பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 15

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 15

ஒரு அரிசோனன்

பழையாறை அரண்மனை

பிரமாதீச, ஆனி 18 – ஜூலை 3, 1013

யாழ் இசையை முடித்த பாணர்கள், இராஜராஜரை வணங்கிவிட்டு வெளியேறுகிறார்கள். இராஜேந்திரனும், குந்தவைப் பிராட்டியாரும் அவருக்கருகில் ஆசனங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அருகே இராஜாதிராஜனும், சிவாச்சாரியனும் நிற்கிறார்கள். இராஜராஜர் தனக்குப் பிடித்த மஞ்சத்தில் சரிந்தபடி கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறார். பணிப்பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

நிலாமுற்றத்திலிருந்து வெப்பமான காற்று வீசுவதால் விளாமிச்ச வேர் தட்டிகள் தொங்கவிடப்பட்டு அதில் நீரை ஊற்றி வைத்திருக்கிறார்கள். இனிய மணமும், சற்றுக் குளிர்ந்த காற்றும் அதிலிருந்து வருகிறது. இராஜராஜர் கையசைத்தவுடன் சாமரம் வீசும் பெண்கள் அங்கிருந்து அகலுகிறார்கள்.

அவரது உடல்நிலை பலவீனமாக இருப்பதால் இராஜேந்திரன் அவர் நலம் விசாரித்துச் செல்ல வந்திருக்கிறான். பொன்னமராவதிப் போருக்குப் பிறகு அவரது உடல் நலம் பழைய அளவுக்குத் திரும்பவில்லை. இருந்தபொழுதும் மனத்தளவில் புலியாகத்தான் இருந்துவருகிறார். கடந்த ஆறு மாதங்களில் மூன்று தடவை சுரம் அவரை வாட்டியெடுத்து விட்டிருக்கிறது. அதனால் அவர் சற்று ஆடித்தான் போயிருக்கிறார். உடம்பும் மெலிந்து காணப்படுகிறது.

தந்தையை இந்த நிலையில் பார்த்ததும் இராஜேந்திரனுக்கு நெஞ்சில் ஏதோ அடைக்கிறது. இருப்பினும் உடல்நிலை குறித்து வருத்தம் தெரிவிப்பதை அவர் சற்றும் விரும்ப மாட்டார் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்ததால், அரசு அலுவல் நிமித்தமாக வந்திருப்பதாகக் காட்டிக்கொள்கிறான்.

அவனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவந்த இராஜராஜர், தனது பேரன் இராஜாதிராஜனையும், சிவாச்சாரியையும் அமரும்படி சைகை செய்கிறார். நீலமலையில் இருக்கும் உதகையில் அரசாண்டுவரும் (இரண்டாம்) பாஸ்கர ரவிவர்மன் கடந்த ஆறு திங்களாகத் திறை அனுப்பவில்லை, ஒரு சிறிய படையை அனுப்பலாம் என்று இராஜேந்திரன் தெரிவித்ததற்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார் இராஜராஜர்.

"மதுராந்தகா, ஓலைநாயகத்தையும், நரேந்திரனையும் நீலமலை நாட்டுக்கு அனுப்புவது சிறந்தது என்பது எனது கருத்து. திறை செலுத்த மறுப்பவர்களுக்கு ஞாபகப்படுத்துவது மட்டுமல்ல, தமிழ்த்திருப்பணியையும் சேர நாட்டில் நிலைநிறுத்த சிவாச்சாரியார்கூடச் செல்வது நரேந்திரனுக்கும் தமிழ்ப்பணியில் ஆர்வத்தை வளர்க்கும்."

 "தந்தையே, தமிழ்த்திருப்பணி என்று சொன்னீர்களே, அது என்ன?" என்று வினவுகிறான் இராஜேந்திரன்.

"மதுராந்தகா, தற்போழுது சேரமான்கள் அரசுப்பட்டயங்களை வடமொழியில் பொறித்து வருகிறார்களாம். இனிமேல் தமிழைத்தான் அரசுமொழியாகக் கையாளவேண்டும்; அரசவையில் தமிழில்தான் அலுவல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சேரமானுக்கு ஓலைநாயகம் மூலம் நீ ஆணை அனுப்பவேண்டும் என்பது எனது அவா!" என்று பதிலளிக்கிறார் இராஜராஜர்.

இப்பொழுது அவரது வாயிலிருந்து ஆணைகள் வருவது இல்லை. இராஜேந்திரனுக்கு முடிசூட்டியதற்குப் பிறகு கருத்துகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறார். அது இராஜேந்திரனுக்கும் நன்றாகவே தெரிகிறது. தன்னைச் சோழநாட்டின் மன்னனாகத்தான் தந்தையார் நடத்துகிறார் என்பது அவனுக்குப் பெருமையாக இருக்கிறது. எனவே, அவர் எதைச் சொன்னாலும் மறுத்துப்பேசாமல் நிறைவேற்றியே வருகிறான்.

அவருடைய உடல்நலத்தைக் கருதி, மிக முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே அவருடைய கருத்துகளைக் கேட்டும் வருகிறான்.

"ஓலைநாயகத்தை அனுப்புவது சாலச்சிறந்ததுதான் தந்தையாரே! நரேந்திரனை எதற்கு அனுப்ப வேண்டும்? சாளுக்கிய இளவரசனை ஓலைநாயகத்திற்குத் துணையாக அனுப்புவதை இளஞ்சேரமான் எப்படி எடுத்துக்கொள்வான்? இராஜாதிராஜனை அனுப்புவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" அவரது அடிமனதில் இருப்பதை அறிந்துகொள்ள வேண்டி, தூண்டித் துருவிக் கேட்கிறான் இராஜேந்திரன்.

அவன் மனதில் ஓடுவதைப் புரிந்துகொண்ட இராஜராஜரின் முகத்தில் புன்னகை மலர்கிறது. "இராஜாதிராஜன் அங்கு சென்றால் சோழப்படையுடன் இளஞ்சேரமானைத் தண்டிக்கத்தான் செல்ல வேண்டும். தூதனாகவோ, திறை ஏன் செலுத்தவில்லை என்ற கணக்கன் நிலையிலோ அல்ல என்பதைத் தெரிந்துகொண்டே, மற்றவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக, என் வாய்மூலம் அதை வரவழைக்கிறாய் போலும்!" என்கிறார்.

