பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு - பிற்சேர்க்கை - 2

சோழபுரத்தின் கோயில்
சோழபுரத்தின் கோயில்

ஈஸ்வரனின் வீடு

ஈஸ்வர, ஆடி 20 - ஆகஸ்ட் 10, 2417

சிறிது நேரம் யாருமே பேசவில்லை.

“அதெல்லாம் சரிதான். ராஜராஜசோழச் சக்ரவர்த்தியின் தமிழ்த்திருப்பணியை அவரோட மகன் ஏன் முன்வந்து செய்யலை? எல்லாம் தெரிஞ்சிருந்தும், சிவாச்சாரி பிரம்மராயர் திருப்பணியை ஏன் மும்முரமா முனைஞ்சு முடிக்கலை? மத்த சோழர்கள் ஏன் திருப்பணியை விட்டுட்டாங்க? மாறவர்மன் சுந்தரபாண்டியன் நீலகண்ட தீட்சிதருக்கு ஆதரவு கொடுத்தும், ராஜராஜ சக்ரவர்த்தியோட திருப்பணியைப் பத்திப் அவரிடம் பேசி, தமிழைப் பரப்ப ஏன் முயற்சி செய்யலே? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. யாராவது சொல்லுங்களேன், ஏன் இப்படி நடந்துது?” என்று ஏகாம்பரநாதன் கேள்வி மேல் கேள்வி தொடுக்கிறான்.

“ஏண்டா ஏகாம்பரம், சும்மாச் சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்கியே? நீதான் யோசிச்சு பதிலைச் சொல்லேன் பார்ப்போம்” என்று அவனைச் சாடுகிறாள் காமாட்சி.

“இந்தா பிள்ளே, காமாட்சி! நீ கொஞ்சம் சும்மா இரு. தம்பி நல்ல நல்ல கேள்வியாத்தானே கேக்குறான்? அவன் கேள்வியிலதான் நம்ம கஷ்டத்துக்கு விடிவு இருக்குதுன்னு எம் மனசு சொல்லுது. இன்னும் நல்லாக் கேள்வி கேளுப்பா ஏகாம்பரம்” என்று காமாட்சியை அடக்கி, ஏகாம்பரநாதனை உற்சாகப்படுத்துகிறான் அழகேசன்.

“ஐயாவுக்கு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’னு நெனைப்பு. என் வாயை மூடச் சொல்றாரு.  நீங்களே பதிலச் சொல்லறதுதானே?” அழகேசனை முடுக்கிப் பார்க்கிறாள் காமாட்சி.

“அக்கா, நீங்க ஏன் அழகண்ணனைக் கோவிச்சுக்கிறீங்க? தமிழை இப்பத்தான் கத்துக்கிட்டேன். இருந்தாலும், தங்கச்சுருள்ல எழுதியிருந்ததை இவரு படிச்சுச் சொன்னதும், தமிழ் மேல எனக்கே அலாதி மதிப்பு வந்திடுச்சு. ராஜராஜச் சக்ரவர்த்தி விரும்பின மாதிரித் தமிழை நாடு பூராவும் பரப்பினா என்னன்னு எனக்கே தோணுது. எல்லாம் போயி, ஒத்தை மரமா நான் நின்னபோது, தமிழ் பேசற நீங்கதான் என்னை உங்களோட சேர்த்துச் சொந்தக்காரி ஆக்கிக்கிட்டீங்க. இந்திக்காரி, வங்காளக்காரி, உரிமைக்குடிமகள்னு தள்ளிவைக்கல. இப்பத் தமிழ்நாடு நான் புகுந்த வீடாகிட்டுது. அந்த மாதிரி, நல்ல எண்ணம் உள்ளவங்க எனக்குக் கொடுத்த தமிழ் - தமிழ்நாடு முழுக்க மட்டும் இல்லாம – பாரத தேசம் முழுக்கப் பரவணும்னு நினைக்கறேன். அப்படி நடக்கணும்னா, ராஜராஜச் சக்ரவர்த்தியின் தமிழ்த்திருப்பணி - அவரோட தமிழ்க்கனவு - ஏன் நின்னுபோச்சு, எப்படி நடந்திருந்தா அது நிறைவேறியிருக்கும்னு யோசிக்கணும். அதுக்கு முதல்கட்டமாத்தான் ஏகாம்பரத்தோட கேள்வி இருக்குது. இப்ப இவ்வளவுதான் எனக்குத் தோணுது” என்ற நிமிஷா, ஈஸ்வரனைப் பார்த்து, “ஏங்க, இங்கே நல்லா யோசிக்கறது நீங்கதான். ஏகாம்பரத்துக்குப் பதில் சொல்லப் பாருங்க. பின்னால, நாங்களும் எங்களுக்குத் தோணறதைச் சொல்லறோம்” என்றவுடன், அவளை மற்ற அனைவரும் வியப்புடன் நோக்குகின்றனர்.

