அடிமட்டத் தொண்டனாகவோ, சாதாரண மக்களில் ஒருவராகவோ இருக்கும் ஒருவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது என்பது அமைதிப்படை, முதல்வன் போன்ற படங்களில் நடக்கும் அதீதக் கற்பனை. ஆனால் நிஜத்தில் ஒருவருக்கு நடந்தால்? அந்த ஒருவரின் பெயர் ஓபிஎஸ்.
துரோகங்களும், வன்மங்களும் நிறைந்திருக்கும் அரசியலில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தனித்து விடப்பட்டிருக்கிறார். அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட பத்து மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவை. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், 'பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட குறைந்தபட்சம் 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஓபிஎஸ் எப்படி போட்டியிட முடியும்' என நக்கலான கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்கள்.
1999 ஆம் ஆண்டு. ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியமான ஆண்டு. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரு அம்மாக்களின் ஆசிபெற்ற வேட்பாளராக போட்டியிட டிடிவி தினகரன் பெரியகுளத்திற்கு வருகிறார். அப்போது அத்தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் நகர்மன்றத் தலைவராக இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அத்தேர்தலில் தினகரன் வெற்றி பெறுகிறார்.
பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான கூட்டத்தை ஜெயலலிதா நடத்தினார். தேர்தல் செலவுகளுக்கு கட்சித் தலைமை கொடுக்கும் பணத்தோடு சிலர் தங்கள் சொந்தப் பணத்தையும் சேர்த்து செலவு செய்ததாக கணக்குப் கொடுப்பார்கள். ஆனால் ஓபிஎஸ்சோ தேர்தல் செலவு போக மிச்சத் தொகை என குறிப்பிட்ட ஒரு தொகையைத் திருப்பிக் கொடுக்க புருவங்களை உயர்த்தினார் ஜெயலலிதா. அன்று அவருக்கு சுக்ரதிசை ஆரம்பிக்க ஜெ.,வின் குட்புக்கில் இடம்பிடித்தார்.
2001 சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு வென்றார் ஓபிஎஸ். தினகரன் மற்றும் சசிகலாவின் ஆதரவால் அப்போதே அமைச்சராகவும் மாறினார்.
2001 ல் டான்சி வழக்கிலும், 2014 ல் சொத்துகுவிப்பு வழக்கிலும் ஜெயலலிதா சிறை சென்ற போதும், அவர் மறைவின் போதும் என மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ்.
எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், அவை முன்னவர், துணை முதலமைச்சர், அதிமுகவின் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் என 2001 க்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் வகித்ததெல்லாம் யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பதவிகள். இத்தனை பதவிகள் வகித்த ஒருவர் எத்தனை பேருக்கு நன்மை செய்திருக்க முடியும். எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்க முடியும்?
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆனவுடன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் (ஆண்டிபட்டி தொகுதி) பிறகு மீண்டும் தங்கள் மாவட்டத்துக்கு நட்சத்திர அந்தஸ்து வந்துவிட்டதாக ஊர் மக்கள் கொண்டாடினர். எம்.ஜி.ஆராவது திரை நட்சத்திரம். அவரை எப்போதாவது தான் பார்க்க முடியும். ஆனால் இவ்வளவு நாள் 'சேர்மன் அண்ணே' என்று அழைத்துப் பழகிய ஒரு நபர், யாரைப் பார்த்தாலும் அன்போடு வணக்கம் வைக்கும் ஒரு நபர், மக்களோடு மக்களாக தேநீர்க் கடை நடத்தும் ஒரு நபர் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்தவுடன் அவ்வூர் மக்கள் எப்படி மகிழ்ந்திருப்பர் என்று சொல்லத் தேவையில்லை.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்பையும், அதைத் தாண்டியும் செய்பவர்களைத்தான் வரலாறு வரவு வைத்துக் கொள்கிறது. ஒருவேளை மக்களுக்கான அனைத்தையும் செய்திருந்தால் தனித்துவமான தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உருவாகி இருப்பார். சொந்த ஊராகவும், தொகுதியாகவும் இருந்த பெரியகுளம் மாம்பழத்திற்குப் புகழ்பெற்றது. இதுவரை அதற்கான ஒரு தொழிற்சாலையும் அங்கு கட்டப்படவில்லை. பலருக்கும் தொழில் வாய்ப்பாக இருந்த இருபெரும் ஸ்பின்னிங் மில்கள் மூடப்பட்டன. அதைத் திறப்பதற்கான எந்தவிதமான முயற்சியையும் எடுக்கவில்லை. நன்மை செய்யும்படிக்கு திராணி இருந்தும் அதைச் செய்யத் தவறினார் ஓ.பி.எஸ் மகன்களுக்காக சம்பாதிக்கத் தொடங்கியவர் மக்களைச் சம்பாதிக்கத் தவறி விட்டார்.
