பராக் பராக் - 2 : வீராணத்தில் வீர ரணங்கள்

பராக் பராக் - 2 : வீராணத்தில் வீர ரணங்கள்
Published on

படப்பிடிப்புக்கு புறப்படும் நாள் வந்தது. !  கல்கி அலுவலகத்தின் வாயிலில் இருக்கும் அமரர் கல்கியின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, படப்பிடிப்பு குழுவினர் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கல்கியின் சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்னோவா காரில் ஏறுவதற்கு தயாரானோம்.  காரின் பின்பாக கேமராக்கள் அழகாக பாக் செய்யப்பட்டு, அடுக்கப்பட்டிருந்தன.  அதன் மீது எனது பையை வைத்துவிட்டு,  மெதுவாக திரும்பி னேன்.  கல்கி குழும த்தின் செயல்பாடு தலைவர்  திருமதி லஷ்மி என்னை நோக்கி வந்தார். 

''சார் ! இந்த இளைஞர் பட்டாளத்திற்கு  வண்டியில் போகும்போது,  டைம் வேஸ்ட் பண்ணாம, பொன்னியின் செல்வன் கதையை சொல்லி கிட்டே போங்க ! ஷூட்டிங் சமயத்தில், ஆயிரம் கேள்வி கேட்டு, அவங்களும்  குழம்பி உங்களையும் குழப்ப போறாங்க ?'' -- என்றார்.

''கவலைப்படாதீங்க ! நான் பார்த்துக்கறேன் ! ஷூட்டிங் முன்னாடி அவங்களை உட்கார வச்சு, பொன்னியின் செல்வனை படிச்சு காண்பிக்கிறேன் ! '' என்றார். 

''நல்லது ! நான் உங்களுக்கு ஐந்து பாகம் பொன்னியின் செல்வனை கொடுக்கிறேன். அவங்களுக்கு படிச்சு காட்டுங்க. . ! ஷூட்டிங் முடிஞ்சதும்  சும்மா இருக்காம, அவங்களுக்கு பொன்னியின் செல்வனை படிச்சு காட்டுங்க. !முதன்முதலில், 1954 ல பொன்னியின் செல்வன் நூலான வந்த பிரதியை உங்களுக்கு தரேன். ! அதை பத்திரமாக திருப்பி கொண்டு வந்து கொடுக்கணும் !'' -- என்ற நிபந்தனையுடன் பிரதிகளை கொடுத்தார், திருமதி லஷ்மி  நடராஜன். 

''சார் ! நீங்க பெரியவங்க ! முன் சீட்டில் உட்காந்துக்கங்க.!'' -- என்றனர், இளைஞர் பட்டாளம். காரில் புரட்சி தலைவி போன்று முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். 

''தம்பிகளா !  சார்!  வழியே பொன்னியின் செல்வன் கதையை சொல்வார் ! ஒழுங்கா கேட்டுக்கங்க !  எதையாவது சொதப்பினீங்க, தெரியும் சேதி  '' -- என்று இயக்குனர், கேமராமேன் உள்ளிட்ட குழுவினர், அச்சுறுத்தினார்,  திருமதி லக்ஷ்மி நடராஜன்.

திடீர் என்று, கல்கி குழுமம் உதவியாளர் கபாலி  ஓடி வந்தார். 

''மேடம் ! நாலு எலுமிச்சம்பழம் வாங்கி வைக்க சொன்னீங்களே. !  வண்டியில கரெக்டா நாலு பேர் இருக்காங்க. ஆளுக்கு ஒண்ணு கையில கொடுத்துடவா !'' -- ! -- என்று கேட்டதும், நாங்கள் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். 

''தப்பா நினைக்காதீங்க சார் !  படப்பிடிப்புக்கு முதன்முறையா போறோமே, காரின்  நாலு டயர் கீழே எலுமிச்சம் பழம் வைக்க சொன்னேன். அவரு உங்களுக்கு னு  நினைச்சுட்டாரு,'' --- என்று விளக்க, எப்படியோ திருஷ்டி கழிக்கப்பட்டு வண்டி புறப்பட்டது. 

