பெற்றோரே குழந்தைகளின் முதன்மை பராமரிப்பாளர்கள்!

சிறப்புக் கட்டுரை - ஜூன் 1 உலக பெற்றோர் தினம்!
World Parents Day
World Parents DayImage credit - pixabay.com

"பெற்றோரே குழந்தைகளுக்கு இறுதி முன்மாதிரி. ஒவ்வொரு சொல்லுக்கும், அசைவுக்கும், செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. பெற்றோரைவிட வேறு எந்த நபரும் அல்லது வெளி சக்தியும் ஒரு குழந்தையின் மீது அதிக செல்வாக்கு செலுத்துவதில்லை"– பாப் கீஷன். (அமெரிக்க பிரபலம்)

ஒரு நாடு வளம் பெற வேண்டும் என்றால் அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வளமுடன் வாழ வேண்டும். குடும்பம் என்பது பெற்றோர்களும் குழந்தைகளும் அடங்கிய ஒரு உன்னதமான உறவு. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்கும் தங்கள் உயிரையும் பொருட் படுத்தாது வாழ்வதை அறிவோம். பெற்றோரே ஒவ்வொரு குழந்தைக்கும் ரோல்மாடலாக இருப்பது சிறப்பு.

மதிப்பு மிகு பெற்றோர்களையும், குழந்தைகளின் வாழ்வை வடிவமைப்பதில் அவர்கள் ஆற்றும் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டுவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி உலக பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது.  செப்டம்பர் 17, 2012 அன்று ஐ. நா. ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி உலகப் பெற்றோர் தினம் நடத்தப்படும் என்று அறிவித்து, அதை ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் கடைபிடித்து வருகிறது. மேலும், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இனம், மதம், கலாச்சாரம்  வேறுபாடின்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முதன்மை பராமரிப்பாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பதாகவும்  ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.

ற்போதைய பிஸியான வாழ்க்கையில் பெற்றோர்கள் பணிக்குச் செல்லும் சூழலில் குழந்தைகளின் உடல்நலம், உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் கல்வி ஆகியவற்றை எவ்வகையில் ஈடு செய்கிறார்கள் மற்றும் 2024ன் கருப்பொருளான (Building Stronger Families for a Better Future)

"சிறந்த எதிர்காலத்திற்காக வலுவான குடும்பங்களை உருவாக்குதல்…" அடிப்படையில் குழந்தைகளின் வருங்காலத்திற்காக உங்கள் செயல்பாடுகள் என்ன என்ற கேள்வியை இளம்பெற்றோரிடம் முன் வைத்தோம்:

கார்த்திகேயன் - முத்துலட்சுமி

கார்த்திகேயன் - முத்துலட்சுமி
கார்த்திகேயன் - முத்துலட்சுமி

ங்களுக்கு 8வது படிக்கும் கௌசிகன் எனும் மகனும் இரண்டரை வயதான தேஜா ஸ்ரீ எனும் மகளும் உள்ளனர். போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளேன். மனைவி வீட்டில் இருப்பதால் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பார்த்துக்கொள்கிறார். வரும் வருமானத்தில் சேமித்து குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய சொந்த வீடு ஒன்றை கட்டி முடித்துள்ளோம். அடுத்து, அவர்களின் நிரந்தரச் சொத்தான கல்விக்காக தினம் வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகையைச் சேமிக்கிறோம். எங்களைப்போன்ற நடுத்தரக் குடும்பப் பெற்றோரின் கஷ்ட நஷ்டங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்வோம். அப்போதுதான் உழைப்பின் மதிப்பையும் பணத்தின் அவசியத்தையும் அவர்கள் புரிந்து நடப்பார்கள். ஒரு பெற்றோராக எங்களால் எவ்வளவு முடியுமோ அதைக் குறைவின்றி குழந்தைகளுக்குத் தருகிறோம் அன்புடன்.

தினேஷ் - சண்முகவடிவு

தினேஷ் - சண்முகவடிவு
தினேஷ் - சண்முகவடிவு

ங்களுக்கு சுரபிஸ்ரீ எனும் 5 வயது மகள் இருக்கிறார். எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தேவையான கல்வியுடன் துணிவையும், தன்னம்பிக்கையையும் தந்து அவளை வளர்ப்பதே எங்கள் நோக்கம். அடுத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பு வெறுப்புகள் உண்டு. நீ இதைத்தான் செய்யவேண்டும் என்று அவளிடம் என்றும் நாங்கள் சொன்னதில்லை. இது வேண்டும், வேண்டாம் என்று சொல்லக்கூடிய முடிவெடுக்கும் திறனை இப்போதிருந்தே பழக்கி வருகிறோம். நாங்க இரண்டு பேரும் பணிக்குச் சென்றாலும் எங்கள் இருவரின் பெற்றோர்களின் அரவணைப்பில் மகிழ்ச்சியான சூழலை அவளுக்குத் தந்து உறவுகளின் முக்கியத்துவம் புரிய வைக்கிறோம். "நாங்கள் உன்னுடைய முதல் பிரெண்ட்ஸ்" என்று தினம் அவளிடம் கூறி, எங்களிடம் பயமின்றி எதையும் ஷேர் செய்ய பழக்கி உள்ளோம்.

