பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 16

முருகையன் வீடு
முருகையன் வீடு

முருகையன் வீடு, திருப்பூவனம், தமிழ்நாடு

சௌம்மிய, மாசி 5 - பிப்ரவரி 6, 1310

“யப்பாடி, என்ன குளிரு… என்ன குளிரு? என்னமா இப்படி நடுக்கி எடுக்குது” என்றபடி வீட்டுத் திண்ணையில் அமருகிறான் முருகையன். இவ்வாண்டு குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதுவும், பின்பனிக்காலம் என்பதால் கதிரவன் மறைந்து சிறிது நேரத்திலேயே குளிரத் தொடங்குகிறது. அறுபது அகவையை எட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் அவனால் குளிரை அதிகமாகத் தாங்க முடியவில்லை. பதினெட்டு திங்களுக்கு முன்னர் நிகழ்ந்த குலசேகரபாண்டியனின் இறப்பு அவனை மிகவும் பாதித்துவிட்டது.

‘முருகையா’ என்று குலசேகரபாண்டியன் அழைக்கும் குரல், மருத்துவரை அழைத்து வந்துகொண்டிருக்கும் அவன் காதில் கேட்கவே, அவசர அவசரமாக உள்ளே நுழைந்தவன், விழுந்து கிடந்த பாவைவிளக்குக்கு அருகில் மன்னர் குப்புற வீழ்ந்துகிடப்பதையும், அவரது தலையிலிருந்து குருதி வழிந்து தரையில் பெருகியிருப்பதையும், அருகில் இளவல் சுந்தரபாண்டியன் அமர்ந்திருப்பதையும் கண்டபோது ஏற்பட்ட திகில் உணர்ச்சி, அவனை இன்னும் வாட்டியெடுக்கிறது.

‘‘மருத்துவர் ஐயா, அரசர் பேச்சு மூச்சின்றி இருக்கிறார். எப்படியாவது அவரைப் பிழைக்க வையுங்கள்’ என்று தான் கதறியதும், மருத்துவர் அரசரின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியதும் அவன் மனக்கண் முன் ஓடுகிறது.

‘‘தந்தையார் எழுந்திருக்க முயன்றபோது நிலைதடுமாறினார். தன்னை நிலைப்படுத்த பாவைவிளக்கைப் பற்றினார். ஆனால், அவரது எடையைத் தாங்காத அது, சரிந்து அவர் மேல் விழுந்து விட்டது. அவப்பேற்றினால், பாவையின் கையில் ஏந்தியிருக்கும் விளக்கின் நுனி அவரது பொட்டைப் பிளந்துவிட்டது. தந்தையார் அடுத்த கணமே சிவபதம் எய்திவிட்டார்’’ என்று சுந்தரபாண்டியன் வடித்த கண்ணீரையும், அவன் சொன்ன விளக்கத்தையும் நம்ப முடியாது போனதும் இன்றும் முருகையன் நினைவில் பசுமையாகப் பதிந்திருக்கிறது.

‘‘முருகையா, தந்தையார் சற்று நேரத்துக்கு முன்தான் பெரும்பான்மையான பாண்டிய மன்னர்களின் விருப்பத்திற்கிணங்க என்னையே மதுரைக்காவலனாக்க முடிவு செய்தார். அவரது இலச்சினையை இந்த அறிக்கையில் பதிக்க வேண்டும் என்று எழுந்த சமயத்தில்தான் நிலைதடுமாறி விழுந்து விட்டார். மதுரைக் காவலன் என்ற முறையில் அரசர் சிவ பதவியடைந்ததை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். உடனே சென்று முதலமைச்சர், படைத்தலைவர் மற்றும் நம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் நெல்லைப் பாண்டிய மன்னர் ஆகியோரை அழைத்து வா’’ என விரட்டியதும், வேண்டாவெறுப்புடன் கனத்த இதயத்துடன், குலசேகரபாண்டியனின் உடலைப் படுக்கையில் கிடத்திவிட்டு அரை மனதுடன் வெளியேறியதும் அவனுள் நிழலாடுகிறது.

தில்லையில் அம்பலவாணரை வழிபடச் சென்றிருக்கும் பட்டத்து இளவரசன் வீரபாண்டியன் தந்தையார் சிவபதம் அடைந்த செய்தியை அறிவதற்குள், அவரது ஈமச்சடங்குகள் அவசரமாக நிறைவேற்றப்பட்டதும், நெல்லைப்பாண்டியன் உதவியுடன் சுந்தரபாண்டியன் பாண்டியப் பேரரசின் மாமன்னனாக முடிசூட்டிக்கொண்டதும், தனக்கு வேண்டியவர்களின் உதவியுடன் வீரபாண்டியனை மதுரைக்கே வரவிடாது நிறுத்திவிட்டு, தன்னையே அவனுக்கு மெய்காப்பாளனாக ஆகவேண்டும் என்று கேட்டது, அவனை இருதலைக்கொள்ளி எறும்பாக ஆக்கியதையும் நினைவுகூர்கிறான்.

