பொன்னியின் செல்வன்… அமரர் கல்கியால் மிகப் பிரமாதமாக எழுதப்பட்டு உலக முழுவதும் வரவேற்பு பெற்ற சரித்திர புதினம்!
இப்போது இயக்குனர் மணிரத்தினத்தால் திரையில் எழுதப்பட்ட சரித்திர காவியமாக திரைப்படமாக உருவாகி பாமரன்
முதல் பண்டிதர் வரை உலகம் முழுவதும் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.
இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக்கப் போகிறார் எனத் தெரிந்ததுமே, சமூக ஊடகங்களில்தான் எத்தனை கமெண்ட்டுகள் ..ஒட்டியும் வெட்டியும் எத்தனை பதிவுகள்! பின்னர் இப்படத்துக்கான நடிகர்கள் தேர்வு இசையமைப்பாளர் போன்ற செய்திகள் வர வர முகநூல் முழுவதும் கேலிகள்.. கிண்டல்கள்..!
படத்தின் டீஸர் வெளியானதும் படம் வருவது பற்றிய எதிர்பார்ப்புக்கள் ஆனால் எல்லோரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். சிலர் திட்ட, சிலர் வாழ்த்த.. ஒருவழியாக படம் வெளியானது மட்டுமல்ல.. இதுவரை மற்ற எந்த படத்துக்கும் கிடைக்காத வரவேற்பையும் வசூலையும் அள்ளி குவித்திருக்கிறது.
இரண்டு நாட்கள் முன்பு நானும் ‘பொன்னியின் செல்வன்’ பார்த்தேன் ரசித்தேன். கல்கி குடும்ப உறுப்பினர் என்பதால் நான் மட்டுமல்ல.. கிட்டத்தட்ட படம் பார்த்த பெரும்பாலானவர்கள் பாராட்டினர். மேலும் அடுத்து இப்படத்தின் 2-ம் பாகமான PS - 2 எப்போது வெளிவரும் என ஆவலோடு காத்திருப்பதுதான் நிஜம்.
இப்படத்தில் ஏகப்பட்ட கதா பாத்திரங்களுடன் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் வந்த ஒரு தொடர் நாவலை அதன் சுவை குன்றாமல் திரையில் மூன்று மணி நேர படமாக காண்பிப்பது பெரிய சவால்.. யானையை பானையில் அடைப்பது போன்றது! அந்த இமாலய சாதனையை அற்புதமாக செய்துள்ளார் மணிரத்னம். திரைக்கதையில் கதைப் போக்கு சற்றும் சுவாரஸ்யம் கெடாமல் ஒரு காவியமாக பிரம்மாண்டமாக படைத்து அசத்தியுள்ளார். ஹாட்ஸ் ஆஃப் டு மணிரத்னம்.
ஆனந்த விகடன் பத்திரிகை விமரிசனத்தில் கூறியதுபோல அசாத்தியம் என நினைத்து பலரால் கை விடப்பட்ட அந்த முயற்சியை சாத்தியமாக்கி தன் ட்ரீம் பிராஜெக்டை சரித்திரம் படைக்கும் வண்ணம் எடுத்து வெற்றி பெறச் செய்து விட்டார் இயக்குனர்.
பொன்னியின் செல்வன் படம் குறித்து ஆரம்ப காலத்தில் அனைவராலும் ‘இன்னொரு பாகுபலி’ என கிண்டல் செய்யப்பட்டது ஆனால் பாகுபலி படைப்பு திகைப்பூட்டினாலும் அது கிராபிக்ஸ் என்பது அடி மனதில் தெரிந்தது ஆனால் PS-1 ன் பிரம்மாண்டமும் காட்சி அமைப்புகளும் இயற்கையாக மனதில் பதிந்து படத்துடன் ஒன்றிப் போக வைத்தது.
