இறந்தும் வாழும் அதிசயம் நிகழும் உடல் உறுப்பு தானம்!

Organ donation!
Organ donation!https://minnambalam.com

ருவர் இறந்தும் வாழும் அதிசயம் நிகழ்வதென்றால் அது உடல் உறுப்பு தானம் செய்வதால் மட்டுமே நிகழும் அற்புதமாகும். சமீபத்தில் நடிகை மகாலட்சுமி கூட இறப்புக்கு பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்திருக்கிறார். உடல் உறுப்பு தானம் குறித்த சில விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

இறந்துவிட்ட ஒருவரது இதயம், 2 நுரையீரல்கள், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கணையம், குடல் போன்ற உயிர் காக்கும் முக்கிய உறுப்புகளை தானம் செய்யலாம்.  மேலும், கருவிழிகள், சருமம், எலும்பு மற்றும் இதய வால்வுகள் போன்றவற்றையும் தானம் செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம் இறந்த நன்கொடையாளர் மூலம் எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும். அது மட்டுமின்றி, இறந்தும் வாழும் வள்ளலாக அவர் பலரது வாழ்க்கைக்கு உயிர் தர முடியும்.

இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக இறந்த பிறகு நம் முழு உடலையும் தானம் செய்யலாம் என்பதை தற்போது பெரும்பாலோர் அறிவோம். உடல் தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் அவரவர் வசிக்கும் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று பதிவு செய்துகொள்ளலாம் அல்லது உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு தரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் தன்னைப் பற்றிய விபரங்களைத் தந்து பதிவு செய்துகொள்ளலாம்.

இதில் மற்றொரு வசதியும் உண்டு. இருக்கும் இடத்தில் இருந்தே உறுப்பு தானம் செய்ய விரும்புவோர், transtan.tn.gov.in எனும் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று டோனார் உறுதி மொழியை (Donor Pledge) மேற்கொள்வதன் மூலமும் பதிவு செய்யலாம். ஆன்லைன் உறுதிமொழிப் படிவத்தை நிரப்பினால் போதும், உங்களின் தனிப்பட்ட அரசாங்கப் பதிவு எண்ணுடன் கூடிய நன்கொடையாளர் அட்டையைப் பெறலாம்.

உடல் தானம் செய்ய நீங்கள் பெற்றுள்ள அடையாள அட்டையை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். மேலும், உங்கள் விருப்பத்தைப் பற்றி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதும் நல்லது. ஏனெனில், இந்தியச் சட்டத்தின்படி ஒருவர் இறந்தவுடன் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதா, வேண்டாமா என்பதை அவரின் உறவினர்களே முடிவு செய்வார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? 
Organ donation!

சுயநினைவுடன் உடல் தானம் தர விரும்புவது ஒரு வகை. ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்படும் உடல் இழப்புகளால் ஒருவர் அடையும் மூளைச்சாவு என்பதும் சட்டப்படி இறப்புக்கு சமமாகவே கருதப்படுகிறது. இதனால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர் சம்மதத்துடன் உடல் உறுப்புக்களை தானம் செய்வது சட்டபூர்வமாகிறது. உடல் உறுப்புகள் எடுக்கும் வரை அந்த உறுப்புக்களுக்கு மரணம் நேராமல் இருக்க செயற்கை முறையில் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு தரப்படுகிறது.

தமிழ்நாட்டில், உறுப்பு செயலிழப்பு காரணமாக இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு, உறுப்பு தானம் வழங்குவோருக்கு இனி அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை அறிவோம். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை நாமும் பெற்று பிறருக்கும் உதவுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com