“அம்மா, என் வீட்டுக்கு வந்த குலவிளக்கே! என் வாழ்நாள் முழுவதும் ‘எடுபிடி’யாப் பட்ட துன்பமெல்லாம் நீ சொன்ன சொல்லுல காத்தாப் பறந்து போச்சு. கடவுள்தான் உன்னை எங்ககிட்ட அனுப்பிவச்சு இருக்காரு” என்று சங்கரன் அன்பு பொங்கக் கூறுகிறார். கசியும் தன் கண்ணீர்த் துளியைச் சுண்டியெறிகிறார்.

“எங்க எல்லோருக்கும் அதே நினைப்புதான் தங்கச்சி” என்று அழகேசனும் உணர்ச்சி பொங்க ஆமோதிக்கிறான். காமாட்சி நிமிஷாவைச் சேர்த்து அணைத்து, அவள் கன்னத்தில் முத்தமிடுகிறாள். ஈஸ்வரனின் முகம் பெருமையில் பூரிக்கிறது.  பெரியநாயகி தன் மருமகள் தலையைத் தடவித் திருஷ்டி கழிக்கிறாள்.

ஈஸ்வரன் பேசத் தொடங்குகிறான்: “ஏகாம்பரம், எனக்குத் தெரிஞ்ச அளவுக்குப் பதில் சொல்றேன். ராஜராஜரின் தமிழ்த்திருப்பணி தடைப்பட்டது - அவரின் தமிழ்க்கனவு கனவாகவே போய்விட்டதற்குக் காரணம், அவரோட திடீர் மறைவுதான். பாண்டியராஜா அமரபுஜங்கனோட போட்ட சண்டை, அவரோட சாவுக்கும் ஒரு காரணமா அமைஞ்சுது. அவர் இருந்தவரை சிவாச்சாரி பிரம்மராயரால திருப்பணியைத் தங்குதடையின்றி நிறைவேற்ற முடிஞ்சுது. சூரியன் இருக்கற வரைக்கும் சந்திரனோட வெளிச்சம் தெரியாதுங்கற மாதிரி, ராஜராஜர் இருந்த வரை, ராஜேந்திரரோட புகழ் வெளிப்படவே இல்லை. அவரும், தான் ராஜராஜரோட மகன் அப்படீங்கறதை விட, ராஜராஜர் தன் அப்பான்னு உலகம் சொல்லனும்ணு ஆசைப்பட்டார். அதுனாலதான் தன்னோட புகழ் பெருகறதுக்காகத் தனியா கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிய தலைநகரை அமைத்தார். அங்கே கோயிலும் கட்டினார். அதுக்காக, வங்கம் வரை படையெடுத்தார். இலங்கையிலிருந்த பாண்டியர் பொக்கிஷங்களைக் கைப்பற்றினார். தன்னுடைய தங்கை மகன் நிலைத்து ஆட்சி நடத்தணும்னு கடைசி வரை போராடினார். அதுனால அவரால திருப்பணியிலே கவனம் செலுத்த முடியலை. போதாததுக்கு, சிவாச்சாரி பிரம்மராயரையும் திசை திருப்பி, வேறு பல வேலைகளுக்கும் அனுப்பினாரு.

