
நம்முடைய சமூகத்தில் பெரியவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் தனிமை. குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு அவர்கள் தங்களை அதிகமாக தனிமைப்படுத்தி கொள்வது அதிகரித்துள்ளது. இதனை உணர்ந்த வாழ்க்கை திறன் பயிற்சியாளர் உஷா ராம்கி, பெரியவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 2023 அக்டோபர் 1 - ம் தேதி 'பூர்ண சக்தி' என்ற யூட்யூப் சேனலைத் தொடங்கினார். தற்போது 'தமிழ் திருவிழா' என்ற பெயரில் பெரியவர்களுக்கான பிரத்யேக நிகழ்வு ஒன்றை வரும் செப்டம்பர் 14, 2025 நடத்த உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
“பூர்ண சக்தி யூட்யூப் சேனல் பொழுதுப்போக்கு, ஈடுபாடு, வலிமைப்படுத்தல் என்ற மூன்று அடிப்படைகளின் மூலம் முதியோர்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது.
இதன் முதல் நோக்கம் பொழுதுப்போக்கு (Entertainment): சினிமா பாடல்கள், பாட்டு போட்டிகள், பழைய நடிகர்களை நேர்காணல் செய்தல் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோக்களாக பதிவிட்டு வருகிறோம்.
இரண்டாவது நோக்கம் ஈடுபாடு (Engage): முதியவர்களின் விருப்பங்களை கேள்விகளாக கேட்டு, அவர்கள் பகிர்ந்த அனுபவங்களை சேனலில் பதிவிட்டு வருகிறோம். அதேபோல், மார்கழி மாதத்தில் அவர்கள் பாடிய பாடல்களை ஒன்றாகச் சேர்த்து டிஜிட்டல் மார்கழி விழாவாக நடத்தி வெளியிடப்படுகிறது.
இதன் மூன்றாவது நோக்கம் வலிமைப்படுத்தல் (Empower): மருத்துவர்களிடம் முதியோர்களுக்கான உடல்நல பராமரிப்பு, டயட் முறைகள், பிசியோதெரபி, ஃபிட்னெஸ் மற்றும் மனநலம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு, அவற்றின் விளக்கங்களைக் கொண்ட வீடியோக்களை பதிவிட்டு, அவர்கள் தங்களை வலிமைப்படுத்தி கொள்கின்றனர், இதோடு, ஸ்பாட்லைட் என்ற தலைப்பில் பெரியவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல வீடியோக்கள் வெளியிடப்படுகிறது,"
என கூறினார்.
மேலும், ஆன்லைன் நிகழ்வுகள் மட்டுமல்லாமல், நேரடியாகவும் இரண்டு முறை ஃபிட்னெஸ் ஃபன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஓட்டப் பந்தயம், விளையாட்டு, நடனம், வாக்கிங் போன்ற போட்டிகளில் முதியோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இப்போது, அதே வரிசையில் வரும் செப்டம்பர் 14, 2025 மாலை 3 மணிக்கு சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் ரபேல் பள்ளியில் 'தமிழ் திருவிழா' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் முன் பதிவு செய்ய வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
இந்நிகழ்வில், தாயம், பரமபதம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும், நடனம், கோலம், சமையல், பாட்டு போட்டிகளும் இடம்பெறுகின்றன. இதில் கோலம் மற்றும் சமையல் போட்டிகளுக்கு மட்டும் ரூ.100 கட்டணம் செலுத்தி உடனே முன் பதிவு செய்யலாம்.
போட்டிகளில் பங்கேற்கவும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் தங்களின் பெயர் மற்றும் வயதை வாட்ஸ்அப் எண் 89254 11120 -க்கு அனுப்ப வேண்டும்.
நிகழ்விடத்தில் ஆம்புலன்ஸ் வசதிகள் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவிற்கு ஐடிபிஐ வங்கி டைட்டில் ஸ்பான்சராகவும், வேதாந்தா சீனியர் லிவிங் கோ-ஸ்பான்சராகவும், கல்கி குழுமம் மீடியா பார்ட்னராகவும் இணைந்துள்ளனர்.
பாரம்பரியம் மற்றும் மகிழ்ச்சியை இணைக்கும் இந்நிகழ்வுகள் பெரியவர்களுக்கு உற்சாகத்தையும், சமூகத்துடன் இணைந்திருக்கும் வாழ்க்கையையும் பரிசளிக்கின்றன. தவறவிடாதீர்கள்..!