பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 14

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 14

ஒரு அரிசோனன்

பெருவுடையார் கோவில் பூங்கா, கங்கைகொண்ட சோழபுரம் 

கர, மார்கழி 25 – ஜனவரி 10, 1052 

டாண் டாண் என்று பெருவுடையார் கோவில் மணி ஓசையெழுப்புவது பூங்காவின் மர விசுப்பலகையில் அமர்ந்திருக்கும் மூவரின் காதுகளிலும் விழுகிறது. கிட்டத்தட்ட ஒரு நாழிகைக்கும் மேலாகவே அவர்கள் மூவரும் தணிந்தகுரலில் உரையாடுகின்றனர். 

"எனக்கு வேறுவழி தெரியவில்லை பிரம்மராயரே! நீரும் கடந்த ஆறாண்டுகளாக முயன்று பார்த்துவிட்டீர். இருப்பினும் எனது இரு மைந்தர்களும் சோழர்க்குரிய வீரத்தை, என் இளையோன் இராஜேந்திரதேவனின் புதல்வன் இராஜமகேந்திரன் போரில் காட்டிய திறமையில் பத்தில் ஒருபங்கைக்கூட இன்னும் எனக்குக் காட்டவில்லை. அதுமட்டுமா?  போருக்குச் செல்லவும் மறுத்துவருகின்றனர். விஜயாலயசோழர் வழிவந்த இவர்கள் இப்படிச் சொல்வதைக் கேட்டபோதே என் உயிர் போயிருக்கக்கூடாதா என வருந்தினேன். 

"அப்படி இருக்கையில், இன்னும் பட்டத்து இளவரசாக எவருக்கும் முடிசூட்டாவிட்டால் அது சோழநாட்டுக்குச் செய்யும் துரோகமாகத்தான் இருக்கும். ஆகையால், எனக்குப் பிறகு இளையவன் இராஜேந்திரதேவனும், அவனது வழித்தோன்றல்களுமே இச்சோணாட்டை ஆளும் திறன்பெற்றவர் என்று தீர்மானித்துவிட்டேன்!" எனத் தன் திட்டவட்டமான முடிவை பிரம்மராயருக்கு இராஜாதிராஜன் அறிவிக்கிறான். 

ஐம்பத்தைந்து அகவையை எட்டவிருக்கும் அவன் வாயில் தனக்குப் பிறகு என்ற சொற்கள் வருவானேன் என்று அவனது தமக்கை அருள்மொழிநங்கை கவலையுறுகிறாள். 

"இராஜாதிராஜா, நீ சோழ வளநாட்டின் வருங்காலத்தைக் கருத்தில்வைத்து இம்முடிவை எடுத்திருப்பது எனக்குப் பெருமையாக இருப்பினும், மாவீரனான உனது வழித்தோன்றல்கள் சோழ அரியணையில் ஏற இயலாது போகிறதே என்ற துயரம் எனக்கே மிகுதியாக இருக்கும்போது, உன் நெஞ்சம் எப்படித் துயருறும் என்பதை நன்கு உணர முடிகிறதடா! உன் புதல்வரின் குறைகள்தான் என்ன?" என்ற அருள்மொழிநங்கை, பிரம்மராயரைச் சுட்டி, "இவர் எவ்வளவு முயன்றாலும் பயனில்லாது போகிறதே! அவர்களுக்குக் குருதியைக் கண்டாலே வயிற்றைப் புரட்டுகிறது என்று இவர் சொன்னதைக் கேட்டதும் மனதொடிந்து விட்டதடா!  சோழ அரசகுமாரிகளே குருதியைக் கண்டு கலங்கார். அப்படியிருக்க, இவர்கள் எப்படி?" என்றவள், பிரம்மராயர் பக்கம் திரும்பி, "அவர்களுக்கு ஆறாண்டுகளாகப் போர்ப் பயிற்சி அளிக்கிறீர்கள். அவர்களின் இந்நிலைக்குக் காரணம் என்ன?" என்று வினவுகிறாள். 

"நங்கை! வாட்போரிலும், விற்போரிலும் என் பயிற்சியை ஏற்று நன்றாகத்தான் விளங்கினர் அவ்விரட்டையர். ஒருமுறை பயிற்சியின்போது மூத்தவனின் வாள் இளையவனைச் சிராய்த்து இரத்தம் வழிந்தது. அதைக் கண்டதும், இளையவன் துடித்துப்போய், வாளைத் தூக்கியெறிந்து, மங்கையர் போல அழத் தொடங்கினான். இருபது அகவையான அவனை அமைதிப்படுத்த நான் பட்ட பாடு…" என்ற பிரம்மராயர், இராஜாதிராஜனின் முகம் தாங்கொணாத் துயரத்தில் வாடுவதைக் கண்ணுறுகிறார். அவன் உதட்டைக் கடித்துத் தன்னிலைக்கு வருகிறான். 

"கடந்த ஐந்தாண்டுகளாக நானும் படாதபாடு பட்டுத்தான் பார்க்கிறேன். அவ்விரட்டையர் எழுத்தறிவில், கல்வியில் காட்டும் நாட்டத்தை, மறத்தில் காட்ட மறுக்கின்றனர்.  மங்கையர் மீதும் அவர்களின் நாட்டம் செல்வதில்லை. எனவே, அவர்கள்…" என்றவர், மேலே தொடராமல் நிறுத்தி விடுகிறார். 

"என்ன சொல்கிறீர்கள்?" இருவரும் திடுக்கிட்டுக் கேட்கின்றனர். இராஜாதிராஜனின் முகத்தில் அவமானமும், நம்பிக்கையின்மையும் தாண்டவமாடுகிறது. அருள்மொழிநங்கையின் விழிகள் பெரிதாக விரிகின்றன; திறந்த வாயைக் கை மூடுகிறது. அவர்கள் நினைப்பது சரிதான் என்பது போலப் பிரம்மராயர் தலையை மெல்ல மேலும் கீழும் ஆட்டுகிறார். 

"அரச நீதிப்படி அவர்கள் இருவரையும் போரிட அனுமதிக்கலாது இராஜாதிராஜா! எனக்கே இது சில நாட்கள் முன்புதான் தெரிந்தது. அந்நாளில் நடந்தது இதுதான்:  திரும்பத் திரும்பச் சொல்லியும் அவர்கள் இருவரும் என்னுடன் வாட்போரிட மறுத்ததால் எழுந்த சினத்தில், 'ஆண்களா நீங்கள்/ சீலையை அணிந்துகொள்ளுங்கள்' என்று கத்தினேன். அதைக் கேட்டதும், இருவரின் கண்களிலும் நீர்ப் பெருக்கெடுத்தது. 'அதைக்கூடச் செய்ய இயலாது இப்படிப் பிறந்து விட்டோமே, யாரிடம் சொல்வோம் ஆசானே?' என்று கதறி அழுதனர்." 