இராஜேந்திரனுக்கு நன்றி மிகுகிறது. தனக்குத் தெரியாத ஒன்றை தனக்குத் தெரிந்ததாக அறிவிப்பதன் மூலம் தனது நிலையை உயர்த்துவதொடு மட்டுமல்லாமல், தனது கேள்விக்கும் கச்சிதமாகப் பதில் சொல்லிவிட்டாரே! அவரைப் பார்த்து மெல்லத் தலையசைக்கிறான். அவரும் பதிலுக்குத் தலையசைக்கிறார்.

"சாளுக்கிய இளவரசன் நமது ஓலைநாயகத்துடன் செல்வது மூலம் இளஞ்சேரமான் தமிழைச் சாளுக்கியர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்வான். அது நமது ஆணைக்கு வலுக்கொடுக்கும். அது இரட்டிப்புப் பலம் அல்லவா!" என்று நரேந்திரனை சிவாச்சாரியுடன் அனுப்புதற்கான விளக்கத்தைத் தருகிறார்.

"மேலும், கீழைச்சாளுக்கிய நாடு சோழநாட்டிற்குக் கட்டுப்பட்டது என்பதை நரேந்திரனும் அறிந்துகொள்ள அது ஒரு வாய்ப்பாகும். அவன் உடன் இருக்கும் பொழுதினை அரச தந்திரமும், படை நடத்தும் திறனைப் பற்றியும் சிவாச்சாரியார் அவனுக்குக் கற்றுத்தரப் பயன்படுத்தலாம் அல்லவா! நமது பேரரசுக்கு வடகிழக்குக் காவலனாக நரேந்திரன் விளங்க வேண்டுமே! அதற்கான கல்வியை நம்மிடமிருந்து அவன் கற்றுக்கொள்வது சிறந்தது என்பது நீயும் அறிந்ததுதானே!" தந்தையாரின் விளக்கம் இராஜேந்திரனை அசர வைக்கிறது.

சதுரங்கக் காய்களைப் போலல்லவா அவர் ஆட்களை நகர்த்துகிறார்! அவர்கள் இருவரையும் அனுப்புவதற்குப் பின்னால் இத்தனை விஷயங்களைக் கோர்த்துள்ளாரே! தானும் இனி எந்த விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படவேண்டும் என்று மனதிற்குள் உறுதி கொள்கிறேன்.

"மதுராந்தகா! சோழ சாம்ராஜ்ஜியம் உன் தோள் வலிமையைத்தான் நம்பி இருக்கிறது என்பது அருள்மொழிக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, அவனுக்குச் சிறிது ஓய்வு கொடுக்கிறாயா? அவன் சற்று உறங்கட்டும்! நேற்று இரவுகூட அவன் சரியாக உறங்கவில்லை." அரசு விஷயங்களைச் சொல்லித் தம்பியைத் தொந்திரவு செய்ய வேண்டம் என்பதை மறைமுகமாக அறிவிக்கிறாள் குந்தவைப் பிராட்டியார்.

"அக்கையாரே! நானென்ன சிறு குழந்தையா?  தூங்க வேண்டும், தொந்திரவு செய்யாதே என்று சொல்வதற்கு?" என்று இராஜராஜர் தமக்கையைச் செல்லமாகக் கடிந்துகொள்கிறார். 

"தந்தையாரே! நான் தஞ்சை புறப்படுகிறேன். ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டுமா?" என்று கேட்கிறான் இராஜேந்திரன்.

"இல்லையப்பா. சிவாச்சாரியாரை நான் நாளைக்கு தஞ்சைக்கு அனுப்பி வைக்கிறேன்" என்றவர், "சிவாச்சாரியாரே! நீர் நங்கையிடம் நீலமலைக்குச் செல்வதாகத் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஒரு சாமம் கழித்து இங்கு வாரும். உம்மிடம் சில விஷயங்களைப் பேசவேண்டி உள்ளது" என்று கண்களை மூடிக்கொள்கிறார்.

குந்தவைப் பிராட்டியார், "அனைவரும் இங்கிருந்துசெல்லலாம்" என்பதுபோலக் கண்களைக் காட்டுகிறாள்.

இராஜேந்திரன், இராஜாதிராஜன், சிவாச்சாரி ஆகிய மூவரும் அருள்மொழிநங்கை வசிக்கும் மாளிகைக்குச் செல்கிறார்கள்.

அவர்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் அருள்மொழிநங்கை.அவளுடன் எட்டு வயதான கடைசித் தம்பி வீரனும்56 இருக்கிறான்.

இராஜேந்திரனைக் கண்டதும், "தந்தையே!" என்று ஓடிவந்து கட்டிக்கொள்கிறான். "என் வீரமகனே!" என்று வீரனை உயரத் தூக்கிப்போட்டுப் பிடிக்கிறான் இராஜேந்திரன்.

சிறிது நேரம் அருள்மொழிநங்கையிடம் உரையாடிய இராஜேந்திரன், "நங்கை! இப்பொழுதே நான் தஞ்சை கிளம்ப வேண்டும்! நாளை உனது கணவர் தஞ்சைக்கு வந்துவிட்டு, நீலமலைக்கு நரேந்திரனுடன் செல்லப்போகிறார். அவருடன் செல்லுவதற்கு காப்புப்படையினரை நான் ஏற்பாடு செய்ய வேண்டும். தவிரவும், நகரத்தார் வணிகர்கள் கடாரம், ஸ்ரீவிஜயம், சீன வணிகம் பற்றி என்னைப் பேட்டி காண வருகிறார்கள். ஆகவே, உணவு உண்டு செல்ல எனக்கு நேரமில்லை. அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம். என்னுடன் வீரனையும் அழைத்துச் செல்கிறேன்" என்று தன்னை உணவு உண்ண அழைக்க வேண்டாம் என்பதை அருள்மொழிநங்கைக்கு மறைமுகமாகச் சொல்கிறான்.

"அரசு அலுவல்கள் அழைக்கும்பொழுது நான் ஏன் தந்தையே, உங்களைத் தடைசொல்லப் போகிறேன்!" என்ற அருள்மொழிநங்கை, "இராஜனும் உங்களுடன் வரப் போகிறானா?" என்று கேட்கிறாள்.

