வீடு வாடகைக்கு எடுக்க போறீங்களா? இதை படிங்க மொதல்ல...

வீடு
வீடு

ஒத்திக்கு இருப்பதா(போக்கியம்) அல்லது வாடகைக்கு இருப்பதா என்பது, இடத்திற்கு இடம் மாறுபடும்.

ஒத்தி, வாடகை வேறுபாடு;

வாடகை வீடு ; வீட்டிற்கான முன்பணம் கொடுத்தபின்பு, மாதா மாதம் வாடகைத் தொகை செலுத்துவோம். இங்கு வீட்டிற்கு சொந்தக்காரர் மாதா மாதம் வாடகை மூலம் வருமானம் பெறுகிறார்.

ஒத்திக்கு வீடு; வீட்டிற்கான ஒரு பெரிய தொகையினை முன்பணமாக கொடுத்து, ஒரு குறிப்பிட்ட காலம் வரை, அந்த வீட்டில் வாழ்வது. இங்கு மாதா மாதம் வாடகை கொடுக்கும் அவசியமில்லை. ஒத்திக்கான கால வரையறை முடிந்த பின்பு, முன்பணமாகக் கொடுத்தப் பணம் திரும்பக் கிடைக்கும். இங்கு வீட்டிற்கு சொந்தக்காரர் ஒத்திக்கு கொடுத்த தொகையினை வங்கியில் வைப்பு நிதியில் வைத்து வட்டி மூலம் வருமானம் பெறலாம் அல்லது ஒத்திக்கான தொகையினை அவரது வேறேதாவது செலவுக்கு பயன்படுத்தி, கடனைத் தவிர்க்கலாம்.

வீடு வாடகை
வீடு வாடகை

நாம் வீட்டினை வாடகைக்கு எடுக்கலாமா அல்லது ஒத்திக்கு எடுக்கலாமா என்று எவ்வாறு முடிவு செய்வது. பின்வரும் கேள்விகளின் மூலம், நாம் அதனை முடிவு செய்ய முடியும்.

மாதா மாதம் அதிக பணம் சேமிப்பு ; ஒத்திக்கு பெரிய தொகையினை கொடுப்பதால், அந்த தொகையினை நாமே வைத்திருந்து முதலீடு செய்தால்(வங்கி வைப்பு நிதி போன்ற குறுகிய கால முதலீடு), அதிக பணம் சேமிக்க முடியுமா அல்லது வாடகை கொடுப்பதன் மூலம் அதிக பணம் சேமிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

வீட்டில் இருக்கப் போகும் காலம்; ஒத்திக்கு பெரும்பாலும் நீண்ட காலம் ஒப்பந்தம் போடப்படுகிறது. அங்கு அதுவரை வாடகைத் தொகை மாறாது. வாடகைக்கு வீட்டில் இருக்கும் போது, வருடா வருடம் (11 மாதம் பொதுவாக ஒப்பந்தம் போடப்படுகிறது) மாற வாய்ப்பு உண்டு. எனவே, நாம் எவ்வளவு காலம் தங்கப் போகிறோம் என்று பார்த்து முடிவு செய்ய வேண்டும். எவ்வளவு பணம் சேமிக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.

வீடு
வீடு

எளிதாக வெளியே வரும் வாய்ப்பு; ஒத்தியில் ஒப்பந்தம் போடும் போது, எவ்வளவு எளிதாக வர முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். பொதுவாக, ஒத்தியில் பெரிய பணம் கைமாறுவதால், எளிதாக வெளியே வருவது கடினம். வாடகை கொடுக்கும் போது, குறைந்த பணம் கைமாறுவதால், வாடகையிலிருந்து வெளிவருவது எளிது. நாம் வெளியேறும் சந்தர்ப்பம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஒப்பந்தம் போடும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டின் சொந்தக்காரரின் நம்பகத்தன்மை; ஒத்தியில், தனிநபருடன் பெரிய தொகையினை பரிமாற்றம் செய்வதால், வீட்டின் சொந்தக்காரர் எவ்வளவு தூரம் நம்பிக்கையானவர் என்று பார்க்க வேண்டும். இல்லையேல், பெரிய பணம் மாட்டிக் கொண்டு, பணத்தை இழக்கும் அபாயம் நேரிடலாம்.