‘‘அரசே! மாமன்னரின் மறைவு என்னை உலுக்கியெடுத்து மன வலிமை குன்றச்செய்துவிட்டது.  அதனால் என் உடல் நலமும் நலிந்து வருகிறது. மேலும் ஐம்பத்தெட்டு வயதாகிவிட்டதால், தங்களுக்கு மெய்காப்பாளனாக இருக்கும் தகுதியும் எனக்கில்லை. மூத்தவன் முத்தையன் வீரபாண்டியருக்குப் பணியாற்றுவதால், இளையவன் நெல்லையப்பன் தங்கள் மெய்காப்பாளனாகப் பணியாற்றுவான். ஓய்வு பெறத் தாங்கள் அனுமதியளிக்க வேண்டும்’’ என்று இறைஞ்சிக் கேட்டதற்குச் சுந்தரபாண்டியன் தலையசைக்கவே, மாமன்னர் இல்லாத மதுரையில் இருக்க விருப்பமின்றித் தங்களில் பூர்வீகக் குடியிருப்பான திருப்புவனத்துக்குத் திரும்பி வந்திருக்கிறான்.

அரசுக்காக வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் நடந்துவரும் உள்நாட்டுப் போரும் அவனை மிகவும் நோகவைத்து வருகிறது. பாண்டிய மன்னர்களும் பிரிந்து இருவருக்கும் ஆதரவு நல்கிப் போரில் கலந்துவருவதால், போரும் முடிவில்லாததாகத்தான் இருக்கிறது. தற்பொழுது வீரபாண்டியனின் கை ஓங்கி வருவதாகக் கேள்விப்படுகிறான்.

“ஏன் இப்படித் திண்ணயில குந்திக்கிட்டு இருக்கீக? குளிரில ஒடம்பு என்னமா வெடவெடன்னு நடுங்குது. அப்பறம் சுரம் வந்துட்டா என்ன செய்யறது? வயசான காலத்தில ஒடம்பப் பார்த்துக்க வேணாமா?” என்று கரிசனத்துடன் கடிந்துகொள்கிறாள் முருகையனின் மனைவி வள்ளியம்மை. பெயர்ப் பொருத்தத்துடன் அவர்களுக்குள் மனப்பொருத்தமும் மிகவும் அதிகம்தான்.

முருகையன் - வள்ளியம்மை
முருகையன் - வள்ளியம்மை

“சும்மா கெட புள்ளே! இன்னும் கொஞ்சம் போனா, கை காலு விளங்காதவன் மாதிரி என்னை நடத்த ஆரம்பிச்சுடுவே போலல்ல இருக்கு? ஒண்ணரை வருசம் முன்னால வரைக்கும், நம்ப பாண்டிய மகராசாகூட ஓடியாடி இருந்துக்கிட்டுதான் இருந்தேன், ஞாபகம் வச்சுக்க!” என்று பொய்யான கோபத்துடன் அவளைக் கடிகிறான் முருகையன்.

‘‘நான் என்ன சொல்லிப்புட்டேன்னு இப்பிடிக் குதிக்கிறீக? நீங்க கத்தியை எடுத்துச் சண்டை போட்டு எத்தனை காலம் ஆகுதுன்னு மறந்துபோச்சா? எப்பப் பெரிய பாண்டிய மகராசா சண்டைக்குப் போகறதை நிறுத்தினாரோ, அப்பவே நீங்களும் கத்திய உறைக்குள்ள போட்டாச்சுல்ல! கிட்டத்தட்ட இருவத்தஞ்சு வருசமா சும்மாத்தான் இருந்துக்கிட்டு இருக்கீக? இதுல பேச்சு வேற” என்று அவனுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் வள்ளியம்மை மறுமொழி கொடுக்கிறாள்.

“இந்தா புள்ளே, வள்ளி! வயசான காலத்தில உனக்குத்தான் கூறுகெட்டுப் போச்சு. பெரிய மகராசா பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் நான்தான் கத்திச்சண்டை சொல்லிக்கொடுத்தேன். இப்ப அவுங்க ரெண்டு பேரும் ஒத்தருக்கொருத்தர் எதிராகக் கத்தியத் தூக்கிட்டு நிக்கவா அப்படிச் செஞ்சேன்? பதினைஞ்சு வருசம் முன்னால வரைக்கும் நம்ம பசங்க முத்தையனுக்கும், நெல்லையப்பனுக்கும் கத்திச்சண்டை தவிர, குத்துச்சண்டை, மடக்குச்சண்டை இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கேன். ராசாக்களோட மாளிகைகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க மதுரையில எங்கிட்ட எத்தினி ஆளுங்க வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க? இது எல்லாத்தையும் மறந்து போயிட்டியா?” எனப் பொருமுகிறான்.

