பொன்னியின் செல்வன் கதையல்ல; காவியம்

பொன்னியின் செல்வன் கதையல்ல; காவியம்

– பழனீஸ்வரி தினகரன்

ஓவியம்; பத்மவாசன்                                                நன்றி; கல்கி களஞ்சியம்

முதன் முறையாக, எட்டாம் வகுப்பு விடுமுறையில், பொன்னியின் செல்வன் வாசிக்க ஆரம்பித்தேன். அம்மாவிற்கு உதவியாக, வீட்டு வேலைகளை முடித்து விட்டு, பைண்டிங் செய்யப்பட்ட பொன்னியின் செல்வனோடு அமர்ந்தால், வீடும் நானும் துண்டிக்கப்படுவோம்.

என் மனம் வந்தியதேவனோடு குதிரையில் பறக்கும்; நந்தினியின் சதி வேலைகளில் பதறும்; குந்தவையைப் பார்த்து, என் சகோதரனின் மேல் வாஞ்சை பிறக்கும்‌ அந்த மாய உலகில் இருந்து விடுபட, மனம் இருக்காது.

சோழர்களின் மேல், ராஜ விசுவாசம் தோன்றும். அப்போது, மதுரையில் பிறந்து வாழ்ந்து கொண்டிருந்த சிறு பெண் நான்‌ ஐயோ… நாம் பாண்டியர்கள்‌… சோழத்தின் மீது விசுவாசமா? என யோசிப்பேன். பிறகு, சேர, சோழ பாண்டியர்கள், அனைவரும் தமிழர்களே, என ஆறுதல் அடைவேன்.

ஒவ்வொரு ஆண்டு விடுமுறையும், பொன்னியின் செல்வன் படிக்காவிடில், பூரணத்துவம் அடையாது.

ஐம்பதுகளில், கல்கியில் பொன்னியின் செல்வன் வெளிவந்ததை எனது தாத்தா பைண்டிங் செய்து வைத்திருந்தார். எழுபதுகளில் வெளிவந்ததை, அம்மாவும், தொண்ணூறுகளில் வெளியானதை, நானும் பைண்டிங் செய்தோம். இது வேறு எந்த கதைக்கும், இல்லாத சிறப்பு. இது கதை அல்ல; காவியம்.

திருமணமாகி வந்த போது, எனது பக்கத்து வீட்டு, அக்காவின் பெயர் நந்தினி. எனது தாத்தாவையும், அம்மாவையும், நினைத்து கோபம் வந்தது. பொன்னியின் செல்வன், படித்தால் மட்டும் போதுமா? இப்படி, எனக்கு பெயர் சூட்டவில்லையே… இந்தக் குறை எனது தங்கை மகனுக்கு, பெண் குழந்தை பிறந்தபோது, வானதி என்ற பெயர் சூட்டிய போது, தீர்ந்தது. ஆனால், எனக்கு ஒரு சந்தேகம்… நந்தினி பெயரைக்கூட சூட்டுகிறார்கள்; ஏன் குந்தவை என்ற பெயர் வைப்பதில்லை?

ஒருமுறை, தஞ்சாவூர் சென்றோம். பெரிய கோவிலையும், அரண் மனையையும் சுற்றி வந்தபோது, ஒரே படபடப்பாக இருந்தது.  இங்கே அருள்மொழி நின்றிருப்பான்; இந்த விதானத்தை குந்தவை பார்த்து இருப்பாள், என்று நினைத்து நினைத்து மெய்மறந்து நடந்து, குப்புற விழுந்து, காலில் அடிபட்டு ரத்த காயம் கூட ஏற்பட்டது.

மொத்தத்தில், என் பால்யத்தை இனிமை ஆக்கியவன், பொன்னியின் செல்வன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com