வெங்கடரமணன் - ஸ்ரீவித்யா

வெங்கடரமணன் -ஸ்ரீவித்யா
வெங்கடரமணன் -ஸ்ரீவித்யா

ங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஏழாவது மற்றும் ஒன்றாவது படிக்கிறார்கள். பொதுவாக குழந்தைகள் பள்ளியை விடவும் வீட்டில்தான் வெகுநேரம் செலவழிக்கின்றனர். குழந்தைகளுடன் தினமும் நேரம் செலவிடுவது, படிப்பு, பள்ளி சாராத திறன்கள், விளையாட்டு என எல்லாம் கலந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நல்லதொரு சூழலை வீட்டில் நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். குழந்தைகள் தவறு செய்யும்போது, அன்பால் திருத்த வேண்டுமே, தவிர அடிப்பதை வாய்ப்பாக வைத்திருக்கக் கூடாது. அனைவருக்கும் உலக பெற்றோர் தின வாழ்த்துகள்!

மஞ்சுளா – சுவாமிநாதன்

மஞ்சுளா – சுவாமிநாதன்
மஞ்சுளா – சுவாமிநாதன்

நேற்று தோளுக்கு மேல் வளர்ந்த என் மகனின் மடியில் நான் படுத்துக்கொண்டு இலக்கே இல்லாமல் அரை மணி நேரம் கதைத்தேன். இருவரும் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தோம். நான் அவனோடு சினிமாவுக்குப் போயிருந்தால் அல்லது அவனுக்கு ஒரு பிளே ஸ்டேஷன் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அவன் சந்தோஷம்தான் அடைந்திருப்பான்... ஆனால், சில ஆண்டுகள் கழித்து பெற்றோருடன் நீ கழித்த சிறந்த நினைவுகளைக் கூறு என்று யாராவது கேட்டால் அவன் மனதில் பொருட்களால் அவன் அடைந்த சந்தோஷத்தைவிட நாங்கள் சேர்ந்து செலவழித்த நேரம்தான் முதலில் நினைவில் வரும். ஒரு ஸ்திரமான குடும்ப அமைப்பில் நாம் நமது குழந்தை களோடும், பெற்றோருடனும் கழித்த நேரம்தான் என்றும் முக்கியத்துவம் பெரும். என் மகள் சமீபத்திய சென்னை வெள்ளத்தின்போது மூன்று நாட்கள் மின்சாரம் இன்றி, இணையம் இன்றி நாங்கள் விளையாடிய போர்ட் கேம்களை மறக்க முடியாது என்கிறாள்.

மதுவந்தி – பிரசாந்த்

மதுவந்தி – பிரசாந்த்
மதுவந்தி – பிரசாந்த்

ணக்கம். நான் மதுவந்தி. இரண்டு சிறிய பெண் குழந்தைகளுக்குத் தாய். எனது கணவர் பிரசாந்த், வங்கியில் பணிபுரிகிறார். இன்று உலக பெற்றோர் தினம். இன்றைய தலைமுறை பெற்றோர்களை நினைத்து பெருமைப்பட்டாலும் நாம் ஒரு விஷயத்தில் தவறு செய்கிறோமோ என்று தோன்றுகிறது. நாம் நமது குழந்தைகளுக்குத் தோல்விகளை எதிர்கொள்ளும் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளும் மன தைரியத்தைக் கற்றுத் தரவில்லையோ என்பதுதான். குழந்தைகள் கேட்டதை உடனே வாங்கி தருவதைக் கொஞ்சம் குறைத்தாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, அங்குத் துவங்குகிறது பிரச்னை. முதலில் ஏமாற்றமும் தோல்விகளும் வாழ்க்கையில் சகஜம் என்பதைப்  புரியவைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதைச் செய்தலே பெற்றோருக்கான முதல் கடமையை நாம் நிறைவேற்றலாம். குழந்தைகளும் எளிதில் துவண்டு போகமாட்டார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com