"இல்லை அக்கா, நான் நாளை சிவாச்சாரியாருடன் தஞ்சைக்குச் செல்கிறேன். நான் தந்தையை வழியனுப்பிவிட்டு இன்றிரவை உன் மாளிகையிலேயே கழிக்க முடிவு செய்திருக்கிறேன்" என்று தன் திட்டத்தை அறிவிக்கிறான் இராஜாதிராஜன்.

தந்தையும், தம்பியும் ஏதோ அரச அலுவல்களைப் பற்றி உரையாடத்தான் சிறிது தூரம் உடன்செல்கிறார்கள் என்று அறிந்துகொண்ட அருள்மொழிநங்கை, அவனையும் தடுக்கவில்லை. குளிர்ந்த மோரை அருந்திவிட்டு இராஜேந்திரன், இராஜாதிராஜனுடனும் வீரனுடனும் விடைபெற்றுக் கொள்கிறான்.

சிவாச்சாரியனை உணவுண்ண அழைக்கிறாள் அருள்மொழிநங்கை. அவளுடன் அமர்ந்து உணவுகொள்ள ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.

"பாட்டனார் உடல் நலம் எப்படி இருக்கிறது?" என்று விசாரிக்கிறாள்.

"அதை நினைத்தால்தான் எனக்கும் கவலையாக இருக்கிறது நங்கை!" என்ற சிவாச்சாரி, "அவர் நாளுக்கு நாள் தளர்ச்சியடைந்து வருகிறார். அது பாண்டியனுடன் நடத்திய வாட்போரின் விளைவு என்றுகூடச் சொல்ல மாட்டேன். அவர் மனதை ஏதோ ஒன்று அரித்து வருகிறது. அவர் நன்கு நலம்பெற்று எழுந்து வரவேண்டும் என்று நான் தினமும் தில்லை நடராஜரை வேண்டிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று தன் மனக் கவலையைத் தெரிவிக்கிறான்.

"தாங்கள் நீலமலைக்கு நரேந்திரனுடன் செல்லவிருப்பதாகத் தந்தையார் கூறினாரே! அந்த மலையின் மீது ஏறிச்சென்றால் குளிராக இருக்கும் என்று சொல்கிறார்களே? நீலமலை எங்கு இருக்கிறது? அது மிகவும் உயரமான மலையா? நீங்கள் முன்பு அங்கு சென்றதுண்டா?" என்று வினவுகிறாள்.

————————-

[56 இவன்தான் வீரராஜேந்திரன் என்ற பட்டப்பெயருடன் பிற்காலத்தில் இராஜாதிராஜனுக்கும், இராஜேந்திரதேவனுக்கும் பிறகு சோழ அரியணை ஏறினான்.]

"நீலமலை கொங்குமண்டலத்திற்கு வடக்கே இருக்கிறது. தொலைவிலிருந்து பார்க்கும் பொழுது கருநீலமாகத் தெரிவதால் அதை நீலமலை என்று அழைக்கிறார்கள். தென்னாட்டிலேயே அதுதான் மிகவும் உயரமான மலை. நானும் அதைப் பார்த்திருக்கிறேன். அதன்மீது ஏறியதில்லை. மலையின் மேல் ஊர்கள் உள்ளதாம். உதகை என்னும் பேரூரில் இளஞ்சேரன் ஆட்சி செய்து வருகிறான். அவன் திறை செலுத்தாமல் நாள் கடத்தி வருகிறான். அதை நினைவுபடுத்தவும், வடமொழியை விடுத்து, தமிழில் அரசுப் பட்டயங்களை எழுதவும், பேச்சுமொழியாகக் கையாளும்படியுமான கோப்பரகேசரியாரின் ஆணையைத் தெரிவிக்கவும் நான் செல்கிறேன்" என்று விளக்குகிறான்.

"அதற்கு நரேந்திரன் எதற்கு உங்களுடன்…" என்று இழுத்த அருள்மொழிநங்கைக்கு, இராஜராஜரின் விளக்கத்தையே கொடுக்கிறான் சிவாச்சாரி.

"சில திங்களுக்கு முன்னர் நரேந்திரனைப் பற்றிக் கவலை தெரிவித்தீர்களே, இப்பொழுது அவன் உடன் வருவதால் அவனை மாற்ற உங்களுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது" என்று மகிழ்கிறாள்.

"தற்பொழுதெல்லாம் ஒரு எதிரியைப் பார்ப்பதைப்போலத்தான் என்னைப் பார்க்கிறான். மேலும், என்னுடன் பேச நேரிட்டால், ஓரிரு வார்த்தைகளுடன் முடித்துக்கொள்கிறான். என் கண்களை நோக்கும்போது அவனது விழிகளில் ஒருவித அச்சம் தாண்டவமாடுவதையும் கவனித்து வருகிறேன். ஏதோ, நீ சொல்வதுபடி அவன் மனமாற்றம் அடைந்தால் அதுவும் எனக்கு மகிழ்ச்சியே!" அருள்மொழிநங்கை அவனது பதிலில் உற்சாகம் இல்லாமல் இருப்பதைக் கவனிக்கிறாள்.

"ஐயனே! வேறு ஏதோ ஒன்று தங்கள் மனதை உறுத்துகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அது நரேந்திரனைப்பற்றி அல்ல என்றும் ஊகிக்க இயலுகிறது. தங்களது மனப்பளுவை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்களேன்! உங்கள் மனச்சிக்கலைத் தீர்க்க என்னால் இயலாவிட்டாலும், பளுவைச் சிறிது இறக்கி வைப்பது உங்களுக்கு நிம்மதியைத் தருமே?" என்று கேட்கிறாள்.

"நங்கை, குறிப்பறிதல் உன்னிடம் நிறையவே இருப்பதைக் காண்கிறேன். என் மனதில் ஓடும் எண்ணங்களை அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், என் உள்ளப்பளுவை லேசாக்கிக் கொள்ளும்படி குறிப்பறிந்து கூறும் உன்னை எனக்கு வாழ்க்கைத்துணையாக அளித்த கோப்பரகேசரியாருக்கும், சக்கரவர்த்தி அவர்களுக்கும் நான் மிகக் கடமைப்பட்டுள்ளேன்.

