பிள்ளைக்கறியமுது கேட்ட பரந்தாமன்!

பிள்ளைக்கறியமுது கேட்ட பரந்தாமன்!

ந்திர பிரஸ்தத்தின் மன்னனாக முடிசூடிய யுதிஷ்டிரன் நாட்டின் நலன் கருதி அஸ்வமேத யாகம் செய்ய முடிவெடுத்தான். அதே காலகட்டத்தில் தென்னகத்தை ஆண்டு வந்ததாகக் கருதப்படும் ரத்னபுரி அரசன் மயூரத்வஜனும் அதே யாகத்தை நடத்த முற்பட்டான். இதை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது!

அஸ்வமேத யாக முடிவில் பூஜிக்கப்பட்ட ராஜபுரவியை தகுந்த பாதுகாப்புடன் நாடு சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வகையில் யுதிஷ்டிரனின் குதிரைக்கு கிருஷ்ணர் - அர்ஜுனனும், மயூரத்வஜனின் துரகத்துக்கு இளவரசன் தாம்ரத்வஜனும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் இடையில் சந்திக்க நேர்ந்து, ஒருவர் குதிரையை மறு தரப்பினர் கவர்ந்துச் செல்ல முற்பட, கடும் சண்டை நிகழ்ந்தது! ஸ்ரீ கிருஷ்ணர் ஓரிடத்தில் இருந்தால் அவர் திருவுளப்படிதானே அடுத்து வரும் நிகழ்வுகள் அமையும். அந்த உக்கிரமான கைகலப்பில் அர்ஜுனன் மயங்கி விழுந்தான். சேனா வீரர்கள் திகைத்து நிற்க, அந்தச் சந்தடிசாக்கில் தாம்ரத்வஜன் இரண்டு குதிரைகளோடும் நாடு திரும்பினான். நடந்ததை அறிந்த ஸ்ரீ கிருஷ்ண பிரேமியான மயூரத்வஜன் வருத்தத்துடன், ‘‘மகனே, ஸ்ரீ கிருஷ்ணர் அந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்துமா சண்டையிட்டாய்? இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யப் போகிறோம்’’ என்று நொந்து கொண்டான்.

இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த அர்ஜுனன், தனது தோல்வியை எண்ணி கொதித்துப்போய் ஆக்ரோஷத்துடன் புலம்பித் தீர்த்தான். ஒரு சிறுவனிடம் தோற்றுப்போனது அவன் தன்மானத்தை மிகவும் பாதித்து விட்டது. ஆனால்,
ஸ்ரீ கிருஷ்ணரோ, அமைதியாகத் தனது திருவிளையாடலை அரங்கேற்றினார். அர்ஜுனனை சமாதானப்படுத்தும் விதமாக, ‘‘அர்ஜுனா பொறுமையாக இரு! நாம் இருவரும் ரத்னபுரி செல்வோம். ஆனால், ஒரு நிபந்தனை! நீ அங்கே என்ன நடந்தாலும் வாயே திறக்கக்கூடாது! எந்தக் கேள்வியும் கேட்ககூடாது!’ என்று கூற, அர்ஜுனனும் அதற்குச் சம்மதித்தான்.

ருவரும் ரத்னபுரியை அடைந்தார்கள். தனது மனதுக்குகந்த மாயவனைக் கண்டதில் திக்குமுக்காடிப் போன மயூரத்வஜன், மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றான். பின்னர் பணிவன்புடன், குற்றமிழைத்து விட்ட உணர்வு மேலிட, குனிந்த தலை நிமிராமல், ‘‘ஹே... கோபாலா! தவறிழைத்து விட்டோம். அறியாமையால் இளவரசன் பிழை செய்து விட்டான். தயை கூர்ந்து எங்களை மன்னித்தருள வேண்டும்’’ என்றான்.

தனக்கே உரித்தான மந்தஹாசப் புன்னகையுடன் அவனை ஏறிட்ட கோவிந்தன், ‘‘மயூரத்வஜா, செய்த தவறை அவ்வளவு எளிதாக மன்னித்துவிட முடியுமா என்ன? அதற்கான ஒரு பரிகாரத்தை நீ செய்ய வேண்டும்!’’ என்றார்.

‘‘நிச்சயம், கிருஷ்ணா! பரிகாரம் எதுவாயினும் அடியேன் செய்யத் தயாராயிருக்கிறேன். கட்டளை இடுங்கள்’’ என்றான் மயூரத்வஜன்.

