சோழ பட்டத்து இளவரசன் ராஜாதித்யன் (தக்கோலம் போரில் யானை மீது அமர்ந்து, வீர மரணம் எய்தியவன்) வீராணம் ஏரிக்கரை அருகே,
காட்டுமன்னார்குடி என்னும் இடத்தில் வீரநாராயண பெருமாள் ஆலயத்தை நிறுவினான்.
வீராணம் ஏரிக்கரையில் உலாவிவிட்டு, படப்பிடிப்பு குழுவினர்,
காட்டுமன்னார் கோயில் வீரநாராயண பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். பெயர்தான் காட்டுமன்னார் கோயில்! ஆனால், எங்கள் கேமராவுக்குக் கோயிலைக் காட்ட மாட்டோம் என்று உறுதியாக இருந்தனர், கோயில் நிர்வாகத்தார். வேறு வழியின்றி கோயிலின் வெளியே படப்பிடிப்பை நடத்தினோம்! இத்தனைக்கும், இந்து அறநிலையத்துறை அனுமதியையும் வாங்கியிருந்தோம். படப்பிடிப்பு நடத்தும்போதே கடும் வெயில். கோயிலுக்கு வெளியே மக்கள் நடமாட்டம் வேறு அதிகமாக இருந்தது. படப்பிடிப்பை முடிப்பதற்குள் வியர்த்து விறுவிறுத்துப் போயிற்று.
‘’வைணவ ஆசான் நாதமுனிகள் அவதரித்தத் திருத்தலம் காட்டுமன்னார்குடி! மேலை நாடு என்னும் கர்நாடகத்திலிருந்து வந்த சில யாத்ரீகர்கள், ‘ஆராவமுதே அடியேனுடலம் நின்பால் அன்பாயே’ - என்கிற பாசுரம் உட்பட 11 பாசுரங்களை காட்டுமன்னார்குடி கோயிலில் வந்து இசைக்க, நாதமுனிகள், அந்தப் பாசுரங்களால் ஈர்க்கப்பட்டு, பயணித்து நாலாயிர திவ்ய பிரபந்தங்களைச் சேகரித்து, அவற்றிற்கு இசை அமைத்தார். திவ்ய பிரபந்தங்களைக் காட்டி கொடுத்ததால், இந்த ஊருக்கு காட்டுமன்னார்குடி என்று பெயர் வந்தது.
காட்டுமன்னார்குடிக்கு வந்து நாதமுனிகளை ஒரு சோழ இளவரசன் சந்தித்திருக்கிறான் என்று வைணவ குரு பரம்பரையில் கூறப்பட்டிருக்கிறது. கெடிலம் ஆற்றைக் கடந்து சென்றால் ஆபத்து-- என்று மலையமான் ஆதித்த கரிகாலனை எச்சரித்திருந்தும், அவன் பலமுறை கடம்பூருக்கு வந்திருக்கிறான். எனவே, அந்த இளவரசன்
ஆதித்த கரிகாலனாக இருந்திருக்கக் கூடும்.
வீராணம் ஏரியின் பிரம்மாண்டத்தைப் பார்த்து மலைத்த இராமானுஜர் வைணவத்துக்கு 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்தார்'' போன்ற விவரங்களைக் கூறிவிட்டு, ''காட்டுமன்னார்குடியில்தான் வைணவ ஆசான் ஆளவந்தார் அவதரித்தார்'' - என்று முடித்தேன்.
''கட்!'' -- என்று கூறிய இயக்குனர் முகத்தில் பரவசம்.
''காலச்சக்கரம் சார்! எனக்கு ஒரு ஐடியா தோணுது! இந்த இடத்தைப் பத்தி நீங்க பேசறச்சே, நம்ம உலக நாயகனோட ‘ஆளவந்தார்’ ஸ்டில் ஒண்ணைக் காட்டலாம்'' -- என்றதும் அனைவரும் ‘கொல்’லென்று சிரித்தோம்.
''அடுத்தது நாம குத்துவெட்டு நடக்கிற இடத்துக்குத்தானே சார் போறோம்?'' --அசிஸ்டென்ட் கேமராமேன் கேட்டார்.
''தம்பி! அது குத்துவெட்டு இல்லை. கல்வெட்டு! ஆதித்தகரிகாலன் கொலையை பத்தி, விவரத்தைச் சொல்லற கல்வெட்டு!'' --என்று அவர்களுக்குப் புரியவைத்து, உடையார்குடி கல்வெட்டு உள்ள அனந்தீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றோம்.
கிம்பல் கேமராமேன் சமயோசித்ததுடன், முன்பாகவே அனந்தீஸ்வரர் ஆலயம் சென்று, தனது ஐ போன் மூலம் கல்வெட்டைப் படம் பிடித்துவிட்டார். நாங்கள் அங்கு செல்வதற்குள், அனந்தீஸ்வரர் ஆலயத்தை மூடிவிட்டார்கள்.
ராஜராஜ சோழன் கிபி 985ல் சோழ அரியணையில் அமர்ந்தான். அவன் பதவி ஏற்ற இரண்டாம் ஆண்டில், அதாவது கிபி 987ல் அனந்தீஸ்வரர் ஆலயத்தில் ஆதித்த கரிகாலனின் கொலையில் தொடர்புடையவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டதாகக் கூறுகிறார்கள்.
