமைப்புகள் தங்களுடைய தீர்வுகளைத் தாங்களே மறுபரிசீலனை செய்யும் உரிமை அளித்தல், வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு அளிக்க அமர்வுகளை அமைத்தல், மாவட்ட பாதுகாப்பு மையங்களின் உறுப்பினர்களையும், தலைவர்களையும் நியமிப்பதில் சீர்த்திருத்தங்கள், நுகர்வோர் தங்களுடைய வழக்குகளை வலைதளம் மூலம் பதிவுசெய்தல், நுகர்வோர் தங்கியுள்ள பகுதியில் செயல்படும் மன்றங்களில் வழக்குகளைப் பதிவு செய்யும் உரிமை, நுகர்வோரின் ஒரு வழக்கை ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாதா காலக்கெடு நாட்கள் குறைப்பு போன்ற சிறப்பம்சங்கள் அதில் இருந்தன. 

தற்போது வளர்ச்சியடைந்துள்ள எல்லா நாடுகளிலும் பொருள்கள் மற்றும் சேவைகளின் பல அளவுகளைக் கண்காணிக்கும் அமைப்பு அரசாங்கம் சார்ந்தவைகளாக உள்ளது. அந்தத்த சமுதாயங்கள் நாட்டின் பொருளாதார நலனுக்கும், மேம்பாட்டுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதை இது உணர்த்துகின்றது.; அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தினாலும் எடை மற்றும் பிற அளவைத் தொழில்நுட்பங்கள் மிகவும் மேம்பட்டுள்ளன. நுகர்வோரின் பிரச்னைகளுக்கு மாற்றுத் தீர்வு அளிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய நுகர்வோர் உதவித் தொடர்பை ஏற்படுத்தியுள்;ளது. இந்தத் தொடர்பில் இலவசமாக ஆலோசனைகள், தகவல்கள், வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டு நுகர்வோருக்கு ஆளுமை அளிக்கப்படுகிறது. 

நுகர்வோரின் எண்ணங்களுக்கும், குறைகளுக்கும் ஏற்ற வகையிலும் உலகத்தரத்திலும் தங்களுடைய செயல்பாட்டை வியாபார நிறுவனங்கள் மாற்றியமைத்துக் கொள்ள இந்தத் தொடர்பு உதவும். இந்தத் தொடர்பு மையம் 325க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு நுகர்வோரின் குறைகளை பரிவர்த்தனை செய்து நுகர்வோருக்கு பதில்களைப் பெற்றுத்தருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும்; டிசம்பர்-24-ஆம் நாளான்று தேசிய நுகர்வோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் மாவட்ட, வட்ட அளவில் நடத்தப்படும் விழாக்களின் போது நாட்டுப்புறப் பாடல், கலந்துரையாடல், கண்காட்சிகள், நாடகங்கள் ஆகியவற்றுடன் படம் வரைதல், பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு வகையான போட்டிகள், பள்ளி, கல்லூரி, குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com