ட்ரோன் கேமரா மேன் சரத் என்பவர் தான் முதலில் பேசினார். 

''சார் ! நீங்க ரொம்ப அனுபவம் உள்ளவர்-னு மேடம் சொன்னாங்க. இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து பத்திரிக்கை கைல எல்லாம் வேலை செஞ்சிருக்கீங்க-னு சொன்னாங்க. நாவல், சீரியல் எல்லாம் எழுதி இருக்கீங்க-னு  கேள்விப்பட்டோம். உங்களை தட்டினால் விஷயம் கொட்டும்னு வேற  சொன்னாங்க !'' 

''ஓ அப்படியா !'' என்று திரும்பி சரத்-தை பார்த்தவுடன் அதிர்ந்தேன். பாடி பில்டராக தோன்றினார். விஷயத்தை கேட்பதற்காக இவர் என்னை ஒரு தட்டு தட்டினால், என் விஷயம் முடிந்துவிடும். போல இருந்தது. 

''நீங்க தட்ட எல்லாம் வேண்டாம். நானே எனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிடுவேன் !'' -- என்று அவசரமாக சொல்லிவிட்டு, சரத்-தை புறக்கணித்துவிட்டு, என் சைசில் இருந்த இயக்குனர், ராஜ்கமல்-லை  பார்த்தேன். 

''கல்கி-யோட புக் ஏதாவது படிச்சிருக்கீங்களா ?'' -- என்றேன். 

''படிச்சதில்லை சார் ! பட் கூகுள் பண்ணி பார்த்தது-ல, அவர் எழுதிய புக் பத்தியெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். சிவகாமி சபலம்.. ரொம்ப ஹிட் நாவலாமே. ?'' - என்றார். 

எனக்கு பகீரென்றது ! நல்ல வேளை ! கல்கி அலுவலகத்தை கடந்து, கிண்டிக்கு வந்து விட்டிருந்தோம். !

''சிவகாமி சபலம் இல்லை ! சிவகாமி சபதம் !''  --- என்று சொன்னேன்.

''சரி ! பொன்னியின் செல்வன் கதையை சொல்லுங்கள் ! நாங்க ஆங்கிள் எல்லாம் யோசிக்கணும் !''-- கேமராமேன் மதன் அவசரம் காட்டினார். 

''எடுத்த உடனே வீராணம் ஏரிக்கரையில் தான் ஷூட்டிங் ! ஆடிப்பெருக்கு காட்சி ! அப்புறம்  சம்புவராயர் மாளிகை-ல  படப்பிடிப்பு. '' -- என்றவுடன், இயக்குனர் ராஜ்கமல் முகத்தில் கோபம். 

''என்ன சார்  ! நீங்க பாட்டுக்கு திடீர்னு சொல்லறீங்க ! செட் ப்ராபர்ட்டி வேண்டாமா ?  ஆடிப் பெருக்க விளக்குமாறு வேணும் ! . சொம்புவராயருக்கு சொம்பு  வேண்டாமா ? அந்த ஊர்ல சொம்பு கிடைக்குமா ?'' -- என்று கேள்வி கேட்டதோடு இல்லாமல்,  ''என்ன என்ன உங்களுக்கு வேண்டும்னு முன்னாடியே மேடத்துக்கு லிஸ்ட் கொடுத்திருக்க வேண்டியதுதானே ?'' -- என்று படபடத்தார். 

''ஏன் டென்ஷன் படறீங்க ! கிராமத்துல கம்மாக்கரை ஓரம் யாராவது சொம்போடு உட்கார்ந்திருப்பாங்க. அந்த சோம்பு கேட்டு வாங்கிக்கலாம். !'' -- சத்  கூறினார். 

கலக்கத்துடன், அமரர் கல்கி-யை மனதினுள் பிரார்த்தித்துக் கொண்டேன்.  எழுபது வருடங்களாக உங்கள் புகழ் பரப்பும் பொன்னியின் செல்வனுக்கு, என்னால் ஏதாவது பிரச்சனை வந்தால், என்னை மன்னித்து விடுங்கள்.--  பிரார்த்தனையை தவிர வேறு ஒன்றும் அப்போதைக்கு என்னால் செய்ய முடியவில்லை,.