"ஆம், என் மனதில் மிகப் பெரிய பளு ஒன்று இருக்கிறது. அது சக்கரவர்த்தி அவர்களைப் பற்றியதுதான்!" என்று நன்றி கலந்த குரலில் பேசினாலும், குரலில் இருக்கும் லேசான நடுக்கம், அவனது கவலையை அருள்மொழிநங்கைக்கு உணர்த்துகிறது.

"சக்கரவர்த்தி அவர்களுக்கு ஒருவிதமான அச்சம் இருந்து வருவதை நான் உணர்கிறேன். தனது தமிழ்த்திருப்பணி எந்த அளவுக்கு நிறைவேறுமோ, தான் ஊன்றிவைத்த அந்தக் கன்று தன் காலத்திலேயே நன்றாக வேர்பிடித்துக் கொள்ளுமா என்று அவர் உள்ளூர ஐயுறுவது போல சிலசமயம் அவரது பேச்சிலிருந்து என்னால் மறைமுகமாக ஊகிக்க இயலுகிறது. அதோடு மட்டுமல்லாது, எதையோ பறிகொடுத்தவராகத் தென்படுகிறார். அதுதான் என் உள்ளத்தைக் கசக்கிப் பிழிகிறது!" சிவாச்சாரியின் குரலில் இருந்த கரகரப்பு அருள்மொழிநங்கைக்கும் ஒருவித அச்சத்தைத் தருகிறது.

"தாங்கள் என்ன சொல்கிறீர்கள் ஐயனே? பாட்டனாரின் திருப்பணியைப் பற்றி இரண்டாம் முறையாகக் கலக்கமுற்றுப் பேசுகிறீர்களே! எனக்குத் தெரியாத உண்மை ஏதாவது இருக்கிறதா? சிலசமயம், வெளியிடப்படாத உண்மைகள் மிகுந்த மனப்பளுவைத் தரும். அரச ரகசியங்கள் என்றால் என்னிடம் சொல்ல வேண்டாம். மற்றபடி, பாட்டனாரின் உடல், உளநலத்தில் எனக்கு மிகுந்த அக்கரை உண்டு ஐயனே! அவர் மடியில் அமர்ந்து எத்தனை வீரக்கதைகளைக் கேட்டிருக்கிறேன்! எதிரிகளுக்குப் புலியாக விளங்கிய அவர், அருள்மொழி என்ற பெயருக்கு ஏற்ப என்னிடம் கனிவான மொழியைத்தான் பேசக் கேட்டிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு அனைவரும் அறிந்ததே. அதனால்தான் தங்களை மணாளனாக மனதில் வரித்ததை அவரிடம்தான் முதலில் வெளியிட்டேன். அவர் அதற்குத் தடையேதும் சொல்லாமல் தந்தையிடமும், அன்னையிடமும் பேசி, என் விருப்பத்திற்கு அவர்களைச் சம்மதிக்க வைத்தார். அப்படிப்பட்ட அவர் துவங்கிய திருப்பணியை நிறைவேற்றத் தாங்கள் என்றும் உழைக்க வேண்டும். தகுந்த ஒருவரிடம் திருப்பணியை விட்டுச்செல்கிறோம் என்று அவர் மனநிம்மதி அடையவேண்டும். இதற்குமேல் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை ஐயனே!" அருள்மொழிநங்கையின் குரலில் உருக்கம் இருக்கிறது.

"வெளியே சொல்ல முடியாத உண்மைகள் சில இருக்கின்றன நங்கை! அவற்றை சக்கரவர்த்தி அவர்களே கேட்டால்தான் என்னால் சொல்ல இயலும். அப்படி உண்மைகள் உள்ளன என்பது அவருக்கும்கூடத் தெரியாது. நான் கொடுத்த உறுதிமொழி என் நாவைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. சக்கரவர்த்தி அவர்கள் அதைப்பற்றி என்னிடம் கேட்கமாட்டாரா, அதை அவரிடம் கொட்டிவிட மாட்டேனா என்று ஒவ்வொரு நாளும் தவிக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அந்த உண்மைகளை என் மனதில் வேலியிட்டு வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். அது வெளிவருமா அல்லது என்னுடன் அவை எரிந்துபோமா என்றுதான் ஒவ்வொரு நாளும் உருகிக்கொண்டிருக்கிறேன்." அவனது தவிப்பு அருள்மொழிநங்கைக்கு நன்றாகவே புரிகிறது.

"ஐயனே! அந்த உண்மைகள் வெளிவரட்டும், பாட்டனாருக்கும், தங்களுக்கும் நிம்மதி கிட்டட்டும் என்று ஆலம் உண்ட பெருவுடையாரை வேண்டிக்கொள்கிறேன். என்னிடம் இவ்வளவு சொன்னதில் தங்களுக்கு ஓரளவு மனப்பளு குறைந்தால் அது என் முயற்சிக்கான வெற்றிதான்" என்று ஆறுதலளிக்கிறாள் அருள்மொழிநங்கை.

அன்றே அந்த உண்மைகள் இராஜராஜர் முன்பு வைக்கப்படும் என்று அப்பொழுது அவர்களால் அறிய இயலாது போகிறது.

ராஜராஜர் மஞ்சத்தில் சாய்ந்திருக்கிறார். மெதுவாகக் கண்களைத் திறந்தவர், சிவாச்சாரி நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைகிறார். பொதுவாகவே மெல்லிய ஒலி கேட்டால்கூட விழிப்படைந்துவிடும் தான், சிவாச்சாரி வந்ததுகூட அறியாமல் கண்ணயர்ந்திருக்கிறோமே, இதுதான் முதுமை வந்துவிட்டது என்பதன் அறிகுறியா என்று மனதில் நினைத்துக்கொள்கிறார்.

"சிவாச்சாரியாரே, நீர் இங்கு வந்து எவ்வளவு போதாகிறது?" கேள்வி பிறக்கிறது.

"கிட்டத்தட்ட அரை நாழிகை (பன்னிரண்டு நிமிடங்கள்) ஆகியிருக்கலாம் சக்கரவர்த்தி அவர்களே!" எனப் பணிவாகப் பதிலளிக்கிறான் சிவாச்சாரி.

