
உலகம் முழுவதும் என்ன முடியாத அளவிற்கு நோய்கள் பெருகி கொண்டே செல்ல, அதை எதிர்கொள்ளும் மருத்துவமும் அறிவியலும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கிறது. உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவர் என்ற வீதம் மருத்துவத்துறையும் விரிவடைந்துகொண்டேதான் உள்ளது.
நொடிக்கு நொடி பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி காட்டிக் கொண்டிருக்கும் மருத்துவத் துறை ஏழை எளிய சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்கிறதா என்பது தற்போதையே கேள்வியாக உள்ளது. குறிப்பாக சமீபத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வேறொரு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட பிறகு, அரசு மருத்துவமனைகள் மீது கட்டியெழுப்பப்படும் தவறான பொது பிம்பம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளும், மக்களின் எதிர்பார்ப்புகளும் என்னவென்பதினை அறிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது.
மருத்துவதில் சிறந்து விளங்கும் தமிழகம்!
இந்தியாவில் உள்ள மாநிலங்களில், தமிழ்நாடு மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக பார்க்கப்படுகிறது. வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற நல்வாழ்வு மையம், கிராமப்புற மருத்துவமனைகள், வீடு தேடிச் சென்று மருத்துவ சிகிச்சை என்று பல்வேறு வகைகளில் அரசு சுகாதாரத்துறை மூலமாக தமிழ்நாட்டின் கடைகோடி கிராமங்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்து இருக்கிறது.
இது ஒரு சாதாரண விஷயம் அல்ல, அரசு மருத்துவமனைகளில் தொடக்க சிகிச்சை முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை அனைத்து வகை உயர்தர சிகிச்சையும் எளிதாக நடைப்பெற வாய்ப்பு ஏற்படுத்தபட்டிருக்கிறது. அதோடு உயர் தொழில்நுட்ப கருவிகளும் தமிழ்நாடு சுகாதாரத் துறை கைவசம் உள்ளது. இதன் மூலம் தினமும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு சிகிச்சைகளை கட்டணமின்றி அளித்து வருகின்றன அரசு மருத்துவமனைகள். இது குறித்து இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில் இந்திய சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை முன்னுதாரணமாக விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம்!
தமிழ்நாடு அரசு பல திட்டங்கள் மூலமாக சுகாதாரத் துறையை தொடர்ந்து மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை கையாண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக உலக வங்கியில் 1,900 கோடிக்கும் அதிகமான நிதியோடு, மேலும் தமிழ்நாடு அரசு சுமார் 800 கோடிக்கும் அதிகமான நிதி பங்களிப்போடு தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் என்ற பெயரில் 2019 முதல் 2024 வரை இலக்கை நிர்ணயித்து ஐந்தாண்டு திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட தரமான சிகிச்சை, தொற்றும் மற்றும் தொற்ற நோய்களுக்கான உயர்தர சிகிச்சை மேலாண்மை, பேறுகால மற்றும் குழந்தை நல திட்டத்தில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கான முன்னெடுப்பு, பொது மருத்துவமனைகள் அதிகரிப்பு, மருத்துவமனையின் தர மதிப்பீட்டை அதிகரிக்க செய்ய முன்னெடுப்பு, உயிர்கொல்லி நோய்களுக்கான உயர்தர சிகிச்சையை சாமானியருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் செயல்முறை திட்டம், விபத்து மற்றும் காய மேலாண்மை சிகிச்சை, சிறப்பு வாய்ந்த மருத்துவர்களை கொண்டு மக்களுக்கான மருத்துவத்தை உறுதி செய்வோம் என்ற வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக பெரும் பொருள் மதிப்பீட்டிலான திட்டத்தை அரசு செய்துகாட்டி வருகிறது. இப்படி பல்வேறு வகையான முன்னுதாரண திட்டங்களை தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் ஏற்படுத்தி கொண்டு இருக்கக் கூடிய அதே நேரத்தில் சில சிக்கல்களும், சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன.
அரசு மருத்துவமனையில் பிரதான பிரச்சனைகள்:-
தமிழ்நாட்டினுடைய மருத்துவ கட்டமைப்பின் வளர்ச்சியை பார்த்த அதே நேரம் ஒரு அரசு மருத்துவமனை எவ்வாறான சிக்கல்களை சந்திக்கிறது, எத்தனை சவால்கள் இருக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பிற துறைகளில் ஏற்படும் சிக்கல்களையும், சவால்களையும் பிறகு சரி செய்து கொள்ளலாம் என்று கூறி கடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் மருத்துவத்துறையில் ஏற்படும் சிறிய சிக்கல்களும் பேரிழப்பை ஏற்படுத்தும். ஏன் உயிர் போகும் அபாயம் கூட ஏற்படலாம். இதனாலேயே சுகாதாரத் துறையை கூடுதல் முக்கியத்துவத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
செவிலியர் பற்றாக்குறை மிக முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் பணியில் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் கூடுதல் நேர பணிச்சுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறை, நோயாளிகள் உடன் இருப்பவர்களுக்கு ஓய்வெடுக்க இடம் இல்லாத சூழல், மருந்துகள் பற்றாக்குறை, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அசுத்தமான கழிப்பிடங்கள், தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை, பார்க்க மட்டும் என்ற வகையில் பயன்படுத்தப்படாமல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள பேட்டரி கார்கள், செல்போன், சக்கர வாகனம் திருட்டு, பணிக்கு நேரத்திற்கு வராத பணியாளர்கள், என்று எண்ணற்ற பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள். இவை தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் உள்ள பிரதான பிரச்சனைகளாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயதுக் குழந்தை முகமது தஹீர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அந்தக் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுள்ளது. தவறான சிகிச்சையின் காரணமாக குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.