அந்நிகழ்வை எண்ணி அவலமுற்றவர் மீண்டும் தொடர்கிறார்: "நான் என் வாளைக் கீழே எறிந்து அதிர்ந்துபோய் அமர்ந்துவிட்டேன். தங்கள் நிலையை உணர்ந்தே, அரச நீதி பிறழக்கூடாது என்றே போருக்குச்செல்ல இதுவரை மறுத்து வந்திருக்கிறார்கள். அதற்காக தம்மைக் குருதியைக் கண்டால் மயங்கும் கோழைகளாகவும் காட்டிவந்திருக்கிறார்கள். எந்த அரச நீதிப்படி அவர்கள் போரிட இயலாதோ, அதே அரச நீதிப்படி அவர்கள் அரசாளவும்கூடாது32 என்ற இவ்வுண்மையை உன்னிடமிருந்து மறைப்பது அரசத் துரோகம் என்றுதான் தற்பொழுது இதை உனக்கு எடுத்துரைக்கிறேன்" என்கிறார் பிரம்மராயர். 

"எப்படி பிரம்மராயரே? அவர்களின் நிலை இருபத்தைந்தாண்டுகளாக எப்படி என்னிடமிருந்து மறைக்கப்பட்டது?  எனது அரண்மனையில் வசிக்கும் எனது மைந்தர்களைப் பற்றியே என்னால் அறிந்துகொள்ள முடியாதுபோனால், இப்பரந்த சோழப்பேரரசில் எனது எதிரிகள் தீட்டும் சதித் திட்டத்தை எப்படி அறிந்துகொள்வேன்? என் மனைவிக்கு இது தெரியாமலா இருந்திருக்கும்? முவ்வுலக மாதேவி என அழைக்கப்படும் அவளுமா இப்படி?" எனக் குமுறுகிறான் இராஜாதிராஜன். இருவருக்கும் அவனது வேதனை தெரிகிறது, புரிகிறது. 

அவனைச் சமாதனப்படுத்தும் வகையில் இதமாக, "நீ குமுறுவதில் நியாயம் இருந்தாலும் நான் உரைக்கும் உண்மையையும் சிறிது சிந்தித்துப்பார். உன் மனைவியை நீ குறை கூறுவது, சோழ அரசியாக அவர்கள் செயல்படவில்லை என நினைப்பதால்தான். அவர்கள் அப்படிச்செய்தது ஒரு கண்ணோட்டத்தில் தவறுதான். உன் மைந்தர்களின் உண்மை நிலை உனக்குத் தெரிந்தால் – இப்படிப்பட்ட புதல்வருக்கு நீ தந்தையானாயே என்ற பழிச்சொல் காலங்காலமாக உன்னைத் தொடரக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் சோழநாட்டுப் பேரரசியாகவே அவர்கள் இந்த முடிவை எடுத்துச் செயலாற்றி இருக்கலாமல்லவா? உன் மனம் வருந்தக்கூடாது, உனக்குப் பழி வந்துசேரக் கூடாது என்று எடுத்த முடிவினால் தோன்றிய இவ்வேதனையைத் தனியாக அவர்கள் நெஞ்சில் சுமந்து, அந்த வலிக்கொடுமையால் இளம்வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்" என்ற பிரம்மராயர், சற்று நிறுத்திவிட்டு மேலும் தொடர்கிறார்: 

"ஒரு தாயின் நிலையில் இருந்து சிந்தித்துப்பார்! மகாராணியாரோ, இவ்வுண்மையை அறிந்த வேறுயாருமோ, அவ்வுண்மையை உன் காதில்விழாது பார்த்துக்கொண்ட காரணம், உன் புதல்வரின் உயிரைப் பாதுகாக்கத்தான்33 என்பது உள்ளங்கை நெல்லிக்காயாக விளங்கும்.  ஆகையால், உண்மையை மறைத்தவரைத் தேடித்திரிந்து தண்டனையளிக்கும் நோக்கத்தைக் கைவிடுவாயாக! உனது மைந்தர்களைத் துறவறம் பூணுமாறு இயம்பியிருக்கிறேன். அவர்கள் இறுதிவரை ஆண்மக்களாகவே புறவுலகுக்குத் தெரிந்துவிட்டுப் போகட்டும். நம் மூவருக்கும் தெரிந்த இவ்விரகசியம் நம்முடனேயே புதைந்து போகட்டும்!" தன் குரலில் எவ்வித உணர்வையும் காட்டாது பிரம்மராயர் மறைத்துக்கொள்கிறார். 

அருள்மொழிநங்கை தன் இளையோனைத் தன் தோளில் சாய்த்துக்கொள்கிறாள். மாவீரனான அவனுக்கு இப்படியொரு அவநிலை ஏற்பட்டதற்குக் காரணம், முன்வினைப் பயனேயன்றி வேறொன்றுமில்லை என இதமான மொழிகளால் அவனைத் தேற்றுகிறாள். தமக்கையின் அணைப்பிலிருந்து இராஜாதிராஜன் மெல்லத் தன்னை விடுவித்துக்கொள்கிறான். 

[32.தன் மைந்தருக்கு இராஜாதிராஜன் இளவரசுப்பட்டம் கட்டாததற்கு கதாசிரியாராகக் கற்பித்துக்கொண்ட கற்பனைக் காரணம் இது.  இதற்குச் சான்றுகள் எதுவுமில்லை. இது தவறென்று வாசகர்கள் எண்ணினால் என்னை மன்னிப்பார்களாக! எப்பொழுதும் படையை முன்னின்று நடத்திய மாவீரனான இராஜாதிராஜனின் தோன்றல்கள் பட்டது இளவரசர்கள் ஆகாததற்கு இதைத் தவிர வேறெந்தக் காரணத்தையும் கற்பிக்க இயலைவில்லை.

33.பொதுவாக, வீரர் குடிப்பிறந்தோர், தம் மக்கள் திருநங்கைகள் என்றறிந்தால், இழிசொல்லிலிருந்து விடுபட அக்குழவிகளைக் கொன்றுவிடுவது பழங்கால மரபு.]

"நன்றி, பிரம்மராயரே, மிக்க நன்றி! எம்மை அவச்சொல்லிலிருந்து காப்பாற்ற நீர் இயம்பிய வழிக்கு யாம் தலைசாய்க்கிறோம். உடனே எம் மக்கள் துறவறம் பூண வழிவகுப்பீராக. வரும் வைகாசியில் எமது இளையோன் இராஜந்திரதேவனை பட்டத்து இளவரசாக முடிசூட்டுவோமாக. 

எமது முப்பாட்டனார் கண்டராதித்தசோழரின் இளையோன் அரிஞ்சயசோழரின் வழித்தோன்றலான ஆதித்த கரிகாலரின் இளையோரான இராஜராஜசோழரின் வழித்தோன்றல்கள்தாமே யாம்? அதுபோன்று எமது இளையோனான இராஜேந்திரதேவனும், அவனது வழித்தோன்றல்கள் சோணாட்டை ஆள்வதற்கு முன்னிகழ்வுதான் எமது பரம்பரையிலேயே உள்ளதே!" என்று தன் வேதனைக்குத் திரையிட்டுச் சிரித்தவாறே, அரசகட்டளையைப் பிரம்மராயருக்கு அறிவிக்கிறான். 