“ஆமா, இப்படி பழங்கதையச் சொல்லிச் சொல்லிப் பெருமை தேடிக்குங்க. ஒடம்பு தளந்து போயிருச்சுன்னா, அதுக்குத் தகுந்தாப்பல நடந்துக்கணும். சும்மா, தொணதொணன்னு இப்பவும் வாலிப நெனப்போட சவடால் பேசக்கூடாது. பேசாம எந்திருச்சு உள்ளே வாங்க” என்று கண்டிப்பான குரலில் வள்ளியம்மை விரட்டவும், இனி பேசிப் பயனில்லை என்று மெதுவாக எழுந்திருந்து வீட்டுக்குள் நுழைகிறான்.

“முத்தையனைப் பார்த்துத்தான் ஒண்ணரை வருசத்துக்கும் மேல ஆயிப்போச்சு. பாவம், அவன் பொண்டாட்டிய பார்த்தாத்தான் பரிதாபமா இருக்கு. அந்தப் புள்ளயும் புருசன நெனைச்சுக்கிட்டு கண்ணீரும் கம்பலையுமாத்தான் பொழுதக் கழிச்சுக்கிட்டு இருக்கு. எப்பத்தான் இந்த ராசகுமாரங்க சண்டை முடியுமோ, நம்ம பசங்க வூட்டுக்கு ஒழுங்கா வந்து சேருவானுகளோ” என்று வள்ளியம்மை அலுத்துக்கொள்கிறாள்.

“அதப்பத்தி பேசவே பேசாத புள்ளே, ரொம்ப வயத்தெரிச்சலா இருக்கு!” என்று வருத்தப்பட்ட முத்தையன், “ஒரு தாய் வயத்தில் பொறக்கலைனாலும் மகராசா அவங்களைத் தன்னோட ரெண்டு கண்ணைப் போலத்தான மதிச்சு வளர்த்தாரு? பட்டத்து ராணி வயத்துல பொறந்த தனக்கு நாடு கெடக்கலேன்னு இப்படியா பண்ணுவாரு சின்ன ராசா? பெரிய மகராசாவ பிடிச்சுத் தள்ளி…” தான் சொல்லவந்ததைச் சொல்லி முடிக்காமல் நிறுத்தி விடுகிறான்.

சுந்தரபாண்டியன் தன்னிடம் சொன்ன எதையும் அவன் நம்பவேயில்லை. தடுமாறி பாவைவிளக்கில் விழுந்து, அதைப் பிடித்துக்கொண்டு குலசேகரபாண்டியன் கீழே விழுந்தார் என்ற கூற்றை, மாமன்னர் விழுந்து கிடந்த கோலமே, முருகையனுக்கு மறுத்துக் காட்டியதை அவனால் மறக்கவா இயலும்? அரசரை சுந்தரபாண்டியன்தான் பிடித்துத் தள்ளியிருப்பான் என்றுதான் அவன் உள்மனம் அன்றிலிருந்து இன்று வரை அழுத்தம் திருத்தமாக ஓலமிட்டு வருகிறது. மேலும், சுந்தரபாண்டியனை மதுரைக் காவலனாக முடிசூட்டுவதற்குக் குலசேகரபான்டியன் மனமாற ஒப்புதல் அளித்திருப்பார் என்றும் அவனால் நம்ப இயலவில்லை. ஆயினும், அவன் வாயை இறுக மூடிக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. ஆனால், பலரும் பலவிதமாகப் பேசினார்கள்.

சிலர் சுந்தரபாண்டியன்தான் குலசேகரபாண்டியரைக் கொன்றுவிட்டான் என்றும் இரகசியமாகப் பேசிக்கொள்வதும் முருகையன் காதில் அவ்வப்பொழுது விழுந்துகொண்டுதான் இருக்கிறது. தன் வாயினால் அந்த வம்புகளுக்கு உயிர் கொடுக்க வேண்டுமா என்றுதான் வாயை இறுக மூடிக்கொள்கிறான். உடனே அவனை மேலே பேசத்தூண்டிய தன் மனைவியை அடக்கி விடுகிறான்.

