
30, 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் நவராத்திரி கொலுவுக்கு வருபவர்கள் அம்மன் மீது தங்களுக்குத் தெரிந்த பாட்டு பாடுவார்கள். சில குழந்தைகள் அழகாய் நடனமாடும். கொலுவுக்கு அழைத்தவர் நைவேத்தியம் செய்த சுண்டலை மந்தார இலையிலோ, வாழை இலையிலோ மடித்து தருவார்கள். இரவு சுவாமிக்கு ஆரத்தி எடுத்துவிட்டு தூங்கச் செல்வார்கள். மறுநாள் வேறு பல உறவுகள் நட்புகள் வருவர். இப்படியே ஒன்பது நாட்களும் விதவிதமான சுண்டல்களுடனும் பிள்ளைகளின் புதுமையான ஆடல் பாடல்களுடனும் இனிதே நவராத்திரி நிறைவு பெறும்.
எப்போது ஆரம்பித்தது இந்த கிப்ட் சமாச்சாரம் எல்லாம் எங்கே? எப்படி? என்று தெரியவில்லை? பெரிய/ சிறிய கடைகளில் எல்லாம் பிளாஸ்டிக் டப்பாக்களும் ,எவர்சில்வர் டப்பாக்களும் அதிகளவு விற்பனையாகின்றது.
அது மட்டுமா... குட்டி குட்டி சாமி விக்ரகங்கள் படாத பாடுபடுகின்றது. ஏற்கனவே பூஜை அலமாரியில் நிறைய விக்கிரகங்கள் இடமில்லாமல் ஒன்றின் மேல் ஒன்று நெருக்கி அடித்து அமர்ந்து அருள் பாலிக்கின்றன.
இதுவும் சேர்ந்தால்...??? என்ன செய்வது இதை திரும்ப நாம் யாருக்காவது தான் கொடுப்போம். அதேபோல் பிளவுஸ் துணிகள் அதுவும் 70 சென்டிமீட்டர், 80 சென்டிமீட்டர் பத்தும் பத்தாமலும் ரீ சைக்கிளிங் பாதையில் சுத்தி சுத்தி வருகிறது.
அடுத்தது சின்ன சின்னதாய் ஸ்லோகப் புத்தகங்கள். பெரும்பாலும் இப்போதெல்லாம் யார் ஸ்லோக புத்தகங்கள் படிக்கிறார்கள்? (தமிழே பாதி பேருக்கு தெரிவதில்லை அது வேறு விஷயம்) சி.டியில் பாட்டைபோட்டோ அல்லது செல்போனில் சுவாமி பாடல்களை ஆன் செய்துவிட்டோ சாமி கும்பிடுபவர்களே அதிகம் பேர்.
நிம்மதியாக ஒரு ஐந்து நிமிடம் சாமி கும்பிடுபவர்கள் சொற்பமான பேரே! போதாக்குறைக்கு டிவியில் பட்டிமன்றம் வேறு. "பண்டிகைகள் பெண்களுக்கு சங்கடத்தை தருகிறதா? சந்தோஷத்தை தருகிறதா என்று?' (எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதில் இவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை?)
இது மட்டுமா அவங்க வீட்டுல கொடுத்த எவர்சில்வர் கிண்ணம் படு ஸ்ட்ராங்கா இருந்தது. நாம அதை விட சூப்பரா வேற ஏதாவது கொடுக்கணும்.. இப்படி வெளியில் தெரியாத போட்டிகள்/ஈகோ. இது மட்டுமா? பிளாஸ்டிக் கவர்ல சூடான சுண்டலை எல்லாரும் வர்றதுக்கு முன்னாடியே பேக் பண்ணி வச்சிடறாங்க அது உடம்புக்கு எவ்வளவு கெடுதல்.. இனி வரும் வருடங்களிலாவது தயவு செய்து கிப்ட் எல்லாம் கொடுக்காமல், வீட்டிற்கு வரும் உறவுகள் நட்புகளுடன் மகிழ்ச்சியாக உரையாடி தொன்னையில் சுண்டலை தரலாமே!(சுண்டலை மட்டும்) யோசிப்பீர்களா தலைவி'ஸ்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.