“அவருக்குப் பின்னால வந்தவங்களுக்கு ராஜ்ஜியத்தைக் கட்டிக் காப்பாத்தறதே பெரிய வேலையா இருந்துது. ராஜேந்திரரோட பிள்ளைகளும், பேரன்களும் சீக்கிரமாச் சண்டைல செத்துப்போயிட்டாங்க. தமிழ்த்திருப்பணியைக் கிடப்பில போட்டுட்டாங்க. இதுக்கு நடுவில அதிராஜேந்திரன் சைவ-வைணவப் பிரச்னையைக் கிளப்பினதுனால குலோத்துங்கன் சோழச் சக்ரவர்த்தி ஆனாரு. அவர் தன்னையும் காப்பாத்திக்கிட்டுச் சோழ சாம்ராஜ்ஜியத்தையும் நிலைப்படுத்தவேண்டி இருந்தது. பின்னால வந்த இரண்டாம் குலோத்துங்க அநபாயரும் சைவ-வைணவச் சண்டையிலேதான் கவனம் செலுத்தினார். அதுக்குப் பின்னால நடந்த கதைதான் உங்க எல்லோருக்கும் தெரியும். பாண்டியர் தலையெடுத்தபோது, அவங்களுக்குத் தங்களை நிலைநிறுத்தறதும், சோழரைப் பழிவாங்கறதுமே முக்கியமாப் போச்சு. அவங்க தொடர்ந்து ஆட்சி செய்திருந்தா தமிழ் நிலைச்சிருக்குமோ என்னவோ, துரதிருஷ்டவசமா, தில்லி சுல்தானின் தளபதி படையெடுத்து வந்ததாலே, தலையெழுத்தே மாறிப்போச்சு; பாண்டியர் ராஜ்ஜியமும் அழிஞ்சுபோச்சு. தமிழ்நாடும் வலிமையிழந்துட்டுது.

“இதுலேந்து விளங்கறது ஒண்ணுதான். எந்தவொரு சமுதாயத்தையும் வெளியாளுங்க யாரும் வந்து வெற்றிகொள்ள முடியாது; அதுக்கு முன்னால அது தன்னைத்தானே உள்ளூர அழிச்சுக்கும். 69ஒற்றுமை இல்லேன்னா உள்ளுக்குள்ளேயே அது இற்றுப்போகும். அப்படித்தான் ஆகிப்போச்சு. இனிமே, அடுத்த கட்டத்துக்குப் போவோம்.

“நம்ம கையில் இந்த சரித்திரச் சுருள் கிடச்சுது. நாம ஒண்ணுசேர்ந்தோம். அது இறைநோக்கமாகவே இருக்கட்டும். நாம் ஏன் ‘எடுபிடி’யா ஆனோம், நம்ம பரம்பரை எப்பவுமே ‘எடுபிடி’தானான்னு நமக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்த கேள்விக்கும் விடை தெரிஞ்சுட்டுது.  நம்ம வரலாறு, நம்ம பெருமை நமக்குத் தெரிஞ்சுது.

“இப்ப நாம யாருக்கும் ‘எடுபிடி’யா இல்லை. கிட்டத்தட்ட ஆறு வருஷமா நாம யாருக்கும் பணிஞ்சு வேலை செய்யலே. நம்ம வேலையை நாமே பார்த்துக்கறோம். பக்கத்து கிராமங்களோட தொடர்பு வச்சுருக்கோம். அழகேசண்ணாவும் எங்களை மாதிரி ஆம்பளைகளுக்குத் தற்காப்புப் பயிற்சி சொல்லிக் கொடுத்திருக்காரு. அதுனால யாரோட தொந்தரவும் இல்லாம நாம தைரியமா இருக்கோம். இனிமே என்ன செய்யப்போறோம்?”

சற்று நிறுத்தித் தான் சொல்வது அனைவர் மனதில் பதிகிறதா என்று உறுதி செய்துகொண்டு, “நம்மகிட்டக் கிடச்சது பொக்கிஷமேதான். கங்கைகொண்ட சோழபுரம் கோவில்ல இருக்கற ரகசிய அறையிலே இருக்கற நிறையச் செல்வத்தை வச்சு என்ன பண்ணப்போறோம்? என் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? நீங்களே ஆரம்பிச்சா நல்லா இருக்கும்” என்று முடிக்கிறான் ஈஸ்வரன்.

உடனே கையை உயர்த்துகிறான் ஏகாம்பரநாதன். “இதுல யோசிக்கறத்துக்கு என்ன அண்ணா இருக்கு? ராஜராஜச் சக்ரவர்த்தியோட - கருவூர்த்தேவர் அவருக்குக் கொடுத்த தமிழ்த்திருப்பணியை - ராஜராஜரின் தமிழ்க்கனவை - நாம தொடரணும். எல்லாரையும் தமிழைப் பேச வைக்கணும். தமிழ்நாட்டுல அவர் காலத்துல இருந்த மாதிரித் தமிழை உயர்த்தணும்!”

