பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 11

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 11

ஒரு அரிசோனன்

சோழர் பாசறை, வேங்கைநாடு

சுபானு, சித்திரை 12 – ஏப்ரல் 25, 1043

செயலிழந்து நின்ற இராஜராஜ நரேந்திரன் தன்னைச் சமாளித்துக்கொண்டு உணர்வுக்கு வருகிறான். தன் மாமன் இராஜேந்திரரின் சீற்றத்தை நேரில் அனுபவித்திருக்கிறான். அந்தச் சீற்றமும் பிரம்மராயரை அவமதித்ததால்தான் அவன் மீது செலுத்தப்பட்டது என்பதையும் அறிவான்.

'எந்தப் பிரம்மராயரைப் பழித்தாயோ, அவருக்குக் கீழே பணி செய்ய வேண்டும்! அவரிடம் பணியாற்றும்போது எந்தவிதமான சலுகையும் உனக்குக் காட்டக்கூடாது என்று நான் ஆணையிட்டுள்ளேன். வங்கத்திற்குச் சென்று உன் போர்த்திறமையைப் பெருக்கிக்கொண்டு, என் மகளை மணக்கத் தகுதியானவனாக உன்னை ஆக்கிக்கொண்டு வா! என் மகளை உனக்கு மணமுடித்து, வேங்கைநாட்டைச் சீதனமாக அளிக்கலாமா என யோசிக்கிறேன்!' என இராஜேந்திரர் புலியாக உறுமியதை இன்று நினைத்தாலும் குலை நடுங்குகிறது.

போரில் அவர் வாளேந்தி எதிரிகளின் மீது சீறிப்பாய்ந்து சாடும்போது அவரது முகத்தைப் பார்க்கவே எவருக்கும் அச்சமாக இருக்கும். ஆனால் எக்காலத்திலும் – நீலமலையில் இளஞ்சேரனின் உதகை மாளிகையில் அவமதிக்கப்பட்டபோதோ, வங்கப்போரிலோ — பிரம்மராயரின் முகத்தில் அமைதியைத் தவிர வேறு எவ்வுணர்ச்சியையும் அவன் கண்டதில்லை. அவரைக் கொல்ல முயற்சி செய்து, அவரிடம் பிடிபட்ட வங்க அரசிளங்குமரியை விசாரிக்கும்பொழுது அவர் கனிவுடன் நடந்துகொண்ட முறையையும் அவன் நினைவுகூர்கிறான். கிட்டத்தட்ட இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு அது…

… வங்கமன்னன் மகிபாலனைச் சிறைப்பிடித்திருந்தாலும், அவனையும் அவனது குடும்பத்தினரையும் அரச மரியாதையுடன் நடத்தித் தன் பாசறையில்தான் பிரம்மராயர் தங்க வைத்திருந்தார்.

மன்னனும் அவனது குடும்பமும் கூடாரத்தின் நடுவே படுத்திருப்பர். அவ்வமயம் மன்னனின் கால், சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும். பிரம்மராயர், நரேந்திரன், அவர்களது மெய்காப்பாளர் ஆகியோர் அனைவரையும் சுற்றிப் படுத்திருப்பர். தூங்கும்பொழுது நீங்கலாக மற்ற சமயம், வங்கமன்னன் அரசனாகத்தான் நடத்தப்பட்டான்.

சில இரவுகளில் எழுந்து உலாவுவது பிரம்மராயரின் வழக்கம். அப்பொழுது அவரது கட்டிலருகே காலடிச் சத்தம் கேட்கும். அதேபோலத்தான் அன்றிரவும் காலடிச் சத்தம் கேட்டது.  எனவே, அவருக்கு அடுத்த கட்டிலில் படுத்திருந்த நரேந்திரன் இலேசாகக் கண்விழித்து நோக்கும்போது போர்வையுடன் ஒரு உருவத்தைக் கண்டான்.

பிரம்மராயர் உலவுவதற்காகத்தன் போர்வையுடன் எழுந்து நிற்கிறார் எனக் கண்களை மூடிய அடுத்த கணமே கூச்சலும், யாரோ கீழே விழும் சத்தமும் கேட்டது. உடனே வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்த அவன் கண்களில் பிரம்மராயர் யாரையோ கையைப்பிடித்துத் தூக்கிவிடுவது தெரிந்தது.

"யார் நீ? இங்கு எப்படி நுழைந்தாய்? காவலர்கள் என்ன ஆனார்கள்?" என மெல்லிய குரலில் கேட்டவாறே, ஒருகையால் அவ்வுருவத்தின் மணிக்கட்டை இறுகப் பிடித்திருந்த பிரம்மராயர், அக்கையில் இருந்த பிச்சுவாக் கத்தியை மறுகையால் பிடுங்கினார். அவரது தோள்பட்டையில் குருதி வழிந்துகொண்டிருந்தது. அந்த உருவம் அவரிடமிருந்து திமிறப் பார்த்தது; அக்கைகலப்பில் போர்த்தியிருந்த போர்வை நழுவிக் கீழே விழுந்தது.

"என்ன, நீ ஒரு பெண்ணா?  யார் உன்னை அனுப்பினார்கள்? உங்கள் நாட்டில் ஆண்கள் வாளெடுப்பது கிடையாதா?" என்று வியப்புடன், ஆனால் அச்சுறுத்தும் குரலில் கேட்ட பிரம்மராயர், "இளவரசே, சத்தமின்றி அங்கிருக்கும் தூங்காவிளக்கை எடுத்து வாருங்கள்.  யாரும் எழாமலிருப்பது நமக்கு நல்லது" என்று கரகரத்த குரலில் கூறினார்.

தூங்காவிளக்கை எடுத்து வந்த நரேந்திரனிடம், "இப்பெண்ணின் முகத்தில் வெளிச்சம் தெரியும்படி விளக்கைப் பிடியுங்கள்" என்றதும், விளக்கை உயர்த்தினான்.