"என்னை எழுப்பாமல் அவ்வளவு நேரமாக நின்றுகொண்டா இருந்தீர்?"

"அவசியமாக இருந்தால் ஒழிய மற்றபடித் தங்களை எழுப்புவது தவறானதல்லவா சக்கரவர்த்தி அவர்களே!"

"சிவாச்சாரியாரே, நீர் என் பேத்தியின் கணவர். அதனால் நானும் உமக்குப் பாட்டனார் உறவாகியிருக்கிறேன். இன்னமும் அரச மரியாதை கொடுக்கிறீரே!" லேசான நகைப்புடன் விசாரிக்கிறார் இராஜராஜர்.

சிவாச்சாரி அமைதிகாக்கிறான். 

"அமரும், உம்மிடம் மனம் விட்டுப் பேசவேண்டியதிருக்கிறது. அதனால்தான் அக்கையார் கோவிலுக்குச் செல்லும் சமயம் உம்மை வரச்சொன்னேன். நீர் அதில் அரைநாழிகையை மரபுச் சீர்முறையைக் காட்டி வீணடித்துவிட்டீர்! அது போகட்டும். அருகே அமர்ந்துகொள்ளும்" என்ற தன் மஞ்சத்திற்கு அருகிலுள்ள ஆசனத்தைச் சுட்டிக் காட்டுகிறார் இராஜராஜர்.

சிவாச்சாரி தயக்கத்துடன் அமர்ந்துகொள்கிறான். 

தொண்டையைச் சேருமிச் சரிசெய்துகொண்டு மெதுவாகத் துவங்குகிறார் இராஜராஜர். "சிவாச்சாரியாரே, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக விடை காணாது ஒரு நிகழ்ச்சி என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. உமக்கு அதற்கு விடை தெரிந்திருக்கலாம் என்று என் உள்மனம் இப்பொழுது அடிக்கடி கூறுகிறது" என்ற பீடிகையுடன் துவங்குகிறார்.

"உமக்கு நினைவிருக்கும் என்றே நினைக்கிறேன். தமிழ்த்திருப்பணியைப் பற்றி உற்சாகமாக உரையாடிவந்த கருவூரார், சற்றும் எதிர்பார்க்காத நிலையில், திடுமென்று திருக்கயிலைக்குச் செல்வதாகப் புறப்பட்டுவிட்டார். சாதாரணமாக இருந்தால், அப்படிச் செல்வதற்குமுன் என்னிடம் அதுபற்றி முன்கூட்டியே பேசி, செல்லும் நாளையும் உடன்பாடு செய்திருந்திருப்பார். அப்படிச் செய்யாமல் திடுமென்று அவர் புறப்பட்டுச் சென்றது ஏதோ ஒரு வலுவான காரணத்தால்தான் என்று இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது.

"தமிழ்த்திருப்பணிக்குத் திட்டம் தீட்டித் தந்த கருவூரார், அதற்கு எந்தவிதமான இடையூறுகள் வரக்கூடும் என்று சிந்திக்காமல் இருந்திருக்க மாட்டார். எனவே, அந்த இடையூறுகளை எதிர்நோக்கி, அவை வரும்நேரத்தில், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவுரையும் தந்திருப்பார். கற்களே இல்லாத தஞ்சையில் பெருவுடையாருக்கு கற்றளி கட்ட, கற்களை எப்படிக் கொணர்வது என்பதோடு மட்டுமல்லாமல், பெருங்கல்லை கோபுர உச்சிக்குமேலே கொண்டு செல்லவும் வழிவகுத்துக் கொடுத்தவர் அவர். அப்படியிருக்கையில் ஒரு மாபெரும் திருப்பணிக்குத் திட்டத்தைத் தீட்டிக்கொடுத்தவுடன், கையை உதறிவிட்டு எழுந்து சென்றிருக்க மாட்டார்.

"அப்படிச் சென்றதற்கு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கிறது. அச்சமயம் அவருக்கு வலக்கையாக விளங்கிய உமக்கு அவரது திடீர் முடிவின் காரணம் தெரியாமல் இருந்திருக்காது. அதேமாதிரி, திருப்பணிக்கு என்னென்ன இடையூறுகள் வரக்கூடும் என்பது பற்றியும் உம்மிடம் உரையாடாமல் இருந்திருக்கமாட்டார். எனவே, உமக்கு அந்த உண்மைகள் தெரிந்திருந்தால், அதை எமக்குத் தெரிவிக்குமாறு சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக அல்ல, திருப்பணி நிறைவேறவேண்டுமே என்று துடிக்கும் நான், உமது மனைவியின் பாட்டனாக உம்மைக் கேட்கிறேன். முன்னறிவிப்பின்றி என் ஆசான் என்னை விட்டு நீங்கியதன் வலியைச் சுமந்துகொண்டிருக்கும் நான், அதன் காரணம் தெரியாது இந்த உலகைவிட்டு நீங்க விரும்பவில்லை. அது எதுவாக இருந்தாலும், அதை நீர் எமக்குச் சொல்லவேண்டுமாறு உம்மை மன்றாடுகிறேன்!" தழுதழுத்த இராஜராஜரின் குரலைக் கேட்டுப் பதறிவிடுகிறான் சிவாச்சாரி.

பழையாறை மாளிகையில் அருள்மொழிநங்கையிடம் எந்த உண்மையை இராஜராஜர் கேட்பாரா என்று காத்திருப்பதாகச் சொன்னானோ, அந்த உண்மையை இரண்டு நாழிகைப் பொழுதுக்குள் அவரே கேட்பது சிவாச்சாரிக்கு நிம்மதியைத் தருகிறது. இருப்பினும் அந்தக் கசப்பான உண்மையை எப்படிச் சொல்வது?

"தயங்காதீர், சிவாச்சாரியாரே! நான் அனுமானித்தது சரியென்று உமது முகமே தெளிவாகப் பறைசாற்றுகிறது. உண்மைகளை உம் மனதிலிருந்து வெளியேற்றுவது உமது மனதையும் லேசாக்கும் அல்லவா! அவற்றை உடனே சொல்லும்!"