‘நல்லது! தவறு செய்த உனது மகனை மனப்பூர்வமாக நீயும் உன் ராணியும் சேர்ந்து இரண்டாக அறுத்து வலது பாகத்தை மட்டும் அடியேனுக்குத் தானமாகத் தர வேண்டும். உங்கள் மூவரில் யார் சோகமாக இருந்தாலும், கண்ணீர் சிந்தினாலும் அதை நான் தானமாக ஏற்க மாட்டேன். சம்மதமா?’’ என்று கேட்ட பரந்தாமனை ஏறிட்டான் மயூரத்வஜன். ஆகா, இதென்ன நிலைமை? எங்கோ கேட்டு, படித்தது போல் இருக்கிறது அல்லவா? ஆம், பிள்ளைக் கறி அமுது கேட்ட சிவனடியார் முன் நின்றிருந்த சிறுதொண்டர் முகத்தில் எப்படி எவ்வித சலனமும் இல்லாமல் இருந்ததோ, அதே நிலையில் காணப்பட்டான் மயூரத்வஜன். ‘கார்மேக வண்ணன் தன்னைச் சோதிக்கப் பார்க்கிறான். வேறு எதற்கோ அடி போடுகிறான்’ என்பது புரிந்து விட்டது.

‘‘மாதவா, எனக்குப் பரிபூரண சம்மதம். தங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் உள்ளதை எல்லாம் அர்ப்பணிக்க முன்வருகிறேன். உங்களுக்குத் தானம் செய்ய நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’’ என்று உணர்ச்சி பொங்கக் கூறிய மயூரத்வஜன், அடுத்த கணமே மகனுக்கு மங்கல ஸ்நானம் செய்து, தரையில் படுக்க வைத்து கிழக்குத் திசை பார்த்து அமர்ந்தான். மகன் உடலை ஆடாதபடி ராணி பிடித்துக்கொள்ள, மயூரத்வஜன் வாள் கொண்டு இளவரசனை அறுக்கலானான். அப்போது எவரும் எதிர்பாராவண்ணம் தாம்ரத்வஜனின் இடது கண்ணிலிருந்து நீர் கன்னத்தில் வழிந்தது.

அதைக் கண்ணுற்ற கிருஷ்ணர் பரபரப்புடன், ‘‘நிறுத்துங்கள்! அவன் வலி பொறுக்க முடியாமல் அழுகிறான். இது நான் விதித்த நிபந்தனைக்கு முற்றிலும் மாறானதாகி விட்டது. மேலும் அழுது கொண்டே தரப்படும் தானம் பாபத்தையே தர வல்லது’’ என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அர்ஜுனனுக்கு தூக்கிவாரிப் போட்டது! ‘இதென்ன, கிருஷ்ணன் ஏன் இப்படி ஈவிரக்கமின்றி நடந்து கொள்கிறார்?’  என்ற ரீதியில் சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே, தாம்ரத்வஜனின் குரல் அவன் சிந்தனையோட்டத்தைக் கலைத்தது. ‘‘பரம்பொருளே பரந்தாமா, பெரியவர்கள் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும். கண்ணீர் வழிவது என் இடது கண்ணில்! தாங்கள் தானம் கேட்டது என் உடலின் வலது பாகத்தை! ‘ஒரே உடம்பாயிருந்தும் தானம் போக நான் அருகதையற்றுப் போனேனே’ என்று எனது இடது பக்கம் அழுகிறது சுவாமி! மற்றபடி ராஜவம்சத்து சத்ரியனை ரத்தமும், கத்தியும் பயப்படுத்தாது மாலோலா!’’ என அவன் பேசி முடிக்க, அர்த்தபுஷ்டியுடன் அர்ஜுனை பார்த்தார் ஸ்ரீ கிருஷ்ணர். அந்தப் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் தலை குனிந்தான் அர்ஜுனன்.

‘‘பார்த்தாயா பார்த்தா? இப்படித் தன் தேகத்தையே எவ்வித மனக்கிலேசமும் இல்லாமல் சமர்ப்பணம் செய்த இவன் உன்னை வெற்றி கொண்டது பொருத்தமானதுதானே? இவனது தன்னலமற்ற தியாகச் செயலுக்கு முன் உனது தற்பெருமை, அகங்காரம் எல்லாம் எம்மாத்திரம்!’’ என்று கிருஷ்ணன் கேட்பது போலிருந்தது அவனுக்கு.

சுதாரித்துக் கொண்ட அர்ஜுனன் கூனிக்குறுகி குரல் கம்மப் பேசினான், ‘‘மன்னா, தாம்ரத்வஜா, உங்கள் இருவர் முன் நான் மலைக்கும் மடுவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் போல் ஆகி நிற்கிறேன்! செயற்கரியச் செயலைச் செய்து நீங்கள் இருவரும் மலையளவு உயர்ந்து நிற்கிறீர்கள்!’’ என்றான்.

பின்னர் அவனருளால் தாம்ரத்வஜன் பூரண தேஜஸோடு மீள, விருந்துண்டு விடைபெற்றனர் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com