இப்படத்துக்கு மணிரத்னம் தேர்வு செய்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் படத்தின் பாதி வெற்றியை உறுதி செய்து விட்டனர். மிகக் கச்சிதமான தேர்வு அனைவர்க்கும் அதிக அளவில் காட்சிகள் இல்லையென்றாலும் அவரவர் பங்கை அருமையாக செய்துள்ளனர் ஆதித்த கரிகாலன் அருள் மொழி வர்மன், நந்தினி நடிப்பு அபாரம். வந்தியத்தேவன் -குந்தவை காட்சிகள் பாகம் இரண்டில் பார்க்கலாமோ?
அமரர் கல்கியின் பேத்தி திருமதி சீதா ரவி கூறியதுபோனிந்த படத்தில் நடிகர்கள் மறைந்து பாத்திரங்களே கண்ணுக்கு தெரிகின்றனர்.
அமரர் கல்கியின் மற்றொரு பேத்தியான திருமதி கௌரி ராம்நாரயணன் கூறியது போல மணிரத்னம் அவர்கள் மிக கௌரவமாக இந்த படத்தை எடுத்துள்ளார். மேலும் ரவிவர்மன், தோட்டாதரணி, ஜெயமோகன், இளங்கோ குமரவேல், ஶ்ரீகர் பிரசாத், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெற்றிக்கு வலு சேர்த்துள்ளார்கள்.
இசை இன்னும் சற்று நம் நாட்டு இசை போல இருந்திருக்கலாமோ என நான் நினைத்தேன் ஆனால் பாடல் காட்சிகளில் தியேட்டரில் காணும் ஆரவாரத்தையும் கை தட்டலையும் கேட்டபோது ‘ஓஹோ எனக்கு வயதாகிவிட்டது ரசிக்க தெரியல’ என்றுணர்ந்தேன்.
ஒரு படைப்பாளிக்குரிய. சுதந்திரத்துடன் சில காட்சிகளை சேர்த்ததிலும் சிலவற்றை விட்டு விட்டதிலும் கவனமாக இருந்து தன் முத்திரையை பதித்து விட்டார் மணிரத்னம். படத்தில் சில சின்னஞ்சிறு குறைகளிருப்பினும் அதனை மறந்து அதையும் மீறி நாவலை படித்தவர், படிக்காதவர் என்று அனைவரையும் தியேட்டருக்கு வரவழைத்ததர்குக் காரணம் - அமரர் கல்கியின் கதை வளமும் மணிரத்னத்தின் கடும் உழைப்புமே!
இதை விட மகிழ்ச்சியான செய்தி - படம் பார்த்த அனைத்து தரப்பினரும் முன்பே நாவலை படித்தவர் படிக்காதவர் என வயது வித்தியாசமின்றி மீண்டும் அந்த நாவலை படிக்க தொடங்கி விட்டனர் என்பதுதான்! பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை கூடியுள்ளது!
குமுதத்தில் தன் கட்டுரையில் திரு மாலன் அவர்கள். ‘’கல்கி மறக்கப்பட்டு வருகிறாரோ என கவலையுற்றேன். ஆனால் அதை மீட்டெடுத்த மணி ரத்தினத்திற்கு நன்றி!”’ என எழுதியது அருமை.
கல்கி குடும்ப உறுப்பினர் என்ற வகையில் இந்த படத்தின் வரலாறு காணாத வெற்றி. கல்கி தாத்தாவின் மிகப் பெரிய நாவலுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என பெருமிதமடைகிறேன்.
PS-1 படத்தின் கடைசி காட்சி, ‘’ஆஹா PS2 வை எப்போது பார்ப்போம்..’’ என்று ஆவலை மக்களிடையே தூண்டிவிட்டுள்ளது சிறப்பு!
மொத்தத்தில் - மணிரத்தினம் சுவையான நீண்ட நாவலை அழகாக சுருக்கி படமெடுத்து போல எனக்கு சுருக்கமாக விமர்சனம் செய்யத் தெரியவில்லை!