“இந்தா புள்ளே, ராசாக்கள் விவகாரம் நமக்கு எதுக்கு? வீணா நாக்கு மேல பல்லைப் போட்டு நாமளே பேசலாமா? பரம்பரை பரம்பரையா ராசாக்களுக்கு விசுவாசமா இருக்கறதுதானே நம்ப குடும்ப வழக்கம்? அத நாம என்னிக்கும் காப்பாத்தி வந்தாத்தான் நல்லா இருக்கும். நம்ப ஊரு புஸ்வனேஸ்வரர்தான் நாட்டையும், நம்ப எல்லோரையும் காப்பாத்தணும். பசிக்குது… சீக்கிரமாக் கஞ்சி வைக்கிற வழியப் பாரு. போயி, வேலயைப் பாரு புள்ளே” என்று அவளை அனுப்பிவிட்டு, விரித்திருந்த பாயில் சுவரில் முதுகைச் சாய்த்தவாறு அமர்கிறான்.

அவனது இரு மைந்தர்களும் ஒருவரையொருவர் போரில் வெல்ல முயலும் அரச குமாரர்களின் மெய்காப்பாளர்களாகப் பணியாற்றுகிறார்களே, அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராகப் போர் புரியும் நிலை வந்தால் என்ன செய்வார்களோ என்று நினைத்தாலே நெஞ்சை அடைக்கிறது.

அரச விசுவாசம் உள்ள அவர்கள் தங்கள் அரசருக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். எனவே, அதற்காக ஒருவரை மற்றவர் தாக்கவும் துணிவார்கள் என்ற உண்மையையும் அவன் நன்கறிவான். அதுதான் அவனை மிகவும் கலங்க வைக்கிறது.

“கடவுளே, சொக்கநாதா! அம்மா மீனாச்சி! எப்படியாவது இந்த ராசகுமாரங்க ரெண்டு பேரும் சண்டை போடறதை நிறுத்திவிடுங்க. இந்தப் பாண்டிநாடு இந்தச் சண்டையால் எத்தனை பேர்களை அநியாயமா இழந்துக்கிட்டு வருது? உடன்பொறப்புகளே ஒத்தரை ஒத்தர் கொல்வது எந்த விதத்துல நியாயம்? அப்பனே சொக்கநாதா? இதுவுமா உன் திருவிளையாடல்?” மனதுக்குள் கலங்குகிறான் முருகையன்.

வள்ளியம்மை கஞ்சிக் கலயத்தையும், மாவடுகளையும் எடுத்து வருகிறாள்.

காவிரியின் வடகரை, கொங்குநாடு

சௌம்மிய, பங்குனி - மார்ச் 29, 1310

யார் இந்த நேரத்தில் தன்னைப் பேட்டி காண வர வேண்டும் என்று எண்ணியவாறு தன் படைத்தலைவன் ஹக்காவைப்56 பார்க்கிறான் போசள மன்னன் வீரவல்லாளன்.

“பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தூதுவன் ஒருவன் மிகவும் அவசரம் என்று ஓலைதாங்கி வந்திருக்கிறான்” என்று ஹக்கா பதில் சொல்கிறான்.

-------------------------------------

[56. விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹரிஹர புக்கர்களில் ஒருவரான ஹரிஹரரை ஹக்கா என்றும் அழைத்தனர். ஹக்கா வீரவல்லாளனின் தளபதிகளில் ஒருவர் என்றும், மதுரைச் சுல்தானுடன் நிகழ்ந்த போரில் வீரவல்லாளன் இறந்ததும், போசள நாட்டின் மன்னனாக ஆகி, விஜயநகர அரசை நிறுவியதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. ஹக்காவையும், புக்காவையும் முகம்மது பின் துக்ளக் சிறைப்பிடித்து இஸ்லாமிய சமயத்திற்கு மாற்றி, தில்லிக்குக் கூட்டிச்சென்றதாகவும், இருவரும் தப்பி வந்து, திரும்பவும் இந்துக்களாக மாறி, வித்யரண்யர் என்ற அந்தண ஞானியின் அறிவுரைக்கிணங்க, இஸ்லாயமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக விஜயநகரப் பேரரசை நிறுவியதாக இன்னொரு வரலாறு கூறுகிறது. எது எப்படியிருப்பினும், இரு வரலாறுகளுமே, ஹரிஹரர் என்ற ஹக்காதான் விஜயநகர அரசை நிறுவியதாக ஒப்புக்கொள்கின்றன. முதல் வரலாற்றுப்படி ஹக்காவை வீரவல்லாளனின் படைத்தலைவனாக இப்புதினம் காட்டுகிறது.]

தான் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதும், தான் முகாம் இட்டிருக்குமிடமும் வீரபாண்டியனுக்கு எவ்வாறு தெரிந்தது என எண்ணி வியக்கிறான் வீரவல்லாளன். இருப்பினும், என்னதான் செய்தி அனுப்பியிருக்கக்கூடும் என்ற ஆவலில் தூதுவனை அனுப்பச் சொல்கிறான்.

