
ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனில் அவர் படித்த போது ஹாஸ்டல் மாணவர்கள் படுக்கும்' பெட் 'கள் ஒரே அளவில் இருந்தன . அதனால் உயரமான, குண்டான மாணவர்களால் காலை நன்கு நீட்டி படுக்க முடியாமல் அவதிப்பட்டனர் . இதை நன்கு அறிந்த அவர் எல்லா மாணவர்களின் உயரம் மற்றும் அகலம் கணக்கெடுத்து எல்லா மாணவர்களும் நிம்மதியாக படுக்கும் படியான படுக்கையை உருவாக்க ஐடியா கொடுத்தார். தன் இளம் வயதிலேயே புள்ளியியல் மூலம் அவர் தீர்வு கண்ட முதல் சம்பவம் அது தான். அவர் தான் வங்காள அறிவியலாளரும், புள்ளியியல் அறிஞருமான பிரசாந்த சந்திர மகலனோபிஸ் (Prasanta Chandra Mahala Nobis). இவர் பிறந்த தினம் இன்று (ஜூன் 29). இவரின் பிறந்த தினம் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் தான் இந்தியாவின் முதல் புள்ளியியல் துறை பற்றிய படிப்பு படித்து அப்படி ஒரு துறை வளர காரணமாக இருந்தவர். இந்தியாவின் முதல் புள்ளியியல் மேதை. இந்தியாவில் பல ஆண்டுகள் நிலவிய வெப்ப நிலை, காற்றழுத்தம், ஈரப்பதம் போன்ற புள்ளியியல் விவரங்கள் எடுத்து இந்தியாவில் பல அணைகள் கட்ட இவரே காரணம். (குறிப்பாக ஒரிசா ஹரிகுட் மின்சாரம் திட்டம், தாமோதர் பள்ளத்தாக்கு அணை)
இவர் கொல்கத்தாவில் பிறந்தவர். தந்தை விளையாட்டு சாதனங்கள் விற்பனை செய்யும் முகவர். கொல்கத்தா பிரம்மோ பள்ளியில் படித்த பிறகு, லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்கும் முடிவுடன் கேம்பிரிட்ஜ் சென்றார். லண்டன் செல்லும் இறுதி ரயிலை தவறவிட்டதால், கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியிலேயே படிப்பது என தீர்மானித்து, முதலில் கணிதமும், பின்னர் இயற்கை அறிவியலும் பயின்றார். அப்போது கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் நண்பரானார்.
புள்ளியியலில் அவருக்கு ஆர்வம் பிறந்ததுகூட இப்படி எதேச்சையாக நடந்ததுதான். இங்கிலாந்துக்கு சென்றவர் விடுமுறைக்கு இந்தியாவுக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தார். வரவேண்டிய படகு தாமதமானது. கிங்ஸ் கல்லூரி நூலகத்தில் காத்திருந்தவர், ‘பயோமெட்ரிகா’ என்ற புள்ளியியல் இதழின் முதல் பாகத்தை படித்தார். அதில் ஈர்க்கப்பட்டவர், அதன் அனைத்து பாகங்களையும் சேகரித்தார். பயணத்தின்போதே அவற்றைப் படித்து, அதில் உள்ள பயிற்சிகளுக்குத் தீர்வும் கண்டார்.
விடுமுறைக்காக 1915-ல் இந்தியா வந்தார். அப்போது உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் . அவரால் திரும்ப லண்டன் செல்ல முடியவில்லை. கல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அங்கு படிக்கும் போதே ஓய்வு நேரங்களில் புள்ளியியல் படித்தார்.
பல பேர் அவரை புள்ளியியல் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கூறினார்கள். கல்கத்தா பல்கலைக்கழக பேராசிரியர் பிஜேந்திர நாத் மகலநோபிஸ் புள்ளியியல் கற்க உதவினார்.
கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக தற்காலிகமாக பணியாற்றி ,பின்னர் 30 ஆண்டுகளுக்கு இயற்பியலைப் பயிற்றுவித்தார். கூடவே, புள்ளியியல் மீதான ஆர்வமும் அதிகரித்துக்கொண்டே போனது. வானிலை, உயிரியல், மானுடவியல் என பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களுக்கும் புள்ளியியல் உதவியுடன் தீர்வு கண்டார்.
கொல்கத்தாவில் 1931 ம் ஆண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை நிறுவி 1932 ல்-முறைப்படி பதிவு செய்தார். இரு வேறுபட்ட தரவுகளுக்கு இடையேயான ஒப்பீட்டு மதிப்பை வரையறுத்தார். அது ‘மகலனோபிஸ் தொலைவு’ எனப்படுகிறது. இவரின் முயற்சியால் 1941 ம் ஆண்டு கல்கத்தா யுனிவர்சிட்டி புள்ளியியல் பட்ட மேற்படிப்பு தொடங்கியது. இந்தியாவின் நேஷனல் சாம்பிள் சர்வே எடுத்து அதன் மூலமாக மாதிரி அளவீட்டு திட்டம் கொண்டு வந்தார். இதனடிப்படையில் உருவானது தான் ஐந்தாண்டு திட்டம்.
1950 ம் ஆண்டு இந்திய அரசின் கெளரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.1954 ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் தயாரிக்கும் பொறுப்பை இவரிடம் கொடுத்தார்.1954 ம்ஆண்டு இந்தியாவின் முதல் கம்பியூட்டர் இந்திய புள்ளியியல் கழகத்தில் தான் நிறுவப்பட்டது. பெரிய அளவிலான மாதிரி சர்வேக்கள், பயிர் விளைச்சல் கணக்கிடல் ஆகியவற்றுக்கு ரேண்டம் சாம்ப்ளிங் முறை தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தார். திட்ட கமிஷன் உறுப்பினராக (1955 -1967) இருந்தார். இந்தியாவில் புள்ளியியல் துறை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.
பயன்முகப் புள்ளியியல் துறை மேம்பாட்டில் சிறந்த பங்களிப்புக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வெல்டன் மெமோரியல் பரிசு, அமெரிக்க எகனாமிக் சொசைட்டியின் ஃபெலோஷிப், பத்மவிபூஷண், சீனிவாச ராமானுஜன் தங்கப்பதக்கம் என ஏராளமான கவுரவங்கள், விருதுகளைப் பெற்றார். இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் செயலர் இயக்குநராகவும், மத்திய அமைச்சரவையின் புள்ளியியல் துறை கவுரவ ஆலோசகராகவும் பணியாற்றிவந்த மகலனோபிஸ் 79 வயதில் ஜூன் 28 ம் தேதி 1972 ம் ஆண்டு மறைந்தார்.