இருபது – இருபத்திரண்டு வயதுள்ள மிகவும் அழகான அப்பெண் கோதுமை நிறமாக இருந்தாள். ஆண்களைப் போலக் கீழாடை அணிந்திருந்தாலும், மார்பகத்தைக் கெட்டியான துணியால் இறுகக் கட்டியிருந்தாள். அதற்கு மேலே போர்வையைச் சுற்றித் தலை முடியை வீரர்கள் போலச் சுற்றிக் கொண்டையாக முடிந்திருந்ததால், தூரத்திலிருந்து பார்ப்போருக்குப் பெண் என அறிந்துகொள்வது கடினம்தான். போர்வை கீழே விழுந்தவுடன் பிரம்மராயரால் இருட்டில்கூட அவள் பெண் என எளிதில் அறிய முடிந்தது. அந்தப் பெண் பேச மறுத்துத் தலையாட்டினாள். அவர் கேட்பது தனக்குப் புரியவில்லை என்று கைகளால் சைகை செய்தாள்.

அவள் கண்களில் தாண்டவமாடும் வெறுப்பு இருவருக்கும் நன்றாகவே தெரிந்தது. அவளது முகவெட்டைப் பார்த்து, அவள் வங்கநாட்டவள் என்ற முடிவுக்கு வந்து, தன் உத்தரீயத்தால் அவளது கைகளைக் கட்டிய பிரம்மராயார், அவளிடமிருந்து பிடுங்கிய பிச்சுவாவை விளக்கு வெளிச்சத்தில் பரிசோதனையிட்டார்.

"ஒருகணம் தாமதித்திருந்தால் பிச்சுவா என் மார்பில் நுழைந்திருக்கும். அதன் மீது பட்ட ஒளியைக் கண்டு புரண்டெழுந்ததால் மார்புக்கு வைத்த குறி தப்பித் தோளின் நடுவில் கீறலோடு தப்பித்தேன்!" என்று விளக்கிய பிரம்மராயர், "இளவரசே, வங்கமொழி அறிந்தவரைத் தருவித்தால்தான் இவளுடன் பேசலாம். அதுவரை நம்மால் எதுவும் செய்ய இயலாது. எனவே, விடியும்வரை காத்திருப்போம். இவளுக்குக் காவலாக அமர்ந்திருக்கிறேன்.  தாங்கள் உறங்குங்கள்" என்று கனிவாகக் கூறியனுப்பிவிட்டு, அப்பெண்ணுக்குத் தன் கட்டிலைக் காட்டித் தலையைச் சாய்த்து, உள்ளங்கையைக் காதுகளில் வைத்து, உறங்கச் செல்லுமாறு பணித்தார்.

அவரைப் பற்றி என்ன நினைப்பது என்று புரியாமல் அப்பெண் விழித்தாள். தன்னைக் கொல்ல வந்தவளையே தன் கட்டிலில் படுத்து உறங்கு என்று கனிந்த முகத்துடன் சைகை செய்யும் இம்மனிதர் எப்படித் தன் தந்தை வங்க மன்னைன் தலை மீது கங்கைநீர் நிறைந்த குடத்தை வைத்து அவரைச் சோழநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் என்று குழம்பினாள். அதுமட்டுமா? பொழுதுவிடிந்ததும் தன் தாய், தந்தை உடன்பிறப்புகள் தான் யாரென்று தெரிவித்தால் தன்னை என்னசெய்வாரோ என்றும் அச்சமுற்றாள். அந்த நினைப்பிலேயே அவளையுமறியாது உறக்கம் அவளை ஆட்கொண்டது.

நினைத்தபடி காலையில் அவளை அவளது பெற்றோர் காணவே, பெருங்கூச்சல் எழுந்தது.  பிரம்மராயர்தான் அவளைத் தேடிப்பிடித்துக் கொணர்ந்திருக்கிறார் என்று குதியாய்க் குதித்தனர். மொழிபெயர்ப்பாளர் வாயிலாக உண்மையை அறிந்த பிரம்மராயர் முகத்தில் கோபத்திற்குப் பதிலாகப் புன்னகை மலர்ந்தது.

"மொழிபெயர்ப்பாளரே, நான் சொல்வதில் ஒரு சொல்கூட மாற்றாது வங்கமொழியில் அவர்களிடம் சொல்லும்" என்ற முன்னறிக்கையுடன் தொடங்கினார்.

"இந்தப் பெண் ஆண் வேடமணிந்து நமது படையைத் தொடர்ந்து வருவதை – இவள் பெண்ணென்று அறிந்துகொள்ளாவிட்டாலும் – கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்னரே ஒற்றர் மூலம் அறிவேன். ஆயினும் இவள் யார், எதற்காக நம்மைப் பின்தொடர்கிறாள் என்பதை அறியத்தான் ஒன்றும் செய்யாது கண்காணித்து வருமாறு ஒற்றருக்கு ஆணையிட்டேன். நமது பாசறைக்குள் நான்கைந்து நாள்களாக யாருமறியாமல் நுழைய முயல்கிறாள் என்று தெரிந்தும், அவள் உள்நோக்கத்தை அறியவே, அவளை நேற்றிரவு என் கூடாரத்திற்குள் நுழையவிடுமாறு காவலர்களுக்கு ஆணை பிறப்பித்தேன். அவர்களும் உறங்குவதுபோலப் பாசாங்கு செய்து உள்ளே நுழையவிட்டனர். அவளை எதிர்பார்த்து அவளது நடவடிக்கையைக் கண்காணித்தேன். எனது கட்டிலருகில் வந்தவள், கண்ணிமைக்கும் நேரத்தில் பிச்சுவாவை எடுத்து என்னைக் கொலை செய்ய முயன்றாள். அதற்குப் பின் நடந்ததை வேங்கைநாட்டு இளவரசரே சொல்லட்டும்" என்று நிறுத்தியவுடன், மேற்கொண்டு நடந்ததை விவரித்தான் நரேந்திரன்.

