புதுமணத் தம்பதிகளுக்கு நிதி ஆலோசனைகள் பத்து!

முத்தான பத்து; நம் வாழ்க்கை கெத்து!
புதுமணத் தம்பதிகளுக்கு நிதி ஆலோசனைகள் பத்து!

புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள், திருமணத்துக்கு முன்பு, தங்களுடைய நிதி சார்ந்த விஷயங்களைத் தன்னிச்சையாக கையாண்டிருப்பார்கள். ஆனால், திருமணம் ஆன பின்பு, குடும்பம் என்ற கட்டமைப்பில், வாழத் தொடங்கிவிட்ட பின்பு, நிதி சார்ந்த விஷயங்கள் தனித்தனி அல்ல, அவை ஒன்றாகி விடுகின்றன. எனவே, அவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் புதியதொரு கண்ணோட்டத்தினைக் கொள்வது அவசியமாகிறது. என்ன செய்யலாம்?

1. தம்பதியினருக்கு இடையே எந்த ஒரு ரகசியமும் இருக்கக்கூடாது, பண விஷயம் உட்பட. தம்பதியினர் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் சம்பாதிப்பதோ, செலவழிப்பதோ கூடாது. எந்த ஒரு பெரிய செலவாக இருந்தாலும், இருவரும் சேர்ந்தே அந்த முடிவினை எடுக்க வேண்டும். ஒருவர் ஊதாரித்தனமாக செலவு செய்ய முற்பட்டால், மற்றவர் அவரைக் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு தம்பதிகள் இடையே வெளிப்படைத் தன்மை இருக்கும்போது, வீட்டின் நிதி நிலைமையை அறிந்து மேம்படுத்துவது எளிதாகிறது.

2. எப்போது திருமணம் ஆனதோ, அப்போதிலிருந்து இருவருடைய வாழ்க்கைக் குறிக்கோள்களை தனித் தனியாக வைத்திருக்காமல், சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, ஒருவருக்கு சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்லும் விருப்பம் இருக்கலாம். திருமணம் ஆன பின், அது அவருடைய தனிப்பட்ட குறிக்கோள் அல்ல. இருவருடைய இணைந்த குறிக்கோளாக மாறிவிட்டது. அதற்காக, திட்டமிட்டு பணம் சேர்த்து, செலவு செய்யுங்கள். அதேபோல், ஒருவரது குறிக்கோள் எதிர்காலத்தில் குடும்பத்தில் நிதி தட்டுப்பாட்டைக் கொண்டுவரும் என்றால், சேர்ந்து முடிவெடுத்து, அந்தக் குறிக்கோளை உங்களுடைய எதிர்காலத்திலிருந்து எடுத்துவிடுங்கள். குறுகிய காலக் குறிக்கோள்கள், நடுத்தர காலக் குறிக்கோள்கள், நீண்ட காலக் குறிக் கோள்கள் என்று வகைப்படுத்தி, குறிக்கோள்களுக்கு ஏற்ற முதலீட்டு கலவையைத் தேர்ந்தெடுத்து, முதலீடு செய்யுங்கள்.

3. அவசர கால நிதியை ஒதுக்குங்கள்; அவசர கால நிதி என்பது, உங்களுடைய அவசரத் தேவைகளுக்கு, பிறரிடம் கையேந்தாமல், கடன் வாங்காமல், நீங்களே சமாளிப் பதற்கு உதவுவது. இது உங்களுடைய எதிர் கால முதலீடுகளுக்கு பங்கம் விளைவிக்காமல், அவசரத் தேவைகளை பார்த்துக்கொள்ள உதவுவது. திடீரென்று வீட்டின் அவசர மராமத்து வேலைகள், வீட்டு உறுப்பினரின் உடல் நலக் குறைவு, திடீரென்று வேலை இழத்தல் போன்றவை யாருக்கும் நிகழலாம். உங்களிடம் அவசர கால நிதி இல்லையென்றால், இப்போதே தொடங்குங்கள்.

4. காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்குங்கள்; காப்பீட்டுத் திட்டத்தையும் முதலீட்டையும் இணைத்து குழப்பிக் கொள்ளாதீர்கள். அவற்றின் குறிக்கோள்கள் வேறு வேறு. குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர் எதிர்பாராமல் இறந்தால், குடும்பத்தைக் காப்பாற்ற, கால வரையறை உள்ள காப்பீட்டுத் திட்டம் (Term Insurance Plans) சிறந்தது. குடும்பத்தின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.

