நாடாளுமன்ற முடக்கம் தேவையா?

நாடாளுமன்ற முடக்கம் தேவையா?

ராகுல் காந்தி விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜகவினருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கும் மோதல் நீடித்து வருகிறது. இதனால் நாடாளுமன்றம் கடந்த ஒருவாரமாக செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது.

அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர். நாடாளுமன்றத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் வெளிநாட்டு மண்ணில் இழிவுபடுத்தி பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ராகுல் எந்த மொழியில் பேசினாரோ அதே மொழியில்தான் இந்தியாவுக்கு எதிரானவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசி வருகின்றனர். எனவே ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறிவருகிறார்.

சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல்காந்தி, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த உரையாடலின்போது இந்தியாவில் ஜனநாயகத்தின்

மீதான தாக்குதல் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கப்படுவதில்லை. பேச முற்பட்டாலும் மைக்குள் அணைக்கப்படுகின்றன என்று சரமாரியாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

ராகுல் பேச்சுக்கு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், சிலர் வெளிநாட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. ஆனாலும் சிலர் இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்த முயற்சித்து வருகின்றனர் என்று பதில் கூறியிருந்தார்.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தாலும் காங்கிரஸ் அதற்கு வளைந்துகொடுக்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது. ராகுல் காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று எதிர்க்கட்சியினரான நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதை திசைத்திருப்பும் வகையில் ஒருசதித் திட்டத்துடன் ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கி வருகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட எந்த பிரச்னை குறித்தும் விவாதிக்க அவர்கள் தயாராக இல்லை. மோடி பலமுறை வெளிநாடுகளில் இந்தியத் தலைவர்களை விமர்சித்து பேசியிருக்கிறார். ஆனால், அவர் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்கவில்லை. எனவே ராகுல் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி, “நான் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால் பதிலளிக்க தயாராக இருக்கிறேன்” என்கிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கு வாய்ப்புத் தராமல் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்திவருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

உலக அரங்கில் இந்தியா மதிக்கப்படுவதற்கும், அங்கீகரிக்கப்படுவதற்கும் பிரதமர் மோடியும் அவரது தலைமையிலான மத்திய அரசும்தான் காரணம் என்பதை உறுதிப்படுத்துவதே பா.ஜ.க.வின் நோக்கம் போல தெரிகிறது. அது உண்மையானால், கடந்த 9 ஆண்டுகளாக இடைவிடாத கடின உழைப்பால் உருவான நன்மதிப்பையும், அங்கீகாரத்தையும் தனிமனிதர் ஒருவர் பேச்சால் பலவீனப்படுத்திவிடமுடியுமா? நாடாளுமன்றம் தொடர்ந்து நடைபெறாத நிலையில், கடைசி நேரத்தில் அனைத்து மசோதாக்களையும் எந்தவிதமான விவாதமும் இல்லாமல் நிறைவேற்ற மோடி அரசு விரும்புவதாகவே தெரிகிறது. நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பதற்கு ஆட்சியாளர்களும் காரணம். அவர்கள் தங்களது பொறுப்புகளை தட்டிக்கழிக்க முடியாது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து செயல்பட முடியாமல் முடக்கப்படுகிறது.

அமெரிக்காவை அடிப்படையாக்க் கொண்டு செயல்படும் ஓர் அமைப்பு, சர்வதேச அளவிலான அரசியல் உரிமைகளும் சலுகைகளும் என்பது தொடர்பான ஆய்வு நடத்தி இந்தியாவை முழுசுதந்திரம் உள்ள நாடு என்கிற அந்தஸ்திலிருந்து, ஓரளவு சுதந்திரம் உள்ள நாடு என்ற அந்தஸ்துக்கு குறைத்துள்ளது. ஸ்வீடனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வீ-டெம் இன்டிடியூட், இந்தியா தேர்தல் எதேச்சாதிகார நாடாக உருவாகிவருகிறது. இந்தியாவில் ஜனநாயகம் மெல்ல மெல்ல செயலிழந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளதுடன், ஜனநாயகம் பட்டியலில் இந்தியா 53 வது இடத்துக்கு சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு அரசியல் மாற்றத்தை தொடர்பு படுத்தி

இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி உலக அரங்கில் இந்தியாவின் ஜனநாயாக நிலைப்பாடும் இருக்கும்போது அரசியல் தலைவர் ஒருவர் இந்தியாவை இழிவுபடுத்திவிட்டார் என்று எப்படி கூறமுடியும்? இந்தியாவில் ஜனநாயகம் எப்படி என்பது வெளிநாட்டினர் அறிந்ததுதானே?

நாடளுமன்றம் தொடர்ந்து செயல்படாமல் முடங்கியிருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்தான். ஆனால், இந்த முறை நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஆளுங்கட்சியினர்தான். இந்தியாவை இழிவுபடுத்தி பேசியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் வலியுறுத்தலாம். ஆனால், அதற்காக நாடாளுமன்றத்தை முடக்குவது சரியா? அவர்களுக்கு வேறு வழிகள் தெரியவில்லையா? பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் ஏராளமாக இருக்கும் நிலையில் இருதரப்பினரும் அரசியல்

ஆதாயம் கருதாமல் தேசநலனை கருத்தில் கொண்டு செயல்பட முன்வர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளைகளுக்கு தீர்வுகாண்பதை விட்டுவிட்டு மோதல் போக்கை கடைப்பிடித்து வருவது துரதிருஷ்டமானது. இதனால் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கிப்போயுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பினரும் மக்களை மதிப்பதாகவே தெரியவில்லை. நாடாளுமன்றத்தை நடத்திச்செல்ல ஒரு நிமிடத்துக்கு ரூ.2.5 லட்சம் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. இரு தரப்பினரின் ஆணவப் போக்கால் மக்கள் வரிப்பணமும் நேரமும் வீணாகிறது. அவையில் மோதல்களும் அமளிகளும் முடிவுக்கு வந்து விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com