கையடக்கக் காலப்பொறி!

கையடக்கக் காலப்பொறி!

– கவிஞர் நிரஞ்சன் பாரதி

னக்கு ஒரு விந்தையான ஆசை உண்டு. பழங்காலத் தமிழ் மன்னர்கள் போல் அரச உடை தரித்து, தலையில் மணிமுடி சூடி, சிங்காதனத்தில் அமர்ந்து ஒரு நாளேனும் ஆட்சி புரிய வேண்டும் என்று. மகிழுந்தில் செல்லும்போது கிடைக்காத ஒரு பெருமிடுக்கு ஒரு குதிரையில் ஏறி அமர்ந்து செல்லும்போது உண்டாகிறது. விமானத்தில் ஏறி விரைவாகக் கடல் கடக்கும்போது ஏற்படாத ஒரு தன்னிறைவு ஒரு யானை மீதூர்ந்து செல்லும்போது ஏற்படுகிறது.

தற்காலத் தலைமுறைக்கு எட்டாக்கனியாக இருக்கும் இந்த மேற்கூறிய பெருங்கற்பனை வாழ்க்கையை ஒரு படைப்பு, படிக்கும் போதெல்லாம் நமக்கு வழங்கி வருகிறது. அந்தப் பெரும்படைப்புதான் அமரர் கல்கியின், 'பொன்னியின் செல்வன்.' பாத்திரங்களோடு வாசகரையும் பாத்திரமாக உலவ விடும் ஒரு மாய வித்தையை இன்றளவும் இந்த நாவல் செய்து கொண்டிருக்கிறது.

வந்தியத்தேவன் குதிரையில் பயணம் செய்தால் நாமும் பயணம் செய்வோம். ஆதித்த கரிகாலன் வாள் சுழற்றினால் நாமும் வாள் சுழற்றுவோம், பூங்குழலி படகு வலித்தால் நாமும் படகு வலிப்போம். பெரிய பழுவேட்டரையர் போராடி வெள்ளத்தில் இருந்து மீள நினைக்கும்போது நாமும் நீரை எதிர்த்துப் போராடுவோம்.  இதை மெய்நிகர் அனுபவம் (VIRTUAL REALITY) என்று இன்றைய அறிவியல் உலகம் சொல்கிறது. அதை ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னமே செய்துவிட்டார் அமரர் கல்கி அவர்கள்.

பொன்னியின் செல்வனை முதன்முதலில் படித்தபோது எனக்கு பதினேழு அல்லது பதினெட்டு வயதிருக்கும். அப்போதுதான் நான் தமிழ்வெளியில் பயணம் செய்யத் தொடங்கியிருந்தேன். ஒவ்வொரு கணமும் எனக்குள் பசியும் தாகமும் பெருகிக் கொண்டே செல்லும். நிறைய படைக்க வேண்டும் என… நிறைய படிக்க வேண்டும் என. அச்சமயத்தில் என்னை அருகணைத்து விருந்து படைத்த அரும்பெரும் அட்சய பாத்திரம் இந்த நாவல்.

"எழுத்துகளுக்குக் காட்சியாகும் ஆற்றல் உண்டு. ஒரு தேர்ந்த படைப்பாளன் தன் கற்பனைத்திறம் என்னும் வற்றா எரிபொருளை அதற்குள் ஊற்றிக்கொண்டே இருந்தால்" என்ற பாடத்தை நான் இந்த நாவலில் இருந்து கற்றுக்கொண்டேன். அலாவுதீன் கையில் இருக்கும் அற்புத விளக்கிற்கு இணையான ஆற்றல் இந்தப் புதினப் புத்தகத்திற்கு இருந்தது. கையால் திறந்தால் போதும். பக்கம் தோறும் நம்மைப் பக்கம் அழைத்து, படிக்கப் படிக்க நம்மை மயங்க வைத்து ஒரு மாயாலோகத்திற்குள் கொண்டு சென்று விட்டுவிடும்.

வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன், சுந்தர ராஜசோழர், அனிருத்த பிரம்மராயர், குந்தவை, வானதி, பூங்குழலி, நந்தினி, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ரவிதாஸன், மந்தாகினி என ஒவ்வொரு கதாபாத்திரமும் தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாக இருந்தன. அவரவர் இடத்திலிருந்து யோசிக்கும்போது அவர்களின் செயல்களெல்லாம் நியாயமாகவே தோன்றும். இதனால் எல்லாப் பாத்திரங்களையும் மனம் விரும்பியது.

