நீங்கள் நீங்கள்தான்; நான் நான்தான்!

Neengal Neengalthaan; Naan Naanthaan
Neengal Neengalthaan; Naan Naanthaanhttps://medium.com

‘உலகில் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை; தாழ்ந்தவர்களும் இல்லை. யாரும் சமமானவர்களும் அல்ல; ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். நீங்கள் நீங்கள்தான்; நான் நான்தான்’ - தன்னம்பிக்கை மற்றும் தன்னையறிதலுக்கான இந்த அருமையான கருத்தை சொன்னவர் ஓஷோ ரஜ்னீஷ். இவர் தத்துவப் பேராசிரியராக, தியான குருவாக, ஆன்மிகப் பேச்சாளராகவும் சிறந்து விளங்கியவர். ஆன்மிகத்தில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு தியானத்தை உலகமெங்கும் பரப்பியவர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் டிசம்பர் மாதம் 11ம் தேதி 1931ல் துணி வியாபாரி பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவர் ஓஷோ. ஜபல்பூரில் உள்ள ஜெயின் கல்லூரியில் தத்துவத்தை முக்கியப் பாடமாக பயின்று 21வது வயதிலேயே ஞானம் பெற்றவர். தனது பட்டப் படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவராக இவர் விளங்கியது குறிப்பிடத்தக்கது.

தத்துவப் பேராசியராக ஒன்பது வருடங்கள் பணியாற்றியுள்ளார் இவர். பின்னர் மனிதர்களின் விழிப்புணர்வை மேம்படுத்த பணியிலிருந்து விலகி தியானம், தத்துவம் நோக்கிய பொதுவாழ்வில் தம்மை அர்ப்பணித்து 1970 ல் தனது தேடலில் உருவான ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான, ‘டைனமிக்’ தியானத்தை மக்களிடையே அறிமுகப்படுத்தினார்.

இவரது இயற்பெயரான ரஜினி சந்திரமோகன் தத்துவ ஆசிரியராக அறியப்பட்ட பின்னர், ‘ஓஷோ’வானது. ‘ஓஷியானிக்’ என்ற சொல்லில் இருந்தே தம் பெயர் உருவானதாக இவர் குறிப்பிடுகிறார். இதற்கு கடலில் கரைந்துபோவது எனப் பொருள் எனவும், அனுபவத்தை மட்டுமே இது குறிப்பதாகவும், அனுபவிப்பவரை குறிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு, ‘ஓஷோ’ என்ற சொல்லை உருவாக்கியதாக இவரே கூறியுள்ளார்.

1970 ஜூலையில் மும்பைக்கு வந்தவர், 1974 வரை அங்கே வசித்து ஆன்மிக சாதகர்களுக்கு தீட்சை அளித்து தனது சிஷ்யர்களாக்கினார். இந்த காலகட்டத்தில்தான் அவர் பகவான் ஸ்ரீ ரஜினீஷ் என்று அழைக்கப்பட்டார். ‘தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சன்னியாசம்’ என்று அழைக்கப்பட்ட இந்த பாதையில் வெளி உலகைத் துறக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்முடைய கடந்த காலத்தை ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டும் என்பதுமே இவர் வகுத்த சித்தாந்தம். அதையே தனது தொடர் சொற்பொழிவுகள் மூலம் இவர் தனது சிஷ்யர்களுக்கும் போதித்தார்.

இதையும் படியுங்கள்:
வயதான பின்பும் மதிப்பு, மரியாதை கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Neengal Neengalthaan; Naan Naanthaan

பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்து தனது கொள்கையை தியானம் மூலம் பரப்பிய இவர், பலவித சர்ச்சைகள், கண்டனங்களுக்கும் உட்பட்டு கைது செய்யப்பட்டு சிறைவாசத்தையும் அனுபவிக்கும் நிலை அடைந்தார். பலவித சிரமங்களை அனுபவித்தாலும் தனது தியானக் கொள்கையை மாற்றாத மன திடம் கொண்ட இவரை 21 நாடுகள் தங்கள் நாட்டினுள் பிரவேசிக்க தடை போட்டனர் அல்லது அவர் வந்தால் நாடு கடத்தவும் உத்தரவிட்டன. இதன் தொடர்ச்சியாக 1986 ஜூலை 29ம் தேதி அவர் இந்தியாவில் பம்பாய்க்கு திரும்ப வந்தார்.

இறுதியாக, 1990 ஜனவரி 19 மாலை 5 மணிக்கு ஓஷோவின் உயிர் உடலை விட்டு பிரிந்தது. ஓஷோவின் சமாதி மீது பொறிக்கப்பட்ட, ‘ஓஷோ பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை’ எனும் வரிகள் ஓஷோ எனும் தத்துவ ஞானியின் இருப்பை உணர்த்தி அவரைப் பின்பற்றுவோரிடையே அவரின் நினைவுச்சின்னமாக உள்ளது.

அவரது மறைந்த தினமான இன்று, அவர் கூறிச்சென்ற நல்ல கருத்துக்களை ஏற்று விழிப்புணர்வு பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com