தன் தந்தை வங்கமன்னர் மகிபாலர் சிறைப்பிடிக்கப்பட்டதும், தன்னை ஆண் வேடமணிந்து, தன்னை மணமுடிக்கவிருக்கும் அண்டைநாட்டு அரசகுமாரனிடம் சேரச்சொல்லி அனுப்பியதாகவும், ஆனால் தான்தான் தனது தந்தையின் அவமானத்திற்குப் பழிவாங்கச் சோழச்சேனையைத் தொடர்ந்து வந்து, தலைமைப் படைத்தலைவரான பிரம்மராயரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் ஒப்புக்கொண்டாள் அப்பெண் – வங்கநாட்டு இளவரசி மினோத்தி.

"இனி உங்கள் சோழநாடு நீதியைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பெண்களை உங்கள் நாட்டில் எப்படித் தண்டிப்பார்களோ அப்படித் தண்டித்துவிடுங்கள். தந்தையே!  தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் துடைக்க இயலாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். அடுத்த பிறப்பில் தங்களுக்கு மகனாகப் பிறந்து, இச்சோழரைப் பழிவாங்க புத்ததேவர் அருள் புரியட்டும்!" என்று அறைகூவினாள்.

மகிபாலன், அவனது குடும்பத்தார் கண்களில் நீர் வழிந்தது.

பிரம்மராயரைக் கொல்ல முயன்ற மினோத்தியைச் சிறைப்பிடித்து, அவரது குடும்பத்திற்குக் குற்றேவல் செய்து வாழ்நாள் முழுவதையும் கழிக்கும்படித் தீர்ப்பளிக்குமாறு மற்ற படைத்தலைவர்கள் வேண்டினர்.

"வாழ்நாள் முழுதும் குற்றேவல் புரியச்செய்து அவலப்படுத்துவதைவிட, அவளை ஒரேயடியாகக் கொல்வதே சிறந்ததாகும். அவள் மீது கருணைகாட்டுங்கள். என் மகளை விட்டுவிடுங்கள். அவளை மன்னியுங்கள். வாழவேண்டியவள் அவள். அவளின் குற்றத்திற்காக என்னைத் தண்டியுங்கள். நானும், என் மனைவியும் உங்கள் குடும்பத்திற்கு எங்கள் வாழ்நாள் முழுவதும் குற்றேவல் புரிகிறோம்.

"ஆணவத்தால் கங்கைநீரைத் தர மறுத்துப் போர்க்கொடி உயர்த்திப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்டது நான்தான். புத்தபிரான்தான் என்னை மன்னிக்க வேண்டும்!" என்று இறைஞ்சினான் வங்கமன்னன் மகிபாலன்.

சற்று நேரம் சிந்தித்தார், பிரம்மராயர். அவர் உள்ளத்தில் நினைப்பதை அவரது முகம் காட்டாது சலனமற்றே இருந்தது. அவர் என்ன தீர்ப்பளிப்பாரோ என அனைவரும் அவர் முகத்தையே நோக்கினார்கள். தொண்டையைச் செருமிக்கொண்டு நிதானமாகத் தன் தீர்ப்பைப் பிரம்மராயர் விவரிக்கத் தொடங்கினார்.

"எனக்குப் பதிலாக வேங்கைநாட்டு இளவரசரைத் தாக்க முயன்றிருந்தால் அது அரச துரோகமாக ஆகி, அதற்குள்ள தண்டனையையே சற்றும் தளர்த்தாமல் விதிக்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டிருக்கும். நல்லவேளை, அரசகுமாரி என்னத் தாக்க முயன்றதால் அத்தண்டனையை நான் விதிக்கப்போவதில்லை. என்னைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் வந்தும், நான் இன்னும் உயிருடன் இருப்பதால், கொலை முயற்சிக்கான தண்டனை என்ன என்றுதான் தீர்மானிக்க வேண்டும்."

அவர் முகத்தில் இலேசான புன்னகை மலர்ந்தது. அனைவரையும் பார்த்துக் கூறினார்.

"இருப்பினும், தந்தைக்காக வங்காள வரிப்புலியாகப் பொங்கியெழுந்து, புலி தன் இரையைத் தொடர்வதுபோல என்னைத் தொடர்ந்தது – நான் வணங்கும் சிவபெருமானின் இடப்பாதியைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டுள்ள அம்பிகையைத்தான் நினைவூட்டுகின்றது."

மகிபாலனை நோக்கி, "மேலும், உங்கள் மகளை இன்னொருவருக்கு மனையாட்டியாக்க முடிவு செய்து அனுப்பித் தந்தையின் கடமையைச் செய்துவிட்டீர்கள். அதனால், அதற்குப் பிறகு அவள் செய்ததற்கு உங்களைப் பொறுப்பாக்க முடியாது. அதற்காக, உங்களையோ, உங்கள் குடும்பத்தையோ தண்டிப்பதும் முறையல்ல. என்னிடம் சிறைப்பட்டதால் இவள் எங்கள் வீட்டுப் பெண்ணாகிவிட்டாள். இவளுக்கு மணமுடிக்க நீங்கள் முடிவு செய்து அனுப்பியிராவிட்டால், இந்த வீராங்கனையை எங்கள் சோழநாட்டு இளவரசருக்கு மனைவியாக ஆக்கிவிட்டிருப்பேன்.

"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

"என வள்ளுவபிரான் கூறிச்சென்றிருக்கிறார். ஆகவே, அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்து, அவளது வருங்காலக் கணவரிடமே அனுப்பிவைக்க முடிவு செய்திருக்கிறேன்.  இதுதான் எனது தீர்ப்பு!" என்றதும், அங்கிருப்பவர் எவரிடமிருந்தும் பேச்சே எழவில்லை. பிரம்மராயர் ஏன் இப்படிச் செய்கிறார் என்ற கேள்வியே அவர்கள் மனதில் எழுந்து நின்றது.

"எங்கள் வீட்டுப்பெண்ணைச் சீர்வரிசை எதுவுமில்லாது அவள் மணாளனிடம் அனுப்பிவைக்க இயலுமா? எனவே, தகுந்த சீர்வரிசையுடன் அவளுக்குத் துணையாக எங்கள் சோழ வீரர்கள் சென்று, அவளது வருங்காலக் கணவரிடம் சேர்ப்பித்துவிட்டுத் திரும்புவார்கள்."