நமது சம்பாதிக்கும் விகிதம்; வருமானத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளவர்களுக்கு, திடீரென்று அதிக பணம் சேரும். பின்னர், சில காலத்திற்கு பண வரவு இருக்காது. அவர்களுக்கு ஒத்தியில் வீடு எடுத்தால், மாதா மாதம் வாடகை பிரச்சனை இருக்காது. மாதா மாதம் தொடர் வருமானம் உள்ளவர்களுக்கு, வாடகை மாதா மாதம் கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. எனவே, நமது வருமானம் எத்தகையது என்று பார்க்க வேண்டும்.

முதலீட்டிற்கான வாய்ப்புகள் பயன்படுத்திக் கொள்ளும் திறன்; சிலரிடம் அதிக தொகை கையிருப்பில் இருக்கும் போது, ஏதேனும் முதலீட்டு வாய்ப்புகள் வரும்போது, அதனை பயன்படுத்த முயல்வர். ஒத்திக்கு பெரும் பணம், கைமாறி விட்டால், முதலீட்டின் தங்க வாய்ப்புகளை பயன்படுத்த முடியாது. வாடகை கொடுக்கும் போது, குறைந்த பணம் கைவிட்டு செல்கிறது. பெரிய தொகை கையிருப்பில் இருக்கும். முதலீட்டிற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அலுவலகத்தில் கிடைக்கும் வரி சலுகைகள்; வீட்டு வாடகை சலுகை (House Rent Allowance) போன்ற சலுகைகள் வீட்டு வாடகை செலுத்துபவர்களுக்கு கிடைக்கும். ஒத்திக்கு இருக்கும்போது, இத்தகைய அரசாங்கத்தின் வரி சலுகைகளை பயன்படுத்த இயலாது.

மற்ற கடன் சுமைகள்; வாடகைதாரருக்கு பல கடன்கள் இருந்தால், பெரிய தொகையினைக் கொண்டு, கடனை முதலில் அடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக, ஒத்திக்கு வீடு எடுப்பது என்பது, மன உளைச்சலைத் தரும். கடன் தொல்லை இல்லாத பட்சத்தில், ஒத்திக்கு பெரிய தொகையினை கொடுப்பதால், மாதா மாதம் கடன் பிரச்சனைக்கு பதில் சொல்ல அவசியமில்லை.

வீடு சம்மந்தமான வில்லங்கப் பிரச்சனைகள்; வாடகைக்கு இருக்கும் போது, வீட்டில் ஏதாவது வில்லங்க பிரச்சனை என்றால், இழக்கும் பணம் குறைவு. ஒத்திக்கு இருக்கும் வீட்டில், ஏதாவது வில்லங்கப் பிரச்சனை என்றால், பணத்தை இழக்கும் வாய்ப்பு அதிகம். ஒத்தி என்பதில் பெரிய பணம் கைமாறுகிறது.

பணத்தை இழக்கும் அபாயம்; ஒத்தியில் பிரச்சனை என்றால், அதிக பணத்தினை இழக்கும் அபாயம் உண்டு. வாடகையில் பிரச்சனை என்றால், குறைவான பணத்தினையே இழக்கும் நிலை ஏற்படும்.

கூடிய விரைவில் சொந்த வீடு வாங்கும் யோசனை; கூடிய விரைவில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் இருப்பின், பெரிய தொகை கையிருப்பாக இருந்தால், அதைக் கொண்டு, வீட்டின் முன்பணமாக செலுத்தி, வீட்டுக் கடனின் அளவைக் குறைக்க முடியும். ஒத்திக்கு பணம் கொடுத்திருந்தால், வீட்டுக் கடனை பெரிதாக எடுக்க நேரிடலாம்.

வேலை மாறும் எண்ணம், வேறு ஊர் மாற்றலாகும் வாய்ப்பு; வேறு வேலை தேடும் எண்ணமிருப்பின், வேறு ஊர் மாற்றலாகும் வாய்ப்பு இருப்பின் வாடகை நல்லது. ஒத்திக்கு வீடு எடுப்பதை தவிர்க்கலாம்.

திருமணம் ஆகும் நேரம்; வாடகைதாரருக்கு திருமணத்திற்கான வரன் பார்க்கும் நேரம் என்றால், திருமணத்திற்கு பிறகு பெரிய வீடு மாற வாய்ப்பு இருக்கலாம். வாழ்க்கை துணைக்கு ஏற்ற வீடு மாற வாய்ப்பு இருக்கலாம். அப்போது, வாடகைக்கு வீடு எடுப்பது நலம். வீடு மாறுவது எளிது.

எனவே, வாடகைதாரர் மேலும் சில கேள்விகளைக் கூட எழுப்பி, ஒத்திக்கு செல்வதா , வாடகைக்கு செல்வதா என்று முடிவு செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com