‘காதலர் தினம் என்பது மேல்நாட்டிலிருந்து வந்த பழக்கமா? அங்கிருந்து பெறப்பட்டதா?’ என்றால் இல்லை என்றே சொல்லலாம். உண்மையில் காதலர்கள் கொண்டாட்ட உணர்வில் மேல்நாட்டவர்களுக்கு நம் பழந்தமிழர்கள்தான் முன்னோடிகள். பழந்தமிழர்களுக்கு காதலும் வீரமும் வாழ்வின் இரண்டு கண்கள் போன்றது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க கால இலக்கியங்கள் என எதிலும் காதலைப் போற்றி வந்துள்ளனர். சங்ககாலம் தொட்டே தமிழர்கள் காதலின் மேன்மையை உணர்ந்தவர்கள். நம் முப்பாட்டன் காலத்திலேயே காதலைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.
தொல்காப்பியத்தில் விதவிதமான திருமணங்கள் பற்றிக் கூறும்போது, அவற்றில் பெரும்பாலானவை காதலை மட்டுமே முன்னிறுத்திய திருமணங்களைக் குறிப்பிடுகின்றன. சங்க காலப் புலவர்கள் தங்களின் பாடல்களில் காதலையும், காதலின் மேன்மை குறித்தும் சுவைபட பாடியுள்ளனர். இந்தக் கால சினிமா படங்களில் காதலில் கதாநாயகனுக்கு உதவும் நண்பன் போன்று அந்த காலத்தில் படங்களில் மட்டுமல்ல, நிஜத்திலும் உதவுவது, தோழியின் துணையால் சந்திப்பது, அளவளாவுதல் போன்றவை நடைபெற்றதை சங்க காலப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
ஆதி தமிழர்கள் காதலில் திளைத்த பின்பே இல்லறத்தை நாடியவர்கள் என்பதற்கு திருவள்ளுவர் எழுதிய காமத்துப்பாலே சாட்சியாக உள்ளது. அந்தக் காலத்தில் மென்மையாக காதலை உணர்த்திய திரைப்படங்கள் நிறைய வந்திருக்கின்றன. அன்பு, காதல் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்றிமையாதது.
கம்பன் தனது காவியத்தில் வில்லை முறிக்க வரும் ஸ்ரீராமனை மேல் மாடத்திலிருந்து சீதை பார்த்ததை, ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து காதல் வயப்பட்டதாகக் காட்டுகிறார். பழங்காலம் தொட்டு இன்று வரை காதல் பரிசாக மலர்கள், பரிசுப் பொருட்கள், காதல் கடிதங்கள் என கொடுக்கப்பட்டதற்கு நிறைய வரலாறுகள் உண்டு.
தமிழர்கள் எப்போதும் காதலுடன் இருப்பவர்கள்தான். வாழ்க்கையை காதலித்து வாழ்பவர்கள்தான். காதல் என்பது அன்பைப் பரிமாறிக் கொள்வது. இல்லற வாழ்வில் கணவன், மனைவியிடமும், பிள்ளைகளிடமும் எப்போதும் அன்பைப் பரிமாறிக் கொண்டே இருக்கிறான். அதேபோல்தான் குடும்பத்தில் உள்ள மனைவி மற்றும் பிள்ளைகளும் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். குடும்பத்தின் அச்சாணி வேரே அன்பு, காதல், பரிவு இவைதான்.