இதைக்கேட்ட வங்க மன்னனாலும், அவன் மகள் மினோத்தியாலும் தங்கள் செவிகளை நம்பமுடியவில்லை. இப்படிப்பட்ட இரக்க குணமுள்ளவர் எப்படிக் காலனாக மாறி, போரில் தங்கள் படைகளைச் சிறிதும் இரக்கமின்றி நிர்மூலமாக்கினாக்கினார்?

பிரம்மராயர் தன் கழுத்தில் தொங்கிய மெல்லிய தங்கச் சங்கிலியைக் கழட்டி, அதில் தன் இலச்சினையைக் கோர்த்தார். தன் இடுப்பிலிருந்த அரக்குத் துண்டை அருகிலிருந்த தூங்காவிளக்குச் சுடரில் காட்டி, இலச்சினையிலிருந்த சில எழுத்துகளின் மேல் ஊற்றி, விரல்களால் சமனப்படுத்தி, "பெண்ணே மினோத்தி, இந்தா இதைப் பெற்றுக்கொள்!" என்று அவளிடம் நீட்டினார்.

"இது உன்னிடமிருக்கும் வரை சோழநாட்டின் பாதுகாப்பு உனக்கு என்றும் இருக்கும்.  உன்னைப் போன்ற ஒரு வீரப்பெண்மணியின் வாரிசு என் வழித்தோன்றலில் எவருக்காவது வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தால், அது என் பெரும் பாக்கியமாகும். வங்கமும், சோணாடும் போர்புரிவதை விடுத்து உறவுகொண்டாடத் துவங்கிவிடும்."

அவரது ஆவல் நிறைவேற ஆயிரத்து நானுறு ஆண்டுகள் ஆகப்போகிறது என்று அவர் உள்பட அங்கிருக்கும் யார்தான் அறிவார்கள்?! இப்படிப்பட்டதொரு தீர்ப்பை அவர் வழங்குவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

மினோத்தியின் கண்களிலிருந்து நீர் தாரையாகப் பெருகியது. "கருணையே வடிவான தங்களைக் கொலைசெய்யத் துணிந்தேனே!" என்று அழுதுகொண்டே அவர் கால்களில் விழுந்து பணிந்தாள்.

"எழுந்திரம்மா. தீர்க்கசுமங்கலியாக நெடுங்காலம் வாழ்வாயாக!" என வாழ்த்தினார்.

"பிரம்மராயரே! உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்; நீங்கள் சிறந்த போர் வீரர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல் நிபுணர் என்றுகூட. தங்கள்நாட்டுக் கோவிலின் குடமுழுக்குக்குக் கங்கைநீரை மிகுந்த மனமகிழ்வுடன் சுமந்துசெல்வது22 என் பாக்கியம் என்றே இனி எண்ணுவேன். தப்பித்துச் செல்ல முயற்சி செய்யேன். புத்தபிரானின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், என்றும் உங்கள் நாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தமாட்டேன்" தழுதழுத்த குரலில் உறுதியளித்தான் வங்கமன்னன் மகிபாலன்…

… இராஜராஜ நரேந்திரன் மெதுவாக நிகழ்காலத்திற்குத் திரும்பி வருகிறான். கருணைக்கடலான பிரம்மராயரைத் தான் ஒருவேளை கடந்த பல பத்தாண்டுகளாகத் தவறாக மதிப்பிட்டு விட்டோமோ எனச் சில கணங்கள் எண்ணிப்பார்க்கிறான். சில கணங்கள்தான்…!  அவை கழிந்தபின் கனிந்த அவன் மனம் மீண்டும் கல்லாக இறுகுகிறது.

'இவரால்தானே நான் மையல்கொண்ட பெண்ணை ஆசைநாயகியாய் அடைய முடியாது போயிற்று! இவரால்தானே என்நாட்டைப் பெற என் மாமனிடம் மதிப்பிழந்து அவமானப்பட்டுப் போனேன்! இவரால்தானே என் மாமன் இவரின் கீழ் பணியாற்ற அனுப்பி வைத்தார்? இவரை மிகவும் பாதிக்கும்படியான செயலைச் செய்துதான் ஆகவேண்டும். அதுவரை இவரைப் பகைத்துக்கொள்வது சரியல்ல' என்று மனதிற்குள் சொல்லிக்கொள்கிறான்.

————————–

[22.வங்கமன்னன் மகிபாலனை கங்கைநீர் நிரம்பிய குடத்தைச் சோழநாட்டுக்குச் சுமந்துவரச் செய்தார்கள் – திருவாலங்காட்டுச் செப்பேடுகள். பின்னர் அவன் விடுவிக்கப்பட்டுச் சோழருக்கு கப்பம்செலுத்திவந்ததாகவும், அது மூன்றாம் குலோத்துங்கன் காலம்வரை நீடித்ததாகவும் தெரிகிறது. அவனே விரும்பிக் கொண்டுவருவதாகப் புதினத்தில் புனையப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் எதுவுமில்லை.]

"அரசே, அடங்கிக்கிடக்கும் எரிமலையின் உள்ளிருக்கும் பாறைக்குழம்பு பீச்சியடிப்பதைப்போல் மனதில் இதுகாறும் அடங்கிக்கிடந்த உணர்ச்சிகள் பீறிட்டு வந்துவிட்டன. என்னதான் இருந்தாலும் தாங்கள் ஒரு அரசராவீர். தங்களிடம் நான் அப்படிக் கோபத்துடன் கடிந்து பேசியிருக்கக்கூடாது. அதற்காக மிகவும் வருந்துகிறேன். நாட்டை இழப்பது, அதை மீட்டுப்பெற மற்றவர் கையை எதிர்நோக்குவது மிகவும் கொடியது. அந்த மனநிலையில் தாங்கள் ஏதோ பேசிவிட்டீர்கள் என்று விடாது என் சலிப்பைக் காட்டியது எனது தவறுதான்.