தாடி மீசையுடன் கன்னங்கரேலென்றிருக்கும் பாண்டிய தூதுவன் உள் நுழைகிறான். அவனது நடை மிகவும் மிடுக்காக இருக்கிறது. அவன் உடலிலிருக்கும் விழுப்புண்களின் வடுகள், அவன் பல களங்களைக் கண்டவன் என்பதைச் சொல்லாது சொல்கின்றன.

வீரவல்லாளன்
வீரவல்லாளன்

அத்தூதுவன் வீரவல்லாளனை வணங்கி, “போசள மன்னருக்கு வணக்கம்! பாண்டிய மன்னர் வீரபாண்டியர் தங்களுக்குத் தன் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்” என்று கம்பீரமான குரலில் சொல்கிறான்.

“நல்லது. என்ன சேதி அனுப்பியிருக்கிறார்? ஓலையைக் கொடும். ஹக்கன்னா, தமிழ் படிக்கத் தெரிந்த ஒருவரை அழைத்து வாரும்” என்ற ஆணைகளைப் பிறப்பிக்கிறான்.

“வீரபாண்டியர் ஓலை என்று எதையும் அனுப்பவில்லை அரசே! வாய்மொழியாகவே தங்களுக்குச் சேதியைத் தெரிவித்துத் தங்கள் மறுமொழியையும் வாய்மொழியாகவே பெற்று வரச் சொல்லி அனுப்பியுள்ளர்” என்று தூதுவன் பணிவாக, அதே மிடுக்கான குரலில் கூறுகிறான்.

வீரவல்லாளனுக்கும், ஹக்காவுக்கும் இது சரியாகப்படவில்லை. ஹக்கா கோபத்துடன், “நீ தூதுவனா, இல்லை ஒற்றனா? உன்னைத் தகுந்தபடி விசாரித்தால் தெரிந்துவிடுகிறது” என்று அதட்டுகிறான்.

“தாங்கள் சினம்கொள்வது சரியே ஹக்கரே” என்று புன்னகைத்த தூதுவனின் பற்கள் தீவட்டி ஒளியில் பளிச்சிடுகின்றன.

“நான் ஒற்றனல்ல என்பதற்குச் சான்றாக வீரபாண்டியரின் அரச முத்திரையைத் தங்களிருவருக்கும் காட்டுகிறேன்” என்று தன் இடுப்பில் சொருகியிருந்த மீன் சின்னம் பதித்த பாண்டிய இலச்சினையைக் காட்டுகிறான். அதைப் பார்த்ததும், இருவரின் கண்களும் விரிகின்றன.

தங்கள் முன் நிற்பது தூதுவனல்ல, வீரபாண்டியனேதான் என்று உடனே அறிந்துகொள்கிறார்கள். புலியின் குகைக்குள் வலியவந்து நுழையும் ஆடா இவன் என்று ஐயமுறுகின்றனர்.

“வீரபாண்டியரே! இதென்ன நாடகம்? ஏனிந்த மாறுவேடம்? வேடம் பூணாது வந்திருந்தால் நாங்கள் உங்களைத் தக்க மரியாதையுடன் வரவேற்றிருப்போமே!” என்று திகைப்புடன் கேட்கிறான் வீரவல்லாளன்.

“காரணம் உள்ளது வீரவல்லாளரே! நானாக வருவதில் பலவிதச் சிக்கல்கள் உள. ஆகவே, முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு, ஒட்டுத் தாடியுடன் வந்தேன்” என்று வீரபாண்டியன் அமைதியாக விளக்குகிறான்.

“என்ன சிக்கல்கள்?”

“தங்களுக்குத் தெரிந்தவைதான். பாண்டிநாட்டில் உள்நாட்டுப் போர் நிகழும் இச்சமயத்தில் கொங்குநாட்டைக் கைவசப்படுத்திக் கொள்ளத்தானே நீங்கள் படையுடன் புறப்பட்டு வந்திருக்கிறீர்கள்? எனக்கும் என் இளையோன் சுந்தரனுக்கும் நிகழும் சமரில் தலைவனாக அங்கில்லாமல் புறப்பட்டுச் சென்றிருக்கிறேன் என்று தெரிந்தால் நன்றாகவா இருக்கும்? எனவேதான் மாறுவேடம் பூண்டு, எனது மெய்காப்பாளன் முத்தையனுடன் வந்திருக்கிறேன்.  தூதுவனாக வந்திருக்கும் என்னை நீங்கள் ஒன்றும் செய்துவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது” என்று வீரபாண்டியன் சிரிக்கும்போது அவனது பற்கள் மீண்டும் விளக்கு வெளிச்சத்தில் பாண்டிநாட்டுப் பெரும் முத்துகளாய்ப் பளிச்சிடுகின்றன.

“எதற்காக மன்னரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்? கொங்குநாட்டை விட்டுவிடுங்கள்; தம்பியுடன் சமரிட உதவி செய்யுங்கள் என்று கேட்கவா?” ஹக்காவின் கேள்வியில் தொனிக்கும் கேலியை வீரபாண்டியன் உணராமலில்லை.

