
இந்த காலத்தில் எந்த செய்தித் தாளை எடுத்தாலும் வீடு கட்டுபவர்கள் விளம்பரம். அதுவும், ஆங்கில செய்தித் தாள்களில் செய்திகளை விடவும் விளம்பரங்கள் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நாம் வீடு வாங்க வேண்டும் என்பதில் நம்மை விடவும் நடிக, நடிகையரும், கிரிக்கெட் வீரர்களும் ஆர்வத்துடன் வீடு வாங்க அழைக்கிறார்கள். சென்னையில் மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளில் வீடு வாங்க நம்முடைய ஊரில் விளம்பரம். சில நாட்களில், அமெரிக்கா, கனடா நாடுகளில் வீடு வாங்கவும் இங்கு விளம்பரம் செய்வார்களோ?
ஒரு நாட்டிற்கு உள் கட்டமைப்பு முக்கியமானது. தற்போது சென்னையில் எங்கு பார்த்தாலும், அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. இதைத் தவிர சென்னை போக்குவரத்திற்காக மெட்ரோ ரயில் பணி, சாலை விரிவாக்கம், மேம்பாலம் எனப் பல பணிகள் நடந்த வண்ணம் இருக்கிறது. ஆகவே, எங்கு திரும்பினாலும், “மாற்றுப் பாதையில் செல்லவும்” என்றொரு அறிவிப்பு. மேலை நாடுகளில் கட்டமைப்பு பணி நடக்கும் இடங்களில், “உங்கள் வரிப்பணம் இங்கே வேலை செய்கிறது” என்ற அறிவிப்பைக் காணலாம்.
வேலைகள் நடப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், தெருவெங்கும் சிறு சிறு கற்கள். சுட்டெரிக்கும் சூரியனால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நான், சூரியன் மறைந்ததும், வீதியில் நடக்கத் தொடங்கினேன்.
சிறிது தூரம் காலடி எடுத்து வைப்பதற்குள், செருப்பில் புகுந்த சிறு கற்கள் என்னுடைய நடையை நடனமாக்கின. போட்டுக் கொண்டிருந்தது வார் செருப்பு. செருப்பைக் கழற்றி கற்களுக்கு விடுதலை கொடுக்க வாரை அவிழ்க்க வேண்டும்.
காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே பாணியில் காலைத் தூக்கி வாரை அவிழ்க்க வேண்டி வந்தது. ஒற்றைக் கால் தவத்தில் விழுந்து விட்டால் என்ன ஆகும் என்ற பயம் வேறு. எலும்பு சிகிச்சை மருத்துவர், ஒரு மாதம் படுத்தப் படுக்கை, நடமாடக்கூடாது என்று கூறுவார் என்ற பயம். ஒரு வழியாக கால் செருப்பில் புகுந்த கற்கள் விடை பெற்றுச் சென்றன.
கால் செருப்பில் கற்கள் புகுந்து என்னை நடனமாட வைத்த இந்த நிகழ்வு, எனக்கு புறநானூறு பாடல் வரி ஒன்றை நினைவூட்டியது. படைத்தலைவனின் வீரத்தைப் புகழ வந்த புலவர் அவனுடைய வீரத்திற்கு உவமையாக "செருப்பிடைச் சிறுபரல் அன்னன்” என்கிறார். (புறநானூறு பாடல் 257)
“செருப்பிடையே நுழைந்த சிறுகல், செருப்பை அணிந்தவனுக்குத் தீராத துன்பத்தைத் தருவது போல, பகைவர்க்குத் தீராத துன்பத்தைத் தருபவன் இந்த வீரன்” என்று வீரனைப் புகழ்கிறார் புலவர்.
இதை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் கால் செருப்பில் கல் புகுந்து அவர் அனுபவித்த துன்பத்தை, எத்தனை அழகாக உவமையாக்கி விட்டார்.
சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் இருந்த புறநானூற்றுக் காலத்துத் தெருவை இன்று சென்னையில் கண்டேன் என்று மகிழ்ச்சி அடையலாம் அல்லவா?