"இலங்கையிலும் பாண்டிநாட்டிலும் பல கலவரங்கள் நடந்துவருகின்றன. அதனால் அங்கு சோழச்சேனை கட்டிப்போடப்பட்டிருக்கிறது. எப்படியும், அவற்றைத் தீர்த்துவிட்டுத் தங்கள் மைத்துனர் இராஜாதிராஜன் பெரும்படையுடன் வந்துவிடுவார். நானும் அதற்குள் என்னால் இயன்றதைச் செய்கின்றேன். பெருக்கெடுத்தோடும் கிருஷ்ணாவைக் கடக்க முயல்வது தற்கொலைக்கு ஒப்பாகும்" எனப் பிரம்மராயர் நரேந்திரனைச் சமாதானப்படுத்துகிறார்.

சமாதானம் ஆனதைப் போல் நரேந்திரன் நடிக்கிறான். "அதனாலென்ன, பிரம்மராயரே?  அக்காள், தங்கையை மணந்துகொண்ட நாம் கொஞ்சம் மனம்விட்டுப் பேசிக்கொள்வதால் குறையென்ன? அவ்வப்போது ஒருவரையொருவர் கடிந்துகொள்வது நட்பை வளர்க்கும்.  ஆந்திர வெய்யில் அனைவரையும் எரிச்சலடையச் செய்வதில் வியப்பென்ன!" என்று திரும்பச் சமாதானம் கூறுகிறான்.

அதேசமயம், எதைச் செய்தால் இவருடைய சிறந்த முயற்சியைத் தோல்வியுற வைக்கலாம், எதன் மூலம் இவரை வெற்றிகொள்ளலாம் என்று அவனது மனம் துருவிப்பார்க்கிறது. மனக்கண்முன் ஒன்று பளிச்சிடவே முகம் மலர்கிறது.

அதைக்கண்டு பிரம்மராயர் சிறிது திகைப்படைகிறார். திடுமென அவன் முகம் மலர்ந்தது அவ்வளவு நல்லதற்கல்ல என அவரது உள்மனம் சொல்கிறது.

குதிரைக் குளம்பொலி கேட்டு இருவரும் வெளிவருகின்றனர்.

புலிக்கொடியைக் கையில் பிடித்தவாறு குதிரையில் வந்த தூதுவன், அதை நிறுத்திக் கீழிறங்கி இருவரையும் வணங்குகிறான்.

"வணக்கத்திற்குரிய இராஜேந்திரசோழ பிரம்மராயரையும், வேங்கைநாட்டு மன்னரையும் தலைவணங்குகிறேன். பட்டத்தரசர் இராஜாதிராஜரிடமிருந்து பிரம்மராயருக்கு ஓலைதாங்கி வந்துள்ளேன்" என்று இராஜாதிராஜனின் இலச்சினை படிந்த ஓலைக்குழலை நீட்டுகிறான்.

அதைப் படித்தவரின் முகத்தில் கவலைக்கோடுகள் படிவதை நரேந்திரன் கவனிக்கிறான்.  இரண்டாம் முறையாக இன்று அவர் முகத்தில் அமைதியைத் தவிர மற்ற உணர்ச்சிகளும் ஓடுவதைக் கண்டு உள்ளூர மகிழ்கிறான்.

"அரசே, உடனே நான் சோழநாடு திரும்ப வேண்டும். என் மகன் மறையன் அருள்மொழி கங்க நாட்டிலிருந்து இருபதாயிரம் வீரருடன் தங்களுக்கு உதவியாகப் போரிட வந்துகொண்டிருக்கிறான். இன்னும் ஒருநாழிகைப் பொழுதில் புறப்படுகிறேன். அவசரமாகக் கிளம்புவதற்கு மிக வருந்துகிறேன்" என்ற பிரம்மராயர், "சுப்பா, மூட்டையைக் கட்டு!  நாம் உடனே கிளம்ப வேன்டும்" என்று மற்ற படைத்தலைவர்களையும் சந்திக்கக் கிளம்புகிறார்.

இவர் உடனே கிளம்ப வேண்டும் என்றால் விஷயம் பெரிதாகத்தான் இருக்க வேண்டும். அதனால் தனக்கு ஆதாயமா இல்லையா என்ற சிந்தனையில் நரேந்திரன் ஆழ்கிறான்.

சோழர் அரண்மனை, கங்கைகொண்ட சோழபுரம்

சுபானு, வைகாசி 21 – ஜூன் 6, 1043

சேர்த்துக்கூப்பிய பிரம்மராயரின் கைகளை இராஜேந்திரர் மெல்லப் பிடித்துக்கொள்கிறார்.  சோணாட்டின் தலைமைப் படைத்தலைவரும், அமைச்சரும், மூத்த மகள் அருள்மொழிநங்கையின் மணாளனும், திரிபுவனச் சக்ரவர்த்தி இராஜராஜரின் தமிழ்த்திருப்பணி ஆலோசகரும், திருமந்திர ஓலைநாயகமும், தனது அந்தரங்க நண்பனுமான சிவசங்கர சிவாச்சாரியைப் பாசத்துடன் பார்க்கிறார்.

தன்னை வாட்டத் துவங்கிய நோயானது, எதிரிகளும் முன்னால் வந்து நிற்க அச்சப்படும் தன் கூரிய பார்வையைச் சிறிது சிறிதாக மறைத்துப் பறித்துக்கொண்டு வருவதைப் பற்றித் தன்னால் ஒன்றும் செய்ய இயலாமலிருப்பதைப் பற்றியும் – குதிரையிலேறி வீர ஆவேசத்துடன் போரிடும் தன்னைக் குதிரையில் ஏறக்கூடாது என்று மருத்துவர் தடுத்துவிட்டதையும் – வருத்தத்துடன் எண்ணிப்பார்க்கிறார்.

"அரசே! இவ்வளவு அவசரமாக என்னை அழைத்ததன் காரணம் என்னவோ? தங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது? 'உடல்நிலை சரியில்லை, உடனே கிளம்பி வரவும்,' என்று மட்டுமே எழுதி அனுப்பியிருந்த ஒலையைப் பார்த்து பதறிப்போனேன். எவ்வளவு விரைவாகப் பயணித்தும் இங்கு வந்து சேர நாற்பது நாள்களாகி விட்டன. தங்கள் உடல்நிலை தேர வேண்டும் என்ற கவலையில் எனக்கும் தளர்ச்சி வந்துவிட்டது அரசே!" என்று தழுதழுத்த குரலில் பிரம்மராயர் செப்புகிறார்.