இத்தனை ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு முதலமைச்சராகி இப்போது தான் 70 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஸ்டாலின். ஆனால் மூன்று முறை முதலமைச்சராக இருந்து விட்டு பரதன் கதையைப் பேசிக் கொண்டு தன் மகன்களுக்காகவும், தம்பி மற்றும் உறவுகளுக்காகவும் எல்லாம் செய்து கொண்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாதவரை இன்று காலம் தனித்து விட்டிருக்கிறது.
முதலமைச்சர் ஆவதற்கு முன்பு வெகுஜனங்களுக்கு மட்டுமல்ல, ஊடகங்களுக்குமே பெரிதும் பரிச்சயமில்லாத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் மிகப்பெரும் கட்சிகளில் ஒன்றான அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார். முதலமைச்சர் ஆனவுடன் ஆட்சி கலைந்து விடும் என்று பேசியவர்கள் மத்தியில் முழுதாக ஆட்சியை நிறைவு செய்து விட்டு இறங்கியிருக்கிறார். இன்று கட்சியின் நிர்வாகிகள் 99 சதவிகிதம் பேர் அவருடன் நிற்கிறார்கள். இது ஆளுமைத்திறனா? நிர்வாகத்திறனா? பணமா? எதுவோ ஒன்று அல்லது இது எல்லாமுமோ... எடப்பாடியிடம் இருந்தது பன்னீர்செல்வத்திடம் இல்லை.
ஈபிஎஸ் பொதுச்செயலாளர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீது இறுதி விசாரணை நடத்துவதா அல்லது இடைக்கால நிவாரணம் வழங்குவதா என்பது குறித்து ஏப்ரல் 3ல் முடிவெடுப்பதாக சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. இடைக்கால நிவாரணம் என்னவாக இருக்கும்? பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் எடப்பாடி தரப்பு கேட்பது போல அதற்கு 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு வேண்டுமே?!
சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் உருவாகலாம். ஆனால் இரட்டை இலைக்கான தொண்டர்களை கவர்வதற்கு இனி காலம் கனியாது. தன்னை நம்பி வந்தவர்களை கண்டுகொள்ளாமல் ஆன்மீகப் பயணத்தில் முழுமூச்சாக இறங்கி இருக்கிறார் சசிகலா. குறிப்பிட்ட சமூக மக்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் மட்டும் அரசியல் செய்து வருகிறார் தினகரன். இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, "துரோகத்தின் மூலம் பதவியைப் பிடித்தவர், ராமாயணத்தின் வாலி போல எடப்பாடி" என்றும் "இதற்கு காலம் பதில் சொல்லும்" எனவும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.
துரோகத்தின் நிழல் படியாத அரசியல் என்பது என்றோ மலையேறி விட்டது. சூழ்ச்சிகள் தான் அரசியல் சாணக்கியம் என்று பொழிப்புரை செய்யப்பட்டு விட்டது. இவர்கள் குறிப்பிடும் காலம் இனியும் திரும்புமோ?
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
உரை :
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.