''செட் பிராப்பர்ட்டி எல்லாம் வேண்டாம் ! நான் என்ன பேசப்போறேன் சொல்லிடறேன். அது மட்டும் கேட்டுட்டு, படம் பிடிங்க'' என்று சொல்லிவிட்டு, பொன்னியின் செல்வன் கதையை தொடங்கினேன். 

''பராந்தகன்-னு ஓர் சோழ அரசன். அவன் ஈழம், இரட்டை மண்டல தேசம் என்று இரு நாடுகளை போரில் ஜெயிக்கிறான். அதனால அவனுக்கு வீர நாராயணன்னு பட்டம் கிடைக்குது. அவன் தன்னோட பட்டத்து இளவரசன் ராஜாதித்யன்-னை வட எல்லையை காக்கிறதுக்காக திருமுனைப்பாடின்னு ஓர் நாட்டுக்கு அனுப்பறேன். அதன் தலைநகரம்தான் திருநாவலூர். அங்கே வீரராகள் சும்மா இருக்க வேண்டாம்னு, இங்கே ஓர் ஏரியை வெட்டி, அதற்கு தன்னோட அப்பா வீரநாராயணனின் பெயரை  வைக்கிறான். வீராணம் ஏறி 20 கிமீ நீளம். ஏழு கிமீ அகலம். அதன் கொள்ளளவு 1450 கன அடி.  கொள்ளிடம் தண்ணீரை, இங்கே  வீராணம் ஏரிக்கு கொண்டு வந்து சேர்கிறது, வடவாறு. ! அதுல நீர் பாயும்போது, சலசல -னு சத்தம் கேட்கும்.  இப்ப அங்கேதான் படம் பிடிக்க போறோம்.  அந்த காட்சியைத்தான் நான் விவரிக்க போகிறேன்.  '' -- நான் சொல்லும்போதே பின்சீட்டில் இருந்து லகலக என்று சத்தம். 

திரும்பி பார்த்தால், பின்னால் அமர்ந்திருந்த இயக்குனர் ராஜ்கமல், ட்ரோன் கேமரா சரத் மற்றும், கேமராமேன் மதன் , மூவரும்  'கொர் கொர்' நித்ரா தேவியின் செல்வர்களாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். 

ஆக, அவர்கள் என்னை முன்சீட்டில் உத்திர அளித்ததற்கு காரணம் எனது வயதுக்கு அவர்கள் கொடுத்த மரியாதை என்று நினைத்தேன். காரணம் அதுவல்ல. அவர்கள் நித்ரா தேவிக்கு கொடுத்த மரியாதை என்பதை புரிந்து கொண்டேன். 

பக்கத்தில் இருந்த எங்கள் கார் ஓட்டுனரோ, எப்போதும் செல்போன் கையுமாகவே இருந்தார். நேரம் கிடைத்த போது மட்டும், ஸ்டியரிங்கை பிடித்தார். 

ஒழுங்காக வீராணம் போய் சேருவோமா என்கிற என்னை கவலை பற்றிக்கொண்டது. போதாத குறைக்கு, பொன்னியின் செல்வன் பயண யாத்திரைக்காக புறப்படுகிறேன்  என்று, உறவினர்களிடம் சொன்னபோது, ஒரு உறவுக்கார பாட்டி வேறு பீதியை கிளப்பி விட்டிருந்தாள்.

''சோழர்களை பத்தி படம் எடுக்கிறவங்க எல்லாருக்கும் ஏதாவது பிரச்சனை வருதாம்!. பார்த்துக்க!'' -- என்று காப்ரா படுத்தியிருந்தார் . 

வீராணம் ஏரிக்கரையில், எங்களுக்கு ஓர் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

வீராணத்தில் எனக்கு வீர ரணங்கள் கிடைக்கப்போகிறது. பழுவேட்டரையருக்கு 64 விழுப்புண்கள் போல எனக்கும் உடம்பு முழுவதும்  ரணங்கள்  கிடைக்க போகிறது  என்பதை உறுதி செய்யும் வண்ணம், அங்கே ஒரு பிரசனை எனக்கு காத்திருந்தது. 

தொடரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com