-----------------------------------------

[69. வில்லியம் துரந்தின் புகழ்பெற்ற, ‘A culture cannot be destroyed from without unless it is destroyed from within first,’ என்ற சொற்றொடரே ஈஸ்வரனின் வாய்மொழியாக இங்கு கூறப்படுகிறது.]

அனைவரும் அவனை வியப்புடன் பார்க்கிறார்கள். இந்த இளைஞனுக்குள் இப்படியொரு தமிழ்ப் பற்றா?! சிறிய கிராமத்தில் குழாமாகத் தமிழ் பேசிவரும் தாங்கள் எப்படித் ‘தக்கண்கண்டை’த் தமிழகமாக ஆக்க இயலும்? இவன் கட்டுவது மனக்கோட்டையா, மணல்கோட்டையா? அல்லாது காலம் காலமாக நிமிர்ந்து நிற்கப்போகும் கற்கோட்டையா?

“ஏன் எல்லோரும் என்னையே பார்க்கறீங்க? நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? நாம தமிழ்த்திருப்பணியை முடிக்கணும்னு கடவுளே நினைக்கறதுனாலதானே… நம்ம தமிழ் அம்மாவே நினைக்கறதுனாலதானே… ஆயிரம் வருசத்துக்கு அப்பறம் யாருக்கும் கெடைக்காத தங்கச்சுருள் நமக்குக் கெடச்சுருக்கு! ஆயிரம் வருசத்துக்கு முன்னால பிரிஞ்ச நம்ம மூணு குடும்பமும், வங்காள ராசகுமாரி பரம்பரைல வந்த நிமிசாக்காவும் ஒண்ணாச் சேர்ந்திருக்கோம்?! அப்பிடி இல்லைனா, நாங்க மூணு பேரும் சொல்லிவச்சாப்பில ஏன் அந்தக் கோவிலுக்குப் போகணும்? அப்ப பார்த்து நிலநடுக்கம் ஏன் வரணும்? சரியான கல்லு மட்டும் ஏன் கழண்டு விழணும்? சூரியனோட ஒளி சரியா குழல்ல பட்டு என் கண்ணுல ஏன் அடிக்கணும்?

“எனக்கு ஒடம்பு சரியா இல்லாதபோது, நிமிசாக்கா அவங்க வீட்டுக்கு ஏன் என்னைக் கூட்டிகிட்டு வான்னு காமாச்சியக்காகிட்ட சொல்லணும்? அவங்க அம்மாவை ஈஸ்வரன் அண்ணா ஏன் சந்திக்கணும்? அவருக்கு ஏன் இந்தி தெரியணும்? மதுரையில இருந்த அழகேசண்ணாவை நம்ம பாதுகாப்புக்காக தஞ்சாவூருக்கே ஏன் கூட்டி வரணும்? பெரிய அழிவு வந்து நாம ஏன் ஒரே குடும்பமாச் சேரணும்?” ஏகாம்பரநாதனுக்கு மூச்சு வாங்குகிறது.

“இது எல்லாத்தையும் பார்த்தா, நம்மகிட்ட பெரிய பொறுப்பைக் கடவுளே தந்திருக்காருன்னுதான் தோணுது. முடியுமான்னு மலைக்காம, எப்படி முடியவைக்கலாம்னு யோசிப்போம்! இப்ப இவ்வளவுதான் எனக்குச் சொல்ல முடியும். பெரியவங்க நீங்க இருக்கீங்க.  நீங்க பேசி முடிவு செய்யுங்க” என்று அமைதியாகி விடுகிறான் ஏகாம்பரநாதன். மலைத்த அனைவருக்கும் அவன் தங்கள் கன்னத்தில் அறைந்தாற்போலிருக்கிறது. சில நிமிடங்கள் யாருமே பேசவில்லை. அவனது சொற்களிலிருக்கும் உட்பொருளை அனைவரும் அசைபோடுகிறார்கள்.

