புண்ணியமிகு துலா ஸ்நானாரம்பம்! 18.10.2022 – 16.11.2022

காவிரி தாய்
காவிரி தாய்

ப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இம்மாதத்துக்கு, ‘துலா மாதம்’ என்று பெயர். இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருப்பதால் இதற்கு, ‘துலா (தராசு) மாதம் எனப் பெயரிட்டனர் நமது முன்னோர்கள். இந்த மாதத்தில் கங்கை, யமுனை, கோதாவரி உள்ளிட்ட அனைத்துப் புண்ணிய நதிகளும் காவிரிக்கு வருகை தருவதாக ஐதீகம். இந்த ஐப்பசி மாதம் முப்பது நாட்களிலும் காவிரியில் முறைப்படி ஸ்நானம் செய்வது அனைத்துப் பாபங்களையும் போக்குவதோடு, மன நிம்மதியையும் தரும். துலா மாதத்தின் அனைத்து நாட்களிலும் காவிரியில் நீராடுபவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.

இனி, ஐப்பசி மாத காவிரி நீராடலின் பெருமையைச் சற்றுக் காண்போம்.

துலா மாதத்தில் காவிரிக் கரையில் செய்யப்படும் முன்னோர்களுக்கான சிராத்தம், பிண்டதானம், தர்ப்பணம் போன்றவை கல்ப கோடி வர்ஷபர்யந்தம் பித்ருக்களை திருப்தி செய்விக்க வல்லவையாகின்றன. பிரம்மா முதலான சகல தேவர்களும், ஸரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்திராணி முதலியவர்களும் அப்ஸரஸ்களும் துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்ய விரும்பி வருகின்றனர்.

துலா மாத நீராடல்
துலா மாத நீராடல்

ப்பசி முதல் நாளான 18.10.2022 அன்று திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி கடைசி நாளான 16.11.2022 அன்று மயிலாடுதுறையிலும் காவிரியில் நீராடுவது விசேஷமாகும். ஐப்பசியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் காவிரியில் நீராடினால், மகாவிஷ்ணுவின் அருளைப் பெறலாம். இம்மாதத்தில் சூரிய உதயத்துக்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் நீராடுவதாக ஐதீகம்.

ஐப்பசி மாதத்தின் அனைத்து நாட்களிலும் காவிரியில் ஸ்நானம் செய்ய இயலாதவர்கள், ‘த்ரிராத்ரம் ஜாஹ்ணவீ தீரே’ என்று கூறியபடி இம்மாதத்தின் ஏதாவது மூன்று நாட்களில் மட்டுமாவது காவிரியில் ஸ்நானம் செய்யலாம். மூன்று நாட்களில் நீராட முடியாதவர்கள், ‘கடைமுகம்’ எனப்படும் ஐப்பசி மாத கடைசி நாளான 30ஆம் தேதி காவிரியில் நீராடி மாதம் முழுவதும் நீராடிய பலனைப் பெறலாம். மேலும், கடைமுகத்திலும் நீராட இயலாதவர்கள், ‘முடவன் முழுக்கு’ எனப்படும் கார்த்திகை மாத முதல் தேதியன்று நீராடியும் துலா ஸ்நானப் பலனைப் பெறலாம் என்கின்றன புராண நூல்கள்.

ஸ்ரீரங்கனுக்கு யானை மீது காவிரி தீர்த்தம்
ஸ்ரீரங்கனுக்கு யானை மீது காவிரி தீர்த்தம்

துலா ஸ்நான காவிரி நீராடல் உங்கள் பாபங்களைப் போக்குவதோடு, உங்கள் முன்னோர்களின் பாபங்களையும் போக்குகிறது. மேலும், அழகு, ஆயுள், ஆரோக்கியம், கல்வி, செல்வம், வீரம் மற்றும் திருமணம், குழந்தைப் பேறு போன்றவற்றையும் தரவல்லது. ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக் குடங்களில் அம்மா மண்டபம் காவிரி நதிக்கரை படித்துறையிலிருந்து புனிதத் தீர்த்தம் சேகரித்து, யானை மீது கொண்டு வந்து அபிஷேகம் செய்வர். மற்ற மாதங்களில் ஸ்ரீரங்கத்தின் வடக்கே உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது வழக்கம்.

காவிரி நீராடல்
காவிரி நீராடல்

ரு சமயம் பார்வதி-பரமேச்வரன் நந்தவனம் ஒன்றில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவர்களை தரிசிக்க வந்தன. அவர்களுக்கு வேண்டிய வரங்களை அருளிய ஈச்வரன், “கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் அனைத்துப் பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும்” என்று உரைத்தருளினார்.

காவிரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார். அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்கிறது புராணம். முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மகாவிஷ்ணுவைப் பற்றிய ‘வீரஹத்தி’ தோஷம் போக்க, காவிரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றார் என்கிறது துலா காவிரி மகாத்மியம். அனைத்துக்கும் மேலாக, ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவியே காவிரியில் நீராடி, பக்தர்கள் தன்னிடம் கரைத்த பாபங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்கிறாள் என்கிறது புராணம்.

காவிரி ஸ்நானம் செய்யும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

‘நமஸ்தே தடிதாம் முக்யே நிகமாகம ஸம்ஸ்துதே

பாபகாயம் பாரிஸுத்யம் ஆயுராரோக்ய மேவ ச

ஸெளபாக்யமபி ஸந்தானம் க்ஞானம் தேஹி மருத்வ்ருதே’

‘நதிகளுள் முக்கியமானவளே, வேத ஆகமங்களால் போற்றப்படுபவளே, மருத்வ்ருதே பாபத்தாலான எனது உடலை பரிசுத்தமாக்கு. ஆயுள், ஆரோக்கியம், ஸெளபாக்கியம் சந்தானம், ஆத்ம ஞானம் ஆகியவற்றை எனக்குத் தந்து அருள்வாய்’ என்பது இந்த சுலோகத்தின் பொருளாகும். ஐப்பசியில் காவிரி நீராடுவோம்; ஜன்ம பாபங்களைக் கடைத்தேற்றுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com