நவம்பர் 23: Happy Thanksgiving Day!

நன்றி செலுத்தும் நாள்
Happy Thanksgiving Day!
Happy Thanksgiving Day!pixabay.com

வ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் 4வது வியாழக்கிழமை அன்று அமெரிக்காவில் ‘நன்றி செலுத்தும் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று நவம்பர் 23ம் தேதி பல்வேறு மேற்கத்திய நாடுகளில் Happy Thanks giving Day கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில்Thanks giving Day நாளன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் இயங்காது. சில தனியார் நிறுவனங்கள் அடுத்த நாளும் விடுமுறை அளிப்பதால், நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனை நீண்ட வாரக் கடைசி என்று சொல்வார்கள்.விருப்பப்பட்ட இடத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல, நீண்ட வாரக் கடைசி ஒரு வரப்பிரசாதம்.

நல்ல அறுவடையை கொண்டாடுவதற்கும், கடந்த வருடம் நடந்த நல்லவற்றை நினைவுகூர்வதற்கும் இந்த நாள் உதவுகிறது. இதற்கு முன்னோடி, 1621ஆம் வருடம் நடந்த நன்றி செலுத்தும் நாள் விருந்து என்று கூறுகிறார்கள்.

1620ஆம் வருடம் செப்டம்பர் மாதம், இங்கிலாந்திலிருந்து புது நாடான அமெரிக்காவிற்கு, 102 பயணிகள் மே ஃப்ளவர் என்ற கப்பலில் புறப்பட்டனர். தங்களின் நம்பிக்கையின்படி இங்கிலாந்தில் வாழ முடியாததாலும், மத துன்புறுத்தல் இருந்ததாலும், நல்ல வளமான வாழ்வை எதிர் நோக்கியும், இவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

கடும் குளிரினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தனர். அங்கு வசித்து வந்த அமெரிக்காவின் பூர்வகுடிகளான பழங்குடியினர், புதிதாக வந்தவர்களுக்கு சோளம் பயிரிடும் முறை, மீன் பிடிக்கும் வழிகள் ஆகியவற்றை கற்றுக் கொடுத்தனர். இப்படி புதிதாக வந்தவர்களுக்கு அவர்கள் இட்ட பெயர் ‘யாத்திரிகள்’.

விளைச்சல் அமோகமாக இருந்தது. பூர்வ குடியினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ‘யாத்திரிகள்’ 1621ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் விருந்து வைத்தனர். இதுதான் அமெரிக்காவில் நடந்த முதல் ‘நன்றி செலுத்தும் நாள்’ விருந்து. ஆனால், காலங்கள் மாற அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ் இந்தியர்கள் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளன வரலாறாறும் உண்டு.

ஆனால், ஒவ்வொரு வருடமும் Thanks giving நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1789ஆம் வருடம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்க்டன், அரசின் சார்பில், நன்றி தெரிவிக்கும் நாள் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவித்தார். விடுதலைப் போரில் அமெரிக்கா அடைந்த வெற்றிக்கும், அமெரிக்க அரசியலைமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதிற்கும் நன்றி தெரிவிப்பதற்கு இதனை அறிவித்தார். ஆனால், அரசு விடுமுறை அறிவிக்கவில்லை.

1827ஆம் வருடம் சாரா ஜோசப் ஹேல் என்ற பத்திரிகை பதிப்பாசிரியர் மற்றும் எழுத்தாளர், ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ பொது விடுமுறை நாளாக அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். சுமார் 36 வருடம், இதற்காகப் போராடிய சாரா, எண்ணற்ற கட்டுரைகள், அரசுக்கு விண்ணப்பங்கள், தலைவர்களுக்கு கடிதங்கள் என்று சலிக்காமல் போராடினார். சாரா ‘நன்றி தெரிவிக்கும் நாளின் தாய்’ என்று அழைக்கப்படுகிறார்.

சாராவின் கோரிக்கைக்கு பலன் 1863ஆம் வருடம் கிடைத்தது. ஆபிரகாம் லிங்கன், கெட்டிஸ்பர்க் நகரில் நடந்த சண்டையில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நவம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ என்றும், அன்று அரசு விடுமுறை நாள் என்றும் அறிவித்தார். 1939ஆம் வருடம் ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், நன்றி தெரிவிக்கும் நாளை நவம்பர் மாதம் மூன்றாவது வியாழக்கிழமைக்கு மாற்றினார்.

இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்ப, 1941ஆம் வருடம், ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ நவம்பர் மாதம் நான்காவது வியாழக்கிழமை அனுசரிக்கப்படும் என்றும், அன்று அரசு பொது விடுமுறை என்றும் ரூஸ்வெல்ட் அரசாணை வெளியிட்டார். இந்த நாளின் முக்கியமான நிகழ்ச்சி குடும்பத்துடன் அமர்ந்து விருந்துண்ணுதல். இந்த விருந்திற்கு முக்கியமானவை வான்கோழி (சீமைக்கோழி), உருளைக்கிழங்கு, பழச்சாறு

கலந்த பானம், சோளம் மற்றும் க்ரான்பெரி சாஸ். க்ரான்பெரி தமிழில் சிருகிலா, கலக்கை என்று கூறப்படுகிறது. இந்த நாளில் 90 சதவிகித அமெரிக்க மக்கள் வான்கோழி சாப்பிடுவதாகக் கூறுகிறார்கள். அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில், ‘நன்றி செலுத்தும் நாள்’ அக்டோபர் மாதம், இரண்டாவது திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

அறுவடைக்கு நன்றி சொல்லும் பண்டிகை வடஅமெரிக்காவிற்கு 1621இல் வந்திருக்கலாம். ஆனால், அதற்கும் முன்னால் இந்திய, கிரேக்க, ரோமானிய, எகிப்திய கலாச்சாரங்களில் இந்த பழக்கம் இருந்திருக்கிறது. இந்தியாவின் பல பாகங்களில் அறுவடைத் திருநாள் பொங்கல், மகரசங்கராந்தி, பைசாகி என்று தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com