இராஜராஜரின் குரலில் சிறிது அதிகாரத் தொனியும் கலந்திருப்பதை சிவாச்சாரியனால் உணர முடிகிறது. இராஜராஜரை நோக்குகிறான். அவன் கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது. 

"உமது கண்களைப் பார்த்தால் நீர் சொல்லப்போவது என் மனதிற்குத் துன்பம் விளைவிக்கும் என்று நீர் கருதுகிறீர் போல இருக்கிறது. எதையும் மறைக்காமல் சொல்லும். சில சமயம், உடலைத் துன்புறுத்தும் நோவைக் கசப்பான மருந்தை உண்டு நீக்குவதே சிறந்ததாகும் என்று நானும் அறிவேன்" என இராஜராஜர் அவனை வற்புறுத்துகிறார்.

"எல்லாவற்றையும் சொல்கிறேன் சக்கரவர்த்தி அவர்களே" என்று ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.

"நீங்களாகக் கேட்டால் ஒழிய நானாக எதையும் சொல்லக்கூடாது என்று என்னைப் பணித்து விட்டார் குருதேவர்.  அது மட்டுமல்ல, தாங்கள் கேட்காவிட்டால், குருதேவர் சொன்னது என்னுடன் அழிந்துவிட வேண்டும் என்றும் என்னை உறுதியிட்டுச் சொல்லச்சொன்னார். எனவே, தாங்கள் வினவியது என்னை அந்த உறுதியிலிருந்து விடுவிக்கிறது. இனி எதையும் ஒளிக்காமல் உள்ளபடியே உரைக்கின்றேன்.

"குருதேவருடன் திருப்பணியைப் பற்றித் திட்டமிட நிறைய நாட்கள் செலவிட்டிருக்கிறேன்.  திட்டத்தில் என்னவிதமான குறைபாடுகள், நழுவல்கள், தடங்கல்கள், ஓட்டைகள் இருக்கின்றன என்று கூர்ந்து கவனித்து விவாதிக்கும்படி குருதேவர் என்னைப் பணித்தார். எனவே, அவர் என்னைத் தன்னுடன் தங்களைச் சந்திக்க அழைத்துச் செல்லும்போது மிகுந்த உற்சாகத்துடன் அவருக்குத் துணையாக தங்கச்சுருள் உள்ள குழலை எடுத்து வந்தேன்.  தங்கள் அரண்மனையில் நடந்ததுதான் தங்களுக்குத் தெரியுமே! அங்கு தங்களுக்கும், கோப்பரகேசரியாருக்கும் இடையில் சிறிய மனப்பிணக்கு ஏற்பட்டதைக் கண்டதும், குருதேவர் உடனே கிளம்பிவிட்டதையும் தாங்கள் அறிவீர்கள்." 

சிறிது நிறுத்தியவன் மீண்டும் தொடர்கிறான்.  சொல்ல விரும்பாத, வேப்பங்காய்க் கஷாயமாகக் கசக்கும் நிகழ்ச்சிகளை நினைப்பவன்போல அவன் இராஜராஜருக்குத் தென்படுகிறான்.

"சக்கரவர்த்தி அவர்களே! அன்று அரண்மனையிலிருந்து நெடுநேரம் அமைதியாக நடந்துவந்த குருதேவர் தனது மனநிலையை என்னுடன் பகிர்ந்துகொண்டார். 'சிவனே! அருள்மொழியும், மதுராந்தகனும் இத்திருப்பணி வண்டியை ஒன்றாக இழுக்க மாட்டார்கள் போலத் தோன்றுகிறது. எனவே, உன்னை மதுராந்தகனுக்குப் பணியாளனாக ஆக்கியதும் ஒருவிதத்தில் நன்மை பயக்கும் என்று தெரிகிறது. மதுராந்தகனை அருள்மொழியின் பக்கம் கொணர வேண்டியது உனது பொறுப்பு' என்று அறிவித்தவர், மேலும் பல விஷயங்களைப் பற்றி விவாதித்தார்.

"அவர் முக்கியமாகச் சொன்னது இதுதான்: 'சிவனே, இதுவரை சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் போர் நடக்கவே இல்லை என்று சொல்ல முன்வரவில்லை. வென்றவர் தோற்றவருக்குத் திறை செலுத்துவதும் வழக்கம்தான். இருப்பினும், பாண்டியருக்கும், சோழருக்கும் இடையே மண உறவு இருந்து வந்தது. அதனால் பகை அவ்வளவாக வளரவில்லை. அதை முறிக்கும் வகையில் நடந்தது, ஆதித்த கரிகாலனின் கொடுஞ்செயல்.  அருள்மொழியின் தமையன் ஆதித்தன் பாண்டியர்களை மிகவும் தகாத முறையில் அவமதித்துவிட்டான். அவன் வீரபாண்டியனின் தலையைக் கொய்து காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும் இரையாக்கியது மன்னிக்க முடியாத தவறாகும்.  போரில் வீழ்ந்த மன்னனும் வீரனே ஆவான். அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதுதான் வீரர்களான சோழர்களுக்கு அழகு.  அதைப் புறக்கணித்தது, இதுகாறும் நட்புறவுடன் பழகிய பாண்டியரைச் சோழர்களுக்கு ஜன்ம விரோதிகள் ஆக்கிவிட்டது.  இதனாலேயே பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் ஆதித்தனை தீய கொலைபாதகனைப்போலத் தூக்குக்கயிற்றில் ஏற்றிக் கொன்று பழி தீர்த்தான் பாண்டியனின் மெய்காப்பாளன். இது இன்னும் பகையை வளர்த்தது. அருள்மொழி சோழ அரியாசனத்தில் அமர்ந்திருக்காவிட்டால் விளைவு மிகவும் பயங்கரமாகவே இருந்திருக்கும். இப்பகை நீங்க வேண்டும் சிவனே, இப்பகை நீங்க வேண்டும்.  இல்லாவிட்டால் குமுறி எழப்போகும் எரிமலையின் மீது வீடு கட்டுவதுபோலத்தான் சோழ நாட்டின் நிலைமை இருக்கும். இலங்கைக்குப் போகும் வழியில் உள்ளது பாண்டிநாடு.  மேலும், பாண்டிய மன்னர் சிங்களவருடன் மணவினை செய்து வருகின்றனர். இப்படியிருக்கையில், நிலமும், கடலும் பிரித்து வைத்திருக்கும் இலங்கையைப் பாண்டியர் உறவில்லாமல் எப்படித் தன் வசப்படுத்தி வைக்க இயலும்? பாண்டியரின் பகை, ஓயாத கடலலைகள்போல சோழ நாட்டின் மீது அடித்துக்கொண்டுதான் இருக்கும் என்று இக்கட்டைக்குத் தோன்றுகிறது. எனவே, புனிதமான திருப்பணியை மேற்கொள்ளும் அருள்மொழி பகையை மறந்து, பாண்டியர்களுக்கு நட்புக்கரம் நீட்ட வேண்டும் என்று நாளை கேட்டுக்கொள்ளப்போகிறது, இந்தக் கட்டை!' என்று தன் மனநிலையைத் தெரிவித்தார் குருநாதர்."