5. திட்டமிட்டு (Budget) செலவு செய்யுங்கள்; வரவு செலவு கணக்கு வைத்திருங்கள்; உங்கள் குடும்பம் என்ற நிறுவனத்தின் தலைமை நிதி மேலதிகாரிகள் நீங்கள் இருவர்தான். உதாரணமாக, வெளியே சென்று உண்பதற்கு மாதம் ரூபாய் 1500 என்று ஒதுக்கினால், ரூபாய் 1500 தாண்டாமல், அதற்குள்ளாக உங்களது வெளியே சென்று உண்பதற்கான செலவை வைத்துக் கொள்ளுங்கள். தினமும் வரவு செலவு கணக்கை எழுதுங்கள். மாத இறுதியில், வரவு செலவை வரி வரியாகப் படித்து, வரும் மாதங்களில் எவ்வாறு குறைவாக செலவு செய்யலாம் என்று யுக்தியை யோசியுங்கள். இதன் மூலம், அதிக பணத்தைச் சேமிக்கப் பாருங்கள்.

6. வீடு மற்றும் சிற்றுந்து இரண்டும்தான், ஒரு மனிதன் தனது வாழ்நாளில் செய்யும் பெரிய செலவுகள். அவை இரண்டிலும், உங்களது தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளுங்கள். பெரிய செலவில் மாட்டிக்கொள்ளாதீர்கள். சிற்றுந்து என்பது மதிப்பு குறையும் ஒரு சொத்து. கண்டிப்பாக தேவை என்றால் வாங்குங்கள். பொது போக்குவரத்தில் சமாளிக்க முடியுமென்றால் வாங்க வேண்டாம். வாங்கவேண்டுமெனில், பணம் சேமித்து வாங்குங்கள். வீடும் உங்களின் தேவையைச் சார்ந்தே வாங்குங்கள். அதிக கடன் சுமைக்கு ஆளாகாதீர்கள். குடும்ப வாழ்க்கையின் நிம்மதியை இழக்காதீர்கள்.

7. எந்த விதத்திலும் கடனைத் தவிருங்கள். கடன் குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கவல்லது. வீட்டுக் கடன், குழந்தைகளின் எதிர்கால மேல்படிப்பு போன்ற வற்றிற்கு மட்டும் தேவைப்பட்டால் கடன் வாங்குங்கள். அவை எதிர்காலத்தில் நல்ல ஒரு பலனைக் கொடுக்கும். வீடு என்பது அத்தியாவசிய தேவை. வட்டி விகிதம் குறைவு. அரசின் வரிச் சலுகைகள் உண்டு. குழந்தை களின் மேல்படிப்பு அவர்களுக்கு நல்லதொரு எதிர் காலத்தைக் கொடுக்கும். கல்விக் கடனுக்கும் வட்டி விகிதம் குறைவு. இந்தக் கடன்களைக் கூட சீக்கிரம் அடைத்து விட்டு, கடனில்லாத குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.

8. குடும்பத்தின் தேவைக்காக இருவருமோ அல்லது ஒருவர் மட்டுமோ வேலைக்குச் சென்று பணம் ஈட்டி வரலாம். ஈட்டும் பணத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஆனால், ஈட்டிய பணம் இருவருக்கும் பொதுவானதுதான். ஒருவர் பணம் ஈட்டுவதால், தனக்கு மட்டும் நிதி சம்பந்தமான முடிவெடுப்பதில் அதிக உரிமை என்ற முடிவு கூடாது. நீங்கள் திருமணமாகி, குடும்பத்தை தொடங்கியபின், எவ்வாறு உங்களது குறிக்கோள்கள் இணைந்தவையோ, அவ்வாறே உங்களது சம்பாதித்த பணங்களும் இணைந்தவைதான். கூட்டு வங்கிக் கணக்கைத் தொடங்குங்கள். குடும்பத்தின் வரவுகளும், செலவுகளும் கூட்டு வங்கிக் கணக்கிலிருந்தே இருக்கட்டும். இது ஒரு தெள்ளத் தெளிவான நிதிநிலைமை குறித்த முடிவெடுத்தலுக்கு வழிவகுக்கும்.

9. சிறிய செலவுகளான காபி குடிப்பது, இனிப்பு டப்பா வாங்குவது போன்றவற்றைச் செயல்படுத்துவதைத் தன்னிச்சையாக எடுக்கலாம். ஆனால், பெரிய செலவுகளான எந்தத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவது, எந்தக் குளிர்சாதன பெட்டி வாங்குவது போன்றவற்றை, இருவரும் சேர்ந்து முடிவெடுங்கள். உதாரணமாக, எந்த ஒரு செலவும் ரூபாய் 500 அல்லது 1000 தாண்டுமெனில், உங்களுடைய வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து முடிவெடுத்தப் பின்னர், செயல்படுத்துங்கள். 

10. தம்பதியினர் இருவரும் ஒரு குழு. இரட்டை மாட்டு வண்டியின் மாடுகளைப் போல. எங்கெங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளது, எங்கெங்கெல்லாம் கடன் உள்ளது, எங்கெங்கெல்லாம் சொத்து உள்ளது என்பது போன்ற விஷயங்கள் இருவருக்கும் தெரிய வேண்டும். இருவரும் மற்ற வீட்டு வேலைகளைப் போலவே, நிதி சார்ந்த வேலைகளான, முதலீடு செய்வது, கடனை மாதாமாதம் அடைப்பது, போன்றவற்றைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com