பராக் பராக் - 7 : ஆலமரத்தில் ஓர் சத்தம்

பராக் பராக் - 7 : ஆலமரத்தில் ஓர் சத்தம்
Published on

ரகதப்பச்சை சேலையை அணிந்திருந்த நிலமங்கை  திருப்புறம்பியத்தில் நடமாடிக் கொண்டிருந்தாலும், போரின் வடுக்கள் இன்னும் அவள் மேனியில் தென்படுகின்றன.

பல்லவம், பாண்டியம், சோழன்,  கங்கம், தஞ்சை முத்தரையர்கள்,  என்று பல,ராஜ்யங்கள் பங்கேற்ற போர். இலட்சக்கணக்கான போர்வீரர்கள் தங்கள் இரத்தத்தை பெருகச் செய்து வளமாக்கியதாலோ என்னவோ, எங்கும்  பச்சைப் பசேல் என காட்சி தந்த வயல்வெளிகள்.. 

இவற்றின் ஊடே வரப்பில் நாங்கள் நடந்து சென்றபோது, படப்பிடிப்பு குழுவினர் அமைதியாக வந்தார்கள். காரணம் அந்த இயற்கை சூழலில் அவர்கள் லயித்து விட்டதுதான்! 

வர்கள் மட்டுமல்ல. !  ''பராக் பராக் கல்கியின் பொன்னியின் செல்வன் ! வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவ பயணம் ~'' நிகழ்ச்சியின் முதல்  பயணம் இனிது .நிறைவடைந்த பிறகு , இந்த கட்டுரையை நான் எழுதுகிறேன். அந்த பயணத்தில் பங்கேற்றவர்கள் கூட, திருப்புறம்பியம் பள்ளிப்படையை  நோக்கி நடந்த போது மிகவும் சிலாகித்தார்கள். 

எல்லோரும் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் வசிப்பவர்கள். அவர்களுக்கு திருப்புறம்பியம் பள்ளிப்படை க்கு செல்லும் புதிய அனுபவமாக இருந்தது. 

மீண்டும் எங்கள் படப்பிடிப்பு கதைக்கு வருகிறேன்.  நாங்கள் தொடர்ந்து  நடந்து, ஓர் மேடான  பகுதியை அடைந்தோம். பிரம்மாண்டமான ஆலமரத்தின் அடியில் வட்டமாக திண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆலமரத்தின் அருகில், மக்கள் தொழும் கற்கள், வரிசையாக  அமைக்கப்பட்டிருந்தன. 

பட குழுவினர் தங்கள் கேமராக்களை வைத்துவிட்டு, சற்று  இளைப்பாறினார். தண்ணீர் குடித்ததும், சும்மா இல்லாமல், இயக்குனர் ராஜ்கமல், ''சார் ! என்ன பேசப்போகிறோம்-னு ஒரு தடவை ரிகர்சல் பார்த்துக்கலாமா ! '' -- என்று கேமராவை அங்கிள் பார்த்து தயாரானார்.

''இங்குதான் சோழ மன்னர்களின் பாதுகாப்பு படையினர் போர் முடியும் வரையில் காத்திருப்பார்கள்’’. அதாவது, இப்போது நமது தலைவர்களுக்கு உள்ள Z  Plus கருப்பு பூனைகளின்(Black Cats) பாதுகாப்பு, அந்த தலைவர்கள் சாலையில் செல்லும் வரையில்தான் வழங்கப்படும் இல்லையா?  அந்த தலைவர் வீட்டினுள் நுழைந்துவிட்டாலோ, அலலது ஆலயங்கள், அல்லது வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலோ, கருப்பு பூனைகள்   விலகி விடுவார்கள். போலீஸ் பாதுகாப்போ அங்கே மேற்கொள்ளும்.!  ஆக சாலையில் செல்லும் போது மட்டும்தான் கருப்பு பூனைகள் பாதுகாப்பு பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்

அதே போல், தங்கள் மன்னர்களின் பாதுகாப்பு படையினர் போரில் பங்கு கொள்ள மாட்டார்கள். ஆனால், மன்னர்கள் போரில் இறந்து போனார்கள் என்றால், அவரது பாதுகாப்பு படை வீரர்களும் தற்கொலை செய்து கொள்வார்கள். எனவேதான் அவர்களை தற்கொலை படையினர் என்று அழைத்தார்கள். 

தங்கள் குல தெய்வமான தவ்வையின் முன்பாக அவர்கள் சபதம் எடுப்பார்கள்.  நவகண்டர்கள், அவகண்டர்கள் என்று அவர்களிடையே இரண்டு பிரிவினர். அவ கண்ட பிரிவினர், தங்கள் மன்னர்கள் இறந்தால் தங்கள் தலைகளை மட்டும் வெட்டிக்கொள்வார்கள். நவகண்ட படையினர் என்றால்  ஒன்பது அங்கங்களை வெட்டிக்கொள்வார்கள். நாக்கு, மூக்கு, இரு காதுகள், இரு கைகள், இரு கால்கள், கடைசியாக தலை என்று ஒன்பது அங்கங்களை வெட்டிக்கொள்வார்கள். அவ்வகையில், திருப்புறம்பியம் போரில், தங்கள் மன்னர்கள் இறந்தபோது, நவகண்டர்கள் தங்களையே வெட்டி கொண்ட இடத்தில்தான் நாம் நிற்கிறோம் '' -- என்றவுடன், படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி. சுற்றுமுற்றும் பார்த்தபடி நின்றனர். 

''இங்கே இருக்க வேணாமே ! இப்போதே பள்ளிப்படைக்கு போயிடலாம் !'' -- என்று கேமராமேன் சொல்ல, அப்போது சடசட என்று ஆலமரத்தின் மீதிலிருந்து   ஓர்  சத்தம்.. அதை தொடர்ந்து சொத் என்று ஓர் சத்தம். 

அனைவருமே திகைத்து போனோம். 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com