தான் இதுவரை சொன்னது இராஜராஜரிடம் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கவனிக்கிறான் சிவாச்சாரி.

கருங்கல் சிலையில் கூட ஏதாவது உணர்ச்சியைப் பார்க்கலாம், ஆனால் இராஜராஜரின் முகத்தில் எந்தவோர் உணர்ச்சியையும் அவனால் காணமுடியவில்லை.  அவரது வலது கை அவனை மேலே தொடருமாறு பணிக்கிறது. இடது கை விரல்கள் அவரது சிந்தனையைக் காட்டும் விதத்தில் மூடிமூடித் திறக்கின்றன. 

"அதைக் கேட்டு நான் அதிர்ந்தே போய்விட்டேன் சக்கரவர்த்திகள் அவர்களே!  குருநாதர் வாயிலிருந்தா இப்படிப்பட்ட சொற்கள் வருகின்றன என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவர் மேலே விளக்க விளக்க என் மனத்திலும் அவர் சொல்வது உண்மைதான் என்று தோன்றியது.  பாண்டியர்களுடன் நட்பு தொடருமா? தங்களது விருப்பம் பகற்கனவு ஆகாதா என்று கேட்டேன். குருநாதர், 'இந்தக் கட்டைக்கு அருள்மொழிமீது நம்பிக்கை இருக்கிறது, சிவனே!  இதுவரை அருள்மொழி இந்தக் கட்டையின் சொற்களுக்கு மதிப்பு வைத்தே வந்திருக்கிறான். இவ்வளவு சிறப்பான பணியைத் தொடரப்போகும் அவன், பணி நன்கு நிறைவேறுவதற்காக, தான் விரும்பாததையும் செய்வான்' என நம்பிக்கை தெரிவித்தார். 

"எந்த நாணயத்திற்கும் இருபக்கம் உண்டு அல்லவா!  ஒருவேளை சக்கரவர்த்தி அவர்கள் பாண்டியர்களுடன் நட்புறவு கொள்ள மறுத்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கும் ஒரு முடிவு இருப்பதாகச் சொன்னார் குருதேவர். 'இந்தக் கட்டை வெகுகாலமாகத் திருக்கயிலைக்குச் செல்ல வேண்டும், அதுபற்றி அருள்மொழியிடம் பேசவேண்டும் என்று நினைத்து வருகிறது. அவன் சம்மதித்தால் திருக்கயிலைப் பயணத்தை இந்தக் கட்டை சிறிதுகாலம் ஒத்திவைக்க வேண்டிவரும். அவன் மதிப்புக் கொடுப்பான் என்றே நம்புவோம்.  இக்கட்டை சோணாட்டில் இருப்பது எவ்வளவு நாள் என்பதை அருள்மொழிதான் தீர்மானிக்க வேண்டும்' என்று சொன்னார்" சிவாச்சாரியனின் குரல் சிறிது கம்முகிறது.

கண்களை மூடிக் கொண்டிருக்கிறார் இராஜராஜர். அவரது மனக்கண்முன் கருவூராருக்கும், சிவாச்சாரியனுக்கும் இடையில் நடந்த உரையாடல் நிழலாகப் படமெடுக்கிறது. அவரது கண்களில் ஓரத்தில் இருப்பது கண்ணீரா? எதற்குமே அஞ்சாத புலியான இராஜராஜரின் கண்களில் கண்ணீர் வருமா? 

"குருநாதர் மேலும், 'சிவனே, எது எப்படி நடந்தாலும் உனது உயிர் இருக்கும் வரை சோழ நாட்டின் மேன்மைக்கும், தமிழ்த்திருப்பணிக்கும் உழைக்க வேண்டும்; மதுராந்தகன் உன்னைச் சோதனை செய்தபோது நீ பதில் சொன்னதைப்போல அரசனிடம் உண்மையே பேச வேண்டும், அரசன் விரும்புவதை மட்டுமே செய்யவேண்டும்.  எப்பொழுதும் அரசனின் நன்மைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.  அரசனைச் சுற்றி நடப்பதைக் கண்டும் காணாத குருடனாகவும், அரச ரகசியங்களைக் கேட்டாலும் காதில் விழாத செவிடனாகவும், அரசன் செய்வது தகாத செயலாகவே இருந்தாலும் அதைக் காணாத குருடனாகவும் இருக்க வேண்டும்.  நெருப்புடன் பழகுவதைப் போலத்தான் அரசனின் உறவும் ஒரு பணியாளனுக்கும் இருக்க வேண்டும். எனவே தானாகக் கேட்காதவரை நம் உரையாடலைப் பற்றி அருள்மொழிக்குத் தெரிவிக்காதே!  உன் இதயத்தில் வைத்துப் பூட்டிவிடு.  மதுராந்தகன் உன்னை நண்பனாக வரித்ததால் அவனுக்கு ஆலோசனை சொல்லி வா! ஒருபோதும் நமது இந்த உரையாடல் அவனுக்குத் தெரியக்கூடாது. திட்டம் தீட்டிக்கொடுப்பதும், அதற்கான வழிமுறைகளைச் சொல்லுவதும்தான் உனது பொறுப்பு.  நீ அவர்களுக்குக் கருவியே தவிர, திருப்பணிக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள்தான். இதை என்றுமே மறக்காதே!' என்றும் எனக்கு ஆணையிட்டுவிட்டார்.