ழகியல் உணர்ச்சி ததும்பத் ததும்ப இளைப்பாறாத நடைகொண்டு எழுதப்பட்ட ஒரு நாவலாக இருந்தாலும், பொன்னியின் செல்வனின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று அதன் கதை நகரும் பாங்கு. தொய்வடையாத காட்சியமைப்பு, தூண்டிலை வீசும் அத்தியாயங்களின் கடைசி வரிகள், விரைவாகவும் விறுவிறுப்பாகவும் அரங்கேறும் சம்பவங்கள் என வாசகரைப் பெரும் அக்கறையோடு நடத்தியிருப்பார் அமரர் கல்கி.

உடலைத் தொடரும் நிழல் போல, கல்கியின் எண்ண ஓவியங்களுக்கு நிகராக பாத்திரங்களின் வண்ண ஓவியங்களும் நம்மைப் பின் தொடர்ந்து வரும். அந்த உண்மையான பாத்திரங்களையே தொடுவதாக நினைத்துக்கொண்டு அந்தச் சித்திரங்களை நான் தொட்டுப் பார்ப்பேன்.

ஐந்து பாகங்களைப் படித்து முடித்த பிறகும் மீண்டும் முதலிலிருந்து படிக்கும் ஆசையையும் ஆற்றலையும் இந்தப் புதினம் நமக்களிக்கும். இந்த ஒரு குணம் இதை ஒரு, 'வரலாற்று' சிறப்பு மிக்க படைப்பாக மாற்றுகிறது. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களைத் திரும்பித் திரும்பிப் படித்தாலும் விரும்பி விரும்பிப் படிக்கிறோம் இல்லையா? அதேபோலத்தான் பொன்னியின் செல்வனும். அடுத்தடுத்து கதையில் என்ன நடக்கும் என்று தெரிந்தாலும், என்னென்ன காட்சிகள் முடிச்சவிழும் என்று தெரிந்தாலும் முதன்முறை படிப்பது போல் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருப்போம். இந்தப் பேரின்பத்தைச் சொற்களால் சொல்ல முடியாது.  கடலை எத்தனை முறை பார்த்தாலும் அழகுதானே? அதே போலத்தான் இதுவும். காரணம் ஏதுமில்லாத ஒரு வகை பிணைக்கும் ஈர்ப்பு.

டலைப் பார்க்கும் மகிழ்ச்சி, கடலை விடவும் பெரியது. கடலுக்குக் கரையுண்டு. ஆனால், கடலால் ஏற்படும் தாக்கத்திற்குக் கரையில்லை. பொன்னியின் செல்வனும் ஒரு கடல்தான். அதன் ஒவ்வொரு சொல்லும் விழுந்து எழுந்து ஓடோடி வந்து நம்முடன் மோதும் சிற்றலைகள். இந்த ஆக்கம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக மிக ஆழமானது.

நம்மில் படைப்பாற்றலை விதைக்கும் படைப்புதான் ஒரு சிறந்த படைப்பு. அந்த விதத்தில் பொன்னியின் செல்வன், எனக்குள் பெரும் ஆற்றலை ஆசியாக வழங்கியிருக்கிறது. அந்த நன்றியை நான் ஒருபோதும் மறவாதிருப்பேன். கல்கி குழுமம் இந்த மாபெரும் படைப்பையும் அமரர் கல்கியையும் கொண்டாடும் விதமாக சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற எனக்கும் வாய்ப்பு தந்தமைக்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்றி பாராட்டுதலில் தமிழக மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும். குறிப்பாக, இந்த நூலைத் தற்போதைய தலைமுறை பெற்றோர்கள் வாசித்துக் காட்டி அடுத்த தலைமுறைக்குப் பரிசாக அளிக்க வேண்டும். இது ஒரு தொடரோட்டம் போல் நிகழ வேண்டும். இதுவே அமரர் கல்கி அவர்களுக்கு நாமளிக்கும் சிறந்த காணிக்கை.

ஏன் இந்தப் படைப்பு அத்துணை முக்கியம்? இந்த நூல், வாசிப்புலகத்தின் வரவேற்பறையில் இருக்கும் முதற்பெரும் சொற்சித்திரம். ஆயிரம் ஆயிரம் கற்பனைச் சிறகுகளை அகத்தில் பொருத்தும் ஓர் அதிசயம். நம்முள் இருக்கும் படைப்பாளனைக் கண்டறிந்து நமக்கு அறிமுகப்படுத்தும் ஓர் ஆசான். கருத்தால் இயக்கப்படும் ஒரு கையடக்கக் காலப்பொறி. மருந்து, விருந்து, ஆறுதல், தமிழறிவு, படைப்பாற்றல், வரலாற்று நிகழ்வுகள் என என்ன கேட்டாலும் அள்ளி அள்ளி வழங்கும் கற்பக மரம்.

எப்போது காட்சிப்படுத்தினாலும் எத்தனை முறை திரையிட்டாலும் மனத்திரையில் வாழ்நாள் முழுதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு, 'தமிழ்' திரைப்படம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com