“மன்னர் வீரவல்லாளர் கேட்கவேண்டிய கேள்வியை நீர் கேட்பது, நீர்தான் மன்னருக்கான முடிவை எடுப்பீர் என்று என்னைத் தப்பாக நினைக்கவைக்கும் அல்லவா?” வீரபாண்டியன் புன்னகையுடன் கூறிய மறுமொழி, தன்னை வாயை மூடிக்கொண்டிருக்கும்படி சொல்லாது சொல்கிறது என்று அறியும் ஹக்கா அமைதியாகக் தலையைக் குனிந்துகொள்கிறான்.

“நான் கேட்க நினைத்ததைத்தான் ஹக்கா கேட்டிருக்கிறார். ஆகவே, தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்” என்ற வீரவல்லாளனைப் பார்த்து மீண்டும் வீரபாண்டியன் புன்னகைக்கிறான்.

“அண்ணன்-தம்பி சண்டைக்குள் அன்னியரை நுழையவிடும் பழக்கம் எமக்கல்ல, வீரவல்லாளரே! ஆனாலும், பக்கத்து வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க மாற்றான் ஒருவன் வரும்போது பக்கத்து வீட்டாரை எச்சரித்து, அவரது உதவிக்கு வரலாம் என்ற எண்ணத்துடன்தான் வந்துள்ளேன்” என்ற பதில் வீரவல்லாளனைக் குழப்புகிறது.

“புரியும்படி சொல்லுங்கள் வீரபாண்டியரே!”

“உமது ஒற்றர்கள் உமக்குக் கொண்டுவராத சேதியை எமது ஒற்றர்கள் எமக்குச் சேர்ப்பித்துள்ளனர். தில்லி சுல்தானின் படைத்தலைவனான, ‘ஆயிரம் தீனாரி’ என்றழைக்கப்படும் மாலிக் காஃபூர் துவாரசமுத்திரத்தை நோக்கிப் படையெடுத்து வந்துகொண்டிருக்கிறான் என்ற சேதியே அது. அவனைத் தங்களது படையினை மட்டும் வைத்து வெற்றிகாண்பதென்பது அரிது. எங்களது பாண்டியப் படைகளும் தங்களுடன் சேர்ந்து அவனை எதிர்த்தால், நமக்கே வெற்றிகிட்டும்” என விளக்குகிறான்.

வீரவல்லாளன் சிந்தனையில் ஆழ்கிறான். ஹக்காவின் முகத்தில் ஈயாடவில்லை.  முதலமைச்சரின் அறிவுரையைக் குறைத்து எடை போட்டு, வீரவல்லாளனைத் தமிழகத்திற்கு ஈர்த்து வந்ததே தவறான செயலோ என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான்.

மேலும், அருகிலுள்ள தங்கள் ஒற்றர் அறியாததை வீரபாண்டியனின் ஒற்றர் எப்படி அறிந்தார்கள் என வியக்கிறான்.

தொண்டையைக் கனைத்துக்கொண்ட வீரவல்லாளன், “வீரபாண்டியரே, இத்தகவல் என்னைத் திகைக்க வைத்துள்ளது. என் படைத்தலைவருடன் கலந்துரையாடிவிட்டு என் முடிவைத் தங்களுக்குத் தெரிவிக்கிறேனே! அதுவரை நீங்கள் இளைப்பாறலாமே” என்று ஹக்காவை நோக்கித் தலையசைக்கவே, வீரபாண்டியன் கூடாரத்தைவிட்டு வெளியேறுகிறான்.

வெளியிலிருக்கும் காவலர்களில் ஒருவன், அவனையும், வெளியில் காத்துக்கொண்டிருக்கும் முத்தையனையும் பக்கத்துக் கூடாரத்துக்கு அழைத்துச்செல்கிறான்.

ஹக்காவிடம் வெடிக்கிறான் வீரவல்லாளன். “வெட்கம், வெட்கம்! உள்நாட்டுப் போரிடும் பாண்டிய மன்னனின் ஒற்றர் செய்தி திரட்டித் தந்து, அம்மன்னன் நமக்கு உதவி செய்ய வரும் வரை நம் ஒற்றர்கள் தூங்கிக்கொண்டா இருக்கின்றனர்?”

தலையை குனிந்துகொள்வதைத் தவிர, ஹக்காவினால் வேறெதுவும் செய்ய இயலவில்லை.

“போகட்டும், இப்போது என்ன செய்யலாம் என்று உமக்குத் தோன்றுகிறது?”