இராஜேந்திரர் அவரைத் தன்னருகே அமர்த்திக்கொள்கிறார்.

கம்பீரமான அவரது உடல் மெலிந்துவிட்டிருக்கிறது. வெண்ணிற மீசையும், நீண்ட தாடியும் முகத்தில் பாதியை மறைக்கிறது. வெண்மையான கேசம் அவர் தோளில் சுருண்டு புரள்கிறது.  சேர, சோழ, பாண்டிய, கருநாடு, ஆந்திரம், வேங்கை, கலிங்கம், வங்கம், இலங்கை, கடாரம், ஸ்ரீவிஜயம், இலட்சத் தீவுகள், நக்காவரம் இவற்றை ஒருகுடைக்கீழ் ஆளும் பேரரசரான அவர்தான் எப்படித் தளர்ந்துபோயிருக்கிறார்! இருவரும் ஒன்றுசேர்ந்து நிகழ்த்திய போர்கள்தான் எத்தனை? தாங்கிய விழுப்புண்கள்தான் எத்தனை? புலியாகச் சீறிப்பாய்ந்த கோப்பரகேசரி இராஜேந்திரசோழ தேவரா இவர்?!

பிரம்மராயரின் கண்கள் கலங்குகின்றன.

"சிவசங்கரா!" முதன்முதலாக பிரம்மராயரின் பெயரைச்சொல்லி நட்புரிமையுடன் அழைக்கிறார்.

மனம் நெகிழ்ந்த பிரம்மராயர், "சொல்லுங்கள் அரசே!" எனக் குழைகிறார்.

"நண்பனாக மதுராந்தகா என்று அழை, சிவசங்கரா!"

உரிமையுடன் அன்புக்கட்டளை பிறக்கிறது.

"அப்படியே அர… மதுராந்தகா! ஒரே ஆண்டில் இப்படித் தளர்ந்து போய்விட்டாயே! உன்னைப் பார்த்தாலே என் நெஞ்சு கனக்கிறதப்பா. மருத்துவர்கள் தன்வேலையைச் சரிவரச் செய்வதில்லையா? கையைக் கொடு. உன் நாடி என்ன சொல்கிறது என்று பார்க்கிறேன்" என்று மணிக்கட்டைப் பிடிக்க முயன்ற பிரம்மராயரை இராஜேந்திரர் தடுக்கிறார்.

"மருத்துவர்கள் சொல்லாத ஒன்றை நீ என்ன புதிதாகச் சொல்லப்போகிறாய்? வீரனாகப் போர்க்களத்தில் விழுப்புண் ஏற்று வீரமரணம் அடைய முடியாமல் நரை, திரை, மூப்படைந்து தளர்ந்து – வாளைச் சுழற்றிய கை, கோலை மூன்றாவது காலாக ஊன்றி நடக்கும் நிலைக்கு வரத்தான் வேண்டுமா? நினைத்துப் பார். இவ்வாறு என் உயிரை நீடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. போரில் கலந்துகொண்டு, மார்பில் விழுப்புண் ஏற்று, என் மூதாதையர் வாழும் வீரசொர்க்கத்திற்கு வீரனாகச் செல்லவே நான் விரும்புகிறேன்" அவர் குரலில் விரக்தி இழையோடுகிறது.

"அப்படிச் சொல்லாதே, மதுராந்தகா. உன்னை நம்பி எத்தனை இலட்சக்கணக்கானோர் உளர்!  உன்னுயிருக்காகத் தன்னுயிரை மகிழ்வுடன் ஈய எந்தனைபேர் காத்துக்கொண்டுள்ளனர்?
நீ கண்ட கனவை நிறைவேற்றிவிட்டாயே! இதுவரை எந்தத் தமிழன் உன்னை போல பரந்த நாட்டைத் தன்வசப்படுத்தியுள்ளான்? உன் அரசப் பிரதிநிதி சோணாட்டின் பெருமையோடு வணிகத்தையும் உயர்த்த சீனநாட்டுப் பேரரசனின் அவையில்கூட அமர்ந்துள்ளாரே! கீழைக் கடலில் உன் நாவாய்கள்தான் ஆட்சிசெலுத்துகின்றன; தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்கு இணையாகக் கங்கைகொண்ட சோழபுரத்திலும் சிவபெருமானுக்குக் கற்றளி எழுப்பிக் கங்கை நீரால் குடமுழுக்கு செய்வித்திருக்கிறாயே! உனது புகழை என்றும் பாடிவரும் அளவுக்குச் சோழர்குலத்தை ஏத்திப் பேசும் அளவுக்கு – புத்தம் புதிய தலைநகரை நிர்மாணித்துள்ளாயே! சிங்களத்தீவு முழுவதும் தமிழரின் புலிக்கொடியல்லவா பறக்கின்றது? சாதிக்க இன்னும் என்னதான் இருக்கிறது மதுராந்தகா?" அடுக்கிக்கொண்டே சென்ற பிரம்மராயர், இராஜேந்திரரைக் கனிவுடன் நோக்குகிறார்.

"சோழர்தம் பெருமையை நிலைநாட்டுவேன், தந்தையார் அடித்தளம் அமைத்த பேரரசை விரிவாக்கிக் கட்டிடம் எழுப்புவேன் எனச் சூளுரைத்த நீ, அதைச் செவ்வனே சீரும் சிறப்புடன் கட்டிவிட்டாய். முதுமையைக் கண்டு கலங்கலாமா? அதல்லவா உன்னைக் கண்டு கலங்கி ஓட வேண்டும்! மனத்திண்மைக்குமுன் உடல்நலிவு என் செய்யும்? சித்தத்தைச் சிவன்பால் செலுத்து. இவ்விதக் கலக்கம் உனக்கு வராது.  இராஜாதிராஜன் நீ எழுப்பிய கட்டிடத்திற்குப் பொற்கூரை வேய்ந்து அழகு சேர்ப்பான்" என்று இராஜேந்திரரைத் தேற்றிப் பேசுகிறார்.

