ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 26, நவம்பர், 1949ஆம் வருடம் இந்தியா, இந்திய அரசியலைமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு, அது 26, ஜனவரி, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. முன்னர், இந்த நாள் சம்விதன் திவாஸ் அல்லது தேசிய சட்ட தினம் என்று கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் 2015ஆம் வருடம் முதல் அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசியலைமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு 75 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
டாக்டர் அம்பேத்கர், இந்திய அரசியலமைப்பு தந்தை என்று போற்றப்படுகிறார். அரசியலைப்பு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று, நமது நாட்டிற்கான அரசியலமைப்பை வரைவு செய்ததில் அவருடைய பங்கு அபரிமிதமானது. அவருடைய எண்ணங்களையும், சிந்தனைகளையும் பரப்பவும், அரசியலமைப்பின் முக்கியத்துவத்துவத்தை வலியுறுத்தவும், இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஒரு நாடு, நாட்டையும், அதன் மக்களையும் நிர்வகிக்கத் தேவையான, அரசியல் அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை எடுத்துரைக்கிறது அரசியலமைப்பு சாசனம். நாட்டை வழிநடத்தும் முக்கியமான மூன்று அங்கங்களான சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய ஒவ்வொன்றின் அதிகாரங்கள், அவை ஒவ்வொன்றின் பொறுப்பை வரையறைப்பதுடன், இந்த முக்கிய அங்கங்களுக்கு இடையேயான உறவையும் ஒழுங்குபடுத்துகிறது அரசியலமைப்பு.
ஒரு நாட்டின் நிலையான ஆட்சிக்கு அரசியலமைப்பு மிகவும் முக்கியமானது. ஆகவே, அது கடினமாக இல்லாமல், காலத்தின் தேவைக்கேற்ப சட்டங்களில் மாற்றம் செய்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 1950ஆம் வருடம் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது அதில் 22 பகுதிகள், 395 பொது விதிகள், 8 அட்டவணைகள் இருந்தன. தற்போது 25 பகுதிகள், 448 பொது விதிகள், 12 அட்டவணைகள் உள்ளன. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் எல்லாவற்றிற்கும் பொதுவானது அரசியலமைப்பு. இதில் சில மத்திய அரசின் கட்டுபாட்டிலும், சில மாநிலங்களின் அதிகாரத்திலும், மற்றும் சில மத்திய, மாநில அரசுகளின் பொது அதிகாரத்திலும் இருக்கும்.
29, ஆகஸ்ட், 1947ஆம் வருடம் அரசியலமைப்பை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவிற்கு டாக்டர்.அம்பேத்கர் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவின் மற்ற ஆறு உறுப்பினர்கள் என்.முன்ஷி, கோபாலசுவாமி ஐயங்கார், கைதான், மிட்டர், முகமது சாதுல்லா மற்றும் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்.
இந்தியாவை ஆள்வதற்கு, பிரிட்டிஷ் அரசு, 1935ஆம் வருடம் இந்திய அரசாங்க சட்டம் கொண்டு வந்தது. இதனை முன்னோடியாகக் கொண்டு சுமார் 60 நாடுகளின் அரசியலமைப்பு சட்டத்தை ஆராய்ந்து இந்திய அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
உதாரணத்திற்கு, கிரேட்பிரிட்டன் வடிவிலான பிரிட்டிஷ் ராணி போன்று குடியரசுத் தலைவர், மந்திரி சபை, பிரதமமந்திரி, லோக்சபை, ராஜ்யசபை என்று இரு சபைகள், சபாநாயகர், ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. பிரிட்டனின் சட்டத்தை 'குறியிடப்படாத அரசியலைமைப்பு' என்பார்கள். அவர்களின் அரசியலமைப்பு எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத ஏற்பாடுகளை உள்ளடக்கியது.
அமெரிக்காவிலிருந்து, எழுதப்பட்ட அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள், சுப்ரீம்கோர்ட் ஆகியவை. சோவியத் ரஷ்யாவிலிருந்து அடிப்படைக் கடமைகள், ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து மத்திய, மாநில அரசு இரண்டிலும் காணப்படும் பொது அதிகாரங்கள், கனடாவிலிருந்து அதிக அதிகாரம் கொண்ட மத்திய அரசு, மற்றும் மாநில அரசுகள். அயர்லாந்து குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் முறை.
அரசியலமைப்பு தயாரித்து முடிவதற்கு சுமார் இரண்டேகால் வருடம் பிடித்தது. 1949ஆம் வருடம், நவம்பர் மாதம், 26ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பு தட்டச்சு செய்யப்படவில்லை. இரு மொழிகளில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் கையினால் எழுதப்பட்டது. இந்த ஆவணத்தில், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் ஜனவரி 24, 1950ஆம் வருடம் கையெழுத்திட்டார்கள். ஜனவரி 26, 1950ஆம் வருடம் நடைமுறைக்கு வந்தது.