
மகாராஷ்டிர மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் கோலாரா வனச்சரகத்தில் சுவாதி துமனே என்ற பெண் வனக்காவலர் இன்று 3 உதவியாளர்களுடன் புலிகள் கணக்கெடுக்கும் பணிக்குச் சென்றார். அச்சமயம் புலி ஒன்று ஆக்ரோஷமாக சுவாதியைத் தக்கி கொன்றதால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தடோபா அந்தாரி புலிகள் காப்பக தலைமை வனத்துறை அதிகாரி ஜித்தேந்திர ராம்காவ்கர் தெரிவித்ததாவது:
சுவாதி தன்னுடன் 3 உதவியாளர்களை அழைத்து கொண்டு கோலாரா கேட்டில் இருந்து 4 கி.மீ. வரை காட்டின் மைய பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு சாலையில் பெண் புலி ஒன்று சுமார் 200 மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்ததை கவனித்தனர். அதைத் தொடர்ந்து சுவாதி உள்ளிட்ட மூவரும் சென்றபோது அநத
புலி, திடீரென வனக்காவலர் சுவாதி துமனேயை பாய்ந்து தாக்கி, அடர்ந்த வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. பின்னர் சுவாதி துமனேயை பிணமாகதான் மீட்க முடிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வனத்துறை உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.
மேலும் புலி தாக்கியதில் பலியான பெண் வனக்காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து கால்நடையாக சென்று புலிகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
–இவ்வாறு தடோபா அந்தாரி புலிகள் காப்பக தலைமை வனத்துறை அதிகாரி ஜித்தேந்திர ராம்காவ்கர் தெரிவித்துள்ளார்.
புலிகள் கணக்கெடுப்பு பணியின் போது, புலி தாக்கி பெண் வனக்காவலர் உயிரிழந்த சம்பவம் மராட்டியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.