

குளிர்வித்து உலகை மகிழ்விப்பாயே!
குளிரில் பிறக்கும் 2026 ஆம் ஆண்டே!-நீயும்
குளிர்வித்து உலகை மகிழ்விப்பாயே!
அதிநவீன விஞ்ஞானம் இங்கு
அமைதியே தருமென்று நம்பியிருந்தோம்!
உலகச் சோலையில் சமாதானப்புறாக்கள்
ஒன்றாய்ச் சிறகடிக்குமென்று எண்ணியிருந்தோம்!
நடப்பவை அனைத்தும் எதிர்மாறுதான்
நல்லவர் மனமென்றும் அமைதியின்மையில்தான்!
அமைதியைத்தேடி ஓடி வந்தால்
அணுகுண்டைக் காட்டிப் பயமுறுத்துகின்றார்!
இஸ்ரேல் பாலஸ்தீனம் இரண்டுமிங்கு
எதிரும் புதிருமாய் இருப்பதினாலே
ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு
அணுதினமும் செத்து மடிகின்றார்!
ரஷ்யா உக்ரைன் போர் தொடர்வதினாலே
தொடர்ந்து உலகம் அமைதியின்றி
நித்தநித்தம் நிம்மதி தொலைத்து
நிற்கிறது வேதனையைத் தாங்கியபடியே!
இவற்றையெல்லாம் தடுத்த நிறுத்த
இருபத்தியாறே நீயும் உதவிடு!
உலகநாடுகள் அமைதியில் திளைக்க
உறுதியாய் நின்று உலகைக்காத்திடு!
ஏழை பணக்காரர் எழுத்தறியாதோர்
எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியொன்றே
பொங்கிப் பெருகிப் புதுமைபடைத்திட
புத்தாண்டே நீயும் வழிவகுப்பாயே!
இந்தியா இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ்
ஒன்றாய்ச் சேர்ந்து உறவுடன் சீனாவைத்
தோழமை கொண்டு தொடர்ந்தே உறவை
பெருக்கிக் கொள்ளப் பெரும்பணி புரிந்திடு!
ஐந்தும் இங்கு அணி ஒன்றானால்
அகில உலகும் திகைத்தே பார்க்கும்!
வேளாண்மை இங்கு விளங்கிச் செழித்திட
உரிய தருணத்தில் உயிரிணை மழையை
தருவே னென்று தன்மையாய் நீயும்
உரைத்தே எங்கள் உளத்தில் பால்வார்த்திடு!
பெரியோர் சிறியோர் முதலாளி தொழிலாளர்
அனைவரு மிங்கு அகமகிழ்ந்து வாழ்ந்திடவே
ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தந்திடவே
உன்னால் முடியும்! உதவிடு நல் ஆண்டே!
காற்று மாசைக் கவினுறு டெல்லியில்
நீக்கியே மக்களை நிம்மதி கொளச்செய்ய
மழையைப் பொழிந்திடு! மாசைத் துரத்திடு!
தூய காற்றைச் சுவாசித்து அவர்களும்
துன்பம் நீங்கித் துயிலில் ஆழட்டும்!
உலகை அமைதியில் உறுதியாய் நீ நிறுத்தினால்
அமைதிக்கான அரிய நோபல் பரிசை
உனக்கு வழங்க ஒருமித்த தீர்மானம்
நிறைவேற்றி நாங்கள் உரியோர்க் கனுப்புவோம்!
சரித்திரத்தில் நீயும் சாகா இடத்தைப்
பெற்றே நல்ல பெருமை மிகப்பெருவாய்!
குளிரில் பிறக்கும் 2026 ஆம் ஆண்டே!-நீயும்
குளிர்வித்து உலகை மகிழ்விப்பாயே!