பராக் பராக் - 5 : கோபுர கொண்டை தோசை !

பராக் பராக் - 5 : கோபுர கொண்டை தோசை !

கடம்பூர் மாளிகை இருந்த இடத்தில் இப்போது ஒரு தோட்டம் இருக்கிறது. முழுவதும் மல்லிகை செடிகள் வாசத்தை பரப்பிக்கொண்டு இருந்தன.

 கடம்பூர் சம்புவராயர்களின்  மாளிகையை ஒட்டித்தான் அவர்கள் வழிபட்ட ருத்ரகோடீஸ்வரர் ஆலயம் இருந்தது. இப்போதும் இருக்கிறது! உண்மையிலே சம்புவராயர் ரௌத்திரத்திற்கு பெயர் போனவர்கள். வீரம்தான் அவர்களது உயிர்மூச்சு. கொடும்பாளூர் வேளிர் அரசர்கள், திருக்கோவிலூர் மலையமான், திருமுனைப்பாடு சிற்றரசர்கள்  என்று சோழர்கள் பக்கம் பல சிற்றரசர்கள் நின்றாலும், சம்புவராயர் தங்கள்  தனித்தன்மையை விட்டுக் கொடுக்காதவர்கள். எனவேதான் சம்புவரையர்களின் கடம்பூர் மாளிகை சதிகளுக்கு உறைவிடமாக இருந்தது என்கிற சந்தேகமும் வந்தது. 

கடம்பூர் மாளிகையை ஒட்டி இருந்த கடம்பூர் சம்புவரையர்களின் குலதெய்வமான ருத்ரகோடீஸ்வரர் ஆலயத்துக்குள் எங்கள் படக்குழு நுழைந்தது  ( இடிந்து கிடந்த இந்த ஆலயத்தின் நிலையைப் பார்த்து, உடனடியாக செப்பனிட்டு, வழிபாடு செய்வதற்கு ஏற்ற  வகையில் தமிழக அரசின் தொல்பொருள் துறையும் அறநிலையத் துறையும் முயற்சிகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

நாங்கள் இங்கே படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம் என்றவுடன் கிராமத்து மக்கள் ஓடி வந்து விட்டார்கள்.  அருண்குமார் என்கிற இளைஞர் தனது வீட்டில் சொல்லி, எங்களுக்குச் சுவையான தேநீரை தயாரித்துக் கொண்டு வந்தார்.

 ''நீங்களே ருத்ர கோடீஸ்வரருக்கு ஆரத்தி காட்டுங்கள்'' என்று ஊர் மக்கள் சொல்ல, நான் சிவலிங்கத்துக்கு ஆரத்தி காட்டி வலம் வந்த போது, ஒரு பலகை சுவற்றில் தொங்கியபடி காட்சி அளித்தது. அந்த பலகையின் பின்பாக ஏதாவது இருக்கிறதா  என்று பார்ப்பதற்காக, அதை தள்ளியபோது, ஓர் ஆள் புகக் கூடிய அளவு நிலவறை ஒன்றை கண்டேன். 

முதலில் அது  நிலவறை என்றே தோன்றவில்லை.  பூஜை செய்வதற்கு நீர் சேகரிக்கும் தொட்டி என்றுதான் நினைத்தேன். ஆனால், உள்ளே தவழ்ந்து போய் எட்டிப்பார்த்தால் பாதை செல்வதற்கான அறிகுறிகள்  தெரிந்தன. ஆனால், எந்த காலத்திலோ நிலவறையை மூடி விட்டிருக்கிறார்கள். 

அமரர் கல்கி கடம்பூர் வந்தபோது இந்த நிலவறையைப் பார்த்திருந்தாரா என்று  தெரியாது. ஆனால்,  பொன்னியின் செல்வனில், சம்புவரையர் கட்டிலின் கீழே ஓர் சுரங்கப்பாதை தொடங்குகிறது என்றும் அதே போன்று வேட்டை மண்டபத்தில் இருந்து இன்னொரு சுரங்கப்பாதை தொடங்குகிறது என்றும்,  இரண்டு பாதைகளும்  வடவாறு கரையில்  கொண்டு சென்று விட்டுவிடும் என்றும் எழுதியிருக்கிறார். சம்புவரையர்களின் ஆலயமான ருத்ரகோடீஸ்வர சன்னிதியில் இருந்து வடவாறு  வரை இச்சுரங்கம்  சென்று இருக்கலாம் என்றும், சம்புவரையர் மாளிகையிலிருந்து அரச குலப் பெண்கள் அது வழியாகத் தப்பி சென்றிருக்கலாம் என்றும்  ஊர்மக்கள் கூறுகிறார்கள். 

கடம்பூரில் அன்று முழுவதும் படப்பிடிப்பை நடத்தினோம்.  கடம்பூர் மாளிகை மிக அருகே குளம் ஒன்று இருக்கிறது. வாய்க்கால் ஒன்றும் ஓடுகிறது.

ஆதித்த கரிகாலன் கொலைக்குப் பிறகு சம்புவரையர், சோழர்களின் கோபத்துக்குப் பயந்து அங்கிருந்து புறப்பட்டு சென்று, வல்லம் (வாணியம்பாடி), பண்ணுருட்டி (பண்ருட்டி) ஆகிய பகுதிகளில் தங்கிவிட்டார்கள் என்கிறார்கள். 

கடம்பூர் சம்புவரையர்களைத் தவிர, கரண மாணிக்க சம்புவரையர், பொன்னடி சம்புவராயர், வைரமாணிக்க சம்புவரையர் என்று பல பிரிவுகளாக அவர்கள்  வாழ்ந்தனர்.        

அன்றிரவு, சீர்காழி ஹோட்டல் ஒன்றில் தங்கினோம். டின்னர் சாப்பிடக் கூட களைப்பாக இருந்தது.  டிபன் ஏதாவது உண்டு விட்டு படுக்கலாம் என்று டைனிங் ஹால் சென்றபோது, ஹோட்டல் மானேஜர் வந்தார். 

 ''கல்கி படக்குழுவினருக்காக ஸ்பெஷல் ஒன்று தயாரித்து இருக்கிறோம்'' என்று சொல்ல, சர்வர்கள் ஓர் அயிட்டத்தைக் கொண்டு வந்து வைத்தார்கள். குந்தவையின் கோபுரக் கொண்டையைப் போல, உயரமாக மடித்து நிற்க வைக்கப்பட்டிருந்தது அந்தத் தோசை. 

சார்! நாளைக்கு எங்கே ஷூட்டிங்?'' -- கேமராமேன் கேட்டார். 

''ஒரு லட்சம் பேர் உயிர் இழந்த இடம்! அமானுஷ்யமான இடம்!'' -- என்றேன். 

 அனைவரது கண்களும் பயத்தில் விரிந்தன. 

 (தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com