அனந்தீஸ்வரர் ஆலயத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, காட்டுமன்னார்குடியிலேயே பெரிய ஹோட்டலான கிருஷ்ணா விலாஸில் மதிய உணவை முடித்தோம்.
உணவு உண்ணும்போதே, படக்குழுவினருக்கு அன்று மதியம் படப்பிடிப்பு நடக்கவுள்ள கடம்பூரை பற்றி விளக்கினேன்.
''இப்ப நாம படப்பிடிப்பு நடத்தப்போகிற கடம்பூர் மிகவும் முக்கியமான இடம்! பொன்னியின் செல்வன் கதையே இங்கேதான் தொடங்குது. பழுவேட்டரையர், இங்கே வந்து, சம்புவராயர், வணங்காமுடியார், இரட்டைக்குடை ராஜாளியார், எல்லோரோடும் சேர்ந்து சோழ அரச குடும்பத்துக்கு எதிரா சதி செய்யறார். கடம்பூர் மாளிகையில்தான், சோழ பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனோட சடலம் கிடைத்தது'' --என்றேன்.
''சடலம்-னா என்ன சார்?''
''சடலம்னா தெரியாதா? பொண்ணு பார்க்க போகும்போது சொல்லுவாங்களே. அதுதான் பொண்ணு பார்க்கிற சடலம்!''
''அடக் கடவுளே! அது பெண் பார்க்கிற படலம்! நீங்க படலத்துக்கும், சடலத்துக்கும் confuse செஞ்சுக்கறீங்க! சடலம்னா பிணம்! அதாவது
டெட் பாடி!'' -- என்றதுதும் ட்ரோன் கேமராமேன் என்னை உற்றுப் பார்த்தார்.
''சார்! அங்கே ட்ரோன் கேமராவுக்கு வேலை இல்லையே! இந்த சடலம், பேய் எல்லாம் எனக்கு அலர்ஜி!'' -- என்றார்.
''ஆதித்த கரிகாலன் ஆவி அங்கே இருக்குமா சார்?”
கலகல சூழ்நிலையில் மதிய உணவு முடிந்தது. அங்கிருந்து கீழ் கடம்பூருக்கு புறப்பட்டுச்சென்றோம்.
எங்கள் கார் கடம்பூரை நெருங்கும்போதே, மர்மங்களும், ரகசியங்களும் புதைந்துக் கிடக்கிற இடமாக சற்றே அமானுஷ்யமாகதான் அந்தச் சூழ்நிலை தோன்றியது. சோழ சரித்திரத்தில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய இடம். இந்த கடம்பூர் சம்புவராயர் மாளிகையில்தான் துரதிர்ஷ்டவசமான பல சம்பவங்கள் நடந்தன.
கடம்பூர் மாளிகை என்று ஏன் பெயர் வந்தது? கடம்பம் என்பது ஓர் மரம்! போரைக் குறிக்கும் மரம். சூரபத்மனை அழித்த முருகனுக்கு கடம்பன் என்று பெயர் உண்டு! போரில் ஈடுபட்ட மதுரை மீனாட்சியை கடம்பவன வாஸினி என்பார்கள். கடம்ப மரங்கள் நிறைந்த காடு இங்கே இருந்ததால் கடம்பூர் என்று பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் கடம்ப மரத்தை Miracle tree என்கிறார்கள். இதன் தாவர இயல் பெயர் Anthocephalus Cadamba of Rubiaceae family.
மனநோய் உள்ளவர்களுக்கு, கடம்ப மரக் காற்று மனத்தெளிவை உண்டாக்குமாம். அமரர் கல்கியும், மகாபலிபுரத்தில் நிகழ்வதாகக் கூறும் ‘பொன்னியின் செல்வன்’ அத்தியாயங்கள், 50 முதல் 57ல்,
ஆதித்த கரிகாலனை மூர்க்க குணம் மற்றும் சித்தம் குழம்பியவனாகச் சித்தரிக்கிறார். ஆதித்த கரிகாலனுக்கு மனநோய் இருந்ததால், அவன் அடிக்கடி கடம்பூருக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம் என்பது எனது யூகம்.
என் யூகத்திற்கு மற்றொரு காரணமும் உண்டு. கடம்ப மரத்தின் மற்றொரு ஆங்கில பெயர் Madder tree, Mental disorder, epilepsy, bouts of fever, ஜன்னி ஆகிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். சாமியாடும் வேலன் மட்டும் இதனை அணிந்துகொள்வான். இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பர். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.
கடம்பூர் மாளிகை இருந்த இடத்தில இப்போது ஒரு தோப்பு மட்டுமே உள்ளது. அதை ஒட்டி, சம்புவராயர்களின் குலதெய்வமான ருத்ர கோடீஸ்வரர் ஆலயம் உள்ளது. படப்பிடிப்பு நிகழ்த்துவதற்காக உள்ளே நுழைந்த எங்களுக்கு ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம் ஏற்பட்டது.
(தொடரும்)