"நீ என்னருகில் இருக்கும்போது உற்சாகம் ஊற்றெடுக்கிறது, சிவசங்கரா!" இராஜேந்திரரின் குரலில் நட்பு வழிந்தோடுகிறது.

"மிக்க மகிழ்கிறேன், மதுராந்தகா. உன்னருகிலேயே இருந்துவிடுகிறேன். நீ பல நூறாண்டு காலம் வாழ்ந்து நாட்டைச் சிறப்பிப்பாயாக" என பிரம்மராயர் வாழ்த்துகிறார்.

இராஜேந்திரரிடமிருந்து வரட்டுச் சிரிப்பு வெடிக்கிறது. "காட்டிலிருக்கும் பெரிய மரம் விழாதவரை கீழிருக்கும் மரங்கள் வளர வாய்ப்பில்லை என்பதை நீ அறியாயா? எனக்கு இடம் தந்து தந்தையார் ஒதுங்கிக்கொண்டதைப்போல நானும் இராஜாதிராஜனுக்கு இடத்தைத் தந்து ஒதுங்கவேண்டியதுதானே முறையாகும்?"

"மதுராந்தகா, நீ இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே இராஜாதிராஜனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டாய். அவனும் பாண்டிய, சேர நாடுகளையும், இலங்கையையும் தானாகத்தானே ஆண்டுவருகிறான்! கருநாட்டு விவகாரங்களையும் அவனே கவனித்துவருகிறான் என நீயே பெருமைப்படும் அளவுக்குச் சிறந்த வீரனாகத்தானே அவன் திகழ்கிறான்" என்று இராஜேந்திரரின் மனவோட்டத்தை வேறுதிசைக்குப் பிரம்மராயர் மாற்ற முயல்கிறார்.

"எனக்காக நீ அளவுக்கதிகமான தியாகத்தைச் செய்திருக்கிறாய் சிவசங்கரா. இங்கு மூன்று மனைவிகளுடன் நான் மகிழ்ந்து இருந்துகொண்டிருக்கும்போது, பலகாலம் மனைவி மக்களைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறாய். உன் வாழ்வையே தவமாகத்தான் இயற்றி வருகிறாய்.  உனக்கென்று எதையும் தேடாமல், ஏழை அந்தணனாகத்தானே வாழ்ந்து வருகிறாய்! பொன் முலாம் பூசிய, இறக்கைகள் நிரப்பிய மெத்தை விரித்த மஞ்சத்தில் நான் படுத்திருக்க – பணிப்பெண்கள் சாமரம் வீச, அடைப்பக்காரன் காலைப் பிடித்துவிட, பாணர்கள் யாழிசைத்து என்னை உறங்கச் செய்யும்போது – தினமும் ஒரு கயிற்றுக்கட்டிலில்தானே நீ உறங்கி வருகிறாய்!

கழிவிரக்கத்தில் சிறிது நேரம் பேச முடியாது அமைதியாகிவிட்டு, மீண்டும் தொடர்கிறார். "உனக்கு நான் பரிசாகக் கொடுத்த ஊரை என் மூத்த மகன் ஆளவந்தானைச் சிறப்பிக்கும் வகையில் கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலம்23 எனப் பெயரிட்டு வேதியர்களுக்கு நிவந்தமாக வழங்கிவிட்டாய். அந்தணர் உன் அறிவுக்கும், அமைச்சர்கள் உன் நிர்வாகத் திறமைக்கும் தலைவணங்கும்போது, நீ மட்டும் கடந்த முப்பத்திமூன்று ஆண்டுகளாக ஏன் ஏழையாகவே வாழ வேண்டும்?" இராஜேந்திரர் குரலில் ஆதங்கம் தொனிக்கிறது.

"என் குருநாதர் கருவூரார் அளித்த அறிவுரைப்படிதான் நடந்து வருகிறேன். பொன், பெண், மண் எதிலும் பற்று வைக்காது வாழ்ந்து வா என்ற அவரது ஆணையைத்தான் இயன்ற அளவுக்குப் பின்பற்றி வருகிறேன். உன் தோழனாக்க என்னை நீ கேட்ட கேள்விகளுக்கு என்று முதன்முதலாக மறுமொழி அளித்தேனோ, அதன்படிதான் இன்றும் நான் நடக்கிறேன். எதன் மீதும் பற்று இருந்தால், அது கிட்டாவிடில் துன்பமேற்படும். தாமரை இலை தண்ணீரில் பிறந்து அழிந்தாலும், தண்ணீரைத் தன் மீது ஒட்டவிடுவதில்லை. அதுபோல அரசருடன் காலம் கழித்து வரினும், அரச போகத்திலும், செல்வத்திலும் எனக்கு நாட்டம் செல்லவில்லை. என் ஒரே மனவருத்தம் என்னவென்றால் – என்னை மணந்ததால் அருள்மொழிநங்கையும் அரச வாழ்வைத் துறக்க வேண்டியுள்ளது என்பதே" என்று நிறுத்துகிறார் பிரம்மராயர்.

————————–

[23.இராஜேந்திரசோழப் பிரம்மராயர் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தவர் என வரலாறு உரைக்கிறது.]

"அது அவள் மனமுவந்து தேடிக்கொண்ட வாழ்வு.  அவள் மகிழ்வாக இருக்கும் வரை, வாழும் விதம் எனக்குக் குறையாகப்படவில்லை."

"அப்போது எனது எளிய வாழ்வு உன் கண்ணை ஏன் உறுத்துகிறது?"

"நீ வாழ்வதுபோலத்தானே என் மகளும் வாழ்கிறாள். வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்பதுபோல, உன் வாழ்வு மாறினால் அவளுடையதும் மாறிவிடாதா என்ற நப்பாசைதான்!" என்று குறும்பாகச் சிரிக்கிறார். அப்போது மருத்துவருடன் அருள்மொழிநங்கை அங்கு வருகிறாள்.

"உனக்கு ஆயுள் நூறு. உன்னைப் பற்றித்தானம்மா பேசிக்கொண்டிருந்தோம். நீயே வந்துவிட்டாய்" இராஜேந்திரர் அவளை வாழ்த்துகிறார்.

