கலைநகரமான சேலத்தில் களை கட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்!

கலைநகரமான சேலத்தில் களை கட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்!

புத்தாண்டு வந்து விட்டாலே மற்ற நகரங்களில் எப்படியோ  ஆனால் சேலத்தில் களை கட்டி விடும் உற்சாகமும் கொண்டாட்டங்களும். காரணம் சேலம் கலை பூமி மட்டுமல்ல  ஆன்மீக பூமியும் என்பதால். வாழ்வில் பிரிக்க முடியாத அங்கங்களான இரண்டும் இணைந்திருப்பதால் இங்கு உள்ள மக்களின் கொண்டாட்டங்களும் கூடுகைகளும் அதிக அளவில் இருக்கும்.

சேலம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் ஆலயம் மற்றும் கிறிஸ்தவர்களின் குழந்தை இயேசு பெயர் ஆலயம் போன்றவற்றில் எல்லாம் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.  ஏராளமான மக்கள் இறைவனை கண்டு சேவித்து ஆசிகள் பெற்று செல்வது வழக்கம். மேலும்  சேலத்தின் புகழ்பெற்ற சித்தேஸ்வரன் கோவில், ஊத்துமலை முருகன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், தற்போது புதியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கோட்டை மாரியம்மன் கோவில், சுகவனேஸ்வரர் கோவில், சி எஸ் ஐ சர்ச் , கோட்டை தர்கா போன்ற அனைத்து இடங்களிலும் ஜாதி மத பேதமின்றி மக்கள் ஒன்று கூடி மகிழ்வார்கள்.

ஏற்காடு படகு சவாரி
ஏற்காடு படகு சவாரி

அது மட்டுமின்றி நகரின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் களைகட்டும். இதில் சிறு நடிகர்கள் முதல்  நாட்டுப்புறக் கலைஞர்கள் வரை அனைவருக்கும் சேலத்தில் மேடை வாய்ப்புகள் அமையும்.சேலத்தின்  புகழ்பெற்ற மலைவாழ் சுற்றுலா தளமான  ஏற்காட்டில் உள்ள ரிசார்ட்கள் மற்றும் ஹோட்டல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இதை தனியார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நடத்துவது உண்டு. மேலும் புத்தாண்டு நிமித்தம் சிறப்பு உணவுகளை தயாரித்து  அதற்கு சிறப்பு சலுகை விலைகளும் அளிப்பதால் மக்கள் உணவகங்களில் அன்றைய தினம் குவியும் நிலை நிச்சயம் . சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களில் புத்தாண்டு வருவதால் அடுத்த திங்கள் நிச்சயமாக ஏற்காடு ரிசார்டுகளில் கொண்டாட்டங்கள் குடும்பத்தினருடன் சென்று தங்கி மகிழ்வது உறுதி. அவர்களுக்கான அந்த கொண்டாட்டங்களை வடிவமைப்பதில் ஒவ்வொரு ரிசார்ட்டும் வித்தியாசத்தை காட்டும்.

புத்தாண்டு கொண்டாட்டமாக  சேலத்தில் கண்காட்சிகள் அதிக அளவில் நடைபெறும். பெண்களை கவரும் வகையில் பேஷன் ஆடைகள் மற்றும் அனைத்து வயதினருக்கான கண்காட்சிகள் மும்மரமாக நடைபெறும். அந்தக் காலத்தில் ஆடி மாதத்தில் மட்டும் மத்திய பேருந்து திடலில் போடப்படும் கண்காட்சிகள் சில ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையத் திடலுக்கு இடம் பெயர்ந்துள்ளது. சமீபத்தில் புத்தகத் திருவிழா முடிந்த நிலையில் குழந்தைகளை கவரும் வகையில் விலங்குகளுக்கான கண்காட்சி துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலத்தின் அடையாளமான மேட்டூர் டேம் மற்றும் பூங்காவில் திரளான மக்கள் கூடி சைவம் அசைவம் என உணவுகளை சமைத்து எடுத்து வந்து குடும்பமாக மகிழ்வது உண்டு. மேலும் இங்குள்ள குருவம்பட்டி மற்றும் அண்ணா பூங்காக்களில் குழந்தைகள் குதூகலம் பெறுவார்கள்.
 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com