பராக் பராக் - 6 : பள்ளிப்படை !

பராக் பராக் - 6 : பள்ளிப்படை !
Published on

வீராணம் ஏரி, கடம்பூர் மாளிகை பயணங்களை முடித்துகொண்டு கும்பகோணம், புறப்பட்டோம். 

''தமிழ்நாட்டில்  பெரிய திருப்பு முனைக்கு காரணமான இடம் திருப்புறம்பியம். அங்கே ரெண்டு பெரிய சாம்ராஜ்யங்கள் மோதின. சண்டை போட்ட இரண்டு சாம்ராஜ்யமும்  போரில் அழிஞ்சு ஒரு புது சாம்ராஜ்யம் உருவாச்சு.''  -- நான் சொன்னதும் குழுவினருக்கு ஆர்வம் தாங்கவில்லை. 

''சார் ! அந்த கதையை சொல்லுங்க  !''

''சொல்றேன் ! ஆனால் இப்ப வேணாம் ! திருப்புறம்பியம் அற்புதமான பூமி. பச்சை வயற்காடுகள் நடுவுல நாம போற பள்ளிப்படை இருக்கு.  இயற்கை காட்சிகள் அமோகமா இருக்கும். நாம கதையை பேசிட்டு போனால் அதை ரசிக்க முடியாது. நான் எப்படியும் கேமரா முன்னாடி கதையை சொல்ல போறேன் இல்லையா?. அப்ப கேட்டுக்கங்க'' என்றேன். 

திருப்புறம்பியத்துக்குப் போகும்  பாதை மிகக் குறுகியது. ஆனால் பயணம் முழுவதும் மிக ரம்மியமான காட்சிகள்-ளைப்  பார்க்க முடிந்தது. 

மண்ணியாறு பொங்கி பாய்ந்து சலசல என்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றை ஒட்டி சாலை சென்றது.  ஆற்றில் தண்ணீர் தூய்மையாக இருந்தது. 

படக்குழுவினர் அசந்து போனார்கள். ! '' சார் ! தமிழ்நாட்டில் இவ்வளவு பசுமையான இடங்கள் எல்லாம் இருக்கா ? எப்படி சினிமாக்காரங்க பார்வையில இருந்து இந்த இடமெல்லாம் தப்பிச்சுது தெரியலியே ?'' -- மதன் அந்த ஆற்றையும், பச்சை பசேலென்ற வயற்காட்டையும் பார்த்து கிறங்கி போனார்கள் இளைஞர்கள்.

''பிரளயத்தை புறத்தே தடுத்து நிறுத்திய விநாயகர், இங்கே சாட்சிநாதர் கோவில்-லில்  இருக்கிறார். பிள்ளையார் பிரளயத்தை புறத்தே நிறுத்தியதால்  இந்த ஊருக்கு திருப்புறம்பியம் னு பெயர் .'' - படக்குழுவினருக்கு விளக்கினேன். 

திருப்புறம்பியம் சிறு கிராமமாக இருந்தது. அங்கிருந்த சாட்சிநாதர் கோவிலை  கடந்து சென்றோம்.

நாங்கள் படப்பிடிப்பு நடத்த இருந்த இடம், கங்க மன்னன் பிரித்விபதியின்  பள்ளிப்படை.  இப்போது பிரிதிவிபதி  அய்யனார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தை கடந்து நம் கார் செல்லாது. சுமார் ஒன்றரை கிமீ வயல்வெளிகளில் வரப்பில் நடக்க வேண்டும். ! 

தயங்கி தயங்கி நான் அவர்களிடம் இந்த உண்மையை சொன்னதும், அவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 

''இந்த மாதிரி பச்சை பசேல்னு வயல்வெளி. எங்க பார்த்தாலும் மோட்டார் பம்பில் தண்ணீர் கொட்டுது! வாங்க சார் நடப்போம் ! '' என்று இளவட்டங்கள் துள்ளி குதித்தபடி கேமராவுடன் கிளம்பினர். 