மன்னரை நிமிர்ந்து பார்த்த ஹக்கா, “அரசே, உடனடியாக நாம் துவாரசமுத்திரத்துக்குத் திரும்ப வேண்டும். மாலிக் காஃபூரின் வெறித்தாக்குதலையும், அவனது போர் முறைகளையும், தந்திரங்களையும் நாம் அறிவோம். அவனிடம் தோல்வியுற்றால், நம் பொக்கிஷத்தையே காலிசெய்து எடுத்துப் போய்விடுவான். ஆகவே, பாண்டிய மன்னரின் உதவியைப் பெறுவதே சாலச்சிறந்தது என என் மனதுக்குப் படுகின்றது. தன் தந்தையாருடன் பல களங்களைக் கண்டவர் அவர். நமது போசளர்களும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து சரியான அடி கொடுத்தால், ஆயிரம் தீனாருக்கு வாங்கப்பட்ட அடிமையான மாலிக் காஃபூர், தன் எஜமானன் இருக்கும் தில்லிக்கே ஓடி விடுவான். அதற்கும் மேலாக, அவனைச் சிறைப்பிடித்து அவனுடைய உயிருக்கு தில்லி சுல்தானிடம் விலை பேசலாம். அவரது அன்புக்குப் பாத்திரமான அடிமையாயிற்றே அவன்!” என தன் உள்ளக்கிடக்கையை மன்னன்முன் எடுத்துவைக்கிறான் ஹக்கா.

“ம்…” என்று பெருமூச்செறிந்த வீரவல்லாளன், மறுத்துத் தலையை ஆட்டியபடி, “ஹக்கா, நீர் சிறந்த போர்வீரர்தான். ஆனால், அரசியல் தந்திரத்தையும் நீர் அறிந்துகொள்ள வேண்டும்.  ஒரே கல்லால் இரு மாங்காய்களை அடிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இதை நாம் விட்டுவிடக்கூடாது” இரகசியமாகத் தணிந்த குரலில் கூறுகிறான்.

“தாங்கள் என்ன சொல்கிறீர்கள் அரசே? எனக்குப் புரியவில்லை!” ஹக்காவின் குரலில் குழப்பமிருக்கிறது.

“யோசித்துப்பாரும். நாம் இங்கு வந்ததே, உள்நாட்டுப் போரிடும் அண்ணன்-தம்பிகளுக்கு இடையில் புகுந்து, நாம் இழந்த போசளப் பகுதிகளை மீட்டுக்கொள்வதற்குத்தானே? இதை மாலிக் காஃபூர் நமக்காகச் செய்ய விட்டுவிட்டு, அதை ஏன் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?”

“துலுக்கனுடன் நாம் கூட்டுவைத்துக் கொள்வதா? அப்படிச் செய்தால் தில்லி சுல்தானுக்கு அடங்கி வாழ்ந்துவர நேரிடும் அரசே! வேண்டாம் இந்த விபரீத எண்ணம்?” என்று என்னதான் தன்னைக் கட்டுப்படுத்தியபடி மரியாதையுடன் குழைவுடன் ஹக்கா எதிர்மொழி கூறினும், தன் மன்னனின் எண்ணம் அவனுக்கு உடன்பாடில்லை என்பதை அவனது முகமே தெரிவிக்கிறது.

“உமக்கு மாறான கருத்து இன்னும் இருக்கிறதுபோல உள்ளதே!” என்ற வீரவல்லாளனின் குரலில் சூடேறுகிறது.

“அரசே, மனம் திறந்து என் கருத்தைச் சொல்ல அனுமதி தாருங்கள்” என்று கெஞ்சுகிறான் ஹக்கா. தில்லி சுல்தான் அல்லாவுத்தீன் கில்ஜி தேவகிரிக்குச் செய்த கொடுமைகளை அவன் நன்கு அறிந்தவன்.

‘ம்ம்…” உறுமலே பதிலாகக் கிடைக்கிறது.

“அரசே, முதலில் முதலமைச்சருக்கு எதிரான கருத்தை உரைத்திருப்பினும், இப்போது அதை மாற்றிக்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். என்னதான் இருந்தாலும், நாமும் பாண்டியரும் ஓரினம்; ஒரே சமயத்தைச் சேர்ந்தவர்கள்; தில்லி சுல்தான் எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்து, நம் பாரத தேசத்தின் வடபகுதியை அடக்கி ஆண்டுவருகிறார்.  அவருடைய உதவியுடன் பாண்டியருக்கு எதிராகச் செயல்பட்டால், நமது கண்ணை நாமே குத்திக்கொள்வது போல ஆகிவிடாதா?”