"அதை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன். தாங்கள் திடகாத்திரமாக இருந்தாலே போதும். மருத்துவர் உங்கள் உடல்நிலையைப் பார்த்துப் போக உடன்வந்திருக்கிறார்" என்று அருள்மொழிநங்கை பரிவுடன் பதிலளிக்கிறாள்.

ஐம்பது அகவையான அவள் அதற்கும் மேலே இரண்டு மூன்று அதிக வயதானவளாகக் காட்சியளிக்கிறாள். பாதிக்கு மேல் தலை நரைத்துவிட்டது. நெற்றியிலும், முகத்திலும் முதுமைக்கோடுகள் இலேசாகத் தோன்றியுள்ளன. அவளையும், பிரம்மராயரையும் சேர்த்துப் பார்க்கும் எவரும் அவருக்கும் அவளுக்கும் பதிமூன்று வயது வித்தியாசம் என்று சொல்லாது, நான்கிலிருந்து ஆறு வரைதான் மதிப்பிடுவர்.

அவளைப் பார்த்ததும் இராஜேந்திரரின் நெஞ்சு நெகிழ்கிறது. சிவத்தொண்டில் வாழ்நாளைக் கழித்துவரும் அவளைக் காணும்போது நெஞ்சில் ஏதோ அடைக்கிறது. அவளே தெரிந்தெடுத்துக்கொண்ட ஏழ்மை வாழ்வுதான் என மனதைத் தேற்றிகொண்டாலும், அம்மங்கையையும் அவளையும் ஒன்றாகக் காணும்போது அருள்மொழிநங்கைக்குத் தான் ஏதோ ஒரு குறை வைத்ததாகத் தோன்றும்.

அம்மங்கையின் பகட்டும், அருள்மொழிநங்கையின் எளிமையும் மாறுபாடாகத்தான் இருக்கும். நங்கையின் முகத்தில் நிலவும் அமைதியும் நிறைவும், அம்மங்கையின் முகத்தில் ஒருபோதும் தென்படாது. எப்பொழுதும் எதையோ குறைந்துகொள்வதைப்போல அவளது முகத்தோற்றம் காட்டும். அவளிடம் இருந்த குழந்தைத்தனமும், குறுகுறுப்பும் நரேந்திரனை மணந்து சில ஆண்டுகளில் மறைந்து வருவதையும், அதேசமயம் அருள்மொழிநங்கையின் தோற்றத்தில் அருட்களையும், நிறைவும் கூடிவருவதையும் இராஜேந்திரர் கவனிக்காமல் இல்லை.

எந்த மகள் எளிய வாழ்வு நடத்துகிறாள் என்று குறைப்பட்டுக்கொள்கிறோமோ, அவள் நிறைவுடனும் – அரசியர்க்கு உரிய பகட்டுடன் இருக்கும் இன்னொரு மகள் எதையோ பறிகொடுத்ததுபோல இருப்பதும் அவருக்கு எதையோ இழந்ததுபோலத்தான் உள்ளது.

நரேந்திரனுக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தது தவறோ என்றுகூட சிலசமயம் எண்ணுவதுண்டு. ஆனால், ஒருபொழுதும் அருள்மொழிநங்கையின் திருமணத்தைப்பற்றி அவ்வாறு நினைக்கத் தோன்றியதே இல்லை. அவளது மகனான மறையன் அருள்மொழியும் சிறந்த வீரனாகப் புகழ்பெற்று விளங்குவது பெருமையாகத்தான் இருக்கிறது.

ஐந்து அகவை நிரம்பிய இராஜேந்திர நரேந்திரன் – அம்மங்கை – இராஜராஜ நரேந்திரனின் புதல்வன் – பிறந்ததிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்தில்தான் வளர்ந்து வருகிறான்.  அவனது காலில் இருக்கும் கோடுகளைக் கண்ட சோதிடர், அவன் பெரிய மன்னனாக ஆட்சி செய்வான் என்றதும் மகாராணி திருபுவன மகாதேவிக்கு மட்டுமல்லாது, இராஜேந்திரருக்கும் மிக மகிழ்வாகவே இருந்தது. தந்தைபோல் இல்லாது, அவனாவது சிறந்த வீரனாகக் கலிங்கம், வங்கம் இன்னும் நடுநாடுகளையும் தன் குடைக்குக் கீழ் கொணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெண்ணி மகிழ்வதும் உண்டு.

அதேசமயம், மறையன் அருள்மொழி அரசுரிமை ஏற்கக்கூடாது என்று கண்டிப்பாகப் பிரம்மராயரும், அருள்மொழிநங்கையும் சொல்லிவருவது அவருக்கு அவ்வளவு ஏற்புடையதாகப்படவில்லை. அவன் கருநாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் எண்ணுவார். அங்குசென்ற ஆறு திங்களிலேயே கன்னட மொழியைப் பேசக் கற்றுக்கொண்டான் என்று அருள்மொழிநங்கை சொன்னபோது அவ்வெண்ணம் தோன்றியது. ஆனாலும், பிரம்மராயரின் குணம் தெரிந்ததால், அந்த எண்ணத்திற்கு அணை போட்டு வருகிறார்.

"அரசே, நாடியில் சிறிதளவு தெளிவு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியே நிலைமை தேறிவந்தால் நீங்கள் ஓடியாடி விளையாடத் தொடங்கிவிடுவீர்கள்" என்று வாயெல்லாம் பல்லாகத் தெரிவிக்கிறார் அரச மருத்துவர்.

"மருத்துவரே, உமது மருந்தால் எமது நிலை தேறவில்லை. எமது நண்பருடன் பேசியதுதான் அஞ்சனமாகத் தேற்றியிருக்கிறது" என்று இராஜேந்திரர் சிரிக்கிறார்.

"அப்படியானால் இவர் எப்பொழுதும் உங்கள் அருகிலேயே இருக்கட்டும் தந்தையே" என்று பரிவுடன் கூறுகிறாள் அருள்மொழிநங்கை.

மெல்லத் தலையாட்டுகிறார் இராஜேந்திரர்.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com