சுமார் ஒன்றரை கிமீ நடந்துச்  சென்றோம். மேடுகளில் ஏறி, அடர்ந்த மரங்களிடையே புகுந்து பள்ளிப்படையைத்  தேடிச் சென்றோம். 

ஒரு மேட்டில் ஏறியபோது, பிரம்மாண்டமான ஓர் ஆலமரம். 

''சார் ! இவ்வளவு பெரிய ஆலமரத்தை நான் பார்த்ததே இல்லையே !'' -- வாய் பிளந்து நின்றனர், படக்குழுவினர். 

உண்மையிலேயே அந்த ஆலமரத்தின் அடியில் நின்றபோது வானமே தெரியவில்லை.  உலகத்திலே நாங்கள் மட்டுமே தனித்து இருப்பது போல ஓர் உணர்வு. அந்த ஆலமரத்தை ஒட்டிய ஒரு பரந்த வயல்வெளியில், மயில்கள் விளையாடிக்கொண்டிருந்தன. 

''சார் ! சத்தியமா சொல்றேன் ! இந்த மாதிரி எல்லாம் நான் பார்த்ததே இல்லை !  கதையில் தான் படிச்சிருக்கேன் !'' -- கேமராமேன் மயில்களை படம் பிடிக்கத் தொடங்கினார். 

''நாம பள்ளிப் படைக்கு  இன்னும் கொஞ்ச தூரம் நடக்கணும் ! இங்கே உங்களை ஏன் அழைச்சுக்கிட்டு வந்தேனா, இங்கே ஒரு  கல் இருக்கு. அதை நீங்கள் அவசியம் பார்க்கணும்னு !'' -- என்றபடி ஒரு குறிப்பிட்ட  இடத்தில் தனியாக நடப்பட்டிருந்த  கல்லை சுட்டிக் காட்டினேன். 

'' என்ன கல் சார் இது ?'' -- இயக்குனர் கேட்டார். 

''திருப்புறம்பியம் போரில்  இறந்து போன மன்னர்களோட பாதுகாவலர்கள், படை அதிகாரிகள் எல்லோரும் தங்களையே வெட்டிக்கிட்டு உயிர் தியாகம் செஞ்ச இடம் இது !'' -- என்றதும், படக்குழுவினரின் முகத்தில் மலைப்பு. 

''சார் ! திருப்புறம்பியம் போர் இங்கேதான் நடந்ததா ?''

''ஆமா!  பல்லவ மன்னன் அபராஜிதன், உறையூர் சோழன் ஆதித்தன்,  கங்க நாடு பிருத்விபதி ஒரு பக்கம். அவர்களை எதிர்த்து போரிட்டது பாண்டியர்கள், தஞ்சை முத்தரையர் -! ஒரு லட்சம் பேர் இறந்த இடத்துலதான் நாம் இப்ப நிக்கறோம் !'' -- என்றவுடன் அனைவரின் முகத்திலும் பீதி. 

''சார் ! ஒரு லட்சம் பேர் என்றால் ஆவிகள் இருக்குமோ ? அவை இங்கும் அங்கும் அலையுமோ ?

''சார் ! இங்கே வேணாம் சார் ! நாம் பேசாம பள்ளிப்படைக்கு போய்டலாம் !'' --- இயக்குனர் சொல்ல, நாங்கள் தொடர்ந்து நடந்தோம். 

ஓர் அமானுஷ்யமான பாதை ! இரண்டு பக்கமும் அடர்ந்த மரங்கள்! அந்த பாதையில் நடக்க ஆரம்பித்தோம். 

''சார் ! இந்த இடத்துக்கு வந்தியத்தேவன் வந்தானா ?”
 

''வந்தியத்தேவன் இங்கே வந்ததா கல்கி எழுதல ! இது பொன்னியின் செல்வன் கதைக்கு முந்தைய காலம். இங்கே எதுக்கு வந்திருக்கிறோம்-னா , சோழ பேரரசு உண்டாக காரணமான இடம்-ங்கிறதால இங்கே வந்திருக்கோம் !'' என்றேன். 

தொலைவில் பள்ளிப்படை தெரிய, எங்கள் நடையின் வேகத்தைக் கூட்டினோம். 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com