சிறிது நிறுத்திவிட்டு மீண்டும், “அது மட்டுமல்லாது, தில்லி சுல்தான் தம்மிடம் தோற்றவரை மத மாற்றம் செய்யும்படி வற்புறுத்துகிறாராமே! சிந்தித்துப் பாருங்கள். நாமும், பாண்டியரும் வணங்கும் தெய்வங்கள் ஒன்றுதான். இருப்பினும், மற்ற தெய்வங்களைக் கும்பிடும் இதர சமயத்தாருக்கும் எல்லாவிதமான சலுகைகளும் அளிக்கிறோம். மதம் மாறும்படி கட்டாயப்படுத்துவதில்லை. அப்படி இருக்கையில், நமது கொள்கைக்கு எதிராகச் செயல்படும் தில்லி சுல்தானையோ, அவரது படைத்தலைவரையோ உதவிக்கு அழைக்கலாமா?  பாண்டியருடன் ஒன்றுசேர்ந்து எதிரியை முறியடிப்போம். அதற்காக, இழந்த நம் நாட்டின் பகுதிகளைக் கொடுக்கவேண்டுமென்று பாண்டியருடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம். மணவினைகளும் செய்து, அதை உறுதிப்படுத்துவோம். அன்னியரை உட்புக விட்டால், நம் நாடு தன் சுதந்திரத்தையும், பண்பாட்டையும் இழந்துவிடும், அரசே!” என்று தன் பக்கத்து வாதத்தை அமைதியாக, நிதானமாக வீரவல்லாளனின் மனது ஏற்கும்வகையில் இதமாக எடுத்துரைக்கிறான். வீரவல்லாளன் மறுதளித்துத் தலையாட்டுகிறான்.

“ஹக்கன்னா, உமது வாதம் திறமையாகத்தான் இருக்கிறது. துவாரசமுத்திரம் எங்கிருக்கிறது, மதுரை எங்கிருக்கிறது என்று சிந்தித்துப்பாரும். மாலிக் காஃபூருடன் போரிட்டால், துவாரசமுத்திரம்தான் அந்தத் தாக்குதலை முதலில் சந்திக்கும். வெற்றியோ, தோல்வியோ போரின் விளைவான முதல் அழிவைத் துவாரசமுத்திரம் மட்டுமே தாங்கி நிற்கும் நிலை ஏற்படும். மதுரையைக் காப்பாற்ற துவாரசமுத்திரத்தைக் காவுகொடுக்க எனக்கு விருப்பமில்லை. துலுக்கத் தளபதியை திசைதிருப்பி, துவாரசமுத்திரத்தை அழிவிலிருந்து காத்துக்கொள்வதும், போசள நாட்டில் அமைதி நிலவச்செய்வதும்தான் மன்னனான என் முதல் கடமை.

“மதுரை விழுந்துவிட்டால், அதன் செல்வங்களுடன் மாலிக் காஃபூர் தில்லிக்குத்தானே திரும்பிச் செல்வான். மதுரையில் அமர்ந்து ஆட்சி செய்யவா போகிறான்? அவனுக்கு உதவிசெய்தால் அவன் கொண்டுசெல்லும் செல்வத்தில் நமக்கும் ஒரு பங்கு, நாம் செய்யும் உதவிக்காகக் கிடைக்கும்தானே? அத்துடன் நாம் இழந்த பகுதிகளும் திரும்பக் கிடைக்காமலா போகும்?  ஆகவே, நம் படைகளைக் காவுகொடுக்காது, நம் தலைநகருக்கும், நாட்டுக்கும் அழிவு வராது பாதுகாத்து, நம் அரசு எல்லையையும் விரிவாக்குவதே மிகவும் சிறந்தது. அரச தந்திரமும் அதுதான்.”

கண்களை உருட்டி விழித்தவாறே, “வீரபாண்டியரை அழைத்துவாரும். அவருக்கு நானே பதில் சொல்லிக்கொள்கிறேன். நீர் அச்சமயம் உம் திருவாயை இறுக மூடிக்கொண்டு, கூடாரத்துக்கு வெளியிலேயே இரும். உள்ளே வந்து, குட்டையைக் குழப்ப முயற்சிக்க வேண்டாம்!” என்று தன் அரசன் சொன்னதும், ஹக்காவுக்கு வயிற்றைப் புரட்டுகிறது.

இனி, என்னென்ன தீச்செயல்கள் நடந்தேறுமோ என்று இனம்தெரியா அச்சம் அடியிலிருந்து முடி வரை எரிச்சல் படுத்துகின்றது.

போசள அரசை தானே கைப்பற்றி வேறு அரசை நிறுவ வேண்டும், தென்பாரதத்தை அன்னியரிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கண்ணுக்குத் தெரியாத ஆலமர வித்தாக அவன் நெஞ்சில் அவனையும் அறியாது விழுந்து விடுகிறது.

மெல்லத் தலையாட்டிவிட்டு, வீரபாண்டியனை அழைத்துவரக் கூடாரத்தை விட்டு வெளியேறுகிறான்.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com