"திருப்பணித் திட்டத்தை விவரிக்கும்போது குருநாதர் பாண்டியருடன் நட்புறவு கொள்ளவேண்டும் என்று சொன்னபோது கோப்பரகேசரியாரும் தாங்களும் மறுதளித்து விட்டீர்கள். குருநாதரும் முதல் நாள் என்னிடம் இயம்பியவண்ணம் திருக்கயிலைக்குப் பயணமாகி விட்டார். குருநாதர் சொல்லிய முதல் திட்டமான எழுத்து மாற்றத்தை நிறைவேற்றிவிட்டீர்கள். சேரநாடு தமிழன்னையின் மடியை விட்டு நீங்காமல் காப்பது தங்கள் கையில்தான் இருக்கிறது சக்கரவர்த்தி அவர்களே!" என்று முடிக்கிறான் சிவாச்சாரி.

 இராஜராஜர் கண்ணில் நீர் பெருகுகிறது. "கருவூராரே, கடைசியில் நீங்கள் மனம் ஒடிந்துதான் திருக்கயிலைக்குச் சென்றீர்களா? உங்கள் சொல்லைக் கேளாதவர் நடுவில் இருப்பது, மரியாதைக்கு உகந்ததல்ல என்று நினைத்து சோழ நாட்டை விட்டே நீங்கிவிட்டீர்களா? உங்கள் மனதில் எவ்வளவு வருத்தம் இருந்ததோ? என்மீது நம்பிக்கை இழந்து, தன் சொல்லை மதிக்காத மன்னன் அரசாளும் நாட்டில் இருக்க வேண்டாம் என்று கிளம்பினீர்கள் என்றால், தாங்கள் எவ்வளவு மனம் வெதும்பியிருப்பீர்கள்? நான் பாண்டியனுடன் நட்புறவு கொள்ளாதது மட்டுமல்ல, அவனைச் சிறைப்பிடித்து, அவமானப்பட்டு உயிர்விடுமாறு செய்துவிட்டேனே!  பெருந்தன்மையாக அவனை விடுவித்திருந்தால் பாண்டியர் மனம் மாறியிருக்குமே? இராஜேந்திரனிடம் செங்கோலைக் கொடுத்துவிட்டேனே! இனி எப்படி நான் அவனுக்கு ஆணையிட இயலும்? என் நெஞ்சு கனக்கிறதே!  உங்கள் ஆசியை இழந்து நான் எப்படி திருப்பணியை நிறைவுசெய்வேன்?" என்று பலவாறாகச் சிந்திக்கிறார். 

ஒரு பெருமூச்சு அவரிடமிருந்து வருகிறது.

"சிவாச்சாரியாரே! இத்தகைய உண்மைகளைச் சுமந்துகொண்டு நீர் எவ்வளவு துன்புற்றிருப்பீர் என்று என்னால் அறிய முடிகிறது. கருவூரார் பாண்டியருடன் நட்புக்கரம் நீட்ட வேண்டும் என்று விரும்பியதை அறிந்தும், உமது விருப்பு வெறுப்பைத் துறந்து, எம்பொருட்டு பாண்டியரை வெல்லத் திட்டம் வகுத்துக் கொடுத்தீரே!  என் இதயத்தில். மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்டீர்!

"இன்னும் கருவூரார் என் மீது முழுவதும் வெறுப்புறவில்லை என்பதை உம்மை அளித்துச் சென்றதன் மூலம் அறிந்து நிம்மதிகொள்கிறேன். திருப்பணி நன்கு நடக்க உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்.  உமது இலக்கு திருப்பணிதான். இராஜேந்திரன் உம்மீது மிகவும் நட்பும், அன்பும், மரியாதையும் வைத்துள்ளான். அவனுக்கு வலக்கையாக இருந்து வருவீராக. வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அவனுக்கு திருப்பணியை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பீராக.  நீரும் யாமும் உரையாடிய விவரங்களை எவருக்கும் தெரிவிக்காதிருப்பீர்களாக!" என்று ஆணையிடுகிறார்.

"நான் தனியாக இருக்க விரும்புகிறேன். நீலமலைப் பயணம் உமக்கு வெற்றியைத் தேடித் தரட்டும். கொங்குநாடு தமிழையே பேசி வரட்டும்!" என்று இராஜராஜர் தனது கண்களை மூடிக்கொள்கிறார்.

அவரது உதட்டுத் துடிப்புகளிலிருந்து அவர் மிகுந்த வருத்தத்திலும், கழிவிரக்கத்திலும் இருக்கிறார் என்று உணர்ந்த சிவாச்சாரி, அவரை வணங்கிவிட்டு அங்கிருந்து அகல்கிறான். அரண்மனை வாயிலில் அவனை எதிர்கொள்கிறாள் குந்தவைப் பிராட்டியார்.  முகத்தில் இருக்கும் உணர்ச்சிகளை துணியால் துடைத்ததுபோல் மறைத்துவிட்டு அவளை வணங்குகிறான்.

"சிவாச்சாரியாரே!  அருள்மொழியிடமா பேசிக்கொண்டிருந்தீர் இதுகாரும்? ஏதாவது முக்கியமான விஷயம் உண்டா?" என்று வினவுகிறாள்.

"அதைச் சொல்ல எனக்கு அதிகாரமில்லை பிராட்டியாரே. என்னை மன்னித்து விடுங்கள்" என்றபடி விடுவிடுவென்று நடக்கிறான் சிவாச்சாரி.

'என்றுமே இல்லாத அதிசயமாக இருக்கிறதே இவனது போக்கு! என்ன ஆயிற்றோ' என்று எண்ணியவாறு உள்ளே நுழைகிறாள் குந்தவைப் பிராட்டியார்.

தனது தம்பி கண்களை மூடிக்கொண்டு மஞ்சத்தில் படுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்த அவள், அருகில் சென்றதும் அதிர்ந்து போகிறாள். இன்னும் இராஜராஜரின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருக்கிறது. அவரது வாய், "குருநாதரே!  என் பிழையைப் பொறுப்பீராக!  திருக்கயிலையில் எம்பெருமானைச் சந்திக்கும்பொழுது என்னையும் தங்கள் கருத்தில் கொள்வீராக!" என்று முணுமுணுக்கிறது.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com