"அப்படியே செய்துவிடலாம் அரசே!  தாங்கள் மனதைத் தளரவிடலாகாது" என்று பிரம்மராயர் பதிலளிக்கிறார். 

"எமது நோக்கு சோழநாட்டின் எதிர்காலத்தைப் பற்றியதே. எமது மைந்தர்கள் வாளெடுக்கும் உரிமையற்றவர்களாகப் பிறந்தும், அதற்கு அஞ்சும் கோழைகளாக இல்லாது, அரச நீதிக்குத் தலைசாய்த்துத் தங்களைக் கோழைகளாகக் காட்டிக்கொள்ளத் தயங்காமலிருந்தார்களே, அதுவும் ஒருவிதத்தில் பெருவுடையாரின் கருணையே என்று அமைதிகொள்கிறேன்!" என்று கோவில் கோபுரத்தைநோக்கிக் கைகூப்புகிறான். 

தனது கேவல் வெளிவராவண்ணம் உள்ளங்கையை மடித்து வாயை அடைத்துக்கொள்கிறாள் அருள்மொழிநங்கை. 

திருப்பூவனம், பாண்டிநாடு 

கர, தை 5 – ஜனவரி 18, 1052 

டிக் டிக் டிக் என்று பல்லி ஒலியெழுப்புவதைக் கேட்டவாறு சொக்கனின் மனைவி மீனாட்சி சமையல் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருக்கிறாள். அவளது மாமியார் வள்ளியம்மை இறந்து இரண்டாண்டுகள் சென்று விட்டன.   

அவள் எப்பொழுதும் தன்னைக் குறைகூறிக்கொண்டிருந்தாலும், அண்ணன் மகளான தன்னிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள் என்பதும், அத்தை என்ற உரிமையுடன்தான் இறுதிவரை தன்னுடன் பழகிவந்தாள் என்பதும் மீனாட்சிக்கு நன்றாகவே தெரியும். தாயின் மறைவு தன் கணவன் சொக்கனை எந்த அளவுக்குப் பாதித்திருந்தது என்பதையும் அவள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறாள். 

எட்டு வயதான அவள் மகள் முத்துராக்கி அவளுக்கு உதவியாக அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் வெஞ்சினக் குழம்பின் காய்கறிகளைக் கிளறுகிறாள். இன்னும் இரண்டு நாழிகைக்குள் சொக்கன் அவர்களின் ஐந்து மகன்களுடன் பசியாற வந்துவிடுவான்.  சோதனையாக இன்று உணவாக்கி முடியவில்லை. பக்கத்தில் இன்னொரு அடுப்பில் மண்சட்டியில் சோறு கொதிக்கிறது. பரபரப்புடன் கை வேலை செய்கிறது. 

இரண்டு நாழிகைகளும் அவளுக்காக நிற்காமல் ஓடிப்போகின்றன. வாசலில் ஆளரவம் கேட்கிறது. 

கட்டிளங்காளையான முதல்மகன் முத்துவீரன் சொக்கனுடன் பேசியவாறே உள்நுழைகிறான்.  அவன் முகம் மகிழ்ச்சியில் பெரிதாக விரிந்திருக்கிறது. அவர்களைப் பின்தொடர்ந்து மற்ற மகன்களான முத்துக்கருப்பன், முத்துராக்கன், செல்லக்கண்ணன், அழகுசுந்தரம் ஆகியோர் வருகின்றனர். பத்தொன்பது வயதான முத்துவீரனுக்குப் பிறகு ஒரொரு வயது இடைவெளியில் பிறந்தவர்கள்தானே அவர்கள்! 

"என்ன பிள்ளே, மீனாச்சி, வெஞ்சினம் வாடை மூக்கைத் துளைக்குதே. சோறு துண்ணலாமா?  ஒரே பசியா இருக்கு" என்றபடி வருகிறான் சொக்கன். 

"குளிக்காம, அப்படியே சோத்தைத் துண்ணப் போறீகளாக்கும்?" என்று பதிலுக்குக் கேட்கிறாள் மீனாட்சி. சமையல் முடிந்துவிட்ட நிம்மதியில் தன் கணவனை விரட்டுகிறாள். 

"அதென்ன அப்புடிக் கேட்டுப்புட்டே புள்ளே?  மழை பெஞ்சு ஆத்துல தண்ணி ஓடுதுல்ல; முழுகிக் குளிச்சுப்புட்டுத்தான் வாரோம். அடிக்கற வெய்யில்ல தலை காஞ்சு போயிட்டுது.  நீஞ்சிக் குளிச்சதால் பசி ஏகமா ஏறிப்பூட்டுது. ஒரு பானை சோத்தையும் தின்னுப்புடலாம் போலல்ல பசியெடுக்குது?" 

நாக்கைச் சப்புக்கொட்டியபடி சுவற்றில் சாய்த்து வைத்திருந்த பலகையை எடுத்துப் போட்டுக்கொண்டு அமருகிறான். மகன்களும் தத்தம் பலகைகளை எடுத்துபோட்டு அதன் மீது அமருகிறார்கள். 

ஒன்றுமே பேசாமல் முத்துராக்கி, பரம்பரை வெள்ளித் தட்டைத் தன் தகப்பனுக்கும், வாழை இலைகளைத் தன் அண்ணன்மாருக்கும் எடுத்து வைக்கிறாள். 

"என்ன புள்ளே, மீனாச்சி, ஒண்ணுமே பேசமாட்டேங்கறே? பேசினா முத்து உதுந்து போயிடுமாக்கும்?" எனத் தன் மனைவியைச் சீண்டுகிறான் சொக்கன். 

"ஆமாம், நீங்கதான் பாண்டிய மகராசா கொடுத்த மானியத்துல முத்தும் மணியும் வாங்கித் தங்கத்துல மாலை வாங்கிப் போட்டுருக்கீங்கல்ல, அதுதான் உதுந்து போயிடுமோன்னு பயமா இருக்குது சாமி! ஒண்டி ஆளா எட்டுப் பேருக்கு வடிச்சுக் கொட்டறது எவ்வளவு தும்பமின்னு இந்த மனுசனுக்கா தெரியுது? மருமகளுக வந்தா எனக்கும் சவுரியமா இருக்குமில்ல?  முத்துவீரப்பனுக்குக் கண்ணாலம் கட்டிவச்சாத்தானே மத்தப் பசங்களுக்கும் கண்ணாலம் கட்டலாம்? எத்தன தபாதான் இந்த மனுசனுக்கு நான் சொல்லி அலுக்கறது? அயித்தை போனதுக்கப்பறம் இந்த மனுசன் யாரு சொல்லறதைக் காதுல போட்டுக்கிடறாரு?" என்று சொக்கன் காதில் விழும்படி அங்கலாய்த்துக்கொண்டே மீனாட்சி சோற்றைப் பரிமாற ஆரம்பிக்கிறாள். 

"ஆரம்பிச்சுட்டியா? என் தங்கச்சிக்கு என்ன பொண்ணா இருக்கு, உம் பொட்டப்பிள்ளய எம் மயனுக்குக் கட்டிக்கொடுன்னு கேக்குறதுக்கு? அவதான் நம்ம பொண்ணை தன் மயனுக்குக் கட்டிவச்சுடறேன்னு வாக்குக் கொடுத்துட்டாள்ல? பொழுதுபோனா இதே ரோதனையாத்தான் இருக்கு உங்கூட" என எரிந்துவிழுகிறான் சொக்கன். 

"இதென்ன, நாக்குமேல பல்லைப்போட்டு பேசுறீக? என் அண்ணனுக்குத்தான் மூணு பொட்டப்புள்ளைங்க இருக்காங்கல்ல, அதுல ரெண்டை முத்துவீரப்பனுக்குக் கட்டிவச்சா என்னவாம்? ஒண்ணுக்கு ரெண்டா எனக்கு ஒத்தாசையா இருந்துட்டுப் போகுமில்ல?" என்று தன் விருப்பத்தை மீனாட்சி தெரிவிக்கிறாள். 

"அடி சக்கை!  சுப்பிரமணிய சாமி மாதிரி இவனுக்கு ரெண்டு பொண்டாட்டியா? நானே நீ ஒத்தியத்தான புள்ளே கட்டிக் குடுத்தனம் செய்துக்கிட்டிருக்கேன்? என் அப்பனோ, நானோ ஒத்தப் பொண்டாட்டியோட இருக்கறச்ச இந்தப்பயலுக்கு ரெட்டப் பொண்டாட்டி கேக்குதோ?" 

அவள் மனதில் இருப்பதை அறிந்துகொண்ட சொக்கனின் குரலில் கேலி தொனிக்கிறது. 

"எல்லாத்தையும் ஒடச்சுச் சொன்னாத்தான் ஒங்க மண்டையில ஏறுமாக்கும்?" என்று மீனாட்சி விறைக்கிறாள். அவள் புருவங்கள் வில்லாக ஏறி வளைகின்றன. அவள் பார்வை அவனைத் துளைக்கிறது. 

"இப்ப நான் என்ன கேட்டுப்புட்டேன்னு புள்ளே, உடச்சுச் சொல்லலுணுமான்னு கேக்குறே?" 

"ஏங்க, என் அண்ணன்தான் சோழராஜாகூட நடந்த சண்டைல போய்ச்சேர்ந்துட்டாரே! அப்பன் இல்லாமத்தானே என் அண்ணன் புள்ளைங்க வளந்து வருதுங்க?  நமக்கு இருக்கற மாதிரி மதனிக்கு ராசா கொடுத்த மானியமா இருக்கு? அத்த விட்டுத் தள்ளுங்க; நடந்த சண்டயில நம்ம மறவர்குடி ஆம்பளைங்க எத்தனபேரு அல்பாயுசில செத்துப் போயிட்டாங்க. நாட்டுல ஆம்புளப் புள்ளங்க சனத்தொகையே கொறஞ்சுல்ல போயிட்டுது. பசங்களத் தேடி என் மதனி எங்கிட்டு அலையும்? அதுதான் என் அண்ணன் புள்ளைங்க ரெண்டையாவது கரைசேர்க்கலாமின்னு நெனைக்கறேன், இப்படி ஒடச்சுச் சொன்னாத்தான் புரியுமாக்கும்?" என்று பொரிந்து தள்ளுகிறாள். 

"சரி புள்ளே, ஒன் இசுட்டப்படியே செய்துப்புடுவோம்" என்றபடி ஒரு சொம்பு தண்ணீரையும் கடகடவென்று குடித்த சொக்கன், முத்துவீரப்பன் பக்கம் திரும்பி, "எலே, ரெண்டு பொண்டாட்டி கட்ட ஒனக்கு சம்மதமாடா?" என்று கேட்கிறான். 

தாய் தந்தையரின் விவாதத்தில் மாட்டிக்கொள்ள விரும்பாத முத்துவீரப்பன், இவர்கள் பேசுவது எதுவும் தன் செவிகளில் விழாததுபோல உணவிலேயே கவனத்தைச் செலுத்துகிறான். 

"அவனை என்ன கேக்குறதுங்கறேன்? அண்ணன் புள்ளைங்கள ஒவ்வொரு பக்கமும் ஒக்காற வச்சுத் தாலியக் கட்டுடான்னா, கட்டிப்புட்டுப் போறான்! இவன் கவலை தீர்ந்துது. இவனை மொறைப்பொண்களுக்குக் கண்ணாலம் பேசிக் கட்டிப்புட்டா, கவலையில்லாம முத்துக்கருப்பனுக்கும், முத்துராக்கனுக்கும் இனிமே பொண்ணு பார்க்கலாம்" என்று தன்னுடைய கவலை தீர்ந்ததைப்பற்றி மகிழ்கிறாள் மீனாட்சி. 

"ஓன் கவலை தீந்துபோச்சு. எனக்குத்தான்…" என்று தனக்குள் இருப்பதை வாய்விட்டுச் சொல்லிக்கொள்கிறான் சொக்கன்.  அவன் முகத்தில் ஓடும் கோடுகள் அவனது உள்ளப்புழுக்கத்தை வெளிக்காட்டுகின்றன. 

"ஒங்களுக்கு என்ன கவலை? ராசகுமாரரத்தான் கவனமாப் பார்த்துக்கிட்டுருக்கிங்கல்ல?" என்று மீனாட்சி வினவுகிறாள். 

"அவரைப் பார்த்தாத்தான் புள்ளே ரொம்பக் கண்ராவியா இருக்கு. மதுரயில் சிம்மாசனுத்துல ஒக்காந்து பாண்டியநாட்டை ராசாங்கம் செய்யவேண்டிய நம்ம ராசா இந்தத் திருப்பூவனக் காட்டுல சோழங்க கண்ணுல படாம மறஞ்சு வாழறது நல்லாவா இருக்கு? இந்த லச்சணத்துல மதுரயில சோழராசா ஒருத்தரு பாண்டியராசான்னு பேரை வச்சுக்கிட்டு ராசாங்கம் பண்ணிக்கிட்டு இருக்காரு. நம்ம ராசா கண்ணாலம் கட்டிக்கிட்டு ரெண்டு மயன்களைப் பெத்திருந்தாலும், அவரு மனசு என்னமாத் தெரியுமா புழுங்கிக்கிட்டு இருக்கு? விக்கிரமராசா போனதுக்கப்பறம் இலங்கையிலேந்தும் ஒரு ஒதவியும் இல்ல. சரியான சமயம் வரட்டும் புள்ளே! மதுர நம்ம கைக்கு வந்துசேந்துடும்" என்று தன் ஆற்றாமையை வெளிக்கொட்டுகிறான் சொக்கன். 

"இப்பிடியேதான் எட்டு வருசமா பொலம்பிக்கிட்டு இருக்கீங்க. எப்பத்தான் நம்ப பொலம்பல் மேக்கால மதுரல இருக்கற சொக்கநாதர், மீனாச்சி காதுல வுளுகப்போகுதோ, நம்ம மதுர நமக்கு எப்பக் கெடைக்கப் போகுதோ, நாம எப்ப மானத்தோட நிமிந்து நிக்கப்போறோமோ, தெரியலயே!" என்று கணவனுடன் சேர்ந்து வருந்துகிறாள் பாண்டிய வீராங்கனை மீனாட்சி. 

கோதாவரி ஆற்றங்கரை, வேங்கைநாடு 

கர, மாசி 15 – பிப்ரவரி 27, 1052 

டும், டும் என்று கொட்டு முழங்குகிறது. மயானத்தில் நின்றிருக்கும் இராஜராஜ நரேந்திரனின் கண்களில் நீர் பெருகுகிறது.   

ஆறு ஆண்டுகள்தான்! அதற்குள் அவனது ஆசானான நன்னைய பட்டாரகர்தான் எவ்வளவு சாதித்து விட்டார்! 

தெலுங்கு மொழிக்குச் சம்ஸ்கிருத ஒலிகளை எழுதக்கூடிய எழுத்துக்களை வடிவமைத்ததோடு மட்டுமன்றி, அம்மொழியில் மகாபாரதத்தையும் காவியமாக, வடமொழி அதிகம் கலந்து இயற்றத் தொடங்கினாரே! தெலுங்கை ஒரு திராவிட பாஷையாக மட்டுமே யாரும் கருதிவிடக்கூடாது – அப்படிக் கருதாமலிருப்பதற்குச் சம்ஸ்கிருதச் சொற்கள் தெலுங்கில் அதிகம் இருக்க வேண்டும் என்றல்லவா முனைந்து முனைந்து சொற்களைப் புகுத்தினார்!  அதற்கு எப்படிப்பட்ட யுக்திகளையெல்லாம் கையாண்டார்? 

அவர் எழுதிய மகாபாரதத்தின் மூன்று பர்வங்களையும் படித்துச் சொல்லச்சொல்ல, அவர் பொழிந்த தெலுங்குக் கவிதை வெள்ளத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாக நீந்திக் களித்தான்!  அப்படிப் பெருக்கெடுத்தோடிய ஆனந்த வெள்ளம் திடுமென்று ஒன்றுமில்லாது வற்றிப் போய்விட்டதே! அவரது பணி முடியுமட்டும் பொறுக்காமல் அவரை அழைத்துச்செல்ல காலனுக்கு அப்படியென்ன அவசரமோ? 

நன்னைய்ய பட்டாரகரும் நிறைவான வாழ்க்கைதான் வாழ்ந்து முடித்தார். அவர் தன் இரு கண்களாகப் போற்றிய சம்ஸ்கிருதமும், தெலுங்கும் வேங்கைநாட்டில் உயரமான பீடத்தில் ஏறப்படுவதற்குத் தன்னை ஆச்சாரியனாக மதித்து இராஜராஜ நரேந்திரனால் போற்றபட்டதால் அவரும் எவ்வளவு உவகையடைந்தார்! 

அவருக்கும் அவரது வழித்தோன்றல்களுக்கும் ஏழு பரம்பரைக்குமேல் வரும் அளவுக்கு அவன் அளித்த மானியங்களை எவ்வளவு மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்? ஒருநாள் மகாபாரதத்தை விரிவுரை செய்யும்போது நெஞ்சுவலி என்று சாய்ந்தவர்தான் – இரண்டு மணித்துளிகளுக்குள்ளேயே தினமும் துதித்துவரும் உமாமகேஸ்வரனிடமல்லவா போய்ச் சேர்ந்துவிட்டார்! 

அவர் இறுதியாகச் சொன்ன சொற்கள், 'ராஜய்யா, உனக்குக் கொடுத்த சத்யத்தை முழுக்க முடிக்காமல் போகிறேனே, என்னை மன்னித்து விடய்யா' என்பதுதானே! 

நரேந்திரனின் நெஞ்சம் கனக்கிறது. அவருக்கு இணையான ஆசான் இனி வேறு எவர் கிடைப்பர்? 

அவரது சிதைக்கு நெருப்பிடப்படுவதை நோக்குகிறான். அவருடன் தன் கனவுகளும் எரிந்து சாம்பலாகுமோ என்ற ஐயமும் அவனுள் எழுகிறது. இருக்காது, தெலுங்கு வளர்வதற்கு நல்லதொரு அடிக்கல்லை இட்டுவிட்டோம் என்று அவன் மனம் உறுதிகொள்கிறது. 

"பாட்டனார் இராஜராஜருக்கும், மாமன் இராஜேந்திரருக்கும் இல்லாத செல்வாக்கு, ஆள் பணபலமா என்னிடம் உள்ளது? அவரது திருப்பணி நிறைவேறுவதற்கு என் ஒருவனாலேயே இவ்வளவு தடைபோட இயலுமானால், எனது முயற்சி வெற்றிபெறுமா? என் மைத்துனன் இராஜாதிராஜன் படைபலத்துடன் வந்தால் என்ன செய்வானோ?" என்றும் அஞ்சுகிறான். 

அவனது அச்சத்திற்கும் காரணம் இருக்கிறது. 

அகவமல்லன் என்றழைக்கப்படும் சோமேஸ்வரன், மேலைச்சளுக்கிய அரியணையில் ஏறியதுமே மிகவும் தொல்லைகொடுக்கத் தொடங்கியுள்ளான். ஆறாண்டுகளுக்கு முன்னர் இராஜாதிராஜன் பெரும்படையுடன் வந்து, வேங்கைநாட்டை விடுவித்து, சோமேஸ்வரனை அவனது தலைநகர் கல்யாணபுரத்திலிருந்து (கல்யாணி) விரட்டியடித்துச் சென்றாலும், அவன் ஓயவில்லை. 

இரண்டாண்டுகளுக்கு முன்னர் கல்யாணபுரத்தை மீட்டுக்கொண்டதோடு, வேங்கைநாட்டின்மீதும் அல்லவா படையெடுத்து வந்தான்! அவனுக்குக் கப்பம் கட்டிவருகிறேன் என்று சரணடைந்ததும்தானே தன்னையும், தன் அரசையும் விட்டுச்சென்றான்! 

ஒருவகையில் தொந்திரவில்லாது தெலுங்கை வேங்கைநாட்டு அரியணையில் அமர்த்தித் தன் அரண்மனையில் ஒலிக்கவிடாது தமிழை ஒழித்ததும் நிறைவாகத்தான் உள்ளது. 

அதனால் வெறுப்புற்ற அம்மங்கை தன்னுடன் பேசுவதையே நிறுத்தி வைத்திருக்கிறாள்.  தன் மகன் இராஜேந்திர நரேந்திரனையும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கல்லவா அனுப்பிவிட்டாள்! அவனும் தமிழை மிகவும் நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டான். தான் எவ்வளவு முயன்றும், நன்னையர் மூலம் எவ்வளவுதான் எடுத்துரைத்தும், அவனது தமிழ்க்கல்வியை நிறுத்தமுடியாது எனத் திட்டவட்டமாக அல்லவா அம்மங்கை அறிவித்துவிட்டாள்! 

தன் தாயையும் மனைவியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் வெவ்வேறானவர்கள் என்று நன்றாகத் தெரிகிறது. அன்னை குந்தவி விமாலாதித்த சளுக்கியனின் மனைவியாகத்தான் வாழ்ந்துவந்தாள். ஆனால், மனைவி அம்மங்கையோ, இன்னும் இராஜேந்திரசோழரின் மகளாகவும், இராஜாதிராஜனின் தங்கையுமாகத்தான் இருந்துவருகிறாள். அவளின் தமிழ்ப்பற்று அவனை வியக்க வைக்கிறது. 

இராஜாதிராஜன் மேலைச்சளுக்கியர் மீது படையெடுத்துவருவானா என்பது கேள்வியே இல்லை; அவன் எப்போது வருவான் என்பதுதான் கேள்வி.  தான் அகவமல்லன் சோமேஸ்வரனுக்குத் திறைசெலுத்தி வருவதை இராஜாதிராஜன் அறியாமலா இருப்பான்? 

அவன் அப்போது கேட்கும் கேள்விக்கு என்ன மறுமொழி கூறித் தப்பிக்க முடியும்?  போன தடவை அவனுடன் வந்த பிரம்மராயன் திரும்பிச்சென்றதும், சோழ அரசு அலுவல்களிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதாகத்தான் செய்தி வந்தது. அவனின் தூண்டுதல் இல்லாத இராஜாதிராஜன் தமிழ்த்திருப்பணி விஷயமாகத் தன்னை எதுவும் கேட்காமலிருந்தால் சரிதான். 

இராஜமகேந்திரபுர அரண்மனையில் மருந்துக்குக்கூடத் தமிழ்பேசுபவர்கள் ஒருவருமில்லை – அம்மங்கையின் பணிப்பெண்கள் சிலரைத் தவிர – என்பதை இராஜாதிராஜன் கவனிக்காமல் போனால் நல்லது என்று தோன்றுகிறது. 

வேங்கைநாடு பந்துபோல மேலைச்சளுக்கியரால் தாக்கப்படாதிருந்தால், தமிழாசிரியர்களின் படையல்லவா, படையெடுத்துவந்து நாட்டைத் தமிழுக்கு அடிமையாக்கி விட்டிருக்கும்?  ஆகவே, ஒருபக்கம் மேலைச்சளுக்கியன் சோமேஸ்வரனைக் கண்டு நரேந்திரன் அஞ்சினாலும், மனதளவில் சிறிது வாழ்த்தவும் வாழ்த்துகிறான். 

அப்படிச் சோமேஸ்வரன் தொல்லை தராதிருந்தால் இராஜாதிராஜன் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் வேங்கைநாட்டுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாக அவனுடன் போரா புரிந்திருப்பான்?  பிரம்மராயன் தன் திட்டத்தை இராஜாதிராஜன் மூலமாக நிறைவேற்றியல்லவா இருப்பான்? 

இன்னொரு வகையில் நோக்கினால் பாண்டியருக்கும், சிங்களருக்கும்கூட அவன் கடமைப் பட்டிருக்கிறான். அவர்கள் தெற்கே தொல்லைகொடுத்திராவிட்டால், சோமேஸ்வரன் என்றோ அழிந்து போயிருப்பானே! இராஜேந்திர சோழர் சிறுபடையுடன் பிரம்மராயனை அனுப்பாமல் பெரும் படையுடனல்லவா அனுப்பிவைத்திருப்பார்?   

அதுபோகட்டும், தனக்கு அம்மங்கையைத் திருமணம் செய்துகொடுத்திராது பாண்டிய இளவரசனுக்குத் தாரைவார்த்திருந்தால்…? 

நரேந்திரனுக்கு நினைக்கவே அச்சமாக இருக்கிறது.   

மேலைச்சளுக்கியர் மொத்தமாக அழிந்துபோகப் பாண்டியர்களே சோழருடன் கைகோர்த்திருப்பர். தனக்கு எவ்விதச் செல்வாக்கும் இருந்திருக்காது. தன்னிடமிருந்து நாட்டைப் பிடுங்கி, விஜயாதித்தனிடமே இராஜேந்திரசோழர் ஒப்படைத்திருப்பார். அவனும் அவர், பிரம்மராயன் சொற்படி நடந்திருப்பான். கோடாரிக்காம்பான அவனே வேங்கைநாட்டில் தமிழ் பரப்புவதற்கு உதவியாகவும் இருந்திருப்பான்.   

அந்தக் கரும் கட்டழகி நிலவுமொழி கிடைக்காமல் போன கையுடன், மாமன்மகள் அம்மங்கையிடம் தன் காதலைத் தெரிவித்து, அவள் மூலம் இராஜேந்திரசோழரின் ஆதரவைப்பெற்றது, சிறந்த அரசதந்திரமாகவல்லவா ஆகியது! 

எனவே, நடக்க வேண்டியவை எல்லாம் நன்கு நடந்து வருகின்றன என்று தான் வணங்கிவரும் இறைவனான உமாமகேஸ்வரருக்கு மனதில் வணக்கம் செலுத்துகிறான். 

பழையாறை மாளிகை, சோழநாடு 

விஜய, மாசி 21 – மார்ச் 5, 1054 

தரையில் பலகையின் மீது அமர்ந்திருக்கும் அருள்மொழிநங்கை சொல்லச்சொல்ல, பிரித்த திருப்பணிக் குழலுக்கு நடுவிலிருக்கும் தங்கச்சுருளில் எழுத்தாணியால் சிவகாமி பதிவுசெய்கிறாள். அவளருகில் பிரம்மராயரும், சிவசுப்பிரமணியனும் அமர்ந்திருக்கிறார்கள். 

'இறைவனடிமைகளாக பணியாற்ற பெண்கள் அதிகம் முன்வராததாலும், சாக்கிய சமயப் பிக்குணிகள் போல இல்லற வாழ்வில் ஈடுபடாது சமயப்பணியாற்றச் சைவமும், வைணவமும் இடம் கொடுக்கவில்லை என்று காரணம் காட்டப்பட்டதாலும், அவர்கள் எவரேனும் ஒருவரை மணந்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வருவது முறையே என்ற சமயப்பெரியோரின் சொற்களுக்குச் செவிசாய்த்து, விஜயராஜேந்திர வர்மரும், அகவமல்ல குலாந்தகரும், கல்யாணபுரங்கொண்ட சோழரும், ஜெயங்கொண்ட சோழரும், அரசகேசரியுமான34 இராஜாதிராஜசோழ தேவர் ஒப்புக்கொண்டு, அவர்கள் இல்லறவாழ்வில் ஈடுபட அனுமதித்தார்.  அவர்கள் இசை, ஆடற்கலையில் வல்லவராக விளங்குவதுடன், மற்றவர்கள் முன்னர் அக்கலைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் ஊர்ப் பெரிய மனிதர்களில் ஒருவரே, தக்க மானியத்தைக் கொடுத்து, அவர்களோடு வாழ்ந்துவரலாம் என்றும்ஆணையிடப்பட்டது." 35 

அருள்மொழிநங்கை சொல்லி முடிக்கிறாள். 

அதைக் கேட்கும் பிரம்மராயரின் முகத்தில் வேதனை பரவுகிறது.  அதை அருள்மொழிநங்கையும் கவனிக்கிறாள். கண்களாலே என்னவென்று வினவுகிறாள்.  வெறுமனே தலையசைக்கிறார். அவர் உதடுகள் இலேசாகத் துடிக்கின்றன. 

"மனதிற்குள் வைத்துக்கொண்டு புழுங்குவது உங்கள் உடல்நலத்திற்குத் தீங்காகும்.  என்னவென்று சொல்லுங்கள்" என்று கேட்கிறாள் அருள்மொழிநங்கை. 

"நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குமுன் உன் பாட்டனார் திரிபுவனச் சக்ரவர்த்தி இராஜராஜர் சொன்ன கூற்று – தமிழ்க்கலைகளையும், மக்களின் தமிழறிவையும் வளர்க்க ஒவ்வொரு கோவிலிலும் இறைவனடிமைகள் பணியாற்ற வேண்டும்; ஊரில் உயர்மதிப்புப் பெற எவ்வாறு அவர்கள் நடந்துகொள்ள வேண்டும்; தமிழுக்காகவும், இறைவனுக்காகவும் தங்களை அவர்கள் அர்ப்பணித்தால், அவர்களை அனைவரும் தாயாக நோக்குவார்கள் – என அவர் சொன்ன கூற்று என் நினைவுக்கு வருகிறது. 

"அவரது உயர்ந்த நோக்கை உணராமல் இப்படியொரு ஆணை எப்படிப் பிறப்பிக்கப்பட்டது?  அதுவும் இராஜாதிராஜனால்?  இதை நினைத்தால் எனக்குத் தாங்கவொண்ணாத் துயரம் ஏற்படுகிறது நங்கை!  என் உடலில் உயிர் இருக்கும்போதே இப்படியொரு சறுக்கல் ஏற்படுவதை எண்ணினால் நெஞ்சு வலிக்கின்றது" என்று தணிந்த குரலில் தன் உள்ளக்கிடக்கையைப் பிரம்மராயர் வெளிப்படுத்துகிறார். 

அருள்மொழிநங்கைக்கு அவரது ஆதங்கம் நன்றாகப் புரிகிரது. அவரது இதயத்தை அரித்த ஏமாற்றமே அவரது தொண்டையை அடைத்து, அவரது குரலைக் கம்மவைத்திருப்பதையும் உணர்ந்துகொள்கிறாள். 

"தங்களின் இக்கருத்தை நான் உணராமலில்லை. அது எனக்கு நன்கு தெரிந்ததால் இராஜாதிராஜனுக்கும், சமயப் பெரியோருக்கும் எடுத்துக் கூறத்தான் கூறினேன். அவனுக்கும் இதில் அவ்வளவாக விருப்பமில்லை. எங்கள் இருவரைத் தவிர மற்றெல்லோரும் விரும்பியதால், இராஜாதிராஜன் தலையாட்ட நேரிட்டது" என்று சமாதானப்படுத்த முயல்கிறாள். 

இருவரின் உரையாடலையும் சிவகாமி அமைதியாகச் செவிமடுக்கிறாள். அவளுக்குத் தன் தகப்பனாரின் பக்கம் இருந்த நியாயம் புரிந்தும், அவர்களின் உரையாடலில் குறுக்கிட விரும்பாததால், தன் கருத்தினைத் தன்னிடமே வைத்துக்கொள்கிறாள். 

"மாவீரனாக இருந்தும், சிற்சில சமயம் இராஜாதிராஜனிடம் தேவையற்ற மென்மையொன்று தலைதூக்குகிறது என்று என்னை நினைக்கத் தூண்டுகிறது, நங்கை!  உன் தந்தையும், பாட்டனாரும் மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டுதான் செயல்பட்டனர். சிற்றூர்கள் தாமாகச் செயல்படுதல் வேண்டும் என்ற சீரிய நோக்கத்தால் ஐம்பேராயத்தார் முறையையும், அன்னாரைத் தெரிந்தெடுக்கக் குடவோலை முறையையும் உன் பாட்டனார் கொணர்ந்து நிறைவேற்றினார். ஆயினும், அவர் மற்றவரைக் கலந்து ஆலோசித்துத் தாமாக எடுக்கும் முடிவு எதையும் மாற்றமாட்டார். அரசுவிவகாரங்களில் குடவோலை முறையையும் அவர் கையாண்டதில்லை. பெரும்பான்மையோர் விரும்புவதைச் செயலாற்ற வேண்டுமெனில் அதற்கு அரசன் என்று ஒருவன் எதற்கு?  அவனுக்கு அமைச்சர், அறிவுரையாளர் குழு இவைதான் எதற்கு?" 

[34.இராஜாதிராஜ சோழனின் பல பட்டப்பெயர்கள் – கல்வெட்டுகளும், மெய்கீர்த்தியும்

35.இராஜராஜரின் உயர்வான இறைவனடிமைத் திட்டம் எப்படி உருமாறித் தடுமாறுகிறது என்பதின் புனைவு.]

அவர் குரல் உயர்ந்து ஒலிக்கத் தொடங்குகிறது: "'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்பதனை மறந்து செயல்படுபவனா அரசன்?  இராஜாதிராஜனை நினைத்தால் எனக்கு அடிவயிற்றில் அச்சம் தோன்றுகிறது நங்கை!"  

அலுத்துக்கொள்கிறார் பிரம்மராயர். அவர் அனைத்து அரசுப்பொறுப்புகளிலுமிருந்து ஓய்வுபெற்று ஏழாண்டுகள் ஆகின்றன. அவ்வப்போது முக்கியமான முடிவுகள் எடுக்கு முன்னர் அவரைக் கலந்து ஆலோசிப்பது இராஜாதிராஜனின் வழக்கமாக இருந்து வந்தது.   

ஆயினும், இம்முறை – அதுவும் இறைவனடிமைகள் பற்றி அவன் எடுக்கப்போகும் – அந்த முடிவு பற்றி அவரிடம் கலந்துரையாடவே இல்லை. 

"நீங்கள் ஏன் இப்படி அச்சப்படுகிறீர்கள் ஐயனே? எதற்கும் கலங்காத இராஜேந்திரசோழ பிரம்மராயரான உங்களிடமிருந்து இச்சொற்கள் வருவதைக் காதுறும்போது எனக்குத் திகிலாக உள்ளது. இறைவனடிமைப் பெண்கள் இல்லறவாழ்வில் ஈடுபடுவது அவர்களைத் தவறான வழியில் செல்லாது தடுக்குமல்லவா? அது ஏன் உங்களுக்கு உறுத்தலாக உள்ளது?  எனது பாட்டனாரின் ஆணை திருத்தப்படுகிறது என்பதனாலா? என் ஐயத்திற்கு விளக்கம் கூறுங்களேன்" என்ற கேள்வி அருள்மொழிநங்கையிடமிருந்து பிறக்கிறது. 

"இப்படியொரு கேள்வி எழுவதே, உன் பாட்டனாரின் கொள்கையை நீ புரிந்துகொள்ளவில்லை என்பதால்தான்! அதுமட்டுமல்லாது நமது இயலாமையையும் குறிக்கிறது. எப்பெண்ணையும் இறைவனடிமையாகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னரே, அவளுக்கு இல்லறத்தில் நாட்டமில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இறைவனடிமை ஆவதும் ஒருவிதத் துறவறம்தான். அதைப் புரிந்துகொள்ளாது விடுத்து, அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டால் என்ன என்பது, ஒரு துறவி, இல்லறத்தில் இருக்கக்கூடாதா என்பதை ஒத்ததே.  இக்கொள்கையைத் தளர்த்தினால், இறைவனுக்கே அவள் உரியவள், அதனால் அவள் நமது தாய் என்ற நோக்கம் மாறி – அவள் எனக்குச் சொந்தம் என்ற உரிமை ஒரு தனி மனிதனுக்குத் தோன்றினால் – அந்த எண்ணமே, விபரீத விளைவை விளைவிக்கும். இறைவனடிமை என்ற நோக்கு இப்பொழுது ஒருமனித உரிமையாக மாறியுள்ளது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்நோக்கும் மாறிப்போய், அவர்கள் கலைமாதர்கள்36 என்ற எண்ணம் ஏற்படும்.  இறைத்தொண்டுக்கும், தமிழுக்கும் தன்னை அர்ப்பணிக்காது, மற்றவருக்குத் தன்னை அர்ப்பணித்தால், அப்பெண்ணுக்கு இறைவனையும், தமிழையும், தமிழ்க்கலையையும் விட அந்த மற்றவர்தானே முக்கியமானவர் ஆகிவிடுவார்?" 

சிவகாமி தனக்குள் கூறிக்கொள்கிறாள்: 'ஒருவிதத்தில் பார்த்தால் நானும் துறவறத்தைத்தானே பின்பற்றிவருகிறேன். இல்லையில்லை. என் மகனுக்காகத்தான் வாழ்ந்துவருகிறேன். எனவே, நான் துறவறத்தை முழுதும் பின்பற்றவில்லை." 

கவனம் வேறுவழியில் சிதறாமல், சிற்றன்னையின் அடுத்த கேள்வியில் கவனத்தைச் செலுத்துகிறாள். 

"பெண்டிர் துறவறத்துக்குத் தகுதியானவர் அல்லர் என நமது சமயப்பெரியோர் பகர்கின்றனரே! அது இயற்கைக்குப் புறம்பானது என்றும் வாதிக்கின்றனரே ஐயனே!" அருள்மொழிநங்கையிடமிருந்து தொடர்ந்து கேள்வி தொடுக்கப்படுகிறது. 

[36.சில நூற்றாண்டுகள் சென்ற பின்னர் 'கலைமாதர்' என்ற நிலையும் மாறி, 'தேவதாசி'களாகவும், 'விலைமாதரா'கவும் இறைவனடிமைகள் மாறநேரிட்டது. தேவதாசி முறையும் 1947ல் சட்டப்படி நீக்கப்பட்டது – Tamilnadu Devadasi (prevention of dedication) Act – 1947]

"இத்தனை ஆண்டுகள் இதே சமயப் பெரியோர் திரிபுவனச் சக்ரவர்த்தியிடம் இந்த அறிவுரையை ஏன் நல்கவில்லை? அவர்களின் வாயிலிருந்தே தனது முடிவுக்குச் சான்றையும் அவர் வரவழைத்திருப்பார் நங்கை! இதெல்லாம் நம் இயலாமையைத்தான் காட்டுகின்றது.  இதைப்பற்றி இனி நாம் விவாதிப்பது கொட்டிய பாலின்கீழ் கூவியழுவதை போலத்தான்.  இந்தப் புதுக்கொள்கை காலம்சென்ற சக்ரவர்த்திகளின் இறைவனடிமைக் கொள்கைக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்கட்டும் என்றுதான் நான் கூத்தபிரானை வேண்டுகிறேன்.  ஆடுபவனும், நம்மை ஆட்டிவைப்பவனும் அவனே. இதுவும் அவனுடைய திருவிளையாடலில் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டும்!" என்ற பிரம்மராயர், "சளுக்கிய நாட்டிற்குப் பெரும்படையுடன் சென்றிருக்கிறானே இராஜாதிராஜன், அவனிடம்ருந்து தகவல் எதுவும் வந்ததா?" என வினவுகிறார். 

"தாங்கள் பிரம்மராயர் பதவியில் இருந்தவரை எல்லா ஒற்று விவரங்களும் உங்கள் சுட்டுவிரல் நுனியில் இருந்தன. இப்போது நான் தமிழ்த்திருப்பணி ஆலோசகி மட்டும்தானே ஐயனே" என்ற அருள்மொழிநங்கையை வியப்புடன் நோக்குகிறார் பிரம்மராயர். 

"தமிழ்த்திருப்பணிக்கும் ஒற்றுப்பணி தேவைப்படும் நங்கை! திருப்பணி சரிவர நடக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வாய்? உனது பணி ஆலோசனை சொல்வதுடன் நின்றுவிடுவதில்லை. அது நடந்தேறும் முறை பற்றியும், அது எப்படி நடக்க வேண்டும் என்பதைப் பற்றியும் அறிந்து, அதற்கேற்ப மன்னருக்கு அறிவுரை கூறிவர வேண்டும்.  அதற்காக பெரிய குழுவுக்கே நீ தலைவியாகப் பணியாற்றவேண்டும். தனி மனிதியாகச் செயல்படக் கூடாது. தமிழ்த்திருப்பணிக்கு இதுகாறும் தவறிழைத்து வந்திருக்கிறாயே நங்கை!" எனப் பிரம்மராயர் கடிந்துகொள்கிறார். 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com