“ஏகாம்பரம் சொன்னது சரின்னுதான் எனக்கும் படுது. இதுவரை ‘எடுபிடி’யா வாழ்ந்தது போதும். இந்தத் தமிழ்த்திருப்பணியை முடிக்க, ராசராச ராசாவின் தமிழ்க்கனவை நிசமாக்க, நம்ம தமிழ் ஆட்சியைத் திரும்பக் கொண்டுவரணும். அதுக்காக, என் உசிரையும் கொடுக்கத் தயாரா இருக்கேன்” என அழகேசன் உணர்ச்சி பொங்க ஏகாம்பரநாதன் சொன்னதை ஆமோதிக்கிறான்.

“அடாடா, அடிக்கறது, உதைக்கறது எல்லாம் உங்களுக்குத் தெரியும். அதுக்காக, ஒத்தொத்தரையும் அடிச்சு, ஒதைச்சுத் தமிழைக் கத்துக்கங்கன்னு சொல்லப் போறீங்களா?” என்று காமாட்சி தன் கணவனை வினவுகிறாள்.

“உன் தலைக்குள்ள கடவுள் கொடுத்திருக்கற மூளை இருக்குல்ல, அத்தைக் கொஞ்சம் உவயோகப்படுத்திப் பாரு புள்ளே! நிமிசாவுக்கு நீதானே தமிழ் சொல்லிக்கொடுத்தே! நீதானே அதுக்கு எழுதப் படிக்கவும் கத்துக்கொடுத்தே! தங்கச்சிய அடிச்சு ஒதைச்சா சொல்லிக்கொடுத்தே?” என்று அழகேசனிடமிருந்து பதில் வருகிறது.

“அது என் தங்கச்சி. ஈஸ்வரண்ணனைக் கண்ணாலம் கட்டிக்கிச்சு. அன்பாச் சொல்லிக்கொடுத்தேன். அதுவும் கத்துக்கிச்சு. எல்லாரும் அப்படி ஆர்வமாக் கத்துப்பாங்களா?”

“நீங்க மூணு பேரும் பேசினது எனக்குள்ளே சில எண்ணங்களையும், வழிமுறைகளையும் உண்டாக்கி இருக்கு. அப்பா, நீங்களும் நான் சொல்லறதைக் கேட்டுட்டு, உங்க கருத்தையும் சொல்லுங்க” என்ற ஈஸ்வரனைப் பார்த்து, “சொல்லுப்பா” என்கிறார் சங்கரன்.

“என் முதல் கேள்வி நிமிஷாவுக்குத்தான்” என்று அவள் பக்கம் திரும்பி, “நிமிஷா, நீ தமிழ் பேச, படிக்க, எழுதக் கத்துக்கிட்டே. அதேமாதிரி உனக்கு இந்தி பேச, படிக்க, எழுதத் தெரியுமில்லையா? அதேபோல உன்னை மாதிரி இந்தி தெரிஞ்சவங்கள்ளாம் ஒண்ணாச் சேர்ந்து அதை இப்ப மத்தவங்களுக்கு எழுதப் படிக்கக் கத்துத் தந்தா, அது நமக்குப் போட்டியாகத்தானே இருக்கும்?”

கலகலவென்று சிரிக்கிறாள் நிமிஷா. அனைவரும் அவளைத் திகைப்புடன் நோக்குகின்றனர். ஈஸ்வரன் கேள்வியில் நகைப்புக்கும் கிண்டலுக்கும் என்ன உளது?

“எனக்கு இந்தி எழுதத் தெரியாது!” என்று சொல்லிக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறாள் நிமிஷா. “படிக்கத் தெரியும். அதுவும் ரொம்ப சுமாராத்தான். நான் பேசுவதைக் கம்ப்யூட்டர் புரிஞ்சுக்கும். அதன்படி, அது எனக்குப் பாடம் சொல்லித்தரும். எனக்கு எழுத்தை அது கத்துக்கொடுத்துது. ஆனா, எழுதக் கத்துக்கொடுக்கலை. காமாச்சி அக்கா கத்துக்கொடுத்த மாதிரி. ‘அனா, ஆவன்னா’ன்னு எழுதவும், எழுத்துக்கூட்டிப் படிக்கவும் கத்துக்கொடுக்கலை.  கம்ப்யூட்டர்தான் எங்களுக்கு எதையும் கத்துக்கொடுக்கும். டீச்சர் சூபர்வைஸ் பண்ணுவாங்க; அவ்வளவுதான். ஸ்காலர்ஸ் - அதாவது, ரொம்ப ஆராய்ச்சி செய்து படிக்கறவங்க மட்டும்தான் எழுதக் கத்துப்பாங்க. டெஸ்ட், எக்ஸாம் வைக்கறபோதுகூட நாங்க வாயால் சொல்லறதுதான்; பெரிசா ரிசர்ச் பண்றவங்களும் பேசித்தான் கம்ப்யூட்டருக்குப் புரிய வைப்பாங்க. அது எல்லாத்தையும் செஞ்சுடும். நீங்க எந்தக்காலத்துல இருக்கீங்க?” நிமிஷா மீண்டும் சிரிக்கிறாள். அவள் சொன்னதைக் கேட்ட ஈஸ்வரனின் முகம் மலர்கிறது.

“நிமிஷா, நீ இப்ப சொன்னது எவ்வளவு முக்கியமான விஷயம் தெரியுமா? அதைக் கேட்டதும் தமிழ்த்திருப்பணி சுலபமாயிட்டது போலத் தோணுது. ஏன் தெரியுமா? இந்தியைக் கத்துக்கொடுக்க, அதைப் பரப்ப, இப்ப ஆசிரியர்கள் இல்லை. நீங்க அதுக்குக் கம்ப்யூட்டரை நம்பித்தான் இருக்கணும். இப்பத்தான் மின்சாரமே இல்லையே? கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்யும்? இங்கே காமாட்சி இருக்கறதுபோல, அங்கே யாரு இருக்காங்க, இந்தியைச் சொல்லித் தர?

“நம்ம கையில விவசாயம் இருக்கு; அதுனால, நம்மை நம்பித்தான் மத்தவங்க வாழ்ந்தாகணும். அழகேசண்ணா மாதிரி ஆளுங்க பாதுகாப்புக்கு இருக்காங்க. காமாட்சி, ஏகாம்பரம், எங்க அப்பா, எம்மாதிரி ஆளுங்க தமிழைக் கத்துக்கொடுக்க இருக்காங்க. இந்தச் சின்னக் கிராமம் கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசானா, மத்த கிராமங்களோட தொடர்பு வைச்சுக்கிட்டு - உயிர் வாழறதுக்குத் தேவையான சாப்பாடு வேணும்னா தமிழைக் கத்துக்கணும் - பாதுகாப்பு வேணும்னா தமிழ்ல பேசணும்னு விதிமுறைகளை ஏற்படுத்தினா? நினைச்சுப் பாருங்க…

“கருவூர்த்தேவர் கொடுத்துட்டுப் போன திருப்பணித் திட்டம் நம்மகிட்ட இருக்கு. என்னென்ன கஷ்டங்கள், இடைஞ்சல்கள் வந்ததுன்னு எழுதிவைச்சிருக்காங்க. நமக்கு அது எவ்வளவு உதவியா இருக்கும்னு நினைச்சுப் பாருங்க! இந்தி மட்டுமே பேசறவங்க, அதாவது தமிழ் தெரியாதவங்க – தமிழ் பேசறவங்களை நம்பித்தான் வாழணும்கற சூழ்நிலை இப்ப உருவாயிருக்கு இல்லையா? உடல் உழைப்பு செய்யறது நாமதானே? அப்படியிருக்கறச்சே, உயிர் வாழணும்னு விரும்பறவங்க நாம சொல்லறதைத்தானே கேட்டாகணும்? நம்ம நிலைமை எப்படி உசந்திர்க்குன்னு புரிய ஆரம்பிக்குது” சிறிது நேரம் நிறுத்துகிறான் ஈஸ்வரன்.

“நீ சொல்றது ரொம்ப சரி ஈஸ்வரா” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறான் அழகேசன்.

“நாம ஒண்ணாச் சேர்ந்து ஒரு குட்டி அரசாங்கமே அமைக்கலாம். சிறு துளிகள் சேர்ந்துதானே பெருவெள்ளமா ஆகுது. அதுபோல சின்னச்சின்ன கிராமங்கள் ஒண்ணுசேர்ந்தா, ஒரு நாடாகலாம் இல்லையா! நீ சொல்ற விசயம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.”

ஓருவர் மாற்றி ஒருவர் தமிழ்த்திருப்பணியை எப்படி நிறைவேற்றலாம், யாரார் எந்தெந்த வேலைகளைச் செய்யலாம் என்று கலந்து ஆலோசித்து முடிவெடுக்கிறார்கள். பசி, தாகம், நேரம் போவது தெரியாமல் பேச்சு தொடர்கிறது.

இறுதிக் குறிப்பு

கங்கைகொண்ட சோழபுரம், தமிழ்நாடு

ஆனந்த, ஆனி 21 - ஜூலை 12, 2514

ரண்டு ஆண்களும், அவர்களுக்கு நடுவில் ஒரு பெண்ணும் மெல்ல நடந்து செல்கிறார்கள். தொலைவில் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோவிலின் விமானம் தெரிகிறது. அந்தப் பெண் நிலவுமொழி. ஏகாம்பரநாதனின் வழிவந்தவள்; வலப்பக்கத்திலிருக்கும் சிவசங்கரன், ஈஸ்வரனின் வழித்தோன்றல். காமாட்சி-அழகேசனின் பெயரனின் பெயரன் வெற்றிமாறன் இடப்பக்கத்தில் நடக்கிறான். மூவரின் முகத்திலும் அமைதி கலந்த மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

சோழபுரத்தின் கோயில்
சோழபுரத்தின் கோயில்

“நிலா, காஞ்சிபுரம் சென்று வந்தாயே, அங்கு நிலைமை எப்படி உள்ளது?” என்று வினவுகிறான் சிவசங்கரன்.

“சிவா, நெல்லூர் வரை தமிழ் பரவி விட்டதாம். அனைத்து ஊர்களிலும் தமிழ்ப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, வழிபாடுகள் தொடங்கியுள்ளன. அனைவரும் ஒரு தாய் மக்களைப் போல அன்புடன் பழகி வருகிறார்கள். அதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த மாதம் இங்கு, கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள நிறையப் பேர் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று பதிலளித்த நிலவுமொழி, “கடந்த மூன்று மாதங்களாக இங்கு என்ன நடக்கிறது?” என்று கேட்கிறாள்.

“தமிழ் மாநாட்டுக்கான ஏற்பாடுகளைத்தான் நாங்கள் செய்துவருகிறோம். மூவாயிரம் பேர் கலந்துகொள்வார்கள். நூறு, நூறு பேர்களாகப் பிரித்து முப்பது குழுக்கள் அமைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறோம்” என்று சிவசங்கரன் பெருமிதத்துடன் கூறுகிறான்.

“வெற்றி, உன் மதுரைப் பயணம் எப்படி?”

“எனக்கு மதுரையை விட்டு வரவே மனமில்லை. எங்கும் பச்சைப் பசேலென்று கண்ணுக்குக் குளுமையாக இருக்கிறது. வெளியூராரை அன்புடன் வரவேற்று உபசரிக்கின்றனர். தமிழ்ச்சங்கம் அமைத்து, தமிழ்க்கலைகளைப் போற்றி வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.  திருவனந்தபுரம், திரிஸ்ஸூர், கொல்லம், கொச்சி போன்ற இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் அமைந்துள்ளன. அந்த மாநிலத்துக்குச் சேர நாடு என்று பெயரிடப்போகிறார்கள்” என்று வெற்றிமாறன் பூரிப்புடன் பகர்கிறான்.

“இவையெல்லாம் நம்ம முன்னோர், கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன் துவங்கி வைத்த தமிழ்த்திருப்பணி என்பதை நினைத்துப்பார்த்தால், நம்ப முடியாத அளவுக்கு மகிழ்வாகவும், வியப்பாகவும் இருக்கிறது” என்று சொன்ன சிவசங்கரனின் முகம் மகிழ்ச்சியில் மலர்கிறது. மூவரும் அருகிலுள்ள மண்டபத்தில் நுழைகின்றனர். கதிரவன் மறைகிறான்.

திடுமென்று ஒரு கம்பத்திலிருந்து கிளம்பிய ஒளி அவர்களின் கண்களில் அடிக்கிறது. மூவரும் திடுக்கிட்டு அதைப் பார்க்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கிழந்த காந்த சக்தியை மீண்டும் உலகம் பெற்றதால், கம்பத்தின் உச்சியிலுள்ள மின்கலத்தில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தால் தானாக ஒளிரிய அந்த விளக்கு அன்றுதான் உயிர்பெற்றிருக்கிறது என்பதை அவர்கள் அறிய நியாமில்லைதான்!

“வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